அங்கே அவளைக் கவனிப்பதைத் தவிர்த்து அவனுக்கு வேறு என்ன வேலை? என்ன, அதை அவளறியாமல் பார்த்துக்கொண்டான். அவள் தன்னையே பார்த்ததும், தான் அவள் புறம் திரும்பவில்லை என்று முகம் வாடியதும் என்று அத்தனையும் அவனைத் துள்ளிக் குதிக்க வைத்திருந்தன.
யாருமறியாமல் கிளுக்கிய அவளின் புகைப்படங்களை எடுத்துப் பார்த்தான். இடைப்பட்ட நாள்களில் அவள் முன்னால் சென்று நின்றது இல்லையே தவிர்த்து, பல்கலையில் வைத்து அடிக்கடி அவளைப் பார்த்துக்கொள்வான். அதனால் அவளில் பெரிய வித்தியாசங்கள் அவனுக்குத் தெரியாதபோதும் பிரத்தியேகமான அலங்கரிப்பில் அவன் மனத்தை வசீகரித்திருந்தாள் அவனின் அன்பா!
அடுத்த திங்கள் அவள் நிர்மலாவோடு கண்டீனில் அமர்ந்திருந்த வேளை, நேரக்கச் சென்று அவள் முன்னே தானும் அமர்ந்தான்.
எவ்வளவு காலத்துக்குப் பிறகு தேடி வந்திருக்கிறான்! இனிமையாக அதிர்ந்து விழிகளை விரித்தாள் அன்பினி.
அவன் அவளைப் பார்க்கவே இல்லை. மாறாக, அவளின் டிஃபன் பொக்ஸை எட்டி எடுத்துத் திறந்தான். உள்ளே தோசையும் சம்பலும் இருந்தன. விறுவிறென்று சாப்பிட்டான். அவள் அருந்துவதற்கு என்று வைத்திருந்த தண்ணீர் போத்தலை எடுத்து முழுவதுமாக வாய்க்குள் கடகடவென்று சரித்தான். டிஃபன் பொக்ஸை கழுவிக்கூடக் கொடுக்காமல் அப்படியே மூடி, அவள் புறம் தள்ளிவிட்டு, எழுந்துபோய்க் கையைக் கழுவிக்கொண்டு அப்படியே நடந்துபோனான்.
அத்தனையையும் பார்த்துக்கொண்டு இருந்தவளுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. “பாத்தியாடி, இவருக்கு இருக்கிற திமிர?” என்று பல்லைக் கடித்தாள்.
பார்வை அவனையே தொடர இங்கே திட்டியவளைக் கண்டு ஒன்றும் விளங்காமல், “எச்சூஸ்மி, இப்ப நீ சீனியரத் திட்டுறாய்தானே?” என்று சந்தேகம் கேட்டாள் நிர்மலா.
“திட்டாம? இந்த அபாயத்தை எல்லாம் கொஞ்சச் சொல்லுறியா?” அன்றைக்கு அவனுக்கென்று அவள் கரைத்துக்கொடுத்த தோடம்பழத் தண்ணீரை அருந்தாதவன் இன்றைக்கு எதற்கு அவள் சாப்பாட்டைச் சாப்பிட்டுவிட்டுப் போகிறானாம் என்கிற கோபம்.
“சரி விடு, சீனியருக்கு நல்ல பசி போல.”
“அப்ப நான் பட்டினியா?”
“அடியேய், நாங்க இருக்கிறது கண்டீன்ல. இங்க எதையாவது வாங்கிச் சாப்பிடு.”
அவர்களின் விடுதிக்கு வெளியே பெட்டிக்கடை ஒன்று வைத்திருக்கும் அக்கா ஒருவர் கணவரை இழந்தவர். அவர் காலைச் சாப்பாடும் கொடுப்பார். கண்டீனை விடவும் அங்கே சுவையும் தரமும் அதிகம் என்பதில் தினமும் அங்குதான் வாங்குவாள் அன்பினி. இன்று வேறு வழியில்லாமல் கண்டீனில் தன் உணவை முடித்துக்கொண்டாள்.
அவன் அடுத்த நாளும் வந்தான். அதேதான் நடந்தது. அவளைப் பார்க்கவும் இல்லை, அவளோடு ஒரு வார்த்தை பேசவும் இல்லை. அவள் உணவை எடுத்துச் சாப்பிட்டுவிட்டுப் பேசாமல் போனான்.
“இவர் என்னடி குரங்கா? அதுதான் மனுசரின்ர கையில இருக்கிறதக் கேக்காமக் கொள்ளாமப் பறிச்சுச் சாப்பிடும் எண்டு பாத்தா இவரும் அதே வேலைதான் பாக்கிறார்.” என்று நிர்மலாவிடம் சீறினாள். பார்வை மட்டும் போகும் அவனில்.
