சதிராடும் சித்திரமே 10 – 1

அத்தியாயம் – 10

 

மறுநாள் காலையில் வெகுவிரைவிலேயே சந்தோஷ் மருத்துவமனைக்கு வந்து சசிதரனை வீட்டிற்கு அனுப்பி வைத்தான். அவன் திவ்யதர்ஷினிக்கு ஒத்தாசையாக இருப்பதாகச் சொல்லி அவனைக் கிளம்பி கல்லூரிக்குப் போகச் சொன்னான்.

 

மருந்து மற்றும் ட்ரிப்ஸ் தந்த தெம்பில் திவ்யதர்ஷினி ஓரளவுக்குத் தேறிவிட்டாள். சசிதரனை பேசி அனுப்பி வைத்தாள்.

 

பின்னர் சந்தோஷைப் பார்த்து, “என்ன ரொம்ப பயமுறுத்திட்டேனா?” எனப் புன்னகையுடன் திவ்யதர்ஷினி வினவ,

 

“நீ ரொம்ப வீக்கா இருக்கேன்னு டாக்டர் சொன்னாரு. கொஞ்சமாவது உனக்கு உடம்பு பத்தின அக்கறை இருக்கா?” எனக் கோபமாகக் கேட்டான் சந்தோஷ்.

 

“அப்பாவும் சசியும் ரொம்ப பயந்துட்டாங்களா?” என அவள் கலக்கத்துடன் கேட்க, “இப்போ வந்து எல்லாத்தையும் கேளு. உன்னை வெளில அனுப்பவே பயமா இருக்கு இப்போ” என மேலும் கடிந்து கொண்டான்.

 

“என்ன சந்தோஷ், இப்படிக் கோபப்படற? எப்பவுமே இருட்டுன்னா எனக்குப் பயமா இருக்கும்னு உனக்குத் தெரியுமில்ல. நான் லிஃப்ட்குள்ள இருந்தப்போ கரண்ட்டு திடீர்னு போயிடுச்சு. நான் என்ன பண்ணுவேன்?” எனப் பரிதாபமாகக் கேட்க அவன் உருகிவிட்டான்.

 

“திடீர்னு போகலை. ஏற்கனவே அந்த லிஃப்ட் சரியா வேலை செய்யலைன்னு அவங்களுக்குத் தெரிஞ்சிருக்கு. எல்லாம் மெத்தனம்” என வார்த்தைகளின் அழுத்தத்தில் கோபத்தைக் காட்டினான்.

 

“அப்படியா?” என யோசனையில் ஆழ்ந்தாள். அந்த மித்ரன் மேல் ஏனோ மெல்ல வெறுப்புப் படர ஆரம்பித்தது அவளுக்கு. பார்க்கும் ஒவ்வொரு முறையும் அவளுக்கு ஏதாவது ஒரு வலியை ஏற்படுத்தி விடுகிறான்.

 

முதல்முறை அவமானப்படுத்தினான். இரண்டாம் முறை அவளைக் கீழே தள்ளிக் காயம் உண்டாக்கினான். மூன்றாம் முறை அவள் பணத்தைப் பிடுங்கி நஷ்டத்தை ஏற்படுத்தினான். இதோ நான்காவது முறை அவளையே காலி செய்யப் பார்த்திருக்கிறான். இராட்சசன்!!

 

“ஆமா, நீ முதல்ல ஏன் அந்த லிப்ட்டுக்குள்ள போன?” என சந்தோஷ் அதிமுக்கியமான கேள்வியைக் கேட்க, அவள் நடந்ததைச் சுருக்கமாக மித்ரன் யாரென்பதைத் தவிர்த்துச் சொன்னாள். மித்ரனே ஒவ்வொரு முறையும் அவளைத் துன்பத்தில் சிக்கி வைக்கிறான் எனச் சொல்லவேயில்லை.

 

சும்மாவே ஆடுவான் சந்தோஷ். இதில் சலங்கையை வேறு கட்டிவிட்டால் விடுவானா என்ன? அந்த மித்ரனை ஏதாவது செய்வேன் எனத் தைய தக்க என்று குதிக்க ஆரம்பித்துவிடுவான்.

 

“விடு சந்தோஷ். இனிமேல் அந்த ராட்சசன் கண்ணுல படவாப் போறேன், இல்லை, அவனைத் தேடி நான் போகவாப் போறேன். பார்க்கறப்ப எல்லாம் ஏதோ ஒன்னு இழுத்து வச்சிகிட்டே இருக்கிறான்” எனத் தன் யோசனையில் அவள் பாட்டுக்குப் பேசிக் கொண்டே சென்றாள்.

 

அவள் பேசி முடித்த பிறகும் அறையில் மௌனம் வெகுநேரமாய் நீடித்தது. திவ்யதர்ஷினி சந்தோஷை ஏறிட்டுப் பார்த்தாள். அவன் அவளையே வைத்த விழி மாறாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அப்பொழுதுதான் அவள் உளறிவிட்டதைப் புரிந்து கொண்டாள்.

 

“சந்தோஷ் எனக்கு ரொம்பப் பசிக்குது. ஏதாவது சாப்பிடக் கொடேன்” என அவள் பேச்சை மாற்ற முயல, “யாரவன்? என்ன நடந்துச்சு தர்ஷி?” எனத் தீவிரமான குரலில் கேட்டான் சந்தோஷ்.

