கேட்பார் இன்றிக் காதல் – 48

அத்தியாயம் 48

அறைக்குள் வந்த அபயனுக்கு மனைவியின் நினைவு. அதுவும் அவனுடைய மேசை கதிரையைப் பார்த்தபோது, இன்னும் அவள் அதில் ஒரு கையை நீட்டி, தலை வைத்துப் படுத்திருப்பதைப் போல் இருக்கவும் பின் தலையில் தட்டி, மெல்லச் சிரித்துக்கொண்டான்.

உடனேயே கைப்பேசியை எடுத்து, “அன்பா, கோல் மீ!” என்று அனுப்பிவிட்டான்.

அங்கே அன்பினியும் அவன் போன கணத்திலிருந்து அவன் நினைவாகவேதான் சுற்றிக்கொண்டிருந்தாள்.

எப்போதும் அவனிடமிருந்து அடாவடியான அன்பை மட்டுமே அனுபவித்தவளுக்கு இப்போதைய அவனின் பண்பட்ட குணமும், பரிவு மிகுந்த நேசமும் இன்னுமின்னும் அவன் மீது அவளைப் பித்தாக்கின.

அவன் கழற்றிப்போட்டிருந்த உடைகளை ஒருவித சொந்தத்தோடு கழுவிப்போட்டாள். இன்னும் நான்கைந்து உடைகள் அவளுக்குப் பிடித்ததுபோல் அவனுக்கு எடுத்துக்கொடுக்கும் ஆசை எழுந்தது. அவனோடு கூடவே இருந்து, கருத்தொருமித்த காதல் வாழ்க்கை வாழும் கற்பனைகள் வந்து போயின. அதற்குச் சாத்தியமில்லாச் சூழ்நிலை நெஞ்சடைக்க வைத்தது.

அவனோடு இருக்கக் கிடைத்த பொழுதுகளை எல்லாம் வீணாக்கிவிட்டு இப்படி ஏங்குகிறோமே என்று தவித்தாள். அப்போதுதான் அவன் குறுந்தகவல் அனுப்பியிருந்தான்.

பார்த்த கணத்தில் அவளுக்குள் மெல்லிய நடுக்கம். ஆனாலும் இதையெல்லாம் தாண்டி வர வேண்டும் என்கிற உத்வேகமும், அதனால்தான் அவனும் அவனே அழைக்காமல் அவளை அழைக்கச் சொல்லியிருக்கிறான் என்பதும் விளங்க, மெல்லிய படபடப்புடன் அழைத்தாள்.

அபயனின் உள்ளத்தில் வார்த்தைகளில் வடிக்க முடியாச் சந்தோசம். குறுந்தகவல் அனுப்பும்போது செய்வாளா என்கிற கேள்வி இருந்தது. அவளானால் அடுத்த நிமிடமே அழைக்கிறாள். அதுவும் வீடியோ கோல். வேகமாய் அழைப்பை ஏற்று, “அன்பா!” என்றான் ஆசையாக. அந்த நொடியே அவளை இறுக்கி அணைத்துக்கொண்டு தன் மகிழ்ச்சியைப் பகிர ஆசைப்பட்டான்.

அவள் நிலையும் அதேதான். அவன் கைகளுக்குள் அடங்கி, அவன் தோள் வளைவில் முகம் புதைக்க நினைத்தாள். அதற்கு வழியில்லை. என்ன வாழ்க்கை இது? கணவன் மனைவியாய் முழு உரிமையும் இருந்தும் இப்படி இருக்கிறார்கள். அதுவும் நியாயமே இல்லாக் காரணங்களால்.

“இப்பவே யாழ்ப்பாணம் போவமா?” அந்தக் கேள்வியே அவன் மனநிலையை உணர்த்த, அவளுக்கும் போனால் என்ன என்றுதான் இருந்தது. ஒன்றுமே வேண்டாம். அவன் பக்கத்தில் இருந்தாலே போதுமே.

“உங்களுக்கு அலைச்சலா இருக்காதா?”

“என்ன பெரிய அலைச்சல். தளிரையும் கூட்டிக்கொண்டு வாறன். அவாவும் சந்தோசப்படுவா.”

“அப்ப போவம்!” என்றாள் வேகமாக.

“அப்ப நான் வாறதால சந்தோசம் இல்லை போல.”

அவள் வாயைக் கிண்டுகிறான்! அதனாலேயே வாயை இறுக்கி மூடிக்கொண்டு அவனை முறைத்தாள்.

“அங்க வாங்கிப் போட்ட கட்டிலும் வீணாகக் கூடாதுதானே?”

தளிரையும் வைத்துக்கொண்டா? முகம் இலேசாகச் சூடானாலும், கள்ளச் சிரிப்பில் அவள் விழிகள் மின்னின.

அவன் முகத்திலும் அதன் எதிரொலி. “எனக்குத் தெரியுமடி உன்னைப் பற்றி. பிள்ளைகள் இருக்கிற அம்மா அப்பா எல்லாம் குடும்பமே நடத்திறேல்லையா என்ன, நீ வா முதல் அங்க! அது எப்பிடி எண்டு காட்டுறன்!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான் அவன்.

