அத்தியாயம் 50
அடிக்கடி முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் என்று வந்து போனதில் அபயனால் அடுத்த இரண்டு வாரங்களுக்கு கொழும்பை விட்டு அசையவே முடியவில்லை. இப்படி வேலையைச் சிரத்தையாகக் கவனிக்க முடியாமல் போனால் எதிர்காலம் என்னாகும் என்கிற கேள்வியும் எழுந்தது. திவாகர் வேறு அடிக்கடி விடுமுறை எடுப்பதைக் கொஞ்சம் குறை என்று நேரடியாகச் சொல்லியிருந்தான்.
மனைவியையும் அவள் அண்மையையும் மனம் அதிகமாகத் தேடினாலும், நினைத்ததும் ஓடிப்போய்ப் பார்க்கும் தூரத்தில் அவர்கள் இல்லையே. அடுத்த வார இறுதி அவளை இங்கே வரச் சொல்லுவோமா என்று யோசித்துக்கொண்டிருந்தான்.
அதே நிலையில்தான் அன்பினியும் இருந்தாள். புதிதாகப் பிறந்திருக்கும் குழந்தை ஆசை, இப்போதைக்கு அது சாத்தியமில்லை என்கிற கசப்பான நிஜம், கொஞ்சம் கூட இறங்கி வராத சுபாங்கியின் பிடிவாதம், அன்னையின் முகத்திருப்பல், கணவனைக் காணமுடியாத வாட்டம் என்று அவளுக்குள் நிறைய மனவுளைச்சல்கள். இதில், ஒரு நாள் உறவில் குழந்தை வந்திருக்குமா என்கிற பயம் கலந்த படபடப்பு வேறு.
அப்போதுதான் அழைத்து விடயத்தைச் சொன்னார் திருநாவுக்கரசு. அன்பினி பயந்து போனாள். அடித்துப் பிடித்து ஓடி வந்தவளால் வைத்தியசாலையில் அரை மயக்க நிலையில் படுத்திருந்த அன்னையைக் கண்கொண்டு பார்க்கவே முடியவில்லை.
“அம்மா!” என்றாள் அழுகையை அடக்கி.
புருவங்கள் அசைய மெதுவாய் விழிகளைத் திறந்து பார்த்தார் இந்துமதி அம்மா. தளர்ந்து நலிந்துபோன அவரின் ஒரு கை, மகளின் கையை நடுக்கத்தோடு பற்றிக்கொண்டது. கண்ணோரங்களில் கசிந்த கண்ணீர் மெது மெதுவாகக் காதோரங்களை நனைக்க ஆரம்பித்தது.
“உங்களுக்கு ஒண்டும் இல்லை அம்மா. பயப்பிடாதீங்க.” அவருக்குத் தைரியம் கொடுக்க முயன்றாள் அன்பினி.
விழிகளால் அறையைத் துளாவிவிட்டு, “அப்பா எங்க?” என்றார் உதடுகளை மெதுவாக அசைத்து.
“இவ்வளவு நேரமும் இஞ்சதான் இருந்தவர். இப்ப நான் வரவும் டொக்டரப் பாக்கப் போயிட்டார்.”
“தளிர்… எனக்குத் தளிரைப் பாக்கோணும் பிள்ளை.”
“முதல் நீங்க சுகமாகி வீட்டுக்கு வாங்க. நான் கட்டாயம் தளிரைக் கூட்டிக்கொண்டு வாறன்.” அவசரமாகச் சொன்னாள் அவள்.
அவர் மறுப்பாகத் தலையை அசைத்தார். “நான் இனி இருப்பனோ இல்லையோ தெரியேல்ல பிள்ளை…” என்றதும் பயந்துபோனாள் அன்பினி.
“உங்களுக்கு என்ன விசாராம்மா? உங்களுக்கு பிரசரும் லோ சுகரும்தான். சாப்பாட்டை நீங்க ஒழுங்காக் கவனிக்காம விட்டதால வந்தது இதெல்லாம்…” என்று படபடத்தவளின் பேச்சு, அவள் கரத்தில் அவர் கொடுத்த அழுத்தத்தில் நின்றது.
