அத்தியாயம் 55
அன்பினியைத் தன் கைகளுக்குள்ளேயே வைத்துக்கொண்டு கட்டிலில் சரிந்திருந்தான் அபயன். சற்று முன்னர்தான் வைத்தியசாலைக்குச் சென்று, குழந்தைதான் என்பதையும், அம்மாவும் பிள்ளையும் நலமாய் இருப்பதையும் உறுதி செய்துகொண்டு வந்திருந்தார்கள். அதற்கே அன்பினி சோர்ந்துபோயிருந்தாள்.
“ரெண்டு வீட்டுக்கும் சொல்லோணும் அபய்.”
“சொல்லலாம், நீ கொஞ்சம் படுத்து எழும்பு.” என்று அவள் தலையை வருடிக்கொடுத்தான் அவன்.
ஒன்றும் சொல்லாமல் அவனைக் கட்டிக்கொண்டு அவன் கழுத்து வளைவில் முகம் புதைத்தாள் அவள்.
அவள் எதற்கோ அலைப்புறுகிறாள் என்று தெரிய, “என்னம்மா?” என்றான் இதமாக.
“நாங்க ரெண்டு பேரும் விரும்ப ஆரம்பிச்சதில இருந்து பயம், பதற்றம் இல்லாம உங்களோட ஒரு நாளக் கூட நான் கழிச்சதே இல்ல. கலியாணத்துக்குப் பிறகும் அப்பிடித்தான். எப்பவும் ஏதோ ஒரு போராட்டம் மனதில இருந்துகொண்டே இருந்திருக்கு. அப்பிடி எதுவும் இல்லாம, நிம்மதியா, சந்தோசமா உங்களோட எனக்கு இருக்கோணும். பிள்ளையே வரப்போகுது. ஆனா நாங்க அப்பிடி என்னத்த வாழ்ந்திட்டம் எண்டு திரும்பிப் பாத்தா கண்ணீரையும் கவலையையும் தவிர ஒண்டுமே இல்ல. எனக்கு அது மாறோணும். எங்கட வாழ்க்கையை நினைச்சுப் பாத்தா அங்க சந்தோசமான நினைவுகள் வேணும் அபய்.”
விழிகள் கலங்கச் சொன்னவளையே சில கணங்களுக்குப் பார்த்தவன் அவள் முகத்தை இழுத்துத் தன் மார்பில் புதைத்துக்கொண்டான்.
“ஏதாவது செய்து என்னை உங்களோடையே வச்சிருங்க அபய். எனக்கு இப்பிடி வீக்கெண்ட்ல மட்டும் வாழுற இந்த வாழ்க்கை வேண்டாம்.” என்றவளின் கண்ணீர் அவன் நெஞ்சைச் சுடவும் அவன் உள்ளம் கரைந்தே போயிற்று.
“அதுக்கு என்னத்துக்கு அழுறாய்? இனி நீ என்னோடதான் இருப்பாய். தனியா விடமாட்டன்.” என்றான் அவள் உச்சியில் முத்தமிட்டு.
“எப்பிடி?” ஆசையும் ஆர்வமும் கண்களில் மின்ன, அவன் முகம் பார்த்து வினவினாள் அவள்.
அவனுக்குத் தெரியவில்லை. அவன் பிள்ளையை வயிற்றில் வைத்துக்கொண்டு, தன் ஆசையைச் சொல்கிறாள் மனைவி. அதற்கு ஒன்றில் அவள் வேலையை விட்டுவிட்டு அவனிடம் வர வேண்டும். இல்லையா அவன் கொழும்பை விட்டு இங்கே வர வேண்டும்.
அவளை வேலையை விடச்சொல்ல அவனுக்கு மனமில்லை. அவன்தான் இங்கே வர வேண்டும். ஏதோ ஒரு நிறுவனத்தில் ஏதோ ஒரு வேலை.
மீண்டும் ஒரு மூச்சு வெளியேற, “எப்பிடியோ! அது உனக்கு என்னத்துக்கு? இனி நாங்க சேர்ந்துதான் இருப்பம். இப்ப கொஞ்ச நேரம் படு!” என்றான் அவன்.
அவளுக்கு அதுவே போதுமாக இருந்தது போலும். அவன் தாடையில் முத்தம் ஒன்றைப் பதித்துவிட்டு அவன் கைகளுக்குள்ளேயே அடங்கி உறங்கிப்போனாள்.