இவனை… பொய்யாக மனம் அதட்டினாலும் தொற்றிக்கொண்ட சிரிப்பு அவள் முகத்தை விட்டுப் போவதாக இல்லை.

அவன் உதட்டிலும் அதே சிரிப்புத்தான். எழுந்து இரண்டு நாள்களுக்கான உடைகளை எடுத்து வைத்தான். “மாமா!” என்றபடி அவனிடம் ஓடி வந்தாள் சின்னவள்.

“என்ன வேணுமாம் என்ர குண்டு மணிக்கு?” என்றபடி அவளை அப்படியே அள்ளிக்கொண்டான்.

“கடைக்குப் போவமா?” கண்கள் மின்ன ரகசியமாய் வினவினாள் அவள்.

“ஏன், உங்கட அம்மா என்னைத் துரத்தி துரத்தி அடிக்கவோ?”

“அம்மாக்குக் கொத்துரொட்டியும் வாங்கி வருவம்.”

“அடிப்பாவி! மூண்டு நேரமும் கொத்துரொட்டி குடுத்து என்ர அக்காவை வருத்தக்காரி ஆக்கிற பிளானா?” என்று அவன் கண்களை உருட்டவும் அவள் சிரித்தாள்.

பிரிட்ஜிலிருந்து அவளுக்குப் பிடித்த ஜெலியில் நான்கைந்தை எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு, “அம்மாட்டப் போயிருந்து சாப்பிடுங்கோ. மாமா இப்ப வாறன்.” என்று அவளை அனுப்பி வைத்துவிட்டு, தாய் தந்தையரைத் தேடிக்கொண்டு போனான்.

அங்கே வீட்டின் பின் பக்கம் இருந்த பிலா மரத்தின் கீழே அவர்கள் இருவரும் அமர்ந்திருந்தனர். நிச்சயம் அக்காவைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருப்பார்கள் என்று தெரிய, அதுவும் அவனை அழுத்தியது.

“அக்காவை என்னப்பா செய்யப் போறீங்க?” என்று நேரடியாக விசயத்துக்கே வந்தான்.

நீயே சொல் என்பதுபோல் அவனைப் பார்த்தார் குழந்தைவேலு.

“அவனுக்கு டிவோர்ஸும் குடுக்காம, இப்பிடி அவன் செய்ததையே நினைச்சுக்கொண்டு இருக்கிறதால எந்தப் பிரயோசனமும் இல்லை அப்பா. முதல் டிவோர்ஸ் குடுக்கட்டும். அவனைக் கடந்து வரட்டும். அப்பதான் அடுத்தது என்ன எண்டு அவாவும் யோசிப்பா, நாங்களும் யோசிக்கலாம்.”

இனி இதுதான் என்று தெரிந்தாலும் விவாகரத்து என்கிற அந்தச் சொல் பெரியவர்களை ஒரு உலுக்கு உலுக்கியது. ஆனால், வேறு வலியும்தான் என்ன?

மனம் கனக்க அப்படித்தான் செய்ய வேண்டும் என்பதுபோல் தலையை அசைத்த குழந்தைவேலு, “விவாகரத்து எண்டு சட்டப்படி போனா, பிள்ளையை அவனிட்டக் குடுக்கிற மாதிரி வந்திடுமோ எண்டு பயப்பிடுறா.” என்று சொன்னார்.

“அதுக்காக அக்காவை இப்பிடியே விடேலாது தானேப்பா.
சட்டப்படி வெளில வந்தா அவாக்குமே மனதளவில ஒரு விடுதலை உணர்வு கிடைக்கும். முதல் அப்பிடித் தளிரைத் தரேலாது எண்டு சொல்லிப் பாப்பம். இல்லை எண்டு நிண்டா மாமாவைக் கொண்டு கதைச்சுப் பாப்பம். கட்டாயம் அவர் எங்களுக்காகத்தான் நிப்பார். அதுக்குப் பிறகு நடக்கிறதை அப்ப பாப்பம்.” என்றுவிட்டு எழுந்தவன், அன்பினியைக் கொண்டுபோய் யாழ்ப்பாணத்தில் விட்டுவிட்டு வரப்போவதையும் சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.

இங்கே சுபாங்கியிடமும் வந்து யாழ்ப்பாணம் போவதைச் சொல்லிவிட்டு, “எப்பிடியும் நாளைக்குப் பின்னேரம் போல திரும்பி வந்திடுவன். பிறகு நாங்க மூண்டு பேரும் வெளில போவம்.” என்றான்.

“இல்ல வேண்டாம்.” உடனேயே மறுத்தாள் அவள்.

அவன் பதில் சொல்லாமல் அவளையே பார்த்தான்.

அவனுடைய அந்தப் பிடிவாதம் மெல்லிய கோபத்தை அவளுக்குள் மூட்ட, “வரவர நீ மூத்தவனா, இல்ல நான் மூத்தவளா எண்டே தெரியாம இருக்கடா!” என்றாள் சினத்துடன்.

