கேட்பார் இன்றிக் காதல் – 7

அத்தியாயம் 7

அவளின் அந்த வார்த்தைகள் அபயனை உலுக்காமல் இல்லை. ஆனால், அவள் கேட்ட மன்னிப்பும் நான் உங்களோடு வந்திருக்கலாம் என்று சொன்னதும் அவன் கோபத்தைத் தாங்க முடியாமல் வந்த வார்த்தைகள். இதன் பிறகும் கூட அவளின் பயம் போகப் போவதில்லை. அவனோடு அவள் வரப்போவதும் இல்லை. அப்படியே வந்தாலும் மறுபடியும் கோபித்துவிடுவானோ என்கிற பயத்தில் மட்டும்தான் வருவாள். அது எதற்கு?

சமாதானமாகிவிட்டால் அவளோடு நேரம் செலவழிக்க வேண்டும் என்று எழும் ஆசையை அவனாலும் கட்டுப்படுத்த முடியாது. அதில் அவளுக்குப் பதில் போடாமல் இருந்துகொண்டான்.

அடுத்தநாள் காலை விழித்ததுமே கைப்பேசியைத்தான் எட்டி எடுத்துப் பார்த்தாள் அன்பினி. அப்போதும் அவள் அனுப்பிய கடைசிக் குறுந்தகவலோடுதான் அவர்களின் உரையாடல் நின்றிருந்தது.

காலை நேரத்துப் புத்துணர்ச்சி தொலைந்துவிட, சோர்ந்த மனத்துடனேயே எழுந்து தயாராகினாள். இவ்வளவு பிடிவாதமாகக் கதைக்காமல் இருக்கிறானே என்று மனம் ஒரு பக்கம் வருந்தினாலும் அந்தளவுக்கு நான் செய்த பிழை என்ன என்கிற கேள்வி எழுந்து வந்து, அவன் மீது அதிருப்தி கொள்ள வைத்தது.

அவனுக்கும் சேர்த்துத்தான் அவள் பயந்தாள், கவனமாக இருக்க நினைத்தாள். அதற்கு இப்படியா நடப்பான்?

இரண்டு நாள்கள் இப்படியே கடந்து போயின. அவனுக்கு எப்படியோ அவள் தவித்துப்போனாள். அவன் மீதான மனத்தின் குறைகளையும் தாண்டி, ஒரு விதமான பரிதவிப்புடன் எங்காவது தென்பட்டுவிட மாட்டானா என்று தேடினாள்.

“அண்ணா கதைச்சவராடி?” வாடியே கிடக்கும் அவள் முகத்தைக் கவனித்துவிட்டு வினவினாள் நிர்மலா.

இல்லை என்று தலையை மட்டும் அசைத்தாள் அன்பினி.

“நீயாவது அவருக்கு எடுத்துச் சமாதானப்படுத்தலாமே.”

அவளுக்கு என்னவோ அவள் எடுத்துச் சமாதானப்படுத்தினாலும் அவன் சமாதானமாகுவான் என்கிற நம்பிக்கை இல்லை. முதலில் அவள் அழைப்பை ஏற்பானா என்பதே சந்தேகம்தான்.

“என்னடி, இப்பிடி ஒண்டுமே சொல்லாம இருந்தா என்ன அர்த்தம்?”

“இல்ல, அப்பிடி என்ன பிழை செய்தனான் எண்டு யோசிக்கிறன்.” அவர்கள் இருவரும் வகுப்பறையில் அமர்ந்திருந்தார்கள். பாடம் இன்னும் ஆரம்பிக்கவில்லை. பார்வை யன்னல் புறமாக வெளியில் நிலைத்திருக்கச் சொன்னாள் அவள்.

“நீ செய்தது பிழையா சரியா எண்டுறதை விட, பிறந்தநாளுக்குக் கூட அவர் கூப்பிட்டும் நீ வரேல்ல எண்டுற கோபம்தான் அவருக்கு. அவரை மாதிரி நீயும் கோவத்தைப் பிடிச்சுத் தொங்காம எடுத்துக் கதை அன்பு.”

“நீயும் விளங்காமக் கதைக்காத நிம்மி. மன்னிப்புக் கேட்டாச்சு, அவர் கூப்பிட்ட நேரம் போகாதது பிழைதான் எண்டும் சொல்லியாச்சு. பிறகும் கதைக்காம இருந்தா என்ன செய்ய? விடு, எவ்வளவு நாளைக்கு இப்பிடி இருக்கிறார் எண்டு பாப்பம்.” என்றாள் சலிப்புற்ற குரலில்.

“பிறகு என்னத்துக்கு முகத்தை இப்பிடி வச்சிருக்கிறாய்?”

“தெரியா. என்னதான் நான் செய்தது பிழை இல்ல எண்டு அறிவு சொன்னாலும் அவரப் பாக்காம, அவரோட கதைக்காம இருக்கேலாம இருக்கடி.” என்று சொல்லும்போதே அவள் குரல் அடைத்துக்கொண்டது. வேகமாகத் தண்ணீரை எடுத்துப் பருகினாள்.

