கேட்பார் இன்றிக் காதல் 53 – 2

அதுவே இந்துமதியை உடைத்தது. பதில் அவரிடம் சொன்னாலும் அவர் பார்வை அடிக்கடி தன் மருமகளையே தொட்டு தொட்டு வரவும் சுபாங்கியால் அங்கே இயல்பாக நிற்க முடியவில்லை.

இத்தனை நாள்களும் அவர்கள் எல்லோரிடமிருந்தும் தள்ளி இருந்ததும், மனத்தில் வெறுப்பை வளர்த்துக்கொண்டதும் சேர்ந்து அவளை வாயைத் திறக்க விடவில்லை. மாறாகக் கண்ணீர்தான் வந்தது.

அதைப் பார்த்த இந்துமதியால் முடியவில்லை. “என்னம்மா? நான் என்ன பிழை செய்தனான் எண்டு என்னோடையும் கோவமா இருக்கிறீங்க?” என்று நேராகக் கேட்டதும் உடைந்துபோனாள்.

“இல்ல. அப்பிடி எல்லாம் ஒண்டுமில்ல மாமி.” என்றவள் வாயில் மாமி என்கிற வார்த்தை அவளையும் மீறி வந்திருந்தது.

“பிறகு ஏனம்மா இவ்வளவு நாளும் எங்களோட கதைக்கேல்ல? ஏன் தளிரை விடேல்ல? இனி விடுவீங்களாம் எண்டு இவர் சொன்னவர். விடுவீங்கதானே?” ஆசையும் ஏக்கமுமாய் அவர் அவளிடமே கேட்டபோது, அவளால் ஒன்றுமே சொல்ல முடியவில்லை.

பார்வை ஒருமுறை திருநாவுக்கரசிடம் சென்றுவர, “விடுறன் மாமி.” என்றாள் குரலடைக்க.

“இந்தளவும் போதுமம்மா. வேற ஒண்டும் வேண்டாம்.” என்றவர் அப்போதும் தன் பேத்தியை ஆசையோடு உச்சி முகர்ந்தார். அவருக்கு அவளை இறக்கிவிடவே மனமில்லை. தன் கைகளுக்குள்ளேயே வைத்துக்கொண்டார்.

அதுவும் அவர்கள் வாங்கி வந்த பழங்களில் ஒன்றை எடுத்து, அன்பினியைக் கொண்டு கழுவி, அவரே அதை வெட்டி அவளுக்கு ஊட்டி விடவும் பார்த்திருந்த எல்லோர் விழிகளிலும் மெல்லிய கசிவு.

அங்கு யாராலும் இயல்பாக இருக்க முடியவில்லை. ஆனாலும் காட்டிக்கொள்ளாமல் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள். அதுவரையில் அவளிடம் வந்தாலும் கூடச் சற்று நேரத்திலேயே திருநாவுக்கரசு, அன்பினி, இந்துமதி என்று அவர்களிடமே மகள் ஓடிவிடுவதை மெல்லிய வலியுடன் கவனித்துக்கொண்டு இருந்தாள் சுபாங்கி.

“இவ்வளவு காலமும் பாக்காம இருந்த ஏக்கம் அது. அதுவே அடிக்கடி பாக்க ஆரம்பிச்சா நாங்களும் அவாக்குச் சாதாரணம் ஆயிடுவம். ஆர் வந்தாலும் போனாலும் அம்மான்ர இடத்தை இன்னொருத்தரால நிரப்பவே ஏலாதம்மா.” திடீர் என்று சொன்னார் திருநாவுக்கரசு.

முதலில் அதிர்ந்து நோக்கியவளின் விழிகள் மெலிதாக ஈரமாக, ஆம் என்று தலையசைத்துக் கேட்டுக்கொண்டாள்.

