அத்தியாயம் 54
அன்று முழுக்கப் பயந்து, பதற்றப்பட்டு, அழுது என்று அன்பினி மிகவும் களைத்திருந்தாள். கூடவே, இரண்டு வாரங்கள் கழித்துக் கிடைத்த கணவனின் அண்மை தந்த நிம்மதியும் சேர, அவன் கைகளிலேயே உறங்கியிருந்தாள்.
அபயனுக்கும் அலைச்சல்தான். ஆனாலும் உறங்க முடியவில்லை. கண்களை மூடினாலே அவன் கோபமாகப் பேசியதும் அடிவாங்கிய குழந்தையாகக் கண்ணீருடன் அவனையே பார்த்த தமக்கைதான் வந்தாள்.
மெதுவாக அன்பினியைத் தலையணையில் கிடத்திப் போர்த்திவிட்டான். அவளும் பாவம். அவளின் இயல்புக்கு இன்று நடந்தவற்றைப் பார்த்து மிகவுமே பயந்துவிட்டாள் என்று புரிந்தது. அவள் நெற்றியில் இதழ் பதித்துவிட்டு எழுந்து மெதுவாக வெளியே வந்தான்.
எல்லோரும் உறங்கப் போயிருந்தார்கள். மெதுவாகத் தமக்கையின் கதவைத் தட்டிவிட்டுத் திறந்தான். அவளும் உறங்கியிருக்கவில்லை. தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு எழுந்து அமர்ந்தாள்.
வந்து அவளருகில் அமர்ந்துகொண்டு, “சொறி அக்கா.” என்றான்.
அவள் விழிகள் பனித்தன. “நீ ஏன் சொறி சொல்லுறாய். உன்ர மனுசிக்கு அப்பிடிச் சொன்னதுக்கு நான்தான் சொறி சொல்லோணும்.” என்றதும் அவன் தமக்கையைப் பார்த்து மெலிதாய்ச் சிரித்தான்.
“என்னக்கா, சம்பிரதாயமாக் கதைக்கிறீங்களா?”
“இல்ல, உண்மையாத்தான் சொல்லுறன்.” அவன் பார்வையைத் தவிர்த்தபடி சொன்னாள்.
“அந்தளவுக்கு நீங்க ஆரோ இல்ல. என்ர அக்கா. அவளும் அதையெல்லாம் எதிர்பாக்க மாட்டாள். நானும் அதுக்காக வரேல்ல. நீங்க எப்பிடி இருக்கிறீங்க எண்டு பாக்க வந்தனான்.”
மேலே என்ன பேசுவது என்று இருவருக்கும் தெரியவில்லை. ஏதோ ஒரு தடை. கவனமாகக் கதைக்க வேண்டும் என்கிற எண்ணமே அவர்களின் வாயைக் கட்டிப்போட்டது.
“நீங்க படுக்கேல்லையா?” நல்ல உறக்கத்தில் இருக்கும் தளிரிடம் பார்வை சென்று வர வினவினான்.
“படுக்கத்தான் போறன். நாளைக்கு வேலை இருக்கே.”
“சரி படுங்க. நான் சும்மாதான் வந்தனான்.” என்றபடி எழுந்து நடந்தவனையே பார்த்திருந்தவள் அவன் கதவைத் தாண்டுகையில், “தேங்க்ஸடா தம்பி!” என்றாள் நெகிழ்ந்த குரலில்.
“வாய் வார்த்தையாச் சொல்லுற நன்றியை எல்லாம் ஏற்கேலாது. நாளைக்கு உங்கட ஸ்பெஷல் கட்லெட் செய்து தாங்க. அப்ப ஏற்கிறன்.” சிரிப்புடன் சொன்னான் அவன்.
“நீ சாப்பிடுறதிலேயே இரு, போடா!” என்றவள் முகத்திலும் தடுக்கவே முடியாமல் முறுவல் அரும்பிற்று.
அதை நிறைவாகப் பார்த்துவிட்டு வந்தவனின் மனம் இலேசாகியிருந்தது.
அங்கே அன்பினி அவன் அணைப்பும் கதகதப்பும் இல்லாமல் இலேசாக விழித்திருந்தாள். இவன் வந்து அருகில் படுக்கவும், “எங்க போயிட்டு வாறீங்க?” என்றபடி மறுபடியும் வாகாக அவன் கைகளுக்குள் அடங்கினாள்.
“தேடினியா?”
“ம், இந்தச் சூடு தேட வச்சது.”
உதட்டில் அரும்பிய முறுவலோடு தன் இறுகிய அணைப்புக்குள் அவளைக் கொண்டுவந்து, “எங்களுக்கு ராசியே இல்லை போல.” என்றான் அவன்.
