கேட்பார் இன்றிக் காதல் – 49

அத்தியாயம் 49

தளிரைத் தோளில் போட்டுத் தட்டிக்கொடுத்தபடி அந்த அறைக்குள்ளேயே அங்குமிங்குமாக நடந்துகொண்டிருந்தான் அபயன். அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து, மேசையில் ஒரு கையை நீட்டிப் படுத்திருந்தவளின் பார்வை
அவனையே தொடர்ந்துகொண்டிருந்தது.

இது ஒன்றும் புதுக் காட்சியில்லை. அவர்களின் வீட்டில் இருக்கும் வரையில் தினமும் பார்த்ததுதான். அப்போதெல்லாம் மருமகளைத் தங்குகிறான் என்று எண்ணிக்கொள்வாள். அதுவே இன்று தம் பிள்ளையையும் இப்படித்தானே பார்த்துக்கொள்வான் என்று ஓடியதில் அவள் உதட்டோரத்தில் ரகசியப் புன்னகை.

அவளுக்கு முதுகு காட்டி நடந்துகொண்டிருந்தவன் திரும்பி வருகையில் அவள் சிரிப்பைக் கண்டுவிட்டான். புருவங்களை மாத்திரம் உயர்த்தி என்ன என்று வினவினான்.

ஒருகணம் என்ன சொல்வது என்று தெரியாமல் தடுமாறினாலும் அடுத்த நொடி உதடுகளைக் குவித்து முத்தமிடுவதுபோல் செய்து காட்டினாள்.

நடந்துகொண்டிருந்தவன் சட்டென்று நின்றுவிட்டான். அவன் முகத்தில் அப்பட்டமான வியப்பு. கூடவே அவளின் செய்கையை ரசிக்கும் முறுவல்.

சின்னவள் சிணுங்க மீண்டும் தட்டிக்கொடுத்தபடி நடக்க ஆரம்பித்தாலும் அதன் பிறகு அவன் பார்வை அவள் மீதேதான்.

உறங்கிவிட்டவளை மெல்லக் கட்டிலில் கிடத்தி, போர்வையால் போர்த்திவிட்டான். வரும்போது கையோடு வாங்கி வந்திருந்த பாயையும் தலையணையையும் தரையில் விரித்துவிட்டுத் திரும்பி அவளைப் பார்த்தான்.

அவ்வளவு நேரமாக அவனையே கவனித்துக்கொண்டிருந்தவள் அவன் திரும்பவும் வேகமாக முகத்தைத் திருப்பித் தன் சிரிப்பை மறைக்க முயன்றாள்.

‘சேட்டைக்காரி!’ உதட்டோரம் சிரிப்பில் துடிக்க அவளைக் கைகளில் அள்ளிக்கொண்டான் அபயன். “உனக்குச் சிரிப்பா இருக்கு என்னடி!” சின்னவள் விழித்துவிடாதபடிக்குக் காதோரமாக அதட்டியவன் அவளோடு பாயில் சரிந்தான்.

இறுகிய அணைப்பில் உணர்வுகளைப் பரிமாறி, அதற்கு முத்தங்களைப் பரிசாக்கிய பிறகும் அவன் முன்னேறாமல் இருக்கவும் கேள்வியாகப் பார்த்தாள் அன்பினி.

“என்னவோ இதுக்காகவே இஞ்ச வந்த மாதிரி இருக்கு அன்பா. அது பிடிக்கேல்ல.”

அவள் உதட்டில் மெல்லிய புன்னகை. ஆசையாய் அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.

“உனக்குக் குறை ஒண்டும் இல்லையே?”

அவன் கேள்வியில் அவள் முறுவல் இன்னும் விரிந்தது. இல்லை என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு, “இப்பிடி உங்கட கைக்க இருக்கிறதே போதும்.” என்றுவிட்டு, “இந்த அபய இன்னுமின்னும் பிடிக்குதே!” என்றாள் அவன் கன்னம் வருடி.

விழிகளை மூடி அவளின் வருடல் தரும் சுகத்தைக் கொஞ்ச நேரம் அனுபவித்துவிட்டு, “ஏன் பழைய அபய்க்கு என்ன குறை?” என்று விசாரித்தான்.

