அத்தியாயம் 51
எதிரில் வந்துகொண்டிருக்கும் யாரையும் கவனிக்கும் நிலையில் காந்தன் இல்லை. அந்தளவில் அன்னையின் வார்த்தைகள் அவனை மொத்தமாக அடித்துச் சாய்த்திருந்தன. இதற்கு அவர் ஒரு பிடி சோற்றில் விசத்தைக் கலந்து தந்திருக்கலாம்.
அவன் செய்த தப்புக்கு இதைவிடவும் பெரிய தண்டனை யாராலும் தர முடியும் போல் இல்லை. அங்கிருந்த நாற்காலியில் விழுந்து, முகத்தை மூடிக்கொண்டு குலுங்கி அழுதான்.
பெற்ற தாயிடமிருந்து இப்படி ஒரு பேச்சைக் கேட்ட பிறகும் அவன் வாழத்தான் வேண்டுமா? அழுக்கேறிப்போன தன் உடலைத் தானே எரித்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது. அப்படி ஒரு ஆவேசமும் ஆத்திரமும் அவன் மீது அவனுக்கே உண்டாயிற்று.
இல்லை, இனி நான் வாழக் கூடாது! வாழவே கூடாது. ஒரு வேகத்துடன் முகத்தை அழுத்தித் துடைத்துக்கொண்டு அவன் எழுந்தபோது, “அப்பா!” என்கிற குரல் கதறலாய் ஒலித்தது.
உயிர் துடிக்க நிமிர்ந்தான் காந்தன். மின்னலாய் ஓடி வந்து அவன் கால்களைக் கட்டிக்கொண்டாள் தளிரினி.
“தளிர்! செல்லம்” என்றபடி பெண்ணை அப்படியே அள்ளிக்கொண்டவனுக்கு மட்டுப்பட்டிருந்த அழுகை மீண்டும் வெடித்தது. சின்னவளும் அத்தனை நாள்களினதும் ஏக்கத்தைத் தீர்க்கிறவளாக அவன் கழுத்தை இறுக்கிக் கட்டிக்கொண்டு கதறினாள்.
“அப்பா எங்கப்பா போனனீங்க? ஏன் என்னைப் பாக்க வரேல்ல?” தன் மழலையில் கேட்டு கேட்டுக் கதறினாள்.
காந்தன் நிலைகுலைந்து போனான். அன்னையின் சுடு வார்த்தைகள் அவன் மீது கொதிநீரைக் கொதிக்க கொதிக்க வார்த்தது என்றால், பெற்ற மகளின் ஏக்கம் அவனைச் சுட்டுப் பொசுக்கியது. கண்ணீருடன் நிமிர்ந்து தங்கையைப் பார்த்தான்.
அங்கே அன்பினியும் திகைத்துப்போய் நின்றிருந்தாள். எப்படியாவது தளிரை அன்னையின் கண்களில் காட்டிவிட வேண்டும் என்கிற தவிப்புடன் ஓடி வந்தவள், அப்பா என்று கதறிக்கொண்டு தளிர் தன் கையிலிருந்து குதித்திறங்கவும் ஒருகணம் தடுமாறிப்போனாள்.
நிமிர்ந்து பார்த்தபோது கண் முன்னே அவள் தமையன்.
அவள் செய்வதறியாது நின்றது ஒரு கணம்தான். அடுத்த கணமே அவன் முகத்தை நிமிர்ந்தும் பாராமல், சின்னவளை ஒருவிதப் பிடிவாதத்துடன் அவனிடமிருந்து பிடுங்க முயன்றாள்.
அவன் அவளைத் தடுக்கவில்லை. தளிர்தான் தகப்பனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு வரமாட்டேன் என்று நின்றாள்.
“இல்ல, நான் வர மாட்டன், அப்பா வேணும்!” என்று அவளுக்குக் கால்களால் உதைத்தாள்.
“தளிர் இப்ப வரப்போறீங்களா இல்லையா? நாங்க அப்பம்மாவைப் பாக்கப் போகோணும்!” என்று அதட்டியவளின் பேச்சை அவள் கேட்கவேயில்லை. இன்னும் அடித்தொண்டையிலிருந்து கத்தினாள்.
“என்ன இது? வருத்தக்காரர் படுத்திருக்கிற இடத்தில இவ்வளவு சத்தம்? பிள்ளையைக் கூட்டிக்கொண்டு வெளில போங்க!” தாதி ஒருவரின் அதட்டலில் காந்தன் வெளியில் நடக்க, “தளிரைத் தந்திட்டுப் போங்கோ!” என்றாள் அன்பினி கோபக்குரலில்.
