சதிராடும் சித்திரமே 1- 1

அத்தியாயம் – 1

 

மித்ரன் தொழில்முறைப் பயணமாக ஒரு மாதம் அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டு சில நாட்களுக்கு முன்னர் இந்தியா திரும்பியிருந்தான். அவன் ஒரு கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறான். அது அவன் தந்தை, ராம்பிரசாத் தொடங்கியது. அவரது உழைப்பால் அது பிரமாண்டமாக வளர்ந்தது என்றால் மிகையல்ல.

 

இடையில் அவன் தந்தை உடல்நிலை சரியில்லாத பொழுது அந்த நிறுவனம் கடனில் மூழ்க ஆரம்பித்தது. அவன் சித்தப்பா சிறிது பணம் போட்டு உதவினார். தற்சமயம் அந்த நிறுவனத்தை அவன் சித்தப்பாவின் உதவியுடன் நடத்தி வருகிறான் மித்ரன்.

 

உடல்நிலை காரணமாகச் சில மாதங்களாக அவன் சித்தப்பாவினால் முன்பு போல் செயல்பட முடியவில்லை. அவருக்கு பதிலாக அவர் மகன் வினோத்தை அனுப்பி வைக்கச் சொன்னான் மித்ரன். வினோத்தும் தொழில் கற்றுக் கொண்டதைப் போலிருக்கும் என்றே அந்த முடிவை எடுத்தான் மித்ரன்.

 

மித்ரனின் தந்தை இறக்கும் வரையில் அவரை யாராலும் அசைக்க முடியவில்லை. அவரே கட்டடத் துறையில் மிகச் சிறந்த வல்லுநராகத் திகழ்ந்தார். இப்போது அதை முறியடித்திருந்தான் மித்ரன். இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவன் தந்தை மறைந்த பின்னரே மித்ரன் தொழிலில் இறங்கினான்.

 

முன்பு இருந்ததற்கும், கடந்த இரண்டு வருடங்களில் அடைந்த வளர்ச்சிக்கும் மலைக்கும் மடுவுக்கும் இருக்கும் தூரம். காரணம் மித்ரன் என்று யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

 

கட்டுமானத் தொழில் ஒரு பக்கம் செழித்துக் கொண்டிருக்க, அவன் பங்குச் சந்தையில் கை தேர்ந்தவனாக இருந்தான். அவன் கட்டடக் கலையில் இளங்கலைப் படிப்பை முடித்திருந்தாலும் முதுநிலைப் படிப்புக்கு லண்டனில் போய் எம்.பி. ஏ படித்தான்.

 

நிதி சம்மந்தப்பட்ட படிப்பை முடித்ததும் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலையில் இருந்தான். பங்கு சந்தையில் அவன் தொட்டது அனைத்தும் பொன்னானது. இவ்வாறு தொழிலில் வெற்றியடைந்து வருபவனுக்குச் சொந்த வாழ்க்கையில் அடுத்த அடியை எடுத்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் எழவில்லை.

 

அவன் இதுவரையில் எந்தப் பெண்ணையும் மனதுக்கு நெருக்கமாக நினைத்ததில்லை. இவ்வளவு ஏன்? எந்த ஒரு பெண்ணைப் பற்றியும் ஒரு சில விநாடிகளுக்கு மேல் சிந்தித்தது கூட இல்லை. அப்படி அவன் ஒரு பெண்ணைப் பற்றி நினைத்தான் என்றால் அது தொழில் சம்மந்தப்பட்டதாக மட்டுமே இருக்கும்.

 

இப்படி இருப்பவனிடம் சில மாதங்களாக அவன் அன்னையும் சித்தப்பாவும், ‘கல்யாணத்துக்குப் பெண் பார்க்கலாமா?’ எனத் திருமணம் பற்றிய பேச்சை எடுத்திருந்தனர். அவனுக்குப் பின்னர் சித்தப்பா பையன் வினோத்துக்கு திருமணம் செய்ய வேண்டுமாம்.

 

அதற்கும் அவன் திருமணத்துக்கும் என்ன சம்மந்தம் என நீதிமன்றத்தில் வாதாடும் வக்கீலைப் போல் வாதாடிப் பார்த்துவிட்டான். அவன் சித்தப்பா மசிவதாகயில்லை.