“அவரிட்ட என்னதான் நெருக்கமாப் பழகினாலும் ஒரு பயம் இருக்கும். எதுக்குக் கோபப்படுவார் எண்டே தெரியாது.” என்றதும் முறைத்தான் அவன்.

“உனக்குப் பயம்? அதுதான் கழுவாத பிளாஸ்க்ல தேத்தண்ணியும், டிபன் பொக்ஸுக்க இலைகுலையும் வச்சனியா?”

“பிறகு என்ன? இவர் வெருட்டுவாராம், நாங்க பயந்து நடுங்கிக்கொண்டே இருக்கோணுமா?”

“உன்ன!” என்றவன் ஆசையாய் அவள் உதட்டில் முத்தமிட்டான்.

தளிர் எழும்பும் வரையில் ஒருவர் அணைப்பில் மற்றவர் அடங்கியபடி ரகசியமாய்ப் பேசிக்கொண்டிருந்தனர். நேரம் எப்படி ஓடியது என்றே தெரியவில்லை. சின்னவள் விழித்ததும் மனமேயில்லாமல் எழுந்து புறப்பட்டான்.

அறையை விட்டும் வெளியேறும் நொடியில், “இன்னும் கொஞ்ச நாளைக்கு அன்பா. எனக்காக…” என்றவனின் உதட்டில் கையை வைத்துத் தடுத்து, “எங்களுக்காக நான் எவ்வளவு காலம் எண்டாலும் பொறுப்பன் அபய்.” என்று சொல்லி அவனை அனுப்பிவைத்தாள் அன்பினி.

*****

இந்துமதி அம்மாவுக்கு மனம் சரியேயில்லை. அன்று மாலை முல்லைத்தீவுக்குப் புறப்படுகிறேன் என்று சொன்ன மகள், காலையிலேயே தயாரானதும் அல்லாமல், அபயன் வந்து கூட்டிப்போகிறான் என்று சொன்னபோது மகிழ்ச்சியாகவே அவளுக்கு அனைத்தையும் எடுத்து வைத்திருந்தார்.

அவளோ அத்தனையையும் எடுத்துக்கொண்டு ஆட்டோவில் புறப்பட அவருக்கு ஒன்றும் புரியவில்லை.

“தம்பி வருவார் எண்டு சொன்னியேம்மா?”

“ஓம் அம்மா, அவர் டவுன்ல ஏதோ வேலையா நிக்கிறாராம். அங்க என்னை வரச் சொன்னவர். அதான்…” அவர் முகம் பாராமல் சொல்லிவிட்டுப் புறப்பட்டிருந்தாள்.

என்னவோ சரியில்லை என்று அவருக்குப் பட்டது. உடனேயே கணவருக்கு அழைத்து விடயத்தைச் சொன்னார்.

அவருக்கும் எதுவும் புரியவில்லை. அதுவும், அன்று அபயன் வீட்டுக்கு வந்துவிட்டுப் போனதிலிருந்து மகள் வாழ்க்கைமீது ஒரு நம்பிக்கை பிறந்திருந்தது. இன்று புதிதாய் என்னவோ என்று உடனேயே மகளுக்கு அழைத்து விசாரித்தார்.

தாயிடம் சமாளித்தது போன்று அன்பினியால் தந்தையிடம் சமாளிக்க முடியவில்லை. கூடவே, தந்தை விளங்கிக்கொள்வார் என்கிற நம்பிக்கையில், “எங்கட வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போகக் கூடாது எண்டு சொல்லித்தான் அண்ணி தளிரை அனுப்பி இருக்கிறா அப்பா. வீடு வரைக்கும் கூட்டிக்கொண்டு வந்திட்டு அம்மாட்டக் குடுக்காமத் தளிரை எப்பிடி அப்பா கூட்டிக்கொண்டு போறது? அத அம்மாவும் தாங்க மாட்டா. தளிரும் அழுவா. அதுதான் இவர் வீட்டில இருந்து கொஞ்சம் தள்ளி நிண்டவர்.” என்று சொன்னாள்.

