“நித்திரை வரேல்லையா?”
“ப்ச் இல்ல. உனக்குப் பக்கத்தில இருக்கோணும் மாதிரி இருக்கு.”
அவளுக்கும் அந்த ஆசை இல்லாமல் இல்லை. இந்தப் பரிசை அவன் நேராய்த் தருகையில் கிடைக்கும் சந்தோசத்தை அனுபவிக்கவே ஆசைப்பட்டாள். அதற்கான காலம் இன்னும் கனியவில்லை என்பதில், “முதல் படிப்பை முடிப்பம் அபய்.” என்று அனுப்பிவிட்டாள்.
இதைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் முட்டிக்கொள்வார்கள் என்று தெரிந்து அந்தப் பேச்சைத் தவிர்த்துவிட்டு, “போன வருசம் நான் எடுத்து வாழ்த்தினதுக்கு என்ன நினைச்சனி?” என்று கேட்டான் அவன்.
“இவர் அபாயமானவர். இவரிட்டக் கவனமா இருக்கோணும் எண்டு நினைச்சனான்.”
“அப்ப அப்பவே உனக்கு என்னைத் தெரிஞ்சு இருக்கு. ஆனாலும் காட்டிக்கொள்ளாம இருந்திருக்கிறாய் என்ன?”
“எனக்குப் பயமா இருந்தது.”
“என்ன பயம்?”
“தெரியா… ஆனா பயமா இருந்தது.”
“இப்ப?”
“இப்பவும் பயமாத்தான் இருக்கு.”
“ஏன்?”
“வீட்டுக்குத் தெரிஞ்சா என்ன நினைப்பீனம்?”
“ஓ!”
அப்போதுதான் அவனிடம் தெரிந்த பேதத்தை உணர்ந்தாள் அவள்.
“அபய்?”
“சரி படு, நாளைக்கு வகுப்பு இருக்கு எல்லா. குட் நைட்!” என்று அனுப்பி வைத்தான்.
“கோவமா?”
அவனுக்கே அது தெளிவில்லை. ஆனால், அவனை நேசிப்பது பயப்படும் ஒரு விடயமா என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதன் பின்னிருக்கும் அர்த்தம் வேறு என்று அறிவு சொன்னாலும் கூட, அதை ஏற்க முடியவில்லை.
இதையெல்லாம் பேசி, அவளின் பிறந்தநாளின் சந்தோசத்தைக் கெடுக்க மனம் வராமல், “இல்ல. நித்திரை வருது. நாளைக்குக் கதைப்பம்.” என்று அந்தப் பேச்சை முடித்துக்கொண்டான்.
இருவருக்குமே உறக்கம் வரவில்லை. அப்படி என்ன தவறாகச் சொன்னோம் என்று அவர்களின் ‘சேட்’டை எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.
இங்கே, நெற்றியின் மீது ஒரு கையைப் போட்டபடி கண்களை மூடிக் கிடந்தவனும் தன்னை நிதானப்படுத்தி, அவள் சொன்ன பயத்தைச் சாதாரணமாகக் கடக்க முயன்று, ஓரளவுக்குத் தேறி உறங்கியும் போனான்.
அடுத்தநாள் காலை எழுந்து, அவன் வாங்கித் தந்த சுடிதாரிலேயே தயாராகினாள் அன்பினி. அது அவளுக்கு உண்மையில் வெகு அழகாய்ப் பொருந்தியிருந்தது. உள்ளத்தின் பூரிப்பும் சேர, அன்று அவளுக்குப் பிறந்தநாள் என்று அறியாதவர்கள் கூடக் கவனித்துக் கேட்கும் அளவில் இருந்தது அவள் தோற்றம்.
ஒரு எதிர்பார்ப்புடனேயே பல்கலையை நோக்கி நடந்து வந்தவள் எதிரில் பைக்கில் வந்தவனைக் கண்டதும் மலர்ந்தாள்.
அவனும் தூரத்திலேயே அவளைக் கண்டிருந்தான். தான் வாங்கிக் கொடுத்த உடையில், உள்ளத்தைக் கவரும் அழகில் நின்றவளிடம் மனம் மயங்க, பைக்கை கொண்டுவந்து அவள் முன்னால் நிறுத்தினான்.
நிர்மலா அவர்கள் பேசிக்கொள்ளட்டும் என்று தள்ளி நின்றுகொண்டாள்.
“ஏறு!” என்றான் பைக்கை காட்டி.
அவள் கேள்வியாக ஏறிட்டாள்.