 

‘உனக்குக் கல்யாணம் பண்ணாம வினோத்துக்கு செஞ்சா ஊர் தப்பா பேசும்ப்பா. அப்பா இல்லாத உன்னைக் கண்டுக்கலைன்னு சொல்லும். உன் உழைப்பைச் சுரண்டி, உன் பணத்தில் குளிர் காய்கிறோம் என அவதூறாகப் பேசும்’ என எதார்த்தத்தை எடுத்துச் சொன்னார்.

 

இப்படிப்பட்ட பேச்சுக்களை அவர் கேட்க வேண்டும் என்பதா அவன் ஆசை எனக் கண்கள் கலங்கி அவன் வாயை அடைத்துவிட்டார் அவன் சித்தப்பா.

 

அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கும் தன் மகளைப் பார்த்துவிட்டு வருவதற்குள் யோசித்து ஒரு முடிவு சொல்ல வேண்டும் என அன்புக் கட்டளையை விதித்துவிட்டுச் சென்றிருந்தார்.

 

ஆகவே அவன் திருமணத்தைப் பற்றி ஒன்றிரண்டு மாதங்களாக யோசிக்க ஆரம்பித்திருந்தான். தெரியாத யாரையோ திடீரென்று வாழ்க்கைத் துணையாக எப்படி ஏற்றுக் கொள்வது என்ற தீவிர யோசனையில் அவன் மூளை எந்நேரமும் சுழன்று கொண்டிருந்தது.

 

அவனுக்கு நன்கு தெரிந்த யாராவது இருந்தால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று நினைத்தான். அப்படித் தோன்றியதும் அவன் நினைவலைகளில் ரதிப்ரியா வந்து போனாள்.

 

கடந்த எட்டு வருடங்களாக அவளை நன்றாகத் தெரியும். நான்கு வருடங்களாகத் தோழியாகவும் இருக்கிறாள். அவள் அண்ணன், கிஷோர் அவனுக்குத் தொழில் முறையிலும் நண்பன்.

 

ஆரம்பத்திலிருந்தே அவர்களின் நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து பல ப்ராஜக்ட்டுகளை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்திருக்கிறது. முதலில் அப்படி ஏற்பட்ட பழக்கம். இப்போது இளையவர்களும் அதைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

 

மித்ரன் சேர்ந்த அதே லண்டன் பல்கலைக்கழகத்தில் ரதிப்ரியாவும் சேர, அவர்களுக்குள் நட்பு மலர்ந்தது. அது இன்றுவரையிலும் தொடர்கிறது.

 

அதுமட்டுமல்லாமல் ரதிப்ரியாவும் தன் அண்ணனுக்கு உதவியாக அவர்களின் குடும்பத் தொழிலில் ஈடுபட்டிருக்கிறாள். ஆகவே அவனுக்குத் தொழில்முறையிலும் பக்க பலமாக இருப்பாள்.

 

ரதிப்ரியாவை விடப் பொருத்தமான பெண் எங்குத் தேடினாலும் கிடைக்கமாட்டாள் என்று சில நாட்களாக மித்ரனுக்குத் தோன்ற ஆரம்பித்திருந்தது. இதுவரையில் அவளைத் தன் சரி பாதியாக அவன் எண்ணியதில்லை. இனிமேல் எண்ணிப் பார்க்கலாம்.

 

இன்று ரதிப்ரியாவிடம் தன் மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேசிவிட வேண்டும் என்று உத்தேசித்திருந்தான். ஆகவே அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்ததுமே ரதிப்ரியாவை அழைத்துச் சந்திக்க வேண்டும் என்று சொன்னான்.

 

இதோ திட்டமிட்டபடி கடற்கரையின் ஓரமாக இருந்த ஓர் உணவகத்தில் இருவரும் அமர்ந்திருந்தனர்.

 

சிலுசிலுவென்ற கடற்காற்று ரதிப்ரியாவின் மேல் மோதவும் அவளுக்கு மித்ரனின் கையைப் பற்றிக் கொள்ளவேண்டும் போலிருந்தது. அப்படியே கடற்கரை மணலில் கால் புதைய அவனுடன் வாழ்வின் இறுதிவரையில் நடக்கவேண்டும் என்ற ஆவல் எழுந்தது.