“கொஞ்சம் பொறு அன்பு. அவான்ர அழுகை நிக்கட்டும்.” என்றுவிட்டு வெளியே நடந்தான் அவன்.
அன்பினிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அங்கே தவித்துக்கொண்டிருக்கும் அன்னை ஒரு பக்கம், அப்பா தமையனைப் பார்த்தால் என்னாகுமோ என்கிற பதற்றம் இன்னொரு பக்கம் என்றால், சுபாங்கி இதையெல்லாம் அறிந்தால் தன்னைக் கடித்துக் குதறிவிட மாட்டாளா என்று நினைத்ததுமே நடுங்கியது. கணவனும் கோபப்படுவானே!
இதற்குள் காந்தன் வைத்தியசாலைக்கு வெளியே வந்திருந்தான். மகள் முதுகைத் தடவி, ஆறுதல் வார்த்தைகள் சொல்லி, தேற்றி, முத்தமிட்டு, முகம் துடைத்து என்று எது செய்தும் அவள் கண்ணீர் நிற்பதாயில்லை.
அவனை அவளிடமிருந்து யாராவது பறித்துக்கொண்டு போய்விடுவார்களோ என்கிற பயத்தில் மிக மிக இறுக்கமாக அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை விடவே மாட்டேன் என்று நின்றாள். காந்தனுக்குக் கழுத்து வலித்தது. அதைவிட அதிகமாய் நெஞ்சம் வலித்தது.
விறுவிறு என்று அவர்களிடம் வந்த அன்பினி, “உங்களை ஆர் இஞ்ச எல்லாம் வரச் சொன்னது? அண்ணி பாத்தா என்னத்தான் பேசுவா. இருக்கிற பிரச்சினைகள் போதாது எண்டு எங்களை ஏன் இப்பிடி வதைக்கிறீங்க!” என்று சிடுசிடுத்தாள்.
“அம்மாவைப் பாக்க வந்தனான் அன்பு.”
“அவான்ர இந்த நிலைக்குக் காரணமே நீங்கதான். முதல் தளிரைத் தந்திட்டு நடவுங்க நீங்க!” முகம் சினத்தில் சிவக்க மீண்டும் தளிரை வாங்க வந்தவளின் ஒரு கையைப் பற்றித் தடுத்தான் காந்தன்.
“எப்பிடி இருக்கிறாய்?”
அவள் விழிகள் அவனை எரித்தன. “இவர் என்னை நல்லாத்தான் வச்சிருக்கிறார். ஆனா நான்? நல்லாவே இல்ல. அம்மா அப்பா நிம்மதியாவே இல்ல. அண்ணி, நான் பாத்த அண்ணிதானா இவா எண்டு நினைக்கிற அளவில ஆளே மாறிப்போய் இருக்கிறா. இது எல்லாத்துக்கும் காரணம் நீங்க. இப்ப வந்து கேக்கிறீங்க, எப்பிடி இருக்கிறாய் எண்டு?” அழுகையும் ஆத்திரமுமாக அவள் சீறுகையில் அங்கே வந்தாள் சுபாங்கி.
காந்தனை மகளோடு கண்டதும் அவள் உள்ளம் கொதித்துப் போனது. ஸ்கூட்டியை நிறுத்தக்கூட இல்லை. அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்தவள், “இதுக்கா என்ர பிள்ளையைத் தூக்கிக்கொண்டு வந்தனி?” என்றபடி அன்பினியைப் பிடித்துத் தள்ளிவிட்டாள்.
“ஏய் சுபா! என்ன இது? நான் வந்தது அவாக்குத் தெரியாது!” என்றபடி தங்கையை எட்டிப் பிடித்துத் தன் பின்னால் காந்தன் நிறுத்திக்கொள்ளவும் சுபாங்கிக்கு வெறியே பிடித்துக்கொண்டது.
அன்றும் இதே இவளுக்காகத்தானே அவளை அதட்டி அடக்கினான். அடுத்த நொடியே ஆவேசம் கொண்டவள், போட்டிருந்த செருப்பை கழற்றி அவனை அடி வெளுத்திருந்தாள்.
“கேடுகெட்ட நாயே! என்ர பெயரைச் சொல்ல உனக்கு எவ்வளவு தைரியமடா? இதில கோபம் வேற வருதா உனக்கு? என்னை அதட்ட நீ ஆரடா? முதல், பிள்ளையைத் தா!” என்று வெறி வந்தவள் போன்று மகளை அவனிடமிருந்து பிய்த்து எடுத்துத் தன் பக்கம் வைத்துக்கொண்டாள்.
சின்னவளோ திரும்பவும் தகப்பனிடம் போகக் கதறினாள்.
அன்பினிக்கு என்ன செய்வது என்று தெரியவேயில்லை. அவர்களைச் சுற்றிக் கூட்டம் சேர ஆரம்பித்தது. மிகுந்த அவமானமாக உணர்ந்தவள் தகப்பனிடம் போகத் துடிக்கும் தளிரைத் தூக்கி வைத்துக்கொண்டாள்.
சுபா சுற்றியிருக்கும் சூழலை உணரும் நிலையில் இல்லை. அத்தனை காலமும் நெஞ்சில் அடக்கி வைத்திருந்த வெறி வீறு கொண்டு எழுந்து நின்றதில் செருப்புப் பிய்ந்து போகும் வரையிலும் அடித்துத் தீர்த்திருந்தாள்.
“வாயில விரல் வச்சா காட்டுறாய் எனக்கு! அடங்கி இருக்கேலாமத் தெருப் பொறுக்கின பொறுக்கி நீ, நீ என்னை அடக்குறியாடா? எவ்வளவு தைரியம் உனக்கு? உன்னைக் கொன்டாத்தான் எனக்கு வெறி அடங்கும்!” என்று மற்றைய செருப்பையும் எடுத்து அடிக்கப் போனாள்.
இதற்குள் அவள் சத்தம் கேட்டு ஓடிவந்த திருநாவுக்கரசு, நடுவில் புகுந்து அவளைத் தடுத்திருந்தார்.
“என்னம்மா இது, இத்தின பேர் பாக்கிற இடத்தில வச்சு?” மிகுந்த அவமானமாய் உணர்ந்தவருக்கு சுபாங்கி மீது அப்படியொரு அதிருப்தி.
“பாத்தா என்ன, பாக்கட்டும். அப்பதானே இவனைப் பற்றி எல்லாருக்கும் தெரிய வரும். முதல் இவனை ஆர் இஞ்ச வரச் சொன்னது? என்ர பிள்ளையத் தூக்க இவனுக்கு என்ன உரிமை இருக்கு?” என்றுவிட்டுத் திரும்பியவள் பார்வையில் அங்கே அவமானமும் அழுகையுமாகச் சின்னவளைப் பிடித்து வைத்துக்கொண்டு நின்ற அன்பினி பட்டாள்.
அப்படி ஒரு ஆத்திரம் வந்தது அவளுக்கு. மகளை அவளிடமிருந்து பறித்து எடுத்துக்கொண்டு, “இனிமேல் என்ர வீட்டு வாசப்படி மிதிச்சுப் பார். உனக்கு இருக்கு!” என்று விரல் நீட்டி எச்சரித்துவிட்டுப் போகவும் திருநாவுக்கரசின் முகம் இறுகியது.
திரும்பிக் காந்தனைப் பார்த்தார். அந்தப் பார்வையில் அத்தனை வெறுப்பு. உடலும் உள்ளமும் கூனிக் குறுகிப் போனவன் அப்படியே அவர் காலிலேயே நெடுஞ்சாண்கிடையாக விழுந்தான்.
திருநாவுக்கரசின் உடலும் உள்ளமும் இறுகியது. வேகமாகப் பின்னால் நகர்ந்து, அவனைத் திரும்பியும் பாராமல் அன்பினியோடு வைத்தியசாலையை நோக்கி நடந்தார்.
“நீங்க போய் அம்மாவோட இருங்கோ பிள்ளை.” என்று அவளை உள்ளே அனுப்பிவிட்டு அவர் திரும்பவும் அவள் பயந்துபோனாள்.
“எங்கயப்பா போறீங்க? நீங்களும் வாங்கோ!” என்று வேகமாக அவர் கையைப் பிடித்துக்கொண்டாள்.
“நீங்க போங்கோம்மா. நான் இப்ப வாறன்.”
“அப்பா, அம்மா தளிரைக் கேப்பா. நீங்க வந்து சமாதானம் சொல்லுங்கோ!”
ஒரு கணம் ஆழ்ந்து மூச்சை இழுத்துவிட்டவர், “அப்பா தளிரைக் கூட்டிக்கொண்டு வரப் போய்ட்டாராம் எண்டு சொல்லுங்கோ.” என்றுவிட்டு நடந்தவர் மீண்டும் நின்று, “இனிக் கிழமைல ஒருக்கா எண்டாலும் எங்கட வீட்டுக்குத் தளிர் வருவாவாம் எண்டும் சொல்லி விடுங்கோ!” என்றுவிட்டுப் போனவரின் மனத்தில் இன்று அத்தனைக்கும் முடிவு கண்டுவிடும் உறுதி வந்திருந்தது.