அடுத்த நாளும் வந்தான். வழமை போன்று டிஃபன் பொக்ஸை எட்டி எடுத்துத் திறந்து பார்த்தவன் அதிர்ந்து போனான். அதற்குள் இலை தழைகளைப் பிடுங்கி அடைத்து வைத்திருந்தாள் அன்பினி.
தன்னோடு கதைக்காமல் உணவை மட்டும் சாப்பிட்டுவிட்டுப் போகிறானே என்கிற கோபத்தில் துணிந்து செய்துவிட்டவளால் இப்போது அவனை எதிர்கொள்ள இயலவில்லை.
“இண்டைக்கு எனக்குப் பசி இல்ல. நீரே சாப்பிடும்!” என்று பொக்ஸை அவள் பக்கம் நகர்த்தி வைத்தான் அவன்.
விடயம் இப்படித் திரும்பும் என்று எதிர்பாராதவள் திகைத்துப்போனாள்.
“சாப்பிடும்! இண்டைக்கு நீர் இதைச் சாப்பிடாம இங்க இருந்து போகேலாது!”
முகம் சுருங்க பார்வையைத் தழைத்தாள் அன்பினி.
அதற்குமேல் அவன் அங்கே நிற்கவில்லை. அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு எழுந்து நடந்தான்.
இத்தனையையும் பார்த்துக்கொண்டிருந்த நிர்மலா, “ஆனாலும் நீ இருக்கிறியேடி, சரியான எமகாதகி!” என்றாள் கடுப்புடன்.
அவளுக்கும் ஒரு மாதிரியாயிற்று. திரும்பவும் தன்னைத் தேடி வர ஆரம்பித்தவனை தேவையில்லாத வேலை பார்த்து மீண்டும் கோபப்படுத்திவிட்டோமோ என்று கவலைப்பட்டாள்.
அடுத்தநாள் சாப்பாட்டை வைத்துக்கொண்டு காத்திருந்தாள். அவன் வரவில்லை. அடுத்த நாளும் அதேதான் நடந்தது. பரிதவித்துப்போனாள். அதற்கும் அடுத்தநாள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவர்களின் பீடத்துக்கு அவனைத் தேடிக்கொண்டு நிர்மலாவுடன் சென்றாள்.
அங்கு நண்பர்களோடு நின்றிருந்தவனின் முன்னால் டிஃபன் பொக்ஸை கொண்டுபோய் நீட்டினாள்.
அவள் புறம் திரும்பியும் பாராமல், “வாங்கடா!” என்றபடி அங்கிருந்து அகன்றுபோனான் அபயன்.
அவளுக்கு முகம் கூம்பிப் போயிற்று. ஆனாலும் சோரவில்லை. எப்படியாவது அவனைச் சமாதானப்படுத்திப் பழையபடி பேச வைத்துவிடு என்று மனம் உந்திற்று. அடுத்த நாளும் கொண்டுவந்து நீட்டினாள். அவன் இறங்கி வரவேயில்லை. அடுத்த நாளும் அதேதான்.
அவனுடைய அந்தப் பிடிவாதக் கோபத்தில் முற்றிலுமாகச் சோர்ந்துபோனாள் அன்பினி. நான்காவது நாள் அவனிடம் நீட்டாமல் அவன் அமர்ந்திருந்த வாங்கிலில் டிஃபன் பொக்ஸை வைத்துவிட்டுத் திரும்பி நடந்தாள்.
தலையைக் கோதி ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டவனுக்கும் அவளை வதைத்தது போதும் என்று தோன்றிவிட்டது போலும்.
டிஃபன் பொக்ஸை எடுத்துக்கொண்டு அவளை நோக்கி நடந்தபடி, “ஓய்!” என்று குரல் கொடுத்தான்.
நின்று திரும்பிப் பார்த்தாள் அன்பினி.
“நான் உம்மட்ட கேக்கேல்லையே. பிறகு என்னத்துக்கு கொண்டு வந்தனீர்? உம்மட டிஃபன் பொக்ஸை நீரே பிடியும்!” என்று திரும்ப நீட்டினான்.
அவளுக்கு விழிகள் கரித்துக்கொண்டு வந்தன. அதை உள்ளுக்கு இழுத்துக்கொண்டு அவனையே பார்த்தாள்.
அந்தப் பார்வையும் கண்ணீரும் அவன் நெஞ்சை என்னவோ செய்ய, “நீர் என்ன தொட்டாச் சிணுங்கியா? தொட்டதுக்கும் அழுதுகொண்டு! வாரும் என்னோட!” என்றவன் நிர்மலாவை அனுப்பிவிட்டு, அவர்களின் கண்டீனுக்கு அவளோடு நடந்தான்.
