கேட்பார் இன்றிக் காதல் 6 – 1

அத்தியாயம் 6

உள்ளங்களின் உணர்வுகளைப் பரிமாறி, அவர்கள் காதலர்களாகப் பதவி உயர்ந்து ஒரு மாதம் முடிந்திருந்தது. ஆனால், இதற்குப் பேசாமலேயே இருந்திருக்கலாம் என்று நினைக்கும் அளவுக்கு நொந்துபோனான் அபயன். அந்தளவில் கட்டுப்பாடுகள் விதித்தாள் அன்பினி.

முன்னர் போன்று அவளைப் பார்க்க அவர்களின் வளாகத்துக்கு வர வேண்டாம் என்றாள். அதனாலேயே அவள் தரும் தேநீர் நின்றுபோயிற்று. வெளியில் எங்கும் சந்திக்க மறுத்தாள். கைப்பேசியில் பேசுவது மட்டுமே நடந்தது.

ஒருமுறை அவளை வலுக்கட்டாயமாக வெளியே அழைத்துச் சென்றிருந்தான். முதலில் அவன் பைக்கில் அவளை ஏற்றுவதற்கே பத்து நிமிடங்கள் மல்லுக்கட்ட வேண்டியிருந்தது. அதுதான் முடிந்தது என்று பார்த்தால், ‘பயமா இருக்கு, போவம்’ என்று சொல்லிச் சொல்லியே அவனுடைய சந்தோச மனநிலையைக் கெடுத்தாள்.

‘மோல்’ போகலாமா என்றால் இல்லை, தியேட்டர் போகலாமா என்றால் இல்லை, சாப்பிடப் போகலாமா என்றாலும் இல்லை. அதைவிட, இயல்பாய் இருக்காமல், அவனோடான அந்தப் பொழுதை அனுபவிக்காமல், தம்மைச் சுற்றி விழிகளைச் சுழற்றுவதும், யாராவது தம்மைக் கவனிக்கிறார்களா என்று பார்ப்பதுமாக இருந்தவளைக் கண்டு எரிச்சல் மிகுந்துவிட, பேசாமல் கொண்டுவந்து திரும்பவும் விடுதியில் இறக்கிவிட்டிருந்தான்.

இப்படி இருக்கையில்தான் அவளுக்கு இருபத்தியோராவது பிறந்தநாள் வந்தது. அது ஒரு செவ்வாய்க் கிழமையாக அமைந்து போனதில் அவனுக்கு அத்தனை ஆனந்தம். வார இறுதியாக இருந்திருக்க ஊருக்குப் போயிருப்பாள். அங்கு வைத்து என்றால் அவனை நிமிர்ந்துகூடப் பார்க்கமாட்டாள்.

திங்கள் இரவு சரியாகப் பன்னிரண்டு மணிக்கு அவளுக்கு அழைத்தான். போன வருடம் அவன் அழைப்பான் என்று மருந்துக்கும் எதிர்பார்த்திராத அன்பினி, இந்த முறை ஆவலாய்க் காத்திருந்து, முதல் அழைப்பிலேயே ஏற்றிருந்தாள்.

அவளோடு இன்னும் இருவர் அவள் அறையில் தங்கியிருந்தனர். அவர்கள் இருவரும் நல்ல உறக்கத்தில் இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, போர்வைக்குள் முழுவதுமாகப் புகுந்து, “ஹலோ!” என்றாள் இரகசியக் குரலில்.

அவன் உதட்டில் விரிந்த முறுவல். “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அன்பா!” என்றான் அவனும் மிக இரகசியமான குரலில்.

அழகான இருளும் நிசப்தமும் நிறைந்து கிடந்த அந்த ஏகாந்தப் பொழுதில், இலேசாய்ச் சிந்திய சிரிப்புடன் ஒலித்த அவன் குரல், காதோரமாய்ப் புகுந்து அவளை என்னவெல்லாமோ செய்தது. மெல்லத் தன்னைச் சமாளித்துக்கொண்டு, “நன்றி, நன்றி அபய்!” என்றாள் மீண்டும் கிசுகிசுப்பாய்.

முதன் முதலாய் அவன் பெயரைச் சொல்கிறாள்! ஆனந்தமாக அதிர்ந்தவன் அந்தப் பிறந்தநாளின் முதற்பரிசாய் அவளுக்கு ஒரு முத்தத்தை உடனடியாக அனுப்பிவைத்தான்.

அதிர்ந்து போன அன்பினி, “அபய்!” என்றாள் அதட்டலாக. அவளுக்கு நெஞ்செல்லாம் படபடவென்று அடித்துக்கொண்டது.

“என்ன?” அடக்கிய சிரிப்பில் அவன் குரல் அவளைச் சீண்டிற்று.

“என்ன இது? இப்பிடி எல்லாம் செய்யாதீங்க, ப்ளீஸ்!” என்றாள் நடுக்கத்துடன்.