“எனக்கு ஒரேயொருக்காத் தளிரைப் பாக்கோணும் பிள்ளை. இப்பவே. பாக்காமயே போயிடுவனோ எண்டு பயமா இருக்கு.” எனவும் அவளால் முடியவேயில்லை.
அங்கே வந்த தாதிப்பெண் கூட, “அப்பிடி எல்லாம் ஒரு வருத்தமும் இல்லை அம்மா. நாங்க தாற மருந்தை எல்லாம் இனி மறக்காமக் கவனமாப் போடுங்கோ. பூட்டப்பிள்ளையப் பாக்கிற வரைக்கும் வாழலாம்.” என்று சொன்னதை எல்லாம் கேட்கும் நிலையில் அவர் இல்லை.
தளிரைப் பார்த்தேயாக வேண்டும் என்று நின்றார்.
அதற்குமேல் அன்பினி தாமதிக்கவில்லை. அந்தத் தாதிப் பெண்ணிடம் அவரைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு வெளியே ஓடினாள்.
அப்பாவிடம் சொல்வோம் என்றால் அவரைக் காணக் கிடைக்கவில்லை. கைப்பேசிக்கு அழைத்துப் பார்த்தாள். அவர் எடுக்கவில்லை என்றதும் அவருக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு, ஆட்டோ ஒன்றைப் பிடித்துக்கொண்டு அபயன் வீட்டுக்கு ஓடினாள்.
அங்கே பரமேஸ்வரிதான் தளிரோடு இருந்தார். “மாமி, அம்மாக்கு பிரஷர் கூடி ஆஸ்பத்திரில சேர்த்திருக்கு. தளிரைப் பாக்கோணும் எண்டு அழுறா. நான் கூட்டிக்கொண்டு போறன்.” என்றவள் அவரின் பதிலுக்காகக் கூடக் காத்திருக்கவில்லை. வந்த ஆட்டோவிலேயே தளிரோடு புறப்பட்டிருந்தாள்.
அப்போதுதான் வேலை முடிந்து ஸ்கூட்டியில் வீடு திரும்பிக்கொண்டிருந்த சுபாங்கி, அன்பினியோடு மகள் ஆட்டோவில் செல்வதைக் கண்டதும் பட்டென்று ஸ்கூட்டியை நிறுத்தி, அன்னைக்கு அழைத்து என்ன என்று விசாரித்தாள்.
அவருக்கும் ஒன்றும் புரியவில்லை. அன்பினி சொன்னதை மாத்திரமே சொன்னார்.
சுபாங்கியின் உள்ளத்திலும் சுருக்கென்று ஒரு வலி. காந்தனால் அவர்கள் மீது அவளுக்குக் கோபம் இருந்தாலும் இப்படி அவர் வைத்தியசாலையில் இருப்பது அவளையும் பாதிக்க, ஸ்கூட்டியை வைத்தியசாலைக்கு விட்டாள்.
*****
மொத்த உறவுகளாலும் ஒதுக்கி வைக்கப்பட்டு, தனித்து வாழ்வது எத்தனை பெரிய கொடுமை என்று உணர்ந்துகொண்டிருந்தான் காந்தன். மனம் விட்டுப் பேசிச் சிரிக்க, சேர்ந்து சாப்பிட, அவனுக்கு ஒன்று என்றால் துடிக்கவோ பார்க்கவோ யாருமில்லாமல், அவனே சமைத்து, அவனே சாப்பிட்டு என்று நரகமாக இருந்தது அந்த வாழ்க்கை.
