அத்தியாயம் 9
அன்பினியைப் போலவே அவளின் பாடல் தெரிவுகள் அத்தனையும் மிக மென்மையானவையாக இருந்தன. அவை இனிமையாய்ச் செவி வழி நுழைந்து, இதயத்தைத் தாலாட்டியது காரணமா, இத்தனை நாள்களின் வீம்பை எல்லாம் தொலைத்துவிட்டு, மறுபடியும் தாம் நெருங்கிவிட்டோம் என்கிற எண்ணம் தந்த ஆசுவாசமா தெரியவில்லை, இருவருமே தம்மை அறியாது உறங்கிப் போயிருந்தனர்.
அப்போது அன்பினியின் கைபேசிக்குக் குறுந்தகவல்கள் வந்து விழுந்தன. இருவர் காதுகளிலும் மாட்டப்பட்டிருந்த ஹெட்போன்களின் உபயத்தால் இருவருமே விழித்துக்கொண்டனர்.
“அன்பு வெளிக்கிட்டியா?”
“எத்தின மணி பஸ்ஸுக்கு வாறாய்?”
“ஏத்த வரவா?” என்று காந்தன்தான் கேட்டு அனுப்பி இருந்தான்.
அவற்றை எல்லாம் அபயனும் வாசித்தான். நிமிர்ந்து அமர்ந்து, கலைந்திருந்த கேசத்தை இரண்டு கைகளாலும் கோதி விட்டபடியே, “என்னோட வாறன் எண்டு சொல்லு. மறைக்க வேண்டாம்!” என்றான்.
“அண்ணா ஏதும் நினைக்கமாட்டாரா?”
“நாங்க சொல்லாம விட்டு அவேயா அறிஞ்சாத்தான் சந்தேகம் வரும் அன்பா. நாங்களாச் சொல்லிட்டாச் சோலி இல்ல. நானே கொண்டு வந்து உன்ன உன்ர வீட்டில விட்டுட்டுப் போறன். நீ உண்மையையே சொல்லு!” என்றான் திரும்பவும்.
அவன் சொல்வது சரிதான். இப்போதே அவர்கள் இருவரையும் சேர்த்து யாரெல்லாம் பார்த்தார்களோ தெரியாது. இனி முல்லைத்தீவில் இறங்கும்போது யார் யார் பார்ப்பார்கள் என்றும் தெரியாது. சொல்லிவிடுவதுதான் உத்தமமான காரியம்.
என்றாலும் அதை டைப் பண்ணுவதை நினைக்கவே உதறியது. ஆனாலும், “அண்ணா, நான் வந்துகொண்டு இருக்கிறன். அண்ணின்ர தம்பியும் வாறார்.” என்று எழுதி அனுப்பிவிட்டாள்.
“அண்ணின்ர தம்பி?” மெல்லிய முறுவலுடன் புருவம் உயர்த்தினான் அவன்.
“சும்மா இருங்க அபய். இதுக்கே என்ன வரப்போகுதோ எண்டு எனக்கு நடுங்குது!”
அவள் பயம் சரிதான் என்பது போன்று அங்கே அதை வாசித்த காந்தனின் புருவங்கள் சுருங்கின. நேற்றுப் புறப்பட்ட தன்னுடன் அவள் வர மறுத்ததையும் இன்று அதிகாலையில் அபயனோடு வருவதையும் இணைத்து யோசித்தான். தவறான எண்ணங்கள் எதுவும் ஓடாதபோதும் அவன் கவனத்தில் அது பதிந்துபோனது.
“சரி, கவனமா வா!” என்று அனுப்பிவிட்டாலும் இனி அவர்களைக் கவனிக்க வேண்டும் என்று தனக்குள் குறித்துக்கொண்டான்.
அன்பினியும் தமையன் பதில் அனுப்ப எடுத்துக்கொண்ட அந்தச் சில நொடிகளால் நன்றாகவே பயந்திருந்தாள். அதன் பிறகு அவள் இயல்பாய் இல்லை என்பதைக் கவனித்த அபயன், “உனக்கு ஏன் இவ்வளவு டென்சன்?” என்றான் நிதானமாக.