“உன்ர பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாமா? இண்டைக்காவது ஒண்டும் சொல்லாம வா அன்பா!” என்றான் அவன்.
“ப்ளீஸ் வேண்டாமே!”
அவனுக்கு அதற்கே முகம் மாறப் பார்த்தது. ஆனாலும் விடாமல், “இவ்வளவு நாளும் நீ சொன்னதை நான் கேட்டனான்தானே. அதே மாதிரி இண்டைக்கு மட்டும் எனக்காக வா. எனக்கு உன்னோட இருக்கோணும் மாதிரி இருக்கு.” என்று தழைந்தே போனான்.
அவளுக்கு மறுக்க மனமேயில்லை. போகத்தான் ஆசையாக இருந்தது. நேற்று இரவும் இப்படித்தானே சொன்னான். ஆனாலும், “அண்ணாவும் இங்கதான் நிக்கிறார். தப்பித்தவறிப் பாத்திட்டார் எண்டா பிரச்சினையாகிடும் அபய்.” என்றாள் மெல்ல.
“பெருசா எங்கயும் நாங்க ஊர் சுத்தப் போறேல்ல அன்பா. கோயிலுக்குப் போயிற்று, அப்பிடியே தியேட்டருக்குப் போகலாம். இல்ல உனக்கு அதுக்கும் பயமா இருக்கு எண்டா குளக்கரைப் பக்கம் போயிற்று, மத்தியானம் சாப்பிட்டு வருவம். ஹெல்மெட்டும் போடுவம்தானே. அத்தான் காணமாட்டார்.”
“எண்டாலும் ஏன் இப்பிடி வீட்டுக்குத் தெரியாம நடக்க? இரவே விஷ் பண்ணிட்டீங்க, கிஃப்ட்டும் தந்திட்டிங்க, அத நான் போட்டும் இருக்கிறன். இவ்வளவும் போதுமே.” என்றாள் கெஞ்சலாக.
இப்போது அவனால் கோபத்தை மறைக்க முடியவில்லை. “எனக்கு இண்டைக்கு உன்னோட இருக்க ஆசையா இருக்கு அன்பா. வாறியா இல்லையா?” என்றான் வார்த்தைகள் ஒவ்வொன்றுக்கும் அழுத்தம் கொடுத்து.
“பயமா இருக்கு அபய்…”
“என்ன பயம் உனக்கு? அப்பிடியே வீட்டுக்குத் தெரிய வந்தாத்தான் என்ன? ஓம், ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருக்கு, படிப்பை முடிச்சு வேலைக்குப் போகத் தொடங்கினதும் கலியாணம் கட்டப்போறம் எண்டு சொல்லப்போறம். அவ்வளவுதானே?”
அவ்வளவுதானா? எவ்வளவு இலகுவாகச் சொல்கிறான்? “இந்த வயதில காதல் கீதல் எண்டு நிக்கிறது வெக்கம் இல்லையா? படிக்க அனுப்பி வச்சா, என்ன வேலை பாத்து வச்சிருக்கிறம் எண்டு கேவலமாப் பாப்பீனம் அபய்…” என்றதும் கொதித்துவிட்டான்.
“என்னடி வெக்கம் உனக்கு? என்னைக் காதலிக்கிறது உனக்குக் கேவலமா? அந்தளவுக்கு நான் என்ன…” என்றவன் முகத்தை அவளிடமிருந்து திருப்பித் தன்னை நிதானப்படுத்திக்கொள்ள முயன்றான்.
அவளுக்கு முகம் கன்றிப் போயிற்று. “என்ன இது, ரோட்டில வச்சுக் கத்துறீங்க!” என்று அதட்டியபடி யாராவது கவனிக்கிறார்களா என்று தம்மைச் சுற்றிப் பார்வையைச் சுழற்றிவிட்டு, “ரெண்டு பேரும் படிப்ப முடிக்கேல்ல. அதுவும் எனக்கு இன்னும் முதல் வருசமே முடியேல்ல. இதுக்கிடைல காதலிக்கிறன் எண்டு எப்பிடிச் சொல்லுவன்? அப்பிடிச் சொல்லிப்போட்டு எங்கட வீட்டு ஆக்களுக்கு முன்னால தல நிமிந்துதான் நிக்கேலுமா?” என்று கேட்டாள் அவள்.
“ஏன் நிக்கேலாது? இருபத்தி ஒண்டு எண்டுறது கலியாண வயசு.” என்றான் அவன் பல்லைக் கடித்தபடி.