நிர்மலாவுக்குஅவளைப் பார்க்கப் பாவமாயிற்று. “சும்மா நீயா ஒண்ட யோசிக்காம வா, அண்ணாவைப் போய்ப் பாத்துக்கொண்டு வருவம்.” என்று அழைத்தாள்.

அவளுக்கும் அந்த ஆசை இல்லாமல் இல்லை. ஆனால், அவர்களின் சமாதானம், ‘இனி உங்களோடு வெளியே வருவேன்’ என்கிற அவள் சம்மதத்தோடுதான் நடக்கும் என்று தோன்றிற்று. அதன்பிறகு அவன் அழைத்தால் அவள் போய்த்தான் ஆக வேண்டும். அது வேண்டாம் என்றுதான் இப்போதும் நினைத்தாள். அடுத்த செமஸ்டர் எக்ஸாம் வேறு இருவருக்கும் நெருங்கிக்கொண்டிருந்தது.

அதில், “விடு நிம்மி. கொஞ்ச நாளைக்கு இப்பிடியே இருக்கிறதுதான் சரி எண்டு நினைக்கிறன்.” என்றாள் சோர்வுடன்.

தோழியைக் குழப்பமாகப் பார்த்தாலும் நிர்மலா அதன் பிறகு வற்புறுத்தப் போகவில்லை. அவர்களின் காதல் இலக்கணம் அவளுக்கு விளங்கவும் இல்லை.

என்னதான் அறிவைக்கொண்டு இதுதான் சரி என்று ஒரு முடிவை எடுத்தாலும் அவனைத் தேடும் மனத்தை அன்பினியால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. உள்ளே அழுத்தும் ஒருவித வலியுடன்தான் தன் நாள்களைக் கடத்தினாள்.
அந்த செமஸ்டரும் முடிந்து அவன் கடைசி வருடத்துக்கும் அவள் இரண்டாம் வருடத்துக்கும் சென்றும் கூட இருவரும் தம் நிலையிலிருந்து இறங்கி வராமல் இருந்தனர். அவர்களின் நண்பர்கள்தான் குழம்பிப் போயினர்.

“என்னடி அண்ணாவோட பிரேக்கப்பா?” என்று நிர்மலா கேட்கும் அளவில் இருந்தது அவர்கள் இருவரினதும் உறவு நிலை.

“நான் பிரேக்கப் செய்தாலும் அவர் விடமாட்டாராடி.” நம்பிக்கையோடு சொன்னாலுமே தன்னோடு கதைக்காமல் அவனால் இருக்க முடிகிறது என்பது அவளுக்கு மிகப்பெரிய வருத்தத்தைத் தராமல் இல்லை.

அப்போதுதான் அவனுக்குப் பிறந்தநாள் வந்தது. மிகுந்த ஆவலும் ஆசையுமாக அவன் கையில் விரும்பி அணியும் சில்வர் கைச்செயினில் புதியவகை டிசைன் ஒன்றை வாங்கி வைத்துக்கொண்டாள். அவனைப் போலவே முதல் நாள் இரவு அவனுக்கு அழைத்தாள். கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

அவன் பிடிவாதக் கோபத்தின் ஆழத்தை இன்னுமொருமுறை கண்டாள் அன்பினி. அடுத்து என்ன செய்வது என்று தெரியவே இல்லை. மெல்லத் தன்னைச் சமாளித்துக்கொண்டு அவனுக்குப் பிறந்தநாள் வாழ்த்தினை வாயால் சொல்லி அனுப்பிவைத்தாள்.

அடுத்தநாள் காலையில் எழுந்து பார்க்க அதற்கும் பதில் இல்லை. உள்ளத்தில் சுருக்கென்று ஒரு வலி ஆழமாய்த் தாக்கினாலும் அவனுக்கென்று வாங்கிய பரிசை எடுத்துக்கொண்டு பொறியியல் பீடத்தை நோக்கி நடந்தாள்.

கோபப்பட்டு, மனம் நோவது போன்று எதையாவது சொல்லிவிடுவானோ என்கிற பயமும், நிறைய நாள்களுக்குப் பிறகு அவனைப் பார்க்கப் போகிறோம் என்கிற படபடப்பும் அவளிடம் இருந்தன.

இன்றைக்கு நிச்சயம் தன்னைத் தேடிக்கொண்டு வருவாள் என்று அபயனுக்கும் தெரியும். அதில் நண்பர்களுடன் நின்றவன் அவள் தூரத்தில் வரும்போதே கண்டுவிட்டான்.

வேகமாகக் கைப்பேசியை எடுத்து, “மரியாதையாத் திரும்பிப் போ!” என்று அனுப்பிவிட்டான்.

அதைப் பார்த்த அவள் நடை நின்று போயிற்று. முகம் கன்றிச் சிவந்தது. இந்தளவுக்கு அவள் செய்த தவறுதான் என்ன? கலங்கிய விழிகளோடு நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவன் அங்கிருந்து விலகி நடப்பது தெரிந்தது.