விடயமறிந்த இரு வீட்டினருக்கும் அப்படி ஒரு சந்தோசம். இத்தனை நாள்களும் பிரச்சனை பிரச்சனை என்றே கடந்து வந்து, மனத்தளவில் மிகவுமே ஓய்ந்து போயிருந்தவர்களுக்கு என்னவோ புதிதாய்ப் பிறப்பெடுத்த உணர்வு.
இந்துமதி அம்மா சந்தோச மிகுதியில் அழுதிருந்தார். சுபாங்கிக்கு ஆனந்தமா அதிர்ச்சியா என்று பிரித்தறிய முடியா உணர்வு. சின்ன குழந்தையாகப் பார்த்த அபயனின் குட்டித் தோற்றம் குறுகுறுப்புடன் நினைவில் வந்துபோன அதே நேரம், அவனுக்குத் திருமணமாகிவிட்டதும், அவனுக்கும் இப்போது மனைவி, குழந்தை என்று ஒரு குடும்பம் வந்துவிட்டதும் இன்னும் அழுத்தமாய் அவளுக்குள் பதிந்தது.
எல்லோரும் எடுத்து அன்பினியோடு கதைத்தனர். ஆயிரம் கவனம் சொல்லினர். தான் கதைப்பதா இல்லையா என்று அவள் போராடிக்கொண்டிருக்க, “இப்பிடி இருக்கிறது சரியில்லை பிள்ளை. இதுக்குப் பிறகு நீ எப்ப அன்புவோட கதைச்சாலும் இந்த நேரம் நீ எடுத்து ஒரு வார்த்தை கதைக்கேல்ல எண்டுறது மனதில பதிஞ்சு போயிடும். அது நல்லம் இல்ல. உன்ர தம்பிய யோசிச்சுப் பார். வெளில காட்டிக்கொள்ளாட்டியும் கட்டாயம் நீ கதைக்கோணும் எண்டு அவன் எதிர்பார்ப்பான்.” என்று பரமேஸ்வரி எடுத்துச் சொல்ல, ஒரு ஆழ்ந்த மூச்சுடன் அவனுக்கு அழைத்துப் பேசினாள்.
அப்படியே, “அன்புட்ட குடு தம்பி.” என்று அவள் சொன்னபோது, “அக்கா!” என்றான் ஆனந்தமாக.
“குடடா!”
‘அக்கா கதைக்கவாம்’ என்று வாயசைவில் சொன்னபடி கைப்பேசியை அன்பினியிடம் நீட்டினான். அவளுக்குக் கைகால்கள் எல்லாம் திடீர் நடுக்கம். “அண்…” என்றவளுக்குக் குரல் எழும்பவே இல்லை.
“அண்ணி எண்டே சொல்லு. சொறி, இவ்வளவு நாளும் நடந்ததுக்கு.” என்றதும் அங்கே அன்பினி பொலபொல என்று கண்ணீர் உகுத்தாள்.
“இப்ப என்னத்துக்கு அழுறாய்!” அபயனின் அதட்டலில் அவள் அழுகிறாள் என்று உணர்ந்த சுபாங்கிக்கும் என்னவோ மாதிரியாகிப்போனது.
“அன்பு?”
“நானும் சொறி அண்ணி. அண்ணா இப்பிடி எல்லாம் செய்வார் எண்டு நான் நினைக்கவே இல்ல. நீங்க என்னைப் பிழையா நினைச்சிடுவீங்களோ எண்டு பயந்துதான் இவரை விரும்பினதச் சொல்லேல்ல அண்ணி. படிக்க எண்டு அனுப்பினா படிக்காம இந்த வேலையா பாக்கிறாய் எண்டு வீட்டுல பேசுவினமோ எண்டுற பயமும்.” என்று அவள் வேகமாய் ஒப்பித்ததிலேயே நிறைய நாள்களாக இதை மனத்தில் வைத்துக்கொண்டு இருந்திருக்கிறாள் என்று புரிந்துபோனது சுபாங்கிக்கு.
ஒரு கணம் அமைதியாய் இருந்தாலும் அந்தப் பேச்சை முற்றிலுமாகத் தவிர்த்து, “நீ எப்பிடி இருக்கிறாய்? உடம்பில ஏதும் வித்தியாசம் தெரியுதா?” என்று விசாரித்தாள்.
“அப்பிடி ஒண்டும் இல்லை அண்ணி. ஆனா நித்திரை நித்திரையா வருது.” என்றவளுக்கும் இத்தனை நாள்களாக மனத்தில் இருந்ததை அவளிடம் சொல்லிவிட்ட நிம்மதி வந்திருந்தது.
