கேட்பார் இன்றிக் காதல் – 8

அத்தியாயம் 8

காந்தன் இன்னுமே வவுனியாவில்தான் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். ஒவ்வொரு வெள்ளியும் முல்லைத்தீவுக்குச் சென்றுவிட்டு ஞாயிறு இரவில் அல்லது திங்கள் அதிகாலையில் புறப்பட்டு மீண்டும் வவுனியாவுக்கு வந்துவிடுவான்.

அந்த வாரத்து வெள்ளியன்று தன் அறையில் வைத்திருந்த அத்தனை பொருள்களையும் காந்தனின் வாகனத்தில் ஏற்றி அனுப்பிவைத்திருந்தான் அபயன். அவனுக்கும் அன்றோடு பல்கலை முடிந்திருந்தாலும் ஊருக்குப் புறப்படவில்லை.

அன்றைய மாலையை நண்பர்கள் எல்லோருமாகச் சேர்ந்து கொண்டாடித் தீர்த்தார்கள். அந்தக் கொண்டாட்டம் அதிகாலை வரை தொடர்ந்து, பிரியவே மனமில்லாமல் விடைபெற்று, சனி காலையில் முல்லைத்தீவுக்குப் புறப்படும் பேருந்தில் ஏறி அமர்ந்தான்.

முதல் நாள் இரவு மருந்துக்கும் உறங்கக் கிடைக்காது என்று முன்கூட்டியே தெரிந்திருந்ததால் ஏசி பஸ்ஸில் முன்பதிவு செய்திருந்தான். சொகுசான இருக்கை மிக இதமாய் அவனை உள்வாங்கிக்கொண்டது. அதிகாலை நேரத்துக் காலநிலை வேறு மப்பும் மந்தாரமுமாக இருக்க, சீட்டில் தலை சாய்த்து விழிகளை மூடிக்கொண்டதும் கண்களுக்குள் வந்து நின்றாள் அன்பினி.

அப்போது யாரோ தன்னருகில் வந்து நிற்பது தெரிந்தது. விழிகளைத் திறந்த அபயன் சற்று அதிர்ந்துதான் போனான். எதிரில் அன்பினி நின்றிருந்தாள். அதுவும் அவன் வாங்கிக் கொடுத்த அதே சுடிதாரில். பார்த்தவன் பார்த்தபடி இருக்க, “இடம் விட்டீங்க எண்டா நான் என்ர சீட்டுக்கு போவன்.” என்றாள் அவள்.

இவள் நேற்று அத்தானோடு போகவில்லையா என்கிற கேள்வி உள்ளே ஓடினாலும் எழுந்து வழிவிட்டான். அவளும் தான் கொண்டு வந்த பாக்கை தூக்கி மேலே போட்டுவிட்டு, உள்ளே சென்று அமர்ந்துகொண்டாள்.

நிறைய நாள்களுக்குப் பிறகு பக்கத்தில் அவளைப் பார்த்ததில் இவன் பார்வை இப்போதும் அவளில்தான்.

அவளோ அப்படி ஒருவன் பக்கத்தில் இல்லவே இல்லை என்பது போன்று, யன்னல் திரைச் சீலையை மெதுவாக விலக்கிவிட்டு, மூடியிருந்த கண்ணாடி யன்னலின் வழியே, மெதுவாகத் தூர ஆரம்பித்துவிட்ட மழையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்திருந்தாள்.

அவன் உதட்டோரம் மெல்லிய சிரிப்பில் துடிக்க ஆரம்பித்தது. எத்தனை மணிக்கு, எந்த பஸ்ஸில் போகிறான் என்றெல்லாம் கண்டு பிடித்து, அவனுக்குப் பக்கத்திலேயே வந்து அமர்ந்துவிட்டு, நாடகம் போடுகிறாளா? உள்ளம், நிறைய நாள்களுக்குப் பிறகு உற்சாகத்தில் துள்ளியது.

அதைக் காட்டிக்கொள்ளாமல் எழுந்து, மேலே கிடந்த தன் பாக்கை எடுத்துக்கொண்டு, வேறு இருக்கைக்குப் போவது போன்று அவன் நடிக்க, ஒரு முறைப்புடன் வேகமாகத் திரும்பியவள் அவன் கையைப் பற்றி இழுத்து மீண்டும் அமர்த்தினாள்.