 

“மித்ரன், நம்ம ஆர்டர் பண்ணினது வர்றதுக்குக் கொஞ்சம் நேரமாகும். அதுவரைக்கும் இந்த மணல்ல நடந்துட்டு வரலாமா?” எனக் கேட்டாள் ரதிப்ரியா.

 

அவன் மனதில் உள்ளதைப் பற்றிப் பேச அதுவே சரியான தருணம் என்ற எண்ணத்தில் தலையசைத்து எழுந்தான் மித்ரன். அவளுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்த மித்ரன், சற்றுதூரம் சென்றதும், “ரதி…” என அவள் கையைப் பற்றி நிறுத்தினான்.

 

மெதுவாக அமெரிக்காவிலிருந்து வாங்கி வந்திருந்த வைர மோதிரம் அடங்கிய டப்பாவை எடுத்து அவள் முன்னே நீட்டினான். அதைப் பார்த்ததும் ரதிப்ரியாவின் இதயம் தண்டவாளத்தில் ஓடும் ரயில் வண்டியைப் போல் தடதடவென்று தடதடக்க ஆரம்பித்தது.

 

அவளுக்கு மித்ரனைப் படிக்கும் காலத்திலேயே மிகவும் பிடிக்கும். ஒரு தோழியாக அல்லாமல் அதையும் தாண்டி அவனை மிகவும் பிடிக்கும்.

 

ஆனால் எங்கே வாயைத் திறந்து விருப்பத்தைச் சொன்னால் இருக்கும் நட்பும் கெட்டுவிடுமோ என்று எண்ணியே இத்தனை நாளும் அவள் எண்ணத்தை மனதிற்குள் புதைத்து வைத்துக் கொண்டாள். வீட்டில் திருமணப் பேச்சையும் தட்டிக் கழித்துக் கொண்டிருந்தாள்.

 

இப்போது கருநீல வண்ணத்தில் அவள் முன்னே நீட்டப்பட்ட டப்பாவில் இருந்த மோதிரத்தை பார்த்ததும் மனம் மீனாய் துள்ளிக் குதித்தது, “என்ன மித்ரன் இது?” என இயல்பாக இருக்க முயன்றாள்.

 

“உனக்காக வாங்கிட்டு வந்தது. பிடிச்சிருக்கா… ரொம்ப நாளா யோசிச்சுட்டு இருந்தேன்…” எனச் சொல்ல, அவளுக்குள் லட்சம் பட்டாம்பூச்சிகள் ஒருசேர மேலெழுந்ததைப் போல் உணர்ந்தாள்.

 

அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், “ஓஹ்…” எனச் சிலுசிலுவென்று அடித்த காற்றில் பறந்து கொண்டிருந்த அவள் முடியை காதின் ஓரம் ஒதுக்கினாள்.

 

“கையை நீட்டு” என அவனே அவளது இடது கையைப் பற்றி முன்னே கொண்டு வர, அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அவளால் நம்பவே முடியவில்லை. அனைத்தும் கச்சிதமாய் அமைந்து முடிசூடா மன்னனாகத் திகழும் இவனுக்குத் தன்னைப் பிடித்திருக்கிறதா?

 

எந்தப் பெண்ணாக இருந்தாலும் இவனுக்கு கண்டிப்பாக மறுப்பு சொல்லமாட்டாள். ஆனால் வாயைத் திறந்து அவன் வெளியில் எதையும் சொல்லவில்லையே.

 

பெட்டியில் இருந்த மோதிரத்தை எடுத்து வலது கையில் வைத்த மித்ரன், மீண்டும் பெட்டியை பேண்ட் பைக்குள் வைத்துக் கொண்டு ரதிப்ரியாவின் விரலைப் பிடித்து மோதிரத்தை அணிவிக்க முயன்றான்.

 

ஒரு கணம் நிறுத்தி அவள் கண்களை ஊடுருவிப் பார்த்தவன், “ரதி, யோசிச்சுப் பார்த்தேன். இதுவரைக்கும் எந்த…” என அதற்குமேல் அவன் பேசுவதற்கு முன்னர் தடாலென்று யாரோ ஒருவர் அவன் மேலே வந்து மோதினார்கள்.

 

திடீரென்று மோதிய அதிர்வில் கையிலிருந்த மோதிரம் நழுவி கீழே விழுந்தது. அத்தோடு, ‘எந்தப் பெண்ணையும் பெருசா எனக்குப் பிடிச்சதில்லை. உன்னை ரொம்ப நாளா தெரியும். நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சுக்கலாமா?’ என்ற வார்த்தைகளும் அந்த மோதிரத்துடன் நழுவி கீழே விழுந்தன.