இப்படி இருக்கையில்தான் முல்லைத்தீவில் இவர்கள் வீட்டுக்கு எதிர்வீட்டில் இருக்கும் அவனோடு படித்த நண்பன் திடீரென்று அழைத்து, இந்துமதியின் நிலையைச் சொன்னான். கேட்டதும் துடித்துப்போனான். அதுவும் அப்பா தனியாக அவரைத் தூக்கிக்கொண்டு ஓடினாராம் என்று அறிந்து நிலைகுலைந்து போனான்.
அம்மாவைப் பார்க்க அப்பா விடுவாரா என்கிற கேள்வி எழுந்தாலும், அதை அங்கே போய்ப் பார்ப்போம் என்று எண்ணிக்கொண்டு, அடுத்த நிமிடமே புறப்பட்டிருந்தான்.
அங்கே அவன் சென்று சேர்ந்தபோது இந்துமதியின் அறையில் யாருமில்லை. தாதிப்பெண் மட்டுமே இருந்தார். அவர் கேள்வியாகப் பார்க்கவும், இந்துமதியைக் கையால் காட்டி, “அம்மா. நான்… மகன்.” என்றவனுக்குக் குரல் எழும்பவே இல்லை.
எத்தனையோ மாதங்களுக்குப் பிறகு பார்க்கிறான். அவன் அம்மாவா இது? அவனால் நம்பக்கூட முடியவில்லை. இருந்ததற்குப் பாதியாகி, வயக்கெட்டு(மெலிந்து), தலை நரைத்து, முகத்தில் அப்பட்டமாக மூப்புத் தெரிய, அவன் வந்தது கூடத் தெரியாமல் படுத்துக்கிடந்தார்.
அவரை அவன் இப்படிப் பார்த்ததேயில்லை. அதுவும் அவன் வவுனியாவிலிருந்து வருகிறான் என்றால் பார்த்து பார்த்து அவனுக்குப் பிடித்ததாக மட்டுமே சமைத்துத் தருவார். அந்தளவில் அவன் மீது அளவில்லாத வாஞ்சையும் அன்பும்.
அப்படியானவரின் இன்றைய நிலை? மனம் அழ அவர் அருகில் சென்றான்.
“அவா கொஞ்சம் பயந்துபோய் இருக்கிறா. என்ன கதைக்கிறதா இருந்தாலும் நம்பிக்கை குடுக்கிற மாதிரிக் கதைங்கோ. அவாவை நிறையக் கதைக்க விடாதீங்கோ!” என்றுவிட்டு வெளியே வந்து நின்றார் தாதி.
மெல்ல அவரருகில் சென்று அமர்ந்தான். கட்டிலில் கிடந்த அவர் கரத்தை மெல்லப் பற்றினான். அந்தத் தொடுகை அவரின் ஆழ்மனத்தைத் தொட்டது போலும். “தம்…பி!” என்றார் மெல்ல.
அவன் விழிகளில் கண்ணீர் கசிந்தது. தனிமையிலேயே கிடந்து செத்தவனுக்கு அன்னை தன்னை வெறுக்கவில்லை என்கிற உண்மை உயிர் கொடுத்தது. “அம்மா!” என்றான் துடிப்புடன்.
அவர் விரல்கள் அவன் விரல்களை மெல்லப் பற்றின. அந்தக் கையில் மெல்லிய நடுக்கம். அதை உணர்ந்தவனின் உள்ளமும் நடுங்கியது. மூச்செடுக்கக் கூட மறந்தவனாக அவரையே பார்த்திருந்தான். புருவங்கள் சுருங்க மெல்ல விழிகளைத் திறந்தார் இந்துமதி.
அவன் விழிகளில் கண்ணீர். “அம்மா!” என்றான் மீண்டும். “உங்களுக்கு ஒண்டும் இல்ல அம்மா. ஒண்டுக்கும் பயப்பிடாதீங்க.” என்றான் அவர் தலையை வருடி.
இமைக்காது அவனையே பார்த்தார். அவர் விழிகளில் மெல்ல மெல்ல நீர் சேர்ந்து வழிந்தது. “ஏன் தம்பி உனக்குப் புத்தி இப்பிடிப் போனது?” என்றார் அவர் பேசச் சிரமப்பட்டபடி.