*****

அன்று இரவு இந்துமதி அம்மாவோடு யாரையும் தங்க அனுமதிக்கவில்லை. அப்பாவும் மகளும் வீட்டுக்கு வந்திருந்தனர். அபய் வந்து சேர இரவாகியிருந்தது. நேராக அன்பினியின் வீட்டுக்குத்தான் வந்தான். வந்தவனின் முகம் சரியாகவே இல்லை.

அன்பினிக்கு கணவனைப் பார்த்ததும் ஏன் என்றில்லாமல் அழுகை வந்தது. தந்தையும் அங்கேயே இருந்ததில் அடக்கிக்கொண்டு நின்றாள்.

அவனிடத்திலும் தவிப்புத்தான். ஆனாலும் எதையும் காட்டிக்கொள்ளாமல் திருநாவுக்கரசிடம் தமக்கை நடந்துகொண்டதைக் குறித்து வருத்தம் தெரிவித்தான்.

“பரவாயில்ல, விடுங்கோ தம்பி. இதெல்லாம் அவனே அவனுக்குத் தேடிக்கொண்டதுகள். வாழ்க்கைல ஒழுக்கம் தவறிடவே கூடாது எண்டுறதுக்கு அவன் பெரிய உதாரணம்.”

இந்துமதியைப் பற்றியும் விசாரித்துவிட்டு, “மாமா, அன்பாவ நான் கூட்டிக்கொண்டு போகவா?” என்று கேட்டான்.

“அதுக்கென்ன? கூட்டிக்கொண்டு போங்கோ.” மருமகன் தான் செய்த தவறைத் தானே சரி செய்ய முயல்கிறான் என்று விளங்கவும் சந்தோசமாகவே சொன்னார் அவர்.

“இல்ல. நான் நாளைக்கு வாறனே. இஞ்ச அப்பா தனிய எல்லா.” வெளியில் காட்டிக்கொள்ளாவிட்டாலும் அவர் உள்ளே மிகவும் உடைந்துபோயிருக்கிறார் என்று தெரிந்துகொண்டவளால் அவரை விட்டுப் போக முடியவில்லை.

அவருக்கும் மகளின் எண்ணவோட்டம் புரிந்தது. ஆனாலும், “இப்ப நான் தனியா இருக்கிறது விசயமில்லை அம்மாச்சி. தம்பியோட நீங்க அங்க போறதுதான் முக்கியம்.” என்று சொன்னார்.

“அனுசரணையா நடக்கோணும் எண்டுறதுக்காக எங்கயும் எப்பயும் எங்கட உரிமையையும் இடத்தையும் விட்டுக் குடுக்கக் கூடாதம்மா. இருக்க வேண்டிய இடத்தில இருந்துகொண்டு எல்லாரையும் அனுசரிச்சுப் போங்கோ, சரியா?” என்றதும் உள்ளம் நெகிழச் சரி என்று தலையசைத்துக் கேட்டுக்கொண்டாள் அன்பினி.

ஆனாலும் புறப்பட்டு வாசல் தாண்டுகையில் உடைந்தாள். அவர்களுக்காக மட்டுமே வாழ்ந்த அந்த மனிதனை என்னவோ யாருமே இல்லாமல் தனியாக விட்டுவிட்டுப் போவது போலிருந்தது.

“பயமில்லையா அப்பா. தனியா இருப்பீங்களா?” என்ற அவளின் கேள்வியில் அவருக்குச் சிரிப்பு வந்தது.

“அப்பாக்கு என்னம்மா பயம்? நீங்க போயிற்று வாங்கோ! அம்மா நாளைக்கு வந்திடுவாதானே.” என்று அவள் தலையைத் தடவி அனுப்பி வைத்தார்.

கொஞ்சத் தூரம் சென்றதும் காரை வீதியோரமாக நிறுத்திவிட்டு அன்பினியைத் திரும்பிப் பார்த்தான். இதழ்களை இறுக்கி மூடிக்கொண்டு, அழுகையை அடக்கியபடி அமர்ந்திருந்தாள் அவள்.