“மூத்தது மொக்காம்(மக்கு) எண்டு நீங்க கேள்விப் படேல்லையா?” என்றான் அவன் வேண்டுமென்றே.

“நான் மொக்காடா உனக்கு? என்னைப் பாத்தா உனக்கு மொக்கு மாதிரி இருக்கோ!” என்று கேட்டு நாலு அடியைப் போட்டாள் அவள்.

அதுவரை நேரமும் மாமனின் மடிக்குள் புகுந்திருந்த தளிரும் விறுவிறு என்று அவன் தோளில் ஏறி அமர்ந்துகொண்டு, அவன் முடியைப் பற்றி ஒரு ஆட்டு ஆட்ட, “துரோகி!” என்று முறைத்தான் அவன்.

“பிடிச்சது எல்லாத்தையும் வாங்கி அமுக்கிப்போட்டு மாமாவையே அடிக்கிறீங்க என்ன?” அவளை வாகாகத் தன் கைகளுக்குள் கொண்டுவந்து, கிச்சு கிச்சு மூட்டினான்.

அவன் கைகளுக்குள்ளேயே துள்ளியபடி அடக்கமாட்டாமல் சிரித்தாள் சின்னவள்.

பார்த்திருந்த சுபாங்கியும் தன்னிச்சையாய்ச் சிரித்தபடி, “டேய் விடடா, என்ர பிள்ளைக்கு மூச்சடைக்கப் போகுது!” என்று தடுத்தாள்.

அதற்கு இடம் கொடாமல் சின்னவளைக் கட்டிலில் போட்டு, “மாமாக்கு எதிராப் போர்க்கொடி தூக்குவீங்களா?” என்று கேட்டு கேட்டு கிச்சு கிச்சு மூட்டினான். கட்டிலில் உருண்டு பிரண்டு சிரித்தபடி, “சமாடானம் மாமா. சமாடானம்.” என்றாள் தளிர்.

“என்னடா இது, சமாதானம் எண்டுறாள்?” வியப்புடன் வினவினான் சுபாங்கி.

“நாங்க அப்பிடித்தான். சண்டை பிடிச்சா உடனேயே சமாதானம் ஆகிடுவம். உங்களை மாதிரி அறைக்க விழுந்துகிடந்து அழுற ஆக்கள் எண்டு நினைச்சீங்களா?” அவளைத் தூக்கி மேலே போட்டுப் பிடித்தபடி சொன்னான் அபயன்.

அவள் முறைக்க, “அக்கா, தளிரையும் கூட்டிக்கொண்டு போகட்டா?” என்றான் மெல்ல.

முகம் மாற “திரும்ப ஆரம்பிக்காத அபய்!” என்றாள் சலிப்புடன்.

“என்ன ஆரம்பிக்கிறன்? நாளைக்கு இரவே நானும் கொழும்பு வெளிக்கிட்டுடுவன். தளிர் பாவமெல்லா. என்னோட வந்தா கொஞ்சம் சந்தோசப்படுவா.”

“அவாக்கு நேர்சரி இருக்கு.”

“பெரிய கிழிஞ்ச நேர்சரி!”

அவள் முறைக்க, “நான் கூட்டிக்கொண்டு போகப்போறன்!” என்று அறிவித்தான்.

“நான் இல்லாம அவள் இருக்க மாட்டாள்.”

“அன்பா இருந்தா அவள் உங்களையே தேடமாட்டாள்.” என்றதும் திரும்பவும் முறைத்தாள்.

“சும்மா சும்மா முறைக்கிறேல்ல. என்னோடதானே வாறா. நீங்க தடுக்கிறதப் பாத்தா, தாளிர்ல எனக்கும் எந்த உரிமையும் இல்லை எண்டு சொல்லுவீங்க போல.” என்று அவன் சொன்னதும் அவளுக்கே ஒருமாதிரி ஆகிப்போனது.

தளிர் கொஞ்சமாவது நன்றாக இருக்கிறாள் என்றால் அதற்கு அவன் மட்டும்தானே காரணம்.

“அந்த வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போறேல்ல!” மறைமுகமாகத் தன் சம்மதத்தைச் சொன்னாள்.

ஒரு கணம் அமைதியாய் இருந்தாலும் வேகமாய்ச் சமாளித்து, “சரி!” என்றான்.

தமக்கை கண்டுகொண்டாள். கண்டிப்புடன் நோக்கி, “அபய், உன்னை நம்பி விடுறன். என்னை நீயும் ஏமாத்தாத!” என்றாள் வெகு அழுத்தமாக.

உண்மையில் இதே சாட்டில் இந்துமதியிடமும் சின்னவளைக் கொஞ்ச நேரம் விடுவோம் என்றுதான் எண்ணியிருந்தான். இனி முடியாது. உள்ளே ஒரு கோவமும் அந்தப் பெண்மணியை எண்ணிக் கவலையும் உண்டாக, “சரி!” என்றுவிட்டு போனான் அவன்.

error: Alert: Content selection is disabled!!