அவனைத் திரும்பிப் பார்த்தவள் விழிகளில் கலக்கம்.
“நான் படிப்பை முடிச்சிட்டன். அடுத்த கிழமையே கொழும்புக்கு வேலைக்குப் போகப் போறன். இன்னும் வேற என்ன வேணும் உனக்கு? அப்பிடியே இனித் தெரிய வந்தாலும் சமாளிக்கலாம். அதால சும்மா சும்மா பயப்பிடாத!” என்று மெலிதாய் அதட்டினான் அவன்.
“அப்ப நான் படிப்பை முடிக்க வேண்டாமா? வேலைக்குப் போறேல்லையா?” என்றாள் மனத்தாங்கலோடு.
“இப்ப உடனேயே கலியாணம் எண்டு உனக்கு ஆர் சொன்னது? அக்காவோ அத்தானோ கேட்டா இனியும் பயப்பிடாம ஓம், எங்களுக்கு ஒருத்தர ஒருத்தர் பிடிச்சிருக்கு எண்டு சொல்லு எண்டுதான் சொல்லுறன். இந்த விசயத்த எண்டைக்கோ ஒரு நாள் நாங்க ஃபேஸ் பண்ணித்தான் ஆகோணும் அன்பா. அது இண்டைக்கா இருந்தாத்தான் என்ன?”
திரும்பவும் இந்த விசயத்தால் தமக்குள் சண்டை வந்துவிடுமோ என்று பயந்து அவள் அமைதியாகிவிட, “நீ படிச்சு முடிச்சிட்டு ஆசைப்பட்ட மாதிரியே வேலைக்குப் போ. எனக்கும் எங்கட சீனியர் அண்ணா ஒருத்தர் சொந்தமா கொம்பனி வச்சிருக்கிறார், அவர்தான் வேலைக்கும் வரச் சொன்னவர். அங்க போய் வேலை பழகி, எனக்கும் சொந்தமா கொம்பனி ஆரம்பிக்கத்தான் விருப்பம். சோ நானும் அடுத்த நாலஞ்சு வருசத்துக்குக் கட்டுற பிளான்ல இல்ல.” என்று அவன் சொன்ன பிறகுதான் அவள் ஆசுவாசமானாள்.
ஆனாலும் அடி நெஞ்சில் இருக்கும் மெல்லிய பயம் அகலாததில், “வீட்டில ஒண்டும் சொல்லாயினம்(சொல்லமாட்டார்கள்) தானே அபய்?” என்று வினவினாள்.
“சொல்ல என்ன கிடக்கு?” என்று திருப்பிக் கேட்டான் அவன். “ஏற்கனவே நாங்க சொந்தம். என்னிலையோ உன்னிலையோ குறை எண்டு சொல்ல ஒண்டும் இல்ல. அதால ஒண்டும் சொல்லாயினம். சொன்னாலும் நியாயம் இல்லாத எதையும் கேக்கோணும் எண்டுற கட்டாயம் எங்களுக்கு இல்ல. அதால கண்டதையும் யோசிக்காத!” என்றான் அவன்.
அவனிடம் தென்படும் இந்தக் கறார் குணம் அவளை எப்போதுமே பயமுறுத்தும். இப்போதும் அப்படித்தான். அவன் சொன்னது போன்று மறுக்கக் காரணம் எதுவும் இல்லைதான். அதற்காக வீட்டினர் சம்மதிக்கத்தான் வேண்டும் என்றும் இல்லையே.
தப்பித்தவறி அவர்கள் மறுத்து, நீங்கள் மறுப்பதில் நியாயம் இல்லை என்று சொல்லிவிட்டு, அவன் சொன்னது போன்று அவர்களை மீறிச் செல்ல அவளால் முடியுமா என்ன? நிச்சயமாக முடியாது!
அதை இவனிடம் சொல்ல முடியாது. சொன்னால் திரும்பவும் சாமியாடுவான். நெஞ்சில் கலக்கம் சூழ்ந்தது.
