அத்தியாயம் 5
அன்பினியின் மன அமைதி கெட்டுப்போயிற்று. அவளின் பிறந்தநாளுக்கு அவன் எடுத்து வாழ்த்தியதிலிருந்தே அவளுக்கு இந்தச் சந்தேகம் வந்திருந்தது. ஆனாலும் கூட நீ உணர்த்த முயல்வது எனக்கு விளங்கவே இல்லை என்றுதான் இத்தனை நாள்களும் பாவனை காட்டிக்கொண்டிருந்தாள்.
அப்படி இருக்கையில் முதல் நாள் ‘நான் இல்லாமல் என்ன செய்வீர்’ என்று அவன் கேட்டதே அவளை ஒரு உலுக்கு உலுக்கி இருந்தது. அப்போதும் தன்னைச் சமாளித்துக்கொண்டு, அவன் பகிடிவதை செய்கிறான் என்கிற அளவிலேயே அதை நிறுத்தி, இன்று வெகு சாதாரணமாகத் தேநீரைக் கொண்டுவந்து நீட்டியிருந்தாள். ஆனால், அவள் பருகியதை வாங்கி அவன் பருகியது மிகுந்த அதிர்ச்சியைத் தந்திருந்தது.
இனி என்ன செய்வது? அவளுக்குத் தெரியவே இல்லை. அன்றைக்கு என்று பார்த்து அவளை அழைத்துப்போக வந்திருந்தான் காந்தன்.
அவனோடு குவார்ட்டஸுக்கு வந்து, உடை மாற்றி, அவன் செய்து தந்த உணவை உண்டு, வீட்டினரோடு கொஞ்ச நேரம் கதைத்து என்று என்ன செய்தும் அவளிடம் ஒரு தெளிவு பிறக்கவில்லை. இனி அபயனை எப்படிக் கையாள்வது என்கிற யோசனையிலேயே இருந்தாள்.
ஆரம்பத்தில் அவளைக் கவனிக்காதபோதிலும் சற்று நேரத்திலேயே கண்டுகொண்டான் காந்தன். “என்ன அன்பு, ஏன் வந்ததில இருந்து ஒரு மாதிரியே இருக்கிறாய்?” என்று விசாரித்தான்.
ஒரு நொடி தடுமாறினாலும். “ஒரு பிரச்சினையும் இல்லை அண்ணா. களைப்பா இருக்கு. அதான்.” என்று அவசரமாகச் சமாளித்தாள்.
அவன் திரும்ப திரும்பக் கேட்டும் பிடிகொடுக்கவில்லை. கடைசியில் ஒன்றுமே சொல்லாமல் அவளையே பார்த்தான் காந்தன். இருந்த பதற்றத்தையும் தாண்டிச் சிரிப்பு வந்துவிட, “அண்ணா!” என்று சிரித்தாள் அன்பினி.
அதன் பிறகுதான் அவன் கவலை அகன்றது. கூடவே, “என்ன எண்டாலும் சொல்லோணும் அன்பு. அண்ணா இருக்கிறன் உனக்கு. எதுக்கும் பயப்பிடாத.” என்று தைரியம் கொடுத்தான். அவளுக்கும் இதமாய் இருந்தது.
தமையனிடம் சொன்ன களைப்பை மெய்யாக்குகிறவளாக, அவன் அவளுக்கென்று ஒதுக்கிக்கொடுத்திருந்த அறைக்குள் வந்து, கட்டிலில் விழுந்தாள். உறக்கம் வரவேயில்லை. இதுவரையில் அவளே சமாளித்தது வேறு. நேரடியாக அவன் உணர்த்திய பிறகும் வீட்டினரிடம் சொல்லாமல் இருப்பது உறுத்தியது. என்ன செய்ய, என்ன செய்ய என்று அதுவே ஓடியது.
ஒரு கட்டத்துக்குமேல் முடியாமல் எழுந்து அமர்ந்து, கைப்பேசியை எடுத்து முதன் முறையாக அவனுக்குக் குறுந்தகவலைத் தட்ட ஆரம்பித்தாள்.
“நீங்க அண்ணின்ர தம்பி. எங்கட சொந்தம். அதாலதான், சும்மா பகிடிக்கு நீங்க வெருட்டினாலும் நான் பெருசா எடுக்கிறேல்ல. எதையாவது செய் எண்டு சொன்னாலும் செய்துபோட்டுப் போறனான். ஆனா இண்டைக்கு நீங்க நடந்த விதம் எனக்குப் பிடிக்கேல்ல. தயவு செய்து இப்பிடி எல்லாம் இனி நடக்காதீங்க. எனக்குப் படிக்கோணும். அவ்வளவுதான். இதையெல்லாம் வீட்டில சொல்லி, ரெண்டு வீட்டுக்கிடையிலையும் எந்தப் பிரச்சினைகளும் வர வேண்டாம் எண்டு நினைச்சுத்தான் இவ்வளவு நாளும் சொல்லேல்ல. ஆனா, இண்டைக்கு மாதிரி இனியும் நீங்க நடந்தா, கட்டாயம் அண்ணாட்டச் சொல்லுவன். ப்ளீஸ், என்னைப் படிக்க விடுங்க!” என்று அவனுக்கு அனுப்பிவிட்டு, கைப்பேசியை முற்றிலுமாக அணைத்து வைத்தாள்.