திருநாவுக்கரசுக்கும் மனைவின் தவிப்புத் தெரியும். தினமும் பேத்தியைப் பற்றிப் பேசாமல், அரற்றாமல் அவர் உறங்கியதேயில்லை. அப்படியிருக்க, கண் முன்னே பேத்தியைக் கண்ட பிறகும் நிச்சயம் அமைதியாக இருந்திருக்க மாட்டார்தான். மகள் செய்தது சரிதான்.

ஆனால், ஏன் இந்த நிலை? இத்தனை மாதங்கள் ஓடியுமா இப்படி ஒரு பிடிவாதம்? மெல்லிய கோபமும் வந்தது.

ஆனாலும் நிதானத்தை இழக்காமல், “சரியம்மா, நீங்க கவனமாப் போயிட்டு வாங்கோ. அம்மாட்ட நான் சொல்லிவிடுறன்.” என்றுவிட்டு மனைவிக்கு அழைத்து விடயத்தைச் சொல்லியிருந்தார்.

அவர் எவ்வளவுதான் இதமாகவும் பதமாகவும் எடுத்துச் சொன்ன போதிலும் இந்துமதியால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. கண்ணீருடன் குமுறியிருந்தார்.

“பெத்த மகனையும் ஒதுக்கி, பேரப்பிள்ளையையும் பாக்காம நான் ஏன் இந்த வாழ்க்கை வாழோணும்? சுபாக்கு ஏன் இவ்வளவு பிடிவாதம்? என்ர சொந்தப் பேத்தி அப்பா. இதுவே அவவின்ர அம்மாவுக்குக் காட்டாம வளப்பாவா? இல்ல, நான் இல்லாம இத்தின வருசமும் வளத்தவாவோ?” என்று என்றுமில்லாதவாறு இன்று வெடித்திருந்தார்.

அந்தளவுக்குக் காலடிக்குப் பேத்தி வந்தும் அவர் கண்ணில் அவளைக் காட்டவில்லை என்கிற விடயம் அவரை நிலைகுலைய வைத்திருந்தது.

“வெளிநாட்டில பேரப்பிள்ளைகள் இருந்தாலுமே ஒவ்வொரு நாளும் வீடியோ கோலில பாத்து, கதைச்சு, பிள்ளைகளின்ர வளர்ச்சியைப் பாத்து, நல்லது கெட்டதை அறிஞ்சுகொண்டு இருக்கினம். ஆனா நான்… பக்கத்தில இருந்தும் பாக்க வழி இல்ல. அந்தளவுக்கு நான் என்ன பிழை செய்தனான்? எல்லாத்துக்கும் பொறுமையா இரு, பொறுத்துப் போ எண்டு சொல்லுவீங்க. இப்ப நீங்க எனக்கு நியாயம் சொல்லுங்கோ!” என்று அவரை விடாமல் உலுக்கியிருந்தார் இந்துமதி.

அன்று மட்டுமில்லை அதன் பிறகு வந்த நாள்களில் கூட அவரின் புறுபுறுப்பும் அரற்றலும் குறையவில்லை. அந்த வார இறுதியில் வந்த மகளிடமும் அவர் முகம் கொடுத்துப் பேசவில்லை. அவ்வளவு கோவம். ஒரு முறை கண்ணில் காட்டவே கூடாத அளவுக்கு அவர் என்ன பிழை செய்தார் என்பதிலேயே நின்றார்.

முறையான உறக்கம் இல்லாமல், மனத்தில் நிம்மதியும் இல்லாமல், நேரா நேரத்துக்குச் சாப்பாடும் இல்லாமல் இருந்த இந்துமதி, திடீரென்று மயங்கி விழுந்திருந்தார்.

அன்று பகலுக்குச் சாப்பிட வரமாட்டேன் என்று சொல்ல அழைத்த திருநாவுக்கரசு, மனைவி தொடர்ந்து எடுக்காமல் இருக்கவும் கொஞ்சம் பயந்துபோனார்.

கடந்த சில நாள்களாகவே அவரின் மன அமைதி குலைந்திருந்ததும் நினைவில் வர, ஓடி வந்தவர் கண்டது, மூக்கால் இரத்தம் வழிந்து காய்ந்த நிலையில் சமையலறையில் மூர்ச்சையாகிக் கிடந்த இந்துமதியைத்தான்.

error: Alert: Content selection is disabled!!