‘அப்பிடி வா மகளே வழிக்கு!’ உள்ளே சிரித்தாலும் தம்மைச் சுற்றிப் பார்வையைச் சுழற்றினான் அவன்.

அவள் முகம் சுருங்கிப் போயிற்று. “அதான் சொறி சொல்லிட்டனே.” மெல்லிய குரலில் முணுமுணுத்தாள்.

அப்போதும் அவன் கைப்பேசியில் கவனம் போன்று காட்டிக்கொள்ள, “என்னைப் பாருங்க ப்ளீஸ்!” என்றாள் கெஞ்சலாக.

அவன் அசையவில்லை. அவளுக்குக் கோபம் வந்தது. கைப்பேசியை எட்டிப் பறித்தாள். அவன் பேசாமல் சீட்டில் தலையைச் சாய்த்து விழிகளை மூடிக்கொண்டான். அவளுக்குத் தொண்டை அடைக்கும் உணர்வு.

“அபய்!”

விழிகளைத் திறந்து பார்த்தான். அவன் புறமாக நீண்டிருந்த அவள் கையில் ஒரு குட்டி சொக்லேட் பார். ஒரு கணம் அந்த நாள் நெஞ்சில் மின்னி மறைய, அவன் சொக்லெட்டையும் அவளையும் மாறி மாறிப் பார்த்தான்.

“சமாதானம்?”

அவன் பார்வை அவளிலேயே நிலைத்து நின்றது.

“நான் பாவம்தானே? உங்கட அன்பா எல்லா.” விளையாட்டுப் போன்று சொல்ல நினைத்தாலும் முடியாமல் குரல் கரகரக்கவும் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

மனம் கனிந்துவிட அந்த பாரை வாங்கிப் பிரித்து, ஒரு கடி கடித்துவிட்டு அவள் வாயருகில் நீட்டினான். அவள் விழிகளில் ஒருவிதமான பரிதவிப்பு. அன்று வாங்க மறுத்தவள் இன்று அவனையே பார்த்தபடி தானும் ஒரு கடி கடித்தாள். மிகுதியைத் தன் வாயினுள் போட்டுக்கொண்டவனின் பார்வை அவளிலேயேதான் இருந்தது.

முகம் இலேசாய்க் சிவக்க, மீண்டும் பார்வையை யன்னல் புறம் திருப்பிக்கொண்டாள் அவள்.

சிறு சிரிப்புடன் மெதுவாய் அவள் மடியில் கிடந்த கரத்தை எடுத்துத் தன் விரல்களோடு கோத்துக்கொண்டான் அபயன்.

விழிகளில் நீர் கோக்க, “இந்தளவுக்குக் கோபம் காட்டாதீங்க அபய். எனக்குத் தாங்கேலாம இருக்கு.” என்றாள் தழுதழுத்த குரலில்.

அவனாலும் சட்டென்று பேச முடியவில்லை. அவளைத் தேற்றும் வண்ணம் கோத்திருந்த அவள் விரல்களை அழுத்திக்கொடுத்தான்.

“இன்னும் கோவமா?” என்றாள் மெல்லிய குரலில்.

இல்லை என்பதுபோல் தலையை அசைத்தான்.

“பிறகு ஏன் கதைக்கிறீங்களே இல்ல?”

ஒரு நெடிய மூச்சை இழுத்து விட்டுவிட்டு, “இப்ப பயமா இல்லையா?” என்றான் அவன்.

திரும்பவும் அதே கேள்வியா என்று இருந்தது அவளுக்கு. இப்போதும் பயம் இல்லாமல் இல்லை. என்ன, அந்தப் பயத்தையும் மீறிக்கொண்டு, எப்படியாவது அவனோடு சமாதானமாகிவிடு என்று துடிக்கும் உள்ளத்தின் ஏக்கத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவன் நண்பனைப் பிடித்து, எப்போது, எந்த பஸ்ஸில் போகிறான் என்று அறிந்து, என்னுடன் வா என்று அழைத்த தமையனிடம் பொய்யைச் சொல்லிவிட்டு, இதோ அவனருகில் வந்து அமர்ந்திருக்கிறாள்.

இதையெல்லாம் சொன்னால் திரும்பவும் முருங்கை மரம் ஏறிவிடுவானோ என்கிற பயத்தில் அவன் முகத்தையே அவள் பார்க்க, பக்கென்று சிரித்திருந்தான் அவன்.