இதைப் பார்த்துவிட்டு இன்னும் என்ன செய்வானோ என்கிற பயம் மெலிதாய் இருந்தாலும் கூட, அவ்வளவு நேரமாக நெஞ்சுக்குள் அடைத்துக்கொண்டு இருந்த ஏதோ ஒன்று வெளியேறிய உணர்வு, அதன் பிறகுதான் உண்டாயிற்று. உறக்கமும் வந்து அவளைத் தழுவியது.
மாலை எழுந்து காந்தனோடு வெளியே சென்று, தேவை என்றில்லாமல் பிடித்த பொருள்களை வாங்கியதும், இரவுணவை வெளியே முடித்துவிட்டு வந்ததும் கூட அவளை இன்னுமே தெளிய வைத்திருந்தன.
அதன் பிறகுதான் கைப்பேசியை உயிர்ப்பித்தாள். அவனிடமிருந்து எந்தச் சத்தமும் இல்லை. நிச்சயம் பார்த்திருப்பான். பெரும் கோபத்தில் இருப்பான். இனி என்ன நடந்தாலும் வீட்டில் சொல்லிவிட வேண்டும் என்கிற முடிவை எடுத்திருந்ததில் கொஞ்சம் தைரியமாகவே இருந்தாள்.
இரவு வீட்டினரோடு வீடியோ கோலில் அண்ணனும் தங்கையும் பேசினார்கள். தளிர் இவளை இனங்கண்டு கைகால்களைப் போட்டு அடித்ததில் அன்பினியைக் கையிலேயே பிடிக்க முடியவில்லை.
அடுத்த நாள் காலை, வேளைக்கே அவளை அழைத்துச் சென்று பல்கலையில் இறக்கிவிட்டான் காந்தன். அவள் உள்ளே சென்றதும் முதல் வேலையாக அபயனுக்கு அழைத்தான்.
*****
அவள் அனுப்பியிருந்த குறுந்தகவலைக் கண்டு முதலில் கொதித்துப் போயிருந்தான் அபயன். வீட்டில் சொல்லுவாளாமே! மிரட்டுகிறாளா என்ன? அவளைப் படிக்க விடாத அளவுக்கு அப்படி என்ன செய்துவிட்டானாம்? அந்த நொடியே அவளுக்கு அழைத்து நன்றாக நான்கு கேள்விகள் கேட்க வேண்டும் போலிருந்தது.
அதுவே நேரம் போக போக ஒருவிதமாய்த் தோற்றுவிட்டதாக உணர்ந்தான். அவன் சொன்ன நேசத்துக்கு மறுப்பைச் சொல்லிவிட்டாளே! அவள் அவன் மனத்தைக் கவர்ந்தது போன்று அவன் அவளைக் கவரவில்லையா என்ன?
இனி எப்படி அவளை அணுகுவது என்றும் தெரியவில்லை. ஒழுங்கான உறக்கம் இல்லாமலேயே அடுத்த நாளும் விடிந்தது. எப்போதும் போல் அவளைப் போய்ப் பார்ப்பதா, இல்லை கொஞ்ச நாள்களுக்கு விட்டுப் பிடிப்பதா என்று தெரியாத குழப்பத்துடன் அவன் பல்கலைக்குத் தயாராகையில்தான் காந்தன் அழைத்தான்.
அந்த நொடியில் சொல்லிவிட்டாளோ என்று ஒருகணம் பயந்துபோனான். எடுப்பதா வேண்டாமா என்று தடுமாறிவிட்டுக் கடைசி நேரத்தில் அழைப்பை ஏற்றான்.
“அபயன், ஒரு அஞ்சு நிமிசம் டைம் இருக்கா?” சம்பிரதாய நலன் விசாரிப்புக்குப் பிறகு வினவினான் காந்தன்.
“ஓம் அத்தான், சொல்லுங்கோ.” உள்ளே இருந்த தடதடப்பை மறைத்துச் சொன்னான்.
“அது… அன்புக்கு கம்பஸ்ல ஏதோ பிரச்சினை போல. எவ்வளவு கேட்டும் என்ன எண்டு சொல்லுறா இல்ல. ஆனா, ஆள் பழைய மாதிரி இல்ல. என்னவோ யோசிச்சுக்கொண்டே இருக்கிறா. ஒருக்கா என்ன எண்டு விசாரிச்சுப் பாக்கிறீங்களா?” என்று நயமாய் அவன் வினவவும் இவனுக்கு முகம் கறுத்துப் போயிற்று.