உடைந்துபோன உள்ளத்தோடு திரும்பி நடந்தாள்.

அப்படி அவள் திரும்பிப் போவதைக் கண்ட அவன் நண்பர்களில் ஒருவன், “ஏனடா இப்பிடி இருக்கிறாய்? பாவம் அந்தப் பிள்ளை. சிவனே எண்டு இருந்தவளைத் துரத்தி துரத்தி விரும்ப வச்சுப்போட்டு என்ன மச்சான் இதெல்லாம்?” என்றான் அவன் செய்கை பிடிக்காமல்.

“அவளுக்குப் படிக்கிற நேரம் காதலிக்கிறது அவமானமா இருக்காமடா. அதான் படிச்சு முடிக்கட்டும். அதுக்குப் பிறகு என்ன எண்டு பாப்பம்.” என்று முடித்துவிட்டான் அவன்.

அன்று முழுக்க அவளால் வகுப்பில் கவனம் செலுத்தவே முடியவில்லை. விழிகளில் கண்ணீர் துளிர்த்துக்கொண்டே இருந்தது. அறைக்கு வந்ததும், “ஆரும் பாத்திடுவினமோ, வீட்டுக்குத் தெரிஞ்சிடுமோ எண்டுற பயம் எனக்கு இப்பவும் இருக்குத்தான். அதுக்குப் பின்னால இருக்கிறது எங்கட வீட்டாக்கள் உங்களைப் பற்றிப் பிழையாவோ, உங்கட வீட்டு ஆக்கள் என்னைப் பற்றிப் பிழையாவோ நினைச்சிடக் கூடாது எண்டுற கவனமே தவிர, உங்களக் காதலிச்சிட்டனே எண்டுற கவலை இல்ல. நீங்க அவ்வளவு கூப்பிட்டும் உங்களோட வராம இருந்தது பிழைதான். அதுக்காக நீங்க தாற தண்டனை ஆகக் கூட அபய். ஆனாலும் எனக்கு உங்களப் பாக்க, உஙகளோட கதைக்க ஆசையா இருக்கு. மிஸ் யூ சோ மச்!” என்று குரல் தழுதழுக்கப் பேசி, அவனுக்கு அனுப்பிவிட்டாள்.

அதைக் கேட்டவன் எப்படி உணர்ந்தான் என்று சொல்ல முடியாமல் அப்படியே அமர்ந்திருந்தான். அவளின் மிஸ் யூ வில் அவன் உள்ளம் ஆடிக்கொண்டிருந்தது. அதைவிட அவள் குரலில் தெரிந்த அழுகை அவனை என்னவோ செய்தது. திரும்ப திரும்பக் கேட்டான். கேட்கிற ஒவ்வொரு பொழுதிலும் ஏதோ ஒன்று அவன் இதயத்தை ஈட்டியாய்க் குத்தியது.

இன்று தான் நடந்துகொண்ட முறை மிக மிக அதிகம் என்று அவனுக்குத் தெரியாமல் இல்லை. ஆனால், இத்தனை நாள்களாக அவன்தான் விலகி இருந்தான் என்றால் அவளும் ஒதுங்கித்தானே இருந்தாள்.

இன்றைக்கு அவனுக்குப் பிறந்தநாள் என்றபடியால் வேறு வழியில்லாமல் வந்தாள். அதுவே பிறந்தநாள் வராமல் இருந்திருந்தால்? வந்திருக்க மாட்டாள்தானே? அப்போ அப்படியே நீ இரு என்கிற வீம்புதான் அவனை அப்படி நடக்க வைத்திருந்தது.

இப்போதோ இந்த நிமிடமே அவளைப் பார்க்க வேண்டும் போன்று, தன் இறுகிய அணைப்புக்குள் அவளைப் புதைத்துக்கொள்ள வேண்டும் போன்று ஒரு உத்வேகம் எழுந்தது. ஆனாலும் அடக்கிக்கொண்டான். இப்போதும் பயம் என்றுதானே சொல்கிறாள். படிப்பு முடியட்டும். அதன் பிறகு பார்ப்போம் என்று எண்ணிக்கொண்டு மீண்டும் படிப்பில் கவனத்தைக் குவித்தான்.

அன்பினி மனத்தளவில் மிகவும் தளர்ந்திருந்தாள். அவனுடைய கோபமும் பிடிவாதமும் அவளை மிரட்டின. அதன் பிறகு அவனைத் தேடிப்போகும் தைரியம் அவளுக்கு வரவேயில்லை.

தன் கடைசி வருடத்தையும் பூர்த்தி செய்து, பல்கலை வாழ்க்கையை முடித்து, பரீட்சைகளை நல்லபடியாகச் செய்து, பெட்டி படுக்கை எல்லாம் கட்டிக்கொண்டு முல்லைத்தீவுக்குப் புறப்படும் நாள் வந்தபோதும் அபயன் அசையவில்லை.

error: Alert: Content selection is disabled!!