 

இதற்கு மேல் அவளால் மறைக்க முடியவில்லை. ஆரம்பத்தில் இருந்து நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தாள்.

 

“அப்போவே சொல்லியிருந்தா அவனை அங்கேயே ஓங்கி ஒரு அறை விட்டிருப்பேன்” என ஆவேசத்துடன் சந்தோஷ் பேச,

 

“இதுக்குத் தான்.. இப்படிக் கோபப்பட்டு எதையும் சாதிக்க முடியாது. அதான் உன்கிட்டே சொல்லவே இல்லை. துஷ்டனைக் கண்டால் தூர விலகுன்னு சொல்வாங்களே. அதுபோல் இனி நான் விலகிப் போக நினைக்கிறேன். நீயும் அப்படியே இரு” என உறுதியாகக் கூறினாள்.

 

அப்போது அறையின் வாயிலில் நிழலாட இருவரும் திரும்பிப் பார்த்தனர். ஆழ்ந்த பார்வையுடன் மித்ரன் திவ்யதர்ஷினியை நோக்கியவாறு நின்று கொண்டிருந்தான்.

 

சந்தோஷ் புருவம் சுருக்கி, ‘இவனை எங்கோ பார்த்தது போலிருக்கிறதே. யாரிவன்?’ என்பதைப் போல் பார்க்க, திவ்யதர்ஷினி அதிர்ந்து போன விழிகளால் அவனை அளவிட்டுக் கொண்டிருந்தாள்.

 

மெதுவாக அறையினுள் நுழைந்த மித்ரன் படுக்கையிலிருந்த திவ்யதர்ஷினியின் அருகில் சென்று, “சாரி திவ்யா… இப்படி ஆகும்னு நான் நினைக்கலை. லிப்ட் வேலை செய்யாம இருந்ததைக் கவனிக்காம விட்டுட்டோம். ரியலி சாரி. இப்போ எப்படி இருக்க?” என மன்னிப்பு கேட்டுவிட்டு அவள் நலன் பற்றி அக்கறையுடன் விசாரித்தான்.

 

அதைக் கேட்ட சந்தோஷூக்கு, ‘இவனா அந்த நிறுவனத்தின் மன்மதன்?’ என எரிச்சல் சுரந்தது. எல்லாம் சரி. வந்தான். தவறு அவன் பேரில் இருக்கிறது என்று மன்னிப்பும் கேட்டான். அவள் நலன் பற்றி அக்கறையுடன் விசாரித்தும் விட்டான்.

 

ஆனால் என்னவோ பல நாட்கள் பழகி, அவளுக்கு நெருக்கமானவன் போல் அது என்ன உரிமையுடன் ஒருமையில் பேசுகிறான் என சந்தோஷூக்குப் பற்றிக் கொண்டு வந்தது.

 

ஆனால் அவனோ சந்தோஷ் என்றொருவன் அங்கே இருப்பதைக் கூட காட்டிக் கொள்ளவில்லை. திவ்யதர்ஷினியையே ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அவன் கோபம் தலைக்கேற, விடுவிடுவென்று சென்று மித்ரனின் சட்டையைப் பற்றிவிட்டான். அதைச் சற்றும் எதிர்பார்க்காத மித்ரனுக்கு ஒவ்வொரு முறையும் இவனிடம் தோற்றுக் கொண்டிருக்கிறோம் என்ற கடுஞ்சினம் கிளர்ந்தது.

 

சட்டையைப் பற்றியிருந்தவனின் கையை இரும்புக் கரங்களால் பிடித்துக் கொண்டான். சற்றுநேரம் இருவரும் போராட, “சந்தோஷ் அவரை விடு. ஹாஸ்பிடல்ல ஏன் இப்படி நடந்துக்கிற?” என அவனை அதட்டல் போட்டாள் திவ்யதர்ஷினி.

 

“அதில்லை தர்ஷி.. இவன்..” என மேற்கொண்டு பேசும் முன்னர், “இப்போ விடப் போறியா, இல்லையா?” என உரிமையுடன் கேட்டாள்.

 

அதற்குமேல் சந்தோஷ் அவனிடம் மல்லுக்கு நிற்கவில்லை. பட்டென்று கையை உதறிவிட்டு நகர்ந்து போய் நின்று கொண்டான். மித்ரனின் ஆழ்நெஞ்சைத் துளைத்தெடுக்கும் பார்வை திவ்யதர்ஷினியைத் தாண்டி வேறெங்கும் போகவில்லை. ‘எவ்வளவு உரிமையுடன் அவனை அதட்டுகிறாள்? தன்னிடம் மட்டும் கடுஞ்சினத்துடன் சீறுகிறாள்’

 

“எப்படி இருக்க திவ்யா?” என மித்ரன் ஆழ்ந்த குரலில் கேட்டு அவளை ஊடுருவ, அவனை முறைத்தவாறே நின்று கொண்டிருந்த சந்தோஷூக்கு மித்ரனின் ஊடுருவும் பார்வையில் ஏதோ செய்தி இருப்பதாகப் பட்டது.

 

சற்றுநேரம் கூர்ந்து கவனித்த சந்தோஷ், ‘ஒருவேளை சினிமாவில் வருவதைப் போல் பரிதாபத்தில் இவனுக்கு அவள் மேல் காதல் வந்துவிட்டதோ?’ என எண்ணினான்.

 

படுக்கையில் அமர்ந்திருந்தