அத்தியாயம் 52
திருநாவுக்கரசு வைத்தியரைச் சந்தித்துவிட்டு வெளியே வந்தபோது, மனைவி மூலம் விடயம் அறிந்த குழந்தைவேலு அழைத்துக்கொண்டிருந்தார்.
அதற்கு முதல் மகள் பலமுறை அழைத்திருப்பதைப் பார்த்ததும் என்னவோ என்று பயந்துபோனார். வைத்தியரைப் பார்க்கப் போனதால் கைப்பேசியின் சத்தத்தை நிறுத்தி வைத்திருந்தார்.
அவசரமாக அழைப்பை ஏற்றவரிடம், அன்பினி தளிரைத் தூக்கிக்கொண்டு புறப்பட்டதையும் பின்னால் சுபாங்கி வந்துகொண்டிருப்பதையும் சொல்லி, எதுவும் பிரச்சனையாகிவிடாதபடிக்குப் பார்த்துக்கொள்ளும்படி சொன்ன குழந்தைவேலு, உடனேயே தானும் வருவதாகச் சொல்லி அழைப்பைத் துண்டித்திருந்தார்.
ஓட்டமும் நடையுமாகத் மனைவி இருந்த அறைக்குத் திருநாவுக்கரசு சென்று பார்த்தபோது அவர் நல்ல உறக்கத்தில் இருந்தார். தாதிப்பெண் காந்தன் வந்ததையும் நடந்ததையும் சொல்லவும் இடிந்துபோனார்.
நிச்சயம் விரும்பத்தகாத ஏதோ ஒன்று நடக்கப்போவதை மனம் உணர்த்த, மகள், பேத்தி, சுபாங்கி மூவரும் எங்கே என்று தேடிக்கொண்டு வந்த மனிதர், வெளியே கூடி நின்ற கூட்டத்தையும், அதற்குள்ளிருந்து கேட்ட சுபாங்கியின் குரலிலும் பதறிப்போனார்.
என்னதான் மகனை வெறுத்து ஒதுக்கியிருந்தாலும் இப்படி பொது இடத்தில், மக்கள் கூடி நிற்கையில், அவர் கண் முன்னாலேயே அவன் செருப்பால் அடி வாங்கியதைப் பார்த்தபோது சுக்கு நூறாக நொருங்கிப்போனார்.
அவன் காலில் விழுந்தபோது அவன் மீதிருந்த கசப்பையும் தாண்டி, ஏன் இந்த இழி நிலைக்கு ஆளானாய் என்று அவனைப் பிடித்து உலுக்க வேண்டும் போலிருந்தது.
அவர் உடலிலிருந்து உயிர் போவதற்குள் இன்னும் என்னவெல்லாம் பார்க்கவேண்டி வருமோ என்று அவருக்குத் தெரியவில்லை.
இதில் அன்பினியைப் பார்த்துச் சுபாங்கி பேசிய பேச்சு, இனியும் பொறுமை காப்பதில் அர்த்தமே இல்லை என்கிற முடிவுக்கு அவரை வர வைத்திருந்தது.
அன்று, சுபாங்கி அன்பினியைத் தள்ளி விட்டதையும், வார்த்தைகளை விட்டதையும் மறைக்காமல் வந்து நேராகவே இவரிடம் சொல்லி, மனதார மன்னிப்புக் கேட்டிருந்தார் குழந்தைவேலு.
அந்த மனிதரின் நல்ல மனத்துக்காகவும், சுபாங்கியின் மன அமைதிக்காகவும்தான் அவரும் அமைதியாக இருந்தார். இனி அப்படி இருக்கக் கூடாது. சில காயங்களை ஆறவிடுவது சரி என்றால், சில காயங்களைக் கீறிவிடுவதுதான் சரி.
போகிற வழியிலேயே குழந்தைவேலுக்கு அழைத்து, வைத்தியசாலைக்கு வர வேண்டாம், உங்கள் வீட்டுக்கே வாருங்கள் என்று சொல்லிவிட்டு, நேராக அவர்கள் வீட்டுக்கே சென்றார்.
*****
ஏற்கனவே வைத்தியசாலையில் என்ன நடக்கப் போகிறதோ என்று பதறிக்கொண்டிருந்த பரமேஸ்வரி, சின்னவள் கதறக் கதற ஸ்கூட்டியை சரக்கென்று கொண்டுவந்து நிறுத்திவிட்டு, இறங்கி வந்த மகளின் முகத்தைக் கண்டு பயந்துபோனார்.
அந்தளவில் அவள் முகம் சிவந்து, கோபத்தில் ஜொலித்துக்கொண்டிருந்தது. காலில் செருப்புகள் வேறு இல்லை.
வந்ததும் வராததுமாக, “இவளைக் கொஞ்சம் பிடிங்கம்மா.” என்றுவிட்டு அறைக்குள் புகுந்து, தரையிலேயே தொப்பென்று அமர்ந்தாள் சுபாங்கி.
ஆத்திரம் தீருமளவுக்கு அவனை அடித்ததும், இத்தனை காலமாய் அவளுக்குள் கனன்றுகொண்டே இருந்த கோபத்தீயை உரியவனிடமே இறக்கி வைத்ததும் பெருமளவில் அவள் அழுத்தத்தைக் குறைத்திருந்தது.
கலைந்திருந்த முடியை எல்லாம் ஒன்றாக்கிக் கொண்டையாக்கினாள். தொண்டை வறண்டுபோயிருந்தது. அருகே இருந்த தண்ணீரை எடுத்துக் கடகடவென்று வாயினுள் சரித்தாள்.
அங்கே தளிரின் அழுகை நிற்பதாகவே இல்லை. பரமேஸ்வரி அம்மா செய்யும் எந்தச் சமாதானத்தையும் ஏற்காமல், “அப்பா வேணும் அம்மம்மா.” என்று நின்றாள் தளிர்.
ஒரு நெடிய மூச்சுடன் எழுந்து வந்து மகளை வாங்கிக்கொண்டாள். அங்கிருந்த சோபாவில் அமர்ந்து, அவள் முகம், கண்கள் எல்லாம் துடைத்துவிட்டு, “அம்மாச்சி, இங்க பார். இனி உனக்கு அப்பா இல்லை. அவன் செத்திட்டான்.” என்று சொல்லிக்கொடுத்தாள்.
அதுவரையில் அவளையே பார்த்திருந்த பரமேஸ்வரி, நெஞ்சிலேயே கையை வைத்திருந்தார். “என்ன பிள்ளை கதைக்கிறாய்? அவா குழந்தை. அவாட்டப் போய்…”
“அதுக்கு என்னம்மா செய்றது? இனி இதையெல்லாம் அவள் விளங்கிக் கடந்து வரத்தான் வேணும். அதுதான் அவள் வாங்கி வந்த வரம்!” என்று அவள் சொல்லிக்கொண்டிருந்தபோது, அவர்களின் வீட்டு வாசலில் வந்து நின்றார் திருநாவுக்கராசு.
பரமேஸ்வரி அம்மாவுக்கு இது அடுத்த திகைப்பு. மகளைக் கட்டிக்கொடுத்தபோது கூட வீட்டுக்குள் வராத மனிதர், இன்று வந்திருக்கிறார் என்றால் என்னவோ பெரிதாய் நடந்திருக்கிறது என்று மனம் சொன்னது.
கணவரும் இல்லாமல் மகனும் இல்லா நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாது, “அண்ணா, வா…ங்கோ.” என்று தடுமாறினார்.
“உங்கட அவரும் வந்துகொண்டு இருக்கிறார்.” என்றவரின் பார்வை இன்னுமே அழுதுகொண்டிருக்கும் பேத்தியிடம் சென்றது.
அவளும் அவரைக் கண்டதும், “அப்பப்பா, அப்பா வேணும். அப்பாட்டப் போகப் போறன்.” என்று அவரிடம் ஓடி வந்தாள்.
அப்படியே வாரி அள்ளித் தூக்கிக்கொண்டவருக்கு நெஞ்சில் இரத்தம் வடிந்தது. தொண்டை வறண்டு, உதடுகள் உலர்ந்து, அப்போதும் விக்கி விக்கி அழுதுகொண்டிருந்தாள் அவள்.
“இப்பிடி அழக் கூடாது செல்லம். வாங்கோ, நாங்க முதல் முகம் கழுவிக்கொண்டு வருவம்.” அவளைக் கிணற்றடிக்கு அழைத்துப்போய் முகம் கழுவிவிட்டார்.
தகப்பனின் தகப்பனைக் கண்டதோ, இல்லை அழுது அழுதே ஓய்ந்து போனதோ தளிரின் அழுகையும் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைந்து, சின்ன சின்ன விக்கலில் வந்து நின்றது.
இதற்குள் பரமேஸ்வரி அவருக்கு அருந்துவதற்குக் கொண்டுவந்து கொடுத்தார். அதை அருந்துவதற்குப் பதிலாக, “பிள்ளைக்கு ஏதாவது குடிக்கத் தாங்கோ.” என்று கேட்டு வாங்கி, அதை அவர் தளிருக்குக் கொடுத்துக்கொண்டிருக்கையில் வியர்த்து வழிய வேகமாக வந்து சேர்ந்தார் குழந்தைவேலு.
அதுவரையில் தன் மாமனார் தன் புறம் திரும்பவே இல்லை என்பது சுபாங்கிக்கு உறுத்தாமல் இல்லை. ஆனாலும் நான் என்ன பிழை செய்தேன் என்கிற கேள்வி, அவளை அசையவிடாமல் பிடித்து வைத்திருந்தது.
வந்த குழந்தைவேலு, “வாங்கோ, வந்து கன(நிறைய) நேரமாச்சோ? ஆஸ்பத்திரிக்குப் போற வழில நீங்க கூப்பிடவும் அப்பிடியே திரும்பி வந்திட்டன். தங்கச்சியப் போய்ப் பாக்கேல்லை. குறையா நினைச்சுப் போடாதீங்கோ. இப்ப எப்பிடி இருக்கிறா, பரவாயில்லையா?” என்றபடி மகளருகில் வந்து அமர்ந்துகொண்டார். உள்ளுக்குள் என்னவோ, ஏதோ என்று பெரும் பதற்றம்.
“அவாக்கு என்ன, உடம்புக்கு நோய் எண்டுறதை விட மனதுக்குத்தான் நோய். அது சரியானா எல்லாம் சரியாகிடும்.” என்றவர் மேலே அந்தப் பேச்சை வளர்க்கவில்லை.
“சின்னவாவ உள்ளுக்குக் கொண்டு போங்கோ.” என்று முதல் வேலையாகத் தளிரைப் பரமேஸ்வரியிடம் கொடுத்து அனுப்பினார்.
அவள் மறைந்ததும், “நானா இந்த வீட்டுப் படியேறி வந்து என்ர மகளுக்கு உங்கட மகனைத் தாங்கோ எண்டு கேட்டனானோ?” என்று குழந்தைவேலுவிடம் நேராகவே கேட்டார்.
குழந்தைவேலுக்குச் சட்டென்று முகம் ஒரு மாதிரியாக மாறிப்போனது. ஆனாலும் திருநாவுக்கரசு பிழையாகக் கதைக்கும் மனிதர் இல்லை என்று தெரியுமாதலால், “எனக்கு நடந்த ஒண்டும் தெரியாது. என்ன எண்டு சொல்லுங்கோ, சமாளிக்கலாம்.” என்றார் தன்மையாகவே.
அது திருநாவுக்கரசையும் ஆற்றுப்படுத்தியது. அதில் நிதானமாகவே அவரும் பேசினார்.
“நீங்க கேட்டு வந்ததைக் குறையாவோ குற்றமாவோ நான் சொல்லேல்ல. என்ர பொம்பிளைப் பிள்ளையின்ர வாழ்க்கை இனி என்னாகுமோ எண்டு பயந்துகொண்டு இருந்தனான். இண்டைக்கு அவா சந்தோசமா இருக்கிறா எண்டா அதுக்குக் காரணம் நீங்கதான். நீங்களா வந்து கேக்காட்டி நானா அந்தக் கலியாணத்துக்காக ஒரு அடிகூட எடுத்து வச்சிருக்க மாட்டன். அதை நான் எண்டைக்கும் மறக்கமாட்டன். ஆனா, இண்டைக்கு அவா இந்த வீட்டு மருமகள். அவாவை இந்த வீட்டு வாசப்படி மிதிச்சிடாத எண்டு உங்கட மகள் எப்பிடிச் சொல்லுவா? அதுவும் எனக்கு முன்னால?” என்றதும் குழந்தைவேலு திகைத்துப்போனார்.
“என்னம்மா இதெல்லாம்?” அவளின் பேச்சு அறவே பிடிக்காத தொனியில் மகளிடம் திரும்பி வினவினார்.
“நான் ஒண்டும் காரணம் இல்லாம அப்பிடிச் சொல்லேல்ல அப்பா. தேவை இல்லாம இங்க வந்து, தளிரைக் கூட்டிக்கொண்டு போய் அவனிட்டக் காட்டினதாலதான் சொன்னனான்.”
“முதல் அவனிட்டக் காட்ட அவா கூட்டிக்கொண்டு போகேல்ல. அப்பிடியே இருந்தாலும் அதைப் பற்றி விசாரிச்சிருக்கோணும். ஏன் இப்பிடிச் செய்தனி எண்டு கேட்டிருக்கோணும். அத விட்டுப்போட்டு இந்த வீட்டுக்கு வந்திடாத எண்டு சொல்ல உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல. உங்களுக்கு என்ன உரிமை எல்லாம் இந்த வீட்டில இருக்கோ அதேயளவு உரிமை அன்புக்கும் இருக்கு!” என்று அவர் அழுத்தம் திருத்தமாய்ச் சொல்லவும் அவளுக்கு முகம் கறுத்துப்போனது.
“எங்கட வீட்டில எத்தினையோ வருசமா மருமகளா இருந்தனீங்கதானே. நாங்க ஆராவது ஒரு வார்த்தை இப்பிடி உங்களைப் பாத்துச் சொல்லி இருப்பமா?” என்றதும் குழந்தைவேலுவால் அந்த மனிதரின் முகத்தைப் பார்க்கவே முடியவில்லை.
மகளை அவர்கள் எப்படி வைத்திருந்தார்கள் என்றுதான் அவருக்குத் தெரியுமே. அப்படியிருக்க அவர் மகளுக்கு அவர்கள் செய்தது?
“இனி என்ர மகள் இஞ்சதான் வருவா. இது அவவின்ர மனுசன்ர வீடு. அவாக்கு எல்லா உரிமையும் இருக்கு. இனியும் ஒதுங்கி எல்லாம் இருக்கேலாது!” என்று அறிவித்தார் திருநாவுக்கரசு.
“உண்மையா எனக்கு அது சந்தோசம்தான். அன்புவக் கூப்பிடு, இப்பிடி விடாத எண்டு தம்பிட்டச் சொல்ல சொல்ல அவன்தான் கேக்கேல்லை.” என்று உடனேயே சொன்னார் குழந்தைவேலு.
“அடுத்ததா இனி எங்கட பேத்தி ஒவ்வொரு கிழமையும் எங்கட வீட்டை வரோணும்.” என்றதும், “கடைசி வந்தாலும் அது மட்டும் நடக்காது!” என்று பட்டென்று சொன்னாள் சுபாங்கி.
“அப்பிடி நீங்க சொல்லவே ஏலாது!” திருநாவுக்கரசும் அழுத்தமாகவே சொன்னார்.
“ஏன் சொல்லேலாது? அவள் என்ர மகள்.”
“ஆனா உங்கட மகள் மட்டுமே இல்ல. உங்கட அம்மா அப்பாக்கு எப்பிடி அவா பேத்தியோ அப்பிடித்தான் எங்களுக்கும் பேத்தி. நாங்க இல்லாம இவ்வளவு காலமும் அவாவை நீங்க வளக்கவும் இல்லை. அவாவைப் பாக்கிற உரிமை எங்களுக்கும் இருக்கு. இவ்வளவு நாளும் அடிக்கடி உங்கட கண்ணில பட்டு, உங்கட மன நிம்மதியக் கெடுக்க வேண்டாம், ஏற்கனவே காயப்பட்டு இருக்கிற பிள்ளையை நாங்களும் நோகடிக்க வேண்டாம் எண்டுதான் ஒதுங்கி இருந்தனாங்க. இனியும் அப்பிடி விடேலாது.” என்றதும்
சுபாவுக்குப் பதற்றமாயிற்று.