அவள் மனத்தில் ஓடுவதை அவனாலும் உணர முடிந்தது. அவள் மடியில் கிடந்த கரத்தைப் பற்றி அழுத்திக் கொடுத்து, “கொஞ்சமாவது என்னை நம்பவே மாட்டியா நீ? அந்தளவுக்கு உன்ன மட்டும் தனியாச் சமாளி எண்டு விட்டுடுவன் எண்டு நினைக்கிறியா?” என்றான் தன் ஆழ்ந்த குரலில்.
வேகமாகத் திரும்பி அவனைப் பார்த்தவளுக்கு மூக்குச் சிவந்து, விழிகள் கரிக்கும் உணர்வு.
“அப்பிடி ஒரு பிரச்சினை வந்தா நானும் உன்னோட நிப்பன் அன்பா. எனக்கும் நீ வேணும்.”
தடுக்கவே முடியாமல் அவள் விழிகளில் கண்ணீர் நிறைந்து போனது. கூடவே மலர்ந்த முறுவலோடு, “தேங்க்ஸ்! உண்மையாவே இப்பதான் கொஞ்சம் தெம்பா இருக்கு.” என்றாள் கரகரத்த குரலில்.
சில கணங்களுக்கு அவள் முகத்தையே பார்த்துவிட்டு, “எங்க நான் வாங்கித் தந்த செயின்?” என்றான் அவள் கழுத்துக்குப் பார்வை சென்று வர.
ஹாண்ட் பாக்கினுள் இருந்து எடுத்துக் காட்டினாள் அவள்.
“ஏன் போடேல்ல?”
“உங்கள்ள இருந்த கோவத்திலதான் போடேல்ல.”
“ஆக, நீயும் லேசுப்பட்டவள் இல்ல.”
“பின்ன, காரணமே இல்லாம நீங்க முகத்தைத் திருப்பினா சும்மா விடேலுமா? அந்தக் கழுத்தைப் பிடிச்சுத் திருகோணும் மாதிரியே இருந்தது எனக்கு.” என்றதும் பக்கென்று சிரித்திருந்தான் அவன்.
“சரி தா, நானே போட்டு விடுறன்!”
“உங்களுக்கு என்ன விசரா?” என்றாள் அவள் அதிர்ந்து.
அவள் புறமாகச் சரிந்து, “இனி நீயா போடுறேல்ல! அந்த டைம் முடிஞ்சு போச்சு. அப்பிடியே வச்சிரு. எண்டைக்கா இருந்தாலும் நான் கட்டுற முதல் தாலி இதுதான் உனக்கு!” என்றான் அவன் மெல்லிய குரலில்.
அவளுக்குப் படபடத்துப் போயிற்று. ஆனாலும் விடாமல், “எப்பிடிக் கட்டுவீங்களாம்? அதுதான் வாற கிழமையே கொழும்புக்குப் போயிடுவீங்களே.” என்று சிரித்தாள்.
“அது என்ர பிரச்சினை. எப்பிடிக் கட்டுறன் எண்டு மட்டும் நீ பார்.”
“அபய், ஏதாவது தேவை இல்லாத வேலை பாத்திடாதீங்க. எனக்குப் பிறகு பயத்தில உயிரே போயிடும்.” என்று எச்சரித்தாள்.
ஒரு வழியாக முல்லைத்தீவில் வந்து பஸ் நின்றது. இருவருக்கும் இறங்க மனதேயில்லை. இந்தப் பயணம் வாழ்வில் என்றுமே மறக்க முடியாத, இனிமை நிறைந்த ஒரு அழகான பயணமாக மாறிப்போகும் என்று இருவருமே நினைத்துப் பார்க்கவில்லை.
ஒரே ஆட்டோவிலேயே புறப்பட்டு அவள் வீட்டின் முன்னால் வந்து இறங்கினர். ஆட்டோச் சத்தம் கேட்டு வெளியே வந்த சுபாங்கி, ஒன்றாக இறங்கி வந்த இருவரையும் கண்டுவிட்டு விழிகளை விரித்தாள். நொடியில் மனம் கண்டதையும் யோசித்துவிட இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள்.