“பின்னுக்கு வா அன்பா!” என்றுவிட்டு இறங்கி பின்னால் ஏறினான். அவளும் பின் பக்கம் வரவும் முதல் வேலையாக அவளைத் தன் கைகளுக்குள் கொண்டு வந்தான். அதற்காகவே காத்திருந்தவள் உடைந்து அழுதாள்.

அவன் காரணமெல்லாம் கேட்கப் போகவில்லை. வருடிக் கொடுத்து, கேசம் ஒதுக்கிவிட்டு, முத்தமிட்டு, அவள் கண்களைத் துடைத்துவிட்டான்.

நனைந்த இமைகளும், அழுது சிவந்த விழிகளுமாகத் தன்னை நோக்கியவளின் நெற்றியில் இதழ் பதித்து, “பயந்திட்டியா?” என்றான்.

ஆம் என்று தலையசைத்துவிட்டு, “எல்லாருக்கும் முன்னால அண்ணா அப்பிடி அடி வாங்கினதையும், மன்னிப்புக் கேக்கிற மாதிரி அப்பான்ர கால்ல விழுந்ததையும் மறக்கேலாம இருக்கு அபய். இதெல்லாம் அவருக்கு வேணும்தான் எண்டு அறிவு சொன்னாலும் தாங்கேலாம இருக்கு.” என்று தழுதழுத்தாள்.

என்ன நடந்திருந்தாலும் இரத்த பாசம் துடிக்காமல் இருக்குமா? ஒன்றும் சொல்லாமல் அணைப்பை இறுக்கி அவள் உச்சியில் இதழ் பதித்தான்.

“அப்ப அக்கா கதைச்சது கவலையா இல்லையா?”

“அந்த நிமிசம் வலிச்சதுதான். ஆனா அதுக்கெல்லாம் நீங்க விடமாட்டீங்க எண்டு தெரியும்.” என்றவளை மிகுந்த நேசத்துடன் நோக்கி, அழுத்தமாய் இன்னுமொருமுறை அவள் உச்சியில் இதழ் பதித்து மீட்டான்.

அதன் பிறகு இருவரும் பேசிக்கொள்ளவில்லை. ஒருவர் மற்றவரின் அணைப்பிலேயே அமைதியாக இருந்தனர். நேரமாகவும் ஒரு நெடிய மூச்சுடன் புறப்பட்டனர்.

வீட்டுக்குள் அவர்கள் இருவரும் வந்தபோது தளிர் உறங்கி இருக்க, மற்ற மூவரும் விறாந்தையில் இருந்தனர். பெரியவர்கள் இருவரும் முகம் மலர அன்பினியை “வாம்மா!” என்று வரவேற்றனர்.

சுபாங்கியின் பார்வை அன்பினியிடம் சென்று வந்தாலும் கவனம் அபயனில்தான் இருந்தது. அவனும் அவளிடம் பார்வையைச் செலுத்திவிட்டு அன்பினியோடு அறையை நோக்கி நடந்தான்.

சுபாங்கிக்குக் கண்ணைக் கரித்தது.

“அபய்!”

திரும்பி அவளைப் பார்த்தான் அபயன்.

“என்னடா ஒண்டும் கதைக்காமப் போறாய்?” என்றாள் தொண்டை அடைக்க.

“என்னக்கா கதைக்க? இப்பிடி அவளோட நடப்பீங்க எண்டா நீங்க என்னைக் கலியாணம் கட்ட விட்டே இருக்கக் கூடாது. இப்ப நான் ஆருக்காக நிக்க? உங்களுக்கு நல்ல தம்பியாவும் அவளுக்கு நல்ல மனுசனாவும் இருக்கத்தான் ஆசைப்படுறன். தயவு செய்து அதைக் கெடுத்துப்போடாதீங்க.” என்றுவிட்டு அவன் அன்பினியோடு அறைக்குள் புகுந்துகொள்ளவும் அப்படியே அமர்ந்துவிட்டாள் சுபாங்கி.

error: Alert: Content selection is disabled!!