அவள் உறக்கம் நிறைந்த விழிகளைத் திறந்து பார்க்க, “தூர இருந்தாலும் ஒண்டும் இல்ல. பக்கத்தில இருந்தாலும் ஒண்டும் இல்ல.” என்றதும் அவள் உதட்டில் மெல்லிய முறுவல்.
“உங்களுக்கு அந்தளவுக்குக் கெட்டித்தனம் இல்லை எண்டு சொல்லுங்கோ!”
“உண்மையாவே எனக்கும் அந்த டவுட் வருதடியப்பா.” என்று சிரித்தான் அவன்.
அடுத்த நாளே, “அப்பா, இப்பிடி அவன் வந்து போறதும், இங்க ஏதாவது பெருசாப் பிரச்சினை நடக்கிறதும் எண்டு இருக்கிறது சரியா வராது. இதுக்கு ஒரு முடிவு கட்டோணும். நேராப் போய் அவனோடயே கதைப்பமா?” என்று தந்தையிடம் வினவினான் அபயன்.
“எனக்கும் அதுதான் சரி எண்டு படுது தம்பி. எதுக்கும் நாங்க அன்புன்ர அப்பாவோடயும் கதைப்பம்.” என்றவர் அவனோடு சென்று அவரிடம் விடயத்தைப் பகிர்ந்தார்.
“கதைக்க நானும் வாறன். ஆனா ஒரு கிழமை போகட்டும்.” மனைவியின் உடல்நிலையைக் கருத்திற்கொண்டு சொன்னார் அவர்.
அடுத்த இரண்டு நாள்கள் அவை பாட்டுக்குக் கழிந்தன. இந்துமதி வீடு வந்து சேர்ந்திருந்தார். மகனுக்குச் சமனாக நின்று அன்பினி வீட்டுக்குச் சகலதையும் பார்த்துக்கொண்டான் அபயன்.
அந்த இரண்டு நாள்களும் தளிர் அவர்கள் வீடு சென்று வந்தாள். நடப்பதை எல்லாம் அமைதியாகப் பார்த்துக்கொண்டு இருந்த சுபாங்கி, அதைத் தடுக்கப் போகவில்லை. தளிர் முகத்தில் தெரிந்த மலர்ச்சியும், அவளிடத்தில் மீண்டிருந்த உற்சாகமும் தடுக்க விடவில்லை.
அன்பினியும் அவளும் பேசிக்கொள்வதில்லை. இவளைக் கண்டால் அவளும் அவளைக் கண்டால் இவளும் ஒதுங்கிக்கொண்டனர்.
அப்போது அவள் கைப்பேசிக்குப் புது இலக்கத்திலிருந்து குறுந்தகவல் ஒன்று வந்து விழுந்தது. புருவங்கள் சுருங்கத் திறந்து பார்த்தாள்.
‘சுபா, நான் காந்தன். இண்டைக்கு நீ அனுபவிக்கிற அத்தனை துன்பங்களுக்கும் நான்தான் காரணம் எண்டு எனக்குத் தெரியும். அதேமாதிரி நான் செய்த எதையும் தெரியாமச் செய்யவும் இல்ல. தெரியாமச் செய்ற பிழைக்குத்தான் மன்னிப்பு. தெரிஞ்சே செய்த தப்புக்கு? தண்டனைதான். அத அனுபவிக்கத் தயாராயிட்டன்.
எனக்கு டிரான்ஸ்பர் கிடைச்சிருக்கு. மலைநாட்டுப் பக்கம். அப்பிடியே போயிடுவன். இனி உனக்கு முன்னால வந்து நிக்க மாட்டன். தளிரைத் தேடியும் வரமாட்டன். நீ தளிரை நல்லா வளப்பாய் எண்டு தெரியும். ஆனாலும் சொல்லுறன். என்ர பிள்ளையை நல்லாப் பாத்துக்கொள். என்னை மாதிரி இல்லாம உன்னை மாதிரி வளத்துவிடு.
உன்னட்ட மன்னிப்புக் கேக்கக் கூடாது எண்டுதான் நினைக்கிறன். ஆனா… என்னவோ மனதைப் போட்டு அரிக்குது. அதால எண்டைக்காவது உன்னால முடிஞ்சா என்னை மன்னிச்சிடு!’ என்று அனுப்பியிருந்தான் அவன்.
கொஞ்ச நேரம் அதையே வெறித்திருந்தவள் கைப்பேசியை அப்படியே வைத்துவிட்டு விழிமூடிச் சாய்ந்துகொண்டாள்.
அடுத்த இரண்டு நாள்களுக்கு அவள் யாரிடமும் இதைப் பற்றிப் பேசவில்லை. பேசத் தோன்றவில்லை.