அதற்கே பதறிப்போனாள் அன்பினி. “அது அண்ணி, அண்ணாவோட நேற்றே உங்கட தம்பியும் வந்திருப்பார் எண்டுதான் நினைச்சனான். பாத்தா அவரும் பஸ்ஸில இருந்தவர். அதான்…” என்றாள் அவசரமாக.
“ஓ சரி சரி! வா உள்ளுக்கு. நீயும் வாடா, தேத்தண்ணி குடிச்சிட்டுப் போகலாம்.” என்று வேகமாகச் சமாளித்துக்கொண்டாள் சுபாங்கி.
“இல்லை அக்கா. எனக்கு முதல் குளிச்சிட்டு நல்லாப் படுத்து எழும்போணும். இவாவத் தனியா விட வேண்டாம் எண்டுதான் கூட்டிக்கொண்டு வந்தனான். நான் பிறகு வாறன்.” தமக்கையின் எண்ணவோட்டம் புரிந்தாலும் காட்டிக்கொள்ளாமல் வாசலிலேயே விடைபெற்றிருந்தான் அபயன்.
“உங்கட தம்பியும் என்னோட வாறார் எண்டு அண்ணாக்குத் தெரியும் அண்ணி. விடிய அண்ணா மெசேஜ் பண்ணி கேக்கேக்கையே சொல்லிட்டன்.” எப்படியாவது அவளை நம்ப வைத்துவிட வேண்டும் என்று சொன்னாள் அன்பினி.
“ஓ! அவர் சொல்ல மறந்திட்டார் போல. இப்ப என்ன அதுக்கு? போ, போய் முகத்தைக் கழுவிக்கொண்டு வா!”
இருவருமாக வீட்டுக்குள் உள்ளிட்டபோது, குளித்து, உடை மாற்றிக்கொண்டு இருந்த இந்துமதி வெளியே வந்தார்.
மகளைக் கண்டதும் அவர் முகம் மலர்ந்து போயிற்று. அவரின் நல விசாரிப்போடு பேச்சு அப்படியே மாறிப் போனதில் சற்றே ஆசுவாசமானாள் அன்பினி.
காலை உணவை உண்டுகொண்டு இருக்கையில் வீட்டுக்குள் வந்தான் காந்தன்.
“என்னம்மா வந்தாச்சா?”
“ஓம் அண்ணா.” என்றவளுக்குத் தமையனின் பார்வையைச் சந்திக்கவே முடியவில்லை.
“அபயனோடயா வந்தனி?”
“ஓம் அண்ணா. வீடு வரைக்கும் கூட்டிக்கொண்டு வந்து விட்டுட்டுத்தான் போறார்.” சாதாரணம் போன்று சொல்லி முடிப்பதற்குள் வியர்த்துவிடும் போலிருந்தது அவளுக்கு.
“தம்பியும் உங்களோடையா வந்தவர்?” ஆச்சரியமாக வினவிய அன்னைக்கும் அண்ணா அண்ணியிடம் சொன்ன அதே கதையைச் சொல்லிச் சமாளித்தாள்.
“எல்லாம் ஓகேயா?” என்று செய்தி அனுப்பியிருந்தான் அவன்.
“ம்ம்.”
“எப்ப தாலி கட்ட வர?”
‘மனுசர் படுற பாட்டுக்க இவன் தாலி கட்டப்போறானாம்!’ வடிவேலு கத்தியோடு நிற்கும் படம் ஒன்றை அனுப்பிவைத்தாள் அவள்.
‘மாமனுக்கு லவ் மூட் ஸ்டார்ட் ஆகிடுச்சு’ என்கிற நாய் சேகரின் படத்தை அவன் அனுப்பிவிட்டான்.
உதட்டோரச் சிரிப்பை அடக்க முடியாமல் தளிரைத் தூக்கிக்கொண்டு தன் அறைக்கு நடந்தாள் அன்பினி.