“இப்ப நான் உன்ன என்ன செய்திட்டன் எண்டு இந்த நடுங்கு நடுங்கிறாய்?” கைப்பேசி வழியாகக் கொடுத்த முத்தத்துக்கு இந்தப்பாடா என்று அலுத்தான் அவன்.

“என்ன செய்தீங்க எண்டு உங்களுக்குத் தெரியாதா?”

“தெரியாததாலதானே சொல்லு எண்டு சொல்லுறன்! அப்பிடி என்ன செய்தனான்?”

“நடிக்காதீங்க அபய்! நீங்க எவ்வளவு பெரிய கள்ளன் எண்டு எனக்குத் தெரியும்!”

அவன் அவள் காதுக்குள் சந்தோசமாய்ச் சிரித்தான். அவள் உதடுகளும் தானாய் விரிந்தன.

“அன்பா!” என்றான் ஆசையாக.

அவளிடம் சத்தமே இல்லை.

“அடியேய் அன்பா!”

“அடி வாங்கப் போறீங்க!” உடனேயே கோபம் கொண்டாள் அவள்.

“பாக்கிறதுக்கே இஞ்ச(இங்க) வழி இல்லையாம். இதில அடிப்பியா நீ எனக்கு?”

அவனுக்கு அது பெரும் குறை என்று அவளுக்கும் தெரியும். ஆனால், இப்போதுதான் இருபத்தியொரு வயதாகிறது. அதற்குள் காதலில் விழுந்துவிட்டாள். என்னவோ அது அவளுக்குத் தலை நிமிர்ந்து சொல்லும் விடயம்போல் தோன்றவில்லை.

கூடவே, மற்றவர்களின் வாய்க்கு அவலாவதில் பிரியமும் இல்லை. நம்பி அனுப்பி வைத்திருக்கும் குடும்பத்தினர் தலை குனியும் படி அவள் நடக்கக் கூடாதே!

“அன்பா!” அவன் திரும்ப அழைத்தான்.

“ம்?”

“பிடிச்சிருக்கா?”

சிந்தனை எங்கேயோ சென்றுவிட்டதில், “என்ன பிடிச்சிருக்கா?” என்றாள் விளங்காமல்.

“உன்ன…” என்று பல்லைக் கடித்தான் அவன். அதன் பிறகுதான் அவளுக்குத் தலைக்குள் விளக்கு எரிந்தது. கடவுளே என்று உள்ளுக்குள் அலறினாலும் சத்தமே போடவில்லை. உடல் முழுவதும் சிவந்துவிட்ட நிலை.

“அன்பா, பதில் சொல்லு!”

“…”

“அன்பா!”

இதற்குள் மெல்லிய சத்தத்தோடு ஒரு கும்பல் அவள் அறைக்குள் உள்ளிட்டது. போர்வைக்குள் இருந்து தலையை உயர்த்திப் பார்த்தாள்.

விளக்கைப் போட்டால் பிடிபட்டுவிடுவார்கள் என்பதில் கைப்பேசியின் வெளிச்சத்தின் உதவியோடு ஒருத்தி கையில் கேக்கை கொண்டுவர, மற்றவர்கள் சில பரிசுப் பொருள்களோடு வந்தனர்.

“பிரண்ட்ஸ் வந்திட்டினம். பிறகு மெசேஜ் பண்ணுறன்!” என்று அவசரமாக அபயனிடம் கிசுகிசுத்துவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

அதன் பிறகான அவளின் நேரத்தைத் தோழியர் பிடுங்கிக் கொண்டனர். இருபத்தியொன்று என்கிற மெழுகுதிரியை அவள் ஏற்றியபோது, இரகசியமாய்ப் பிறந்தநாள் வாழ்த்துப் பாடி, அதை அவள் ஊதி அணைத்தபோது சத்தமே இல்லாமல் கைதட்டி, கேக்கை அவள் வெட்ட முதலே பிச்சுப் பிடுங்கி அவள் முகமெங்கும் அப்பி, கடைசியில் ஒருவர் கூட ஒரு வாய் உண்ணாமல் கொண்டாடி முடித்தனர்.

மற்றைய பரிசுகளோடு தனியாக எடுத்து வைத்திருந்த இன்னொன்றையும் எடுத்து நீட்டினாள் நிர்மலா.

“என்னடி இது?”

“அண்ணா தந்தவர்.”

“ஓ!” இதை நிச்சயமாக அவள் எதிர்பார்க்கவில்லை.

“என்னடி இது? தனியாச் சந்திச்சு, ஸ்பெஷலா தராம இப்பிடிக் குடுத்துவிட்டிருக்கிறார். சீனியருக்கு கிளாஸ் எடுக்கோணும் போலயே!” என்றாள் ஒருத்தி.