அபயனை அவளின் அந்த அமைதி உறுத்தியது. தாம் எடுத்த முடிவைப் பற்றியும் அவளிடம் சொல்லவேண்டி இருந்ததில் அன்று மாலை, அவள் வேலை முடிந்து வந்து ஓய்வாக இருக்கையில் அவளைத் தேடிப் போனான்.
“ஏன் இப்பிடி ஒரு மாதிரி அமைதியாவே இருக்கிறீங்க அக்கா?”
“மனம் அமைதியா இருக்கு. அதான் நானும் அப்பிடியே இருக்கிறன்.” என்று சொன்னாள் அவள்.
அவள் முகத்தையே சில கணங்களுக்குப் பார்த்துவிட்டு, “மாமா சொன்ன மாதிரி டிவோர்ஸுக்கு ஏற்பாடு பண்ணவா?” என்றான் மெல்ல.
அவள் ஒன்றும் சொல்லாமல் இருந்தாள். அந்த அமைதி அவளின் விருப்பம் வேறு எதுவுமோ என்று எண்ண வைக்க, “என்னக்கா? இல்ல… அவனோட நான் ஏதும் போய்க் கதைக்கோணுமா?” என்று கேட்டுப் பார்த்தான்.
“அவனோட இனி என்ன கதை?” என்றவள் தன் கைப்பேசியை எடுத்துக் காட்டினாள்.
அதை வாசித்தவனுக்குள் மெல்லிய ஆசுவாசம். “பிறகு என்ன? அவனே தளிரை வேண்டாம் எண்டு சொல்லிட்டான். இனி நீங்க பயப்பிடத் தேவை இல்லை. நாங்க டிவோர்ஸுக்கு போடுவம். கொஞ்சக் காலம் போகட்டும். பிறகு மாமா சொன்ன மாதிரி இன்னொரு கலியாணத்துக்குப் பாக்கலாம்.”
“நீ முதல் டிவோர்ஸுக்கு மட்டும் ஏற்பாட்டச் செய்.”
அடுத்த திருமணத்தில் அவளுக்கு உடன்பாடில்லை என்று தெரிந்தது. ஒரே தடவையில் உச்சியைத் தொட முடியாதே. ஒவ்வொரு படியாகத்தானே தாண்ட வேண்டும். அதற்கு முதற்கட்டமாக அவனிடமிருந்து அனைத்து வகையிலும் அவளை விடுவிக்க வேண்டும். அடுத்த நாளே அதற்கான வழியைப் பார்க்க ஆரம்பித்தான்.
விடயம் அறிந்த திருநாவுக்கரசும் அதுதான் சரி என்றார்.
மீண்டும் அன்பினி யாழ்ப்பாணமும் அபயன் கொழும்பு என்றும் அவர்கள் வாழ்க்கை நகர்ந்தது. வாரத்தில் ஒரு நாள் என்ற கதை மாறி, தினமும் மாலையில் அப்பப்பா, அப்பம்மாவைப் பார்த்துக்கொண்டு வர ஆரம்பித்தாள் தளிர்.
அவ்வளவு காலமாக அவளிடம் தென்பட்ட ஒருவித அமைதிக்குணம் கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டுப் போனதில், இத்தனை காலமும் விடாமல் இருந்ததுதான் தவறோ என்று சுபாங்கியே யோசித்தாள்.
இதற்குள் அவள் டிரைவிங் லைசென்சும் எடுத்திருந்தாள். உடனேயே கார் வாங்கிக்கொடுக்க முடியாமல் இருந்ததில் தன் காரைக் கொண்டுவந்து விட்டுவிட்டுப் போனான் அபயன்.
புதிதாகப் பழகிய டிரைவிங்கும், அபயனின் காரில் மகளோடு எங்காவது சென்று வருவதும், அம்மாவைக் கோயிலுக்கு அழைத்துச் செல்வதும் என்று அவளிடத்தில் மெல்லிய உற்சாகம் மீள ஆரம்பித்தது.
ஒரு நாள் பேத்தியை விட வந்த திருநாவுக்கரசுவுக்கு காரில் வந்து இறங்கிய மருமகளைக் கண்டு மிகுந்த சந்தோசமாய் இருந்தது. அவளை நிறைவாகப் பார்த்து, “மகள் மகள் எண்டு உங்கட வட்டத்தைச் சுருக்கமா நாலு இடத்துக்குப் போய் வாங்கோம்மா. இந்தக் காலத்தில பிள்ளைகளைப் பாக்க ஆள் இல்லாம பொம்பிளைப் பிள்ளைகள் முடங்கி இருக்கினம். உங்களுக்கு உங்கட மகளைப் பாக்க நாங்க நாலுபேர் இருக்கிறோம். மேல படிக்க விருப்பம் எண்டா படிங்கோ. இல்ல பிடிச்ச எதையாவது செய்ங்கோ. எனக்கு நீங்க ஏதாவது சொந்தமாத் தொழில் ஆரம்பிச்சு, முதலாளியா இருக்கலாம் எண்டு இருக்கு.”