“சொறி அன்பா!” என்றான் உடனேயே.

அவள் விழிகள் வியப்புடன் விரிந்தன.

“உன்னோட கதைச்சா என்னால உன்ன விட்டுத் தள்ளி இருக்கேலாது. திரும்பவும் என்னோட வா எண்டு கூப்பிடுவன். அது திரும்பவும் சண்டைலதான் கொண்டுவந்து விடும். அதான் கதைக்கவே இல்ல.”

“அதுக்கு இப்பிடித்தான் செய்வீங்களா?”

சின்ன சிரிப்புடன் அப்படித்தான் செய்வேன் என்பதுபோல் கண்ணைச் சிமிட்டினான் அவன். இமைக்காமல் அவனையே பார்த்தாள்.

இந்தக் கோபக்காரனிடம் மனத்தைக் கொடுத்துவிட்டு அவள் படுகிற பாடு இருக்கிறதே! ஆனால் என்ன, அவன் அவளோடு சமாதானமான பிறகுதானே அவள் உள்ளம் அமைதியில் திளைக்கிறது; ஆனந்தத்தில் துள்ளிக் குதிக்கிறது. இதோ இந்தக் கணத்தில் அவளிடம் தளும்பி வழியும் சந்தோசத்துக்கும் நிம்மதிக்கும் அளவே இல்லையே!

நினைவு வந்தவளாகத் தன் கைப்பையிலிருந்து ஒரு பெட்டியை வெளியே எடுத்தாள். “இதத் தரக் கூடாது. உங்களுக்கு எண்டு வாங்கிட்டன் எண்டுறதால மட்டும்தான் தாறன்.” என்று சொல்லியபடி அதைப் பிரித்தாள்.

ஒன்றும் சொல்லாமல் சின்ன சிரிப்புடன் அவளையே பார்த்திருந்தான் அவன்.

“ஆசையாசையா வாங்கி, பிறந்தநாளுக்குத் தருவம் எண்டு தேடி வந்தா ‘மரியாதையாப் போ’ எண்டு சொல்லுறீங்க என்ன? ஒரு நாளைக்கு உங்களுக்கு அதுக்கு இருக்குப் பொறுங்க!” என்று சொல்லியபடி அவன் கையைத் தானே எடுத்து, அதில் இருந்த அவனுடைய பழைய செயினை கழற்றிவிட்டு, புதியதை மாட்டி அழகு பார்த்தாள்.

“பிடிச்சிருக்கா?”

“பிடிச்சிருக்கு.” விழிகள் அவள் மீதிருக்கச் சொன்னான் அவன்.

அந்தக் குரல் அவளிடம் என்ன சொன்னதோ! திரும்பி அவனைப் பார்த்தாள். அப்போதும் அவளிடமே நிலைத்திருந்த பார்வை சிரிப்பை மூட்டியது.

வெளியே மழை. அளவான வேகத்தில் பயணிக்கும் பேருந்து. பக்கத்தில் அவன். உள்ளம் முழுக்க அவன் உருவாக்கிவிட்ட உணர்வுகளின் ஆளுகை. இதைவிடவும் அழகான ஒரு பயணம் அமையுமா என்று அவளுக்குத் தெரியவில்லை. அதை அனுபவித்தபடி அமர்ந்திருந்தாள்.

அவனுக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். பெரிதாய் அவளோடு எதையும் கதைக்காமல், கொட்டும் மழைக்குள் நகரும் வீதியோரத்தை யன்னலினூடு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.

கண்ணாடி யன்னலின் அந்தப் பக்கம் கோடுகளாய் மழை நீர் இறங்க, உள்ளே மெலிதாக வியர்த்தது. அதில் தன் பெயரை எழுதும் எண்ணத்துடன் ‘அ’ எழுதியவளுக்குப் பழைய நினைவு வந்துவிட, அதை ஆவன்னாவாக மாற்றி, நான்கைந்து புள்ளிகளையும் தொடர்ந்து போட்டுவிட்டுத் திரும்பி அவனைப் பார்த்தாள்.

அவ்வளவு நேரமாக அவளைக் கவனித்துக்கொண்டிருந்தவன் அவள் திரும்பவும் வேகமாக முகத்தை மறுபுறம் திருப்பித் தன் சிரிப்பை மறைக்க முயன்றான்.