“அது கொஞ்ச நாளைக்கு அப்பிடித்தான். பிறகு ஓகே ஆகிடும்.” என்று பேசிவிட்டு அவள் வைத்தபோது, அவளே எதிர்பாராத வகையில் அவள் மனமும் இலேசாகி இருந்தது.
என்னதான் கோபப்பட்டாலும், வார்த்தைகளை விட்டாலும் அவளுக்கு அபயன் என்றால் அவ்வளவு பிடிக்கும். அவளின் ஒரேயொரு தம்பி. எப்போதுமே அவளுக்கு முக்கியமானவன்.
அவனுமே அவளோடு எல்லாவற்றுக்கும் மல்லுக்கட்டினாலும் எங்கும் அவளை விட்டுக்கொடுக்கமாட்டான். அதே நேரம், அவனோடான நல்லுறவுக்கு அவன் மனைவியோடான சுமூகமான உறவு முக்கியம் என்று, சத்தமே இல்லாமல் பலமுறை அவளுக்கு உணர்த்தியும் இருக்கிறான்.
ஏன், கடைசியாக நடந்த பிரச்சனையின் போதும், அதுவரையில் அவள் விறாந்தையில் இருந்தால் அன்பினியின் புறமே திரும்பாதவன், அன்று அவர்கள் மூவரும் இருந்தபோதே அவளோடு அறைக்குள் சென்றது அவளுக்குப் பல விடயங்களைப் புரிய வைத்திருந்தது.
மெல்லிய வலி இல்லாமல் இல்லை. ஆனால், இதுதான் நிதர்சனம் என்று புரிந்தது. உறவுகள் பெருகிக்கொண்டு போகையில் நாம் மட்டுமே ஒருவருக்கு முக்கியமானவராக இருந்துவிட முடியாது என்கிற உண்மையும், கண்ணுக்குத் தெரியாத இடைவெளியைக் கடைப்பிடித்தபடிதான் அந்த உறவைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்றும் விளங்கிற்று.
அதன்படி அன்பினியை அபயனின் மனைவியாக ஏற்றுக்கொள்ள ஆயத்தமாகினாள். அது சரிதான் என்று அதன் பிறகு அவளோடு பேசிய அபயனின் குரலில் தெறித்த சந்தோசம் சொல்லிற்று.
இரு வீட்டுப் பெரியவர்களும் அடுத்த ஒரு மாதத்துக்கு அன்பினியை எங்கும் பயணம் செய்ய வேண்டாம் என்றனர். மூன்று மாதங்கள் முடிந்த பிறகு அவள் வந்துபோகலாம் என்றதும் கணவனிடம் உதட்டைப் பிதுக்கி அழுதாள் அவள்.
பார்த்தவனுக்குச் சிரிப்புத்தான் வந்தது. “குழந்தையாடி நீ? எங்கட பிள்ளைக்காகத்தானே சொல்லினம்.” என்றான் இதமாக.
அவள் அப்போதும் முகத்தைச் சுருக்கினாள். “குழந்தையைச் சுமக்கிற குழந்தையைக் குழந்தை மாதிரித்தான் பாக்கோணுமாம்.” என்றாள் அவன் மார்பு முடிகளை வருடி விட்டபடி.
“பாத்தா அப்பிடித் தெரியேல்லையே.” என்றவனின் கண்களில் அப்பட்டமான விசமம்.
பொய் முறைப்புடன், “நீங்க கண்டமாதிரி என்னைப் பாத்ததாலதான் இவ்வளவும்.” என்று அவன் நாடியைப் பற்றி முகத்தைத் திருப்பிவிட்டாள் அவள்.
சிரிப்புடன் குனிந்து, “அப்பிடி எப்பிடிப் பாத்தனான் எண்டு இன்னொருக்கா பாப்பமா?” என்றான் அவள் காதோரமாக.
அவள் மறுக்கவில்லை. ஆசையாகக் கணவனை ஏற்றுக்கொண்டாள். அன்றொருநாள் ஆவலும் ஆசையுமாக நடந்த உறவு இன்று நிதானமும் கவனமுமாக அரங்கேறிற்று.
களைத்திருந்தவளின் நெற்றியில் ஆசையாய் அவன் முத்தமிட, “வாங்கின கட்டிலப் பயன்படுத்திட்டீங்க போல.” என்றாள் அவள்.
“பின்ன, காசை வீணாக்கக் கூடாது தானே!” என்று அவள் நெற்றி முட்டியவனின் முகத்தில் மலர்ந்த சிரிப்பு.