“பெருசாப் பயப்பிடுற அளவுக்கு ஒண்டும் இருக்காது அத்தான். எண்டாலும் விசாரிச்சுப் பாக்கிறன்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தவன் அப்படியே அமர்ந்துவிட்டான்.
அவள் வீட்டினர் அவனை முழுமையாக நம்புகிறார்கள். அப்படி இருக்க அவன் செய்வது? இதெல்லாம் தெரிய வந்தால் அவனைப் பற்றி என்ன நினைப்பார்கள்? தலையைக் கோதிவிட்டவனுக்கு அவளை விட்டு விலகுவதைப் பற்றி இப்போதும் யோசிக்க முடியவில்லை.
கொஞ்ச நாள்களுக்கு இதை ஆறப்போட விரும்பியவன் அதன் பிறகு அவளைத் தேடிக்கொண்டு போகவில்லை. நாள்கள் அதன் பாட்டுக்கு நகர்ந்தன.
ஆரம்பத்தில் நிம்மதியாக உணர்ந்த அன்பினி, தன் வாழ்வில் ஏதோ ஒன்று குறைவதை மெல்ல மெல்ல உணர ஆரம்பித்தாள். இதற்குள் முதல் செமஸ்டரை வெற்றிகரமாக முடித்திருந்தாள்.
அடுத்த செமஸ்டரும் ஆரம்பித்து, நாள்கள் நகர்ந்து மாதங்களாகி, தளிருக்கு முதலாவது பிறந்தநாளும் வந்து சேர்ந்தது. மிக நெருக்கமான உறவுகளை அழைத்து, வீட்டில் வைத்துத் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.
இன்றைக்கு அவன் வருவான் என்கிற நினைப்பே அவளுக்குள் மெல்லிய படபடப்பை உண்டாக்கியிருந்தது. தன்னைக் கொஞ்சம் கவனித்து அலங்கரித்துக்கொண்டாள்.
அவனும் வந்தான். உடற்கட்டை இன்னுமே கொஞ்சம் இறுக்கமாக்கி, முன்பை விடவும் சற்று முதிர்ச்சியடைந்த முகத்துடன், பட்டர் கலர் பிட் ஜீன்சுக்கு டார்க் பிரவுனில் ஷேர்ட் அணிந்து, அதன் கையை முக்கால் வாசி அளவுக்கு மடித்துவிட்டிருந்தான். கருப்பு நிற பெல்ட், அதே கருப்பில் பார் மணிக்கூடு, எப்போதும் அவன் வலது கையை அலங்கரிக்கும் தடிமனான பின்னல் டிசைன் கொண்ட செயின் என்று அட்டகாசமாய் இருந்தான்.
தன்னையும் அவன் பார்ப்பானா என்று கவனித்துப் பார்த்தாள். அவள் புறமே திரும்பவில்லை அவன். அனிச்சம் மலராய் அவள் முகம் வாடிப்போயிற்று.
அவனுக்குப் பிடித்த தோடம்பழத் தண்ணீர் கரைத்து, ஐஸ் கட்டிகள் போட்டு எடுத்து வந்து எல்லோருக்கும் பரிமாறினாள். அப்போதும் அவளைப் பார்த்தான் இல்லை. அதைவிட அவள் தந்ததை அவன் பருகவும் இல்லை.
“என்னப்பு குடிக்கேல்லையா?” என்று கேட்ட இந்துமதியிடமும், “இல்லை அம்மா. எனக்குப் பலகாரமே போதும்.” என்று முடித்துக்கொண்டான்.
அவள் முகம் இன்னுமே வாடிப் போயிற்று. விழா நல்லபடியாகவே முடிந்தது. தளிரோடு விளையாடுகையிலும், அவளைத் தூக்கி வைத்திருக்கையிலும் சிரித்தபடி இருக்கும் அவன் முகத்தைக் காண்கையில் அவளுக்குள் என்னவோ எரிந்தது.
என்றாவது ஒரு நாள் அவளிடம் இந்த முகத்தைக் காட்டி இருப்பானா? எப்போது பார்த்தாலும் அரட்டுவதும் உருட்டுவதும். ‘போடா டேய்!’ என்று மனத்தினுள் பொருமித் தீர்த்தாள்.
விழா முடிந்து, வீட்டுக்கு வந்து சேர்ந்து, தன் அறைக்குள் புகுந்துகொண்ட அபயனின் முகத்தில் விரிந்த புன்னகை. நெருங்கிச் சென்று சாதிக்க முடியாததை விலகி நின்று சாதித்துவிட்டானே!