“அதுக்காக…” என்று ஆரம்பித்தவளை இடையிட்டு, “இப்ப நீ வாறியா இல்லையா?” என்று கேட்டான் முடிவாக.
இவ்வளவு சொல்லியும் இப்படிப் பிடிவாதம் பிடிக்கிறவனை என்ன செய்வது என்று தெரியாது பார்த்தாள் அவள்.
“வாறியா இல்லையா?”
“ப்ளீஸ்…”
“ஏய் போடி! இனி உன்ன எங்கயாவது வெளில கூப்பிட்டாக் கேளு நீ!” என்றவன் பொக்கெட்டில் இருந்த ஒரு குட்டிப் பெட்டியை எடுத்து அவள் கையில் திணித்துவிட்டுப் பறந்திருந்தான்.
போகிறவனையே பார்த்தவள் விழிகள் கலங்கிப் போயின.
“ஏய் என்னடி, அண்ணாவோட சண்டை பிடிச்சியா?” அவர்கள் பேசிக்கொண்டது கேட்காத தூரம் என்றாலும் உடல்மொழி என்னவோ சரியில்லை என்று சொல்ல, வேகமாக வந்து விசாரித்தாள் நிர்மலா.
சோகத்துடன் நடந்ததைப் பகிர்ந்துகொண்டாள் அன்பினி.
“இவ்வளவு பயப்பிடுற நீ காதலிச்சு இருக்கக் கூடாது அன்பு. இது அவருக்கு ஒரு நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் குடுத்திட்டு ஏமாத்திற மாதிரி இருக்கும்.”
“என்னடி நீ? காதலிச்சாப்போல வெளில எல்லாம் சுத்தோணுமா சொல்லு? படிச்சு, நல்ல ஒரு வேலைக்குப் போய், வீட்டாக்களின்ர நம்பிக்கையைக் காப்பாத்தினாத்தானேடி நாளைக்கு எங்கட விருப்பத்தைத் தைரியமாச் சொல்லலாம். கட்டி வைங்க எண்டு கேக்கலாம். அத நினைச்சுத்தானே பயப்பிடுறன். அத விளங்கிக் கொள்ளாம…” என்றவளுக்கு மேலே பேச முக்கடியாமல் குரல் அடைத்துக்கொண்டது.
“சரி விடு, வா போவம். கிளாஸ் தொடங்கப் போகுது!”
அன்றைய நாளில் மற்ற யார் வாழ்த்தியும் அவள் சந்தோசம் மீளவேயில்லை. இடைவேளையின்போது அவன் தந்த பரிசைப் பிரித்துப் பார்த்தாள்.
இரண்டு ஆங்கில ‘A’ எழுத்துகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து கிடப்பது போன்ற சின்ன பென்டன்ட்டுடன் கூடிய கழுத்தோடு வருவதுபோல் மிக மிக மெல்லிய செயின் இருந்தது.
அதைப் பார்த்ததும் அவளுக்குத் தொண்டை அடைக்கும் உணர்வு. இன்று ஒரு நாள்தானே, போயிருக்கலாமோ என்று மனம் இப்போது அலைபாய்ந்தது. அந்தச் செயினை உள்ளங்கையில் வைத்தபடி ஒரு புகைப்படம் எடுத்து, “நல்ல வடிவா இருக்கு. தேங்க்ஸ் அபய்!” என்று எழுதி அனுப்பிவிட்டாள்.
பதில் இல்லை. அதைக் கழுத்தில் அணிந்து ஒரு செல்பி கிளுக்கி, அதோடு சேர்த்து, “வடிவா இருக்கா?” என்று கேட்டு அனுப்பினாள். அதற்கும் பதில் இல்லை.
பல்கலை முடிந்து அறைக்கு வந்ததும் அவனுக்கு அழைத்தாள். எடுக்கவே இல்லை. “சொறி அபய். நீங்க ஆசையாக் கேட்டனீங்க எண்டு தெரியும். நான் வந்திருக்கலாம். உண்மையா சொறி. பிளீஸ், கோபப்படாம என்னோட கதைங்களன்.” என்று தழுதழுத்த குரலில் வொயிஸ் மெசேஜும் அனுப்பிவிட்டாள். அவன் அசையவேயில்லை.
கடைசியில், “இந்தப் பிறந்தநாளுக்கு நீங்க எனக்குத் தந்த பெரிய பரிசு கண்ணீர்!” என்று அனுப்பிவிட்டுக் கட்டிலில் விழுந்து கண்ணீர் உகுத்தாள்.