 

எதிராளி வந்து மோதிய வேகத்தில் தான் கீழே விழுந்து விடாமல் இருக்க அனிச்சைச் செயலாக மோதியவரை முதுகோடு அணைத்துத் தாங்கி பிடித்து இருந்தான் மித்ரன். அனைத்தும் மின்னல் வேகத்தில் நிகழ்ந்து முடிந்திருந்தது.

 

மித்ரனின் இதயம் என்றுமில்லாமல் திருவிழா சமயத்தில் கேட்கும் டமாரம் போல் ‘டம் டம்’ என்று கொட்டி ஒலி எழுப்பியது. ஏன்? பெண்களையே பார்த்ததில்லையா? சில கணங்களில் சுயஉணர்வு பெற்றவன் உடனே படபடப்பை மறைத்துக் கொண்டான்.

 

பார்வையைத் தாழ்த்தி அணைத்திருந்த பெண்ணைப் பார்த்தான். கருகருவென்று இருந்த வளைந்து நெளிந்த அவளின் தலைமுடி மட்டுமே தெரிந்தது. ஏனெனில் அவள் பின்னால் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

அவளிடமிருந்து வந்த கலவையான வாசனை அவன் சுவாசத்தினுள் நுழைந்து அவன் யோசனையை வசமிழக்க வைத்தது. மல்லிகைப் பூவா, அல்லது, சந்தனமா, இல்லை, குங்குமமா, அல்லது அவள் அணிந்திருந்த மிதமான வாசனைத் திரவியத்தின் நறுமணமா, எது அவனை இப்படிக் கட்டி இழுக்கிறது எனப் பட்டிமன்றம் நடத்தாத குறையாக அவன் மனம் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தது.

 

ஏனோ அக்கணம் ஆழ்ந்து மூச்செடுக்காவிட்டால் அவன் உயிரின் கயிறு அறுந்துவிடுமோ என்று அஞ்சினான். உடனே ஆழ மூச்செடுத்து அவள் வாசத்தை நுரையீரல் பொங்கி வழியும் அளவுக்கு நிரப்பிக் கொண்டான். இதயப்பரப்பில் புதுவித இனிமை சூழ்ந்துகொண்டது.

 

“ஏய்..” என்ற ரதிப்ரியாவின் திடீரென்று கிரீச்சிட்ட குரலில் மித்ரனின் மாயவலை அறுந்து போனது. உடனே இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டான். அப்போது தான் இன்னுமே மோதியவளை அணைத்துப் பிடித்துக் கொண்டிருப்பதையும் உணர்ந்தான்.

 

சட்டென்று மித்ரனுக்குக் கடுங்கோபம் உச்சந்தலைக்கு ஏறியது. இதுவரையில் அவன் இப்படித் தன்னிலை மறந்து தன்னையே மறந்து போய் நின்றதில்லை. அதுவும் ஒரு பெண்ணிடத்தில்.

 

“வாட் த ஹெல்….?” என அணைத்துப் பிடித்திருந்த பெண்ணை தோள் பற்றி ஒரே தள்ளாகத் தள்ளிவிட்டான்.

 

நான்கைந்து அடிகள் பின்னால் தள்ளிப் போய் நின்றவள், “சாரி… சாரி சார் தெரியாம வந்து மோதிட்டேன்” எனப் பின்னால் திரும்பிப் பார்த்துக் கொண்டே சற்று சுதாரித்துக் கொண்டாள்.

 

மேற்கொண்டு அவள் விளக்கம் சொல்லுவதற்கு முன்னரே அருகில் நின்றிருந்த ரதிப்ரியா விடுவிடுவென்று அவளருகில் சென்று ஆத்திரத்தில் அப்பெண்ணின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தாள்.

 

“அறிவிருக்கா உனக்கு? உன்னால வைர மோதிரம் காணாமப் போயிடுச்சு. வாங்கிக் கொடுக்க உனக்குத் துப்பு இருக்கா?” எனச் சினம் தலைக்கேற ரதிப்ரியா அடிவயிற்றில் இருந்து அலறினாள்.

error: Alert: Content selection is disabled!!