தலைமைத்துவம் தனித்துவமான தைரியத்தையும் நிமிர்வையும் தரும் என்கிற நம்பிக்கை அவருக்கு எப்போதுமே உண்டு. அதைக் கருத்திற்கொண்டு சொன்னார்.
“பாக்கிறன் மாமா.” என்று அப்போதைக்குச் சொன்னாலும் அவர் சொன்னது அவள் சிந்தனையைத் தூண்டிவிட்டிருந்தது.
யோசிக்க யோசிக்க ஏதாவது புது வழியில் புத்தியைத் திருப்பினால் நன்றாக இருக்கும் என்றே தோன்ற ஆரம்பித்திருந்தது.
இப்படி இருக்கையில்தான் ஒரு நாள் அன்பினி அபயனுக்கு அழைத்து யாழ்ப்பாணத்துக்கு வரச் சொன்னாள். அவள் முகத்தில் ஒருவிதக் கலக்கம். அவன் என்ன கேட்டும் சொல்லவில்லை. “நீங்க வாங்க.” என்பதிலேயே நின்றாள்.
அவன் சென்று சேர்ந்தபோது ஓடிவந்து அவனைக் கட்டிக்கொண்டவளின் விழிகள் கலங்கிப் போயின.
“என்னடி? ஒண்டும் சொல்லாம இப்பிடி அழுதா நான் என்ன எண்டு நினைக்க? என்ன பிரச்சினை எண்டு சொல்லு.” இருந்த பதற்றத்துக்குப் பிடிவாதமாக அவளைத் தன்னிடமிருந்து தள்ளி நிறுத்தி வினவினான்.
“நீங்க அப்பா ஆகப் போறீங்க.”
“என்ன?” அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
“நீங்க அப்பா ஆகப் போறீங்க அபய்.” என்றாள் திரும்பவும்.
“ஏய் என்னடி குண்டத் தூக்கிப் போடுறாய். ஒரே ஒரு நாள்தானே.” என்றான் அப்போதும் அதிர்ச்சி அகலாமல்.
என்ன பேச்சு இது? அவள் அவனை முறைத்தாள்.
“உண்மையாவா அன்பா? நீ சும்மா சொல்லேல்லையே?” இப்போது அதிர்ச்சி விலகி அவன் குரலில் சந்தோசம் வந்து அமர்ந்தது. “இந்த வயித்துக்கையா?” என்றான் அவள் வயிற்றைத் தடவியபடி.
“இல்ல, பக்கத்து வீட்டு அக்கான்ர வயித்துக்க.” என்று கடுப்புடன் சொன்னாள் அன்பினி.
சத்தமாகச் சிரித்தான் அபயன். “உண்மையா நம்பேலாமா இருக்கு அன்பா. இனி நான் அப்பாவாடி?” என்றான் ஆசையாக.
அவளை மென்மையாக அணைத்து முகம் முழுக்க முத்தமிட்டுவிட்டு, “சந்தோசமான விசயம்தானே. இதுக்கேன் அழுதனி? உனக்கு… உனக்கு இப்ப வேண்டாமா?” என்று அவன் கேட்டு முடிக்க முதலே, அவன் வாயிலேயே ஒன்று போட்டாள் அன்பினி.
“ஏய் என்னடி அடிக்கிறாய்?”
“அடிக்காம? இப்பிடித்தான் அபசகுனமாக் கதைப்பீங்களா?”
“நீ சந்தோசப்படாம அழுதா நான் என்ன நினைக்க?”
“எனக்கு முதலே ஒரு சந்தேகம் இருந்தது. ஆனாலும் கவனமில்லாம பஸ்ஸில போய் வந்தது, அண்டைக்குத் தளிரைத் தூக்கிக்கொண்டு திரிஞ்சது, அதுவும் அண்டைக்கு அண்ணான்ர கழுத்தைக் கட்டிக்கொண்டு தளிர் காலால உதைச்சவா. அப்ப சரியா வயித்தில பட்டு எனக்கு நொந்தது(வலித்தது). அப்ப ஏதும் நடந்திருந்தா? அத நினைக்க நினைக்கப் பயமா இருக்கு.” கலங்கிய குரலில் அவள் சொன்னபோது அவனுக்கும் ஒரு கணம் திக் என்றுதான் இருந்தது.
ஆனாலும் காட்டிக்கொள்ளாமல், “அதான் ஒண்டும் நடக்கேல்லையே, விடு.” என்றான் அவளை அணைத்துக்கொண்டு.