அவன் கையில் நன்றாகக் கிள்ளி விட்டாள் அன்பினி. “ஆ… வன்னா கேக்குதா உங்களுக்கு? எவ்வளவு கேடுகெட்ட பெடியன் நீங்க?” என்றவள் கோபத்தில் அவனால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. சுற்றி ஆட்கள் இருந்ததில் சத்தமில்லாமல் உடல் குலுங்கச் சிரித்தான்.

“அப்பிடித்தான் முதல் முதல் கம்பசுக்கு வாற ஒரு பிள்ளையிட்டக் கேப்பீங்களா?”

“உன்னட்டத்தானே.” என்றான் அவன் உதட்டோர முறுவலுடன்.

‘அதென்ன என்னட்டத்தானே? என்னிடம் என்றால் என்னவும் கதைப்பானா?’ விழி விரிய அவனை நோக்கியவள் அவன் பார்வையின் வீச்சில் வேகமாய் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். அடிக்கடி இதையே செய்கிறோம் என்று வேறு உள்ளே ஓடிற்று.

சற்று நேரத்த்தில் அவன் கை ஒன்று நீண்டு வந்து, அவள் கரத்தை மீண்டும் பற்றிக்கொண்டது.

வேகமாகத் திரும்பியவள் யாரும் தம்மைக் கவனிக்கிறார்களா என்று பார்த்தாள்.

“கையப் பிடிச்சு செயினை மாட்டேக்க இது தெரியேல்லையோ?” என்றான் அவன்.

எப்படியாவது அவனை மலையிறக்கிவிடும் எண்ணத்தில் இருந்தவளுக்கு அப்போது உண்மையாகவே அது தெரியவில்லைதான். இப்போதும் ஏசி பஸ் என்பதால் இருக்கைகளில் மட்டுமே ஆட்கள் இருந்ததில் சற்று ஆசுவாசமானாள்.

வலிவும் வனப்பும் மிகுந்த நீண்ட விரல்கள், அவளின் மெல்லிய விரல்களோடு விளையாடியபோது அவளுக்குள் உணர்வுகளின் பேரலை. அவன் தோளில் சாயும் ஆசை எழுந்தது. கூச்சம் அதற்கு விடமாட்டேன் என்றதில் கையை அவனிடமே கொடுத்துவிட்டு, முகத்தை மீண்டும் யன்னலின் புறம் திருப்பிக்கொண்டாள்.

மீண்டும் ஒருமுறை புதிதாய்க் காதலிக்கும் உணர்வு.

அவனுக்கும் அதே உணர்வுதான். இப்படி எல்லாம் இதற்கு முதல் அவள் அனுமதித்ததே இல்லை. பெரிய முன்னேற்றம்தான். தனக்குள் சிரித்துக்கொண்டான்.

கைப்பேசியில் அவளுக்குப் பிடித்த பாடலை எடுத்துவிட்டு ஹெட்போன்களை காதினுள் மாட்டப் போனவள், ஒன்றை அவன் புறமாக நீட்டி, போடப் போகிறாயா என்பதுபோல் சைகையில் கேட்டாள். அவனும் வாங்கி ஒற்றைக் காதினுள் செருகிக்கொண்டான்.

உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே என்று சைந்தவி மிக மிக மென்மையாய் உருக ஆரம்பித்தார்.

அவள் சீட்டில் தலையைச் சாய்த்துப் பாடலை அனுபவிக்க ஆரம்பிக்க, அவன் கண்கள் அவளிடம் சிரித்தன. அவளுக்கு விளங்கவில்லை. புருவங்களை உயர்த்தி என்ன என்றாள்.

அவள் புறமாகக் குனிந்து, “இத்தனை வருசத்தில நீ என்னப் பக்கத்திலேயே விட்டதில்லை. இதில என்ர சுவாசம் உன்ர மூச்சுல சேருதா?” என்று கேட்டான் அவன்.

அவளுக்கு மெய்யாகவே மூச்சடைத்துப் போனது.

‘பாட்ட அனுபவிடா’ என்றால் என்னவெல்லாம் கேட்கிறான்? அவனை ஒரு முறை முறைத்துவிட்டு வலு வேகமாகப் பார்வையைத் திருப்பிக் கொண்டவள் முகம், இரத்தமாய்ச் சிவந்து போயிற்று.

error: Alert: Content selection is disabled!!