எப்போதும் அவளுக்கு எதிரில் அமர்கிறவன் இந்த முறை அவள் அருகில் அமர்ந்துகொண்டான். அவளுக்குப் படபடவென்று வந்தது. காட்டிக்கொள்ளவில்லை.
“அண்டைக்கு இலைகுழை. இண்டைக்கு என்ன? மாட்டுச் சாணமா?” என்று கேட்டுக்கொண்டு திறந்தான்.
அங்கே வெள்ளைத் துண்டு ஒன்றில் ‘Sorry’ என்று மிக அழகாக எழுதியிருந்தாள் அன்பினி. ஒருமுறை அவன் புருவங்கள் உயர்ந்து மீண்டன. அதை எடுத்து, நிதானமாய் அந்த மன்னிப்பு வேண்டலை வருடிக் கொடுத்துவிட்டுத் திரும்பி அவளைப் பார்த்தான்.
காரணமே தெரியாது முகம் சூடாக, அவள் பார்வையை அகற்றிக்கொண்டாள்.
அவன் உதட்டோரம் மெல்லிய முறுவல் ஒன்று மலரவா என்றது.
அடுத்ததாய் ஒரு குட்டி சொக்லேட் பார். அதன்மேல் ‘சமாதானம்?’ என்று கேட்டு எழுதியிருந்தாள். இப்போது அவனால் தன் உதட்டு முறுவலை மறைக்க முடியாமல் போயிற்று. ‘ச்சோ ச்சுவீட் அன்பா!’ என்று உள்ளுக்குள் கொஞ்சிக்கொண்டான்.
அதற்கும் கீழே வட்ட வடிவில் வாழை இலை வெட்டி மூடி இருக்க, அதை எடுத்துவிட்டுப் பார்த்தான். உள்ளே இடியப்பக் கொத்து. பார்க்கவே அவனுக்கு உமிழ்நீர் சுரந்தது. டிஃபன் பொக்ஸ் மூடியில் சரி பாதியை அவளுக்கும் போட்டுக் கொடுத்தான்.
“இல்ல, உங்களுக்குத்தான் கொண்டு வந்தனான்.” என்று முணுமுணுத்தாள் அவள்.
“பரவாயில்ல சாப்பிடும்.”
அதன் பிறகு அவளும் மறுக்கவில்லை. மௌனமாகவே இருவரும் சாப்பிட்டு முடித்தனர். அவள் கொண்டுவந்த சொக்லேட் பாரில் ஒரு பாதியைக் கடித்துவிட்டு அவளிடம் நீட்டினான்.
அவனளவில் அவள் மனத்தை அறிவதற்கான மீண்டுமொரு முயற்சி.
திகைத்து அவனைப் பார்த்தாள் அவள். உதட்டுக்குள் சிரிப்பை மறைத்தபடி, “ம்!” என்றான் அவன்.
அது எப்படி? முகத்தில் சூடான இரத்தம் பாய, செய்வதறியாது தடுமாறினாள்.
“அப்ப சமாதானம் இல்லையா?”
“இல்ல அது…” இது வெறும் சொக்லேட்டை பகிர்தல் மட்டும் இல்லையே. அதன் வழியே அவள் உள்ளத்தைக் கேட்கிறான். அவளும் மறுக்கும் நிலையில் இல்லை. ஆனாலும்…
திரும்பவும் கோபித்துவிடுவானோ என்கிற பயத்தில் கை நடுங்க வாங்க நீட்டினாள். தன் கையை பின்னுக்கு இழுத்துக்கொண்டவன் அவள் வாய்க்குத் திரும்பவும் கொண்டு வந்தான்.
அவள் அதிர்வுடன் தலையைப் பின்னுக்கு இழுத்துக்கொள்ள, சின்ன சிரிப்புடன் மேசையில் வைத்தான். அவனைப் பாராமல் அதை எடுத்து, சிறிதாய்த் தானும் உண்டாள் அன்பினி. இந்த முறை அவள் அவனுக்குக் கொடுக்கவில்லை. ஆனால், அவள் கையில் இருந்ததைப் பிடுங்கித் தன் வாயில் போட்டுக்கொண்டு அவளைப் பார்த்துக் குறும்புடன் சிரித்தான் அவன்.
அவளுக்கு முகம் சிவந்தே போயிற்று. டிஃபன் பொக்ஸை தூக்கிக்கொண்டு ஒரே ஓட்டமாக ஓடிப்போனாள்.