“அம்மா!” அவனால் அவர் முகத்தைப் பார்க்க முடியவில்லை.
“உன்னால நாங்க என்ன பாடெல்லாம் படுறோம் எண்டு உனக்குத் தெரியுமா? தினம் தினம் அழுறோம். வெளில எதையும் சொல்லவும் ஏலாம, மறக்கவும் ஏலாமக் கிடந்து துடிக்கிறோம். ஏன் இப்பிடி எல்லாரின்ர வாழ்க்கைலையும் மண்ணை அள்ளிப் போட்டனி?”
“அம்மா!” அவனால் முடியவே இல்லை. அவர் கைகள் இரண்டையும் எடுத்துத் தன் கண்களில் ஒற்றிக்கொண்டான். “ஏன் இப்பிடிப் புத்தி பேதலிச்சுப் போனது எண்டு எனக்கே தெரியேல்ல அம்மா. ஆனா, இப்ப நடந்ததை எல்லாம் நினைச்சு நினைச்சு அழுறன். உங்கட கால்ல விழுந்து மன்னிப்புக் கேக்கிறன் அம்மா. என்னை மன்னிச்சிடுங்கோ ப்ளீஸ்!” என்று அழுதான்.
அது எதுவும் அவர் காதில் ஏறவேயில்லை. அவனால்தானே இத்தனையும் என்று கோபம் வந்தது. “சொல்லு! ஏனடா அப்பிடிச் செய்தனி? ஒண்டுக்கு ரெண்டு பொம்பிளைகளின்ர வாழ்க்கைய அழிச்சு, எங்க எல்லாரின்ர நிம்மதியையும் பறிச்ச நீ, எப்பிடி எனக்குப் பிள்ளையா வந்து பிறந்தனி?” என்றவர், ஆவேசம் வந்தவர் போன்று அவனை உதறித் தள்ளினார்.
“அம்மா!”
“சீ! என்னை அப்பிடிக் கூப்பிடாத!” என்றவரின் ஆக்ரோசத்தில் அதிர்ந்து, எழுந்து நின்றுவிட்டான் காந்தன்.
“எந்த முகத்தை வச்சுக்கொண்டு என்னைப் பாக்க வந்தனி? வெக்கமா இல்ல உனக்கு? வெளில போ முதல்!” என்று கத்தினார்.
அந்தச் சத்தத்தில் அடித்துப் பிடித்து ஓடி வந்தார் தாதிப்பெண். “என்ன, என்ன சத்தம் இங்க? அவவைக் கதைக்க வைக்காதீங்க எண்டு சொல்லிவிட்டா என்ன செய்து வச்சிருக்கிறீங்க?” என்ற அவரின் பேச்சைக் கேட்கும் நிலையில் அவனும் இல்லை, அவரும் இல்லை.
“நீ ஒரு பொம்பிளைப் பொறுக்கி. என்னையே எப்பிடிப் பாப்பாய் எண்டு தெரியாது. உனக்கு முன்னால படுத்துக் கிடக்க எனக்குக் கூசுது. போடா வெளில!” என்றதும் நொறுங்கிப்போய் அவர் காலடியில் தொய்ந்து விழுந்தான் அவன்.
“நீங்க என்ர அம்மாம்மா. ஏனம்மா இப்பிடி எல்லாம் கதைக்கிறீங்க? அம்மா…” என்று அவர் கால்கள் இரண்டையும் பற்றிக்கொண்டு அழுதவனை அப்போதும் உதறினார் அவர்.
அதற்குமேல் தாதிப்பெண் தாமதிக்கவில்லை. முதல் வேலையாக அவனை இழுத்துக்கொண்டுபோய் வெளியில் விட்டார்.
இது எதுவும் தெரியாது தளிரோடு ஓட்டமும் நடையுமாகத் தாயின் அறையை நோக்கி ஓடி வந்துகொண்டிருந்தாள் அன்பினி.