“நீ வேற. சும்மா பாக்கிறதுக்குக் கூட எங்கட ஃபக்கல்டிக்க(Faculty) வர வேண்டாம் எண்டு சொல்லிட்டாள் இவள். இவளாவது அவரைத் தனியாப் பாக்கப் போறதாவது. பால்குடி மறக்காததை எல்லாம் காதலிச்ச பாவத்துக்கு அண்ணா என்னட்டத் தந்துவிட்டிருக்கிறார்.” என்று பதில் சொன்னாள் நிர்மலா.

“நான் உனக்குப் பால்குடி மறக்காத குழந்தையாடி? இண்டுல இருந்து இருபத்தியொரு வயசு எனக்கு!” வாய் ரோசத்தோடு அவளுக்குப் பதில் கொடுக்க, ஆர்வத்தோடு அவன் கொடுத்துவிட்ட பரிசைப் பிரித்தாள் அன்பினி.

பட்டியாலா வகையைச் சேர்ந்த சுடிதார் செட் ஒன்று உள்ளே இருந்தது. நாவல் நிறத்துக்கு மாம்பழ வண்ணத்தில் பூக்கள் பரவிக்கிடப்பது போன்று மேற்சட்டை இருக்க, மாம்பழ வண்ணத்தில் காற்சட்டை இருந்து அவள் உள்ளத்தையும் கண்களையும் கவர்ந்தது.

எழுந்து நின்று தன் மீது வைத்து அழகு பார்த்தாள். அட்டகாசமாக இருப்பதாகவே அவள் கண்கள் அவளிடம் சொல்லின. தோழியரும் அதையே சொல்ல, அவள் முகம் இன்னொரு பங்கு அதிகமாய் மலர்ந்து போயிற்று.

“அண்ணாக்கு தேங்க்ஸ் சொல்லேல்லையாடி?” வம்புக்காரத் தோழி ஒருத்தி ஆரம்பிக்க, “நீ வேற! இவ்வளவு நேரமா அண்ணாவோடதான் கதைச்சவள். நானும் நித்திரை மாதிரிக் கிடந்து காதத் தீட்டிப் பாத்தன். ஒரு வார்த்தை கூட விளங்கேல்லை எண்டா யோசி. எவ்வளவு ரகசியமாக் குசுகுசுத்திருப்பாள் எண்டு.” என்று சீண்டினாள் நிர்மலா.

ஒருமுறை அன்பினிக்குத் திக் என்று நெஞ்சு அதிர்ந்துதான் போயிற்று. அவளுக்கு ஒன்றும் கேட்கவில்லை என்பதில் ஆறுதலடைந்து, “போதும் போதும் என்னை ஓட்டினது. எல்லாரும் உங்க உங்கட ரூமுக்கு ஒடுங்க. நாளைக்கு கம்பஸ் இருக்கு.” என்று அவர்களைத் துரத்திவிட்டுவிட்டுக் கதவை அடைத்தாள்.

“இவள் அண்ணாவோட கதைக்கிறதுக்குத்தான் எங்களைத் துரத்துறாள்!” என்றபடியே அந்தக் கும்பலும் கலைந்து போனது.

இங்கே அறைக்குள் மற்ற இருவரும் விழித்திருப்பதில், “சுடிதாருக்கு தேங்க்ஸ். நல்ல வடிவா இருக்கு.” என்று ஒரு குறுந்தகவலை மட்டும் அவனுக்கு அனுப்பிவைத்தாள்.

அப்போதே நேரம் அதிகாலை இரண்டைத் தொட்டிருந்தது. உறங்கியிருப்பான், நாளைக்குப் பார்க்கட்டும் என்று எண்ணிக்கொண்டு அவள் கட்டிலில் சரிய, “உண்மையாப் பிடிச்சிருக்கா? போட்டுப் பாத்தியா?” என்று கேட்டு அனுப்பியிருந்தான் அவன்.

இவர் என்ன இன்னும் நித்திரை கொள்ளாம இருக்கிறார் என்று உள்ளே ஓட, “பிடிக்காம? நல்ல வடிவா இருக்கு.” என்று பதில் அனுப்பிவைத்தாள்.

“அத நீ சொல்லக் கூடாது. நான் சொல்லோணும். நாளைக்குப் போட்டுக்கொண்டு வா. பாத்துச் சொல்லுறன்.”

இதனால்தான் அவனே தராமல் முதலே கொடுத்துவிட்டிருக்கிறான் என்று விளங்கிற்று. கூடவே, பார்த்து என்ன சொல்லுவானாம் என்கிற கேள்வி உள்ளே குறுகுறுப்பை மூட்ட, “குட் நைட்!” என்று அனுப்பிவைத்தாள்.

“இப்ப குட் மோர்னிங் மேடம்.”

“அப்ப குட் மோர்னிங்.”

“சரி வா, எழும்பி இருந்து கதைப்பம்.” என்று ஆம்பித்தான் அவன்.

error: Alert: Content selection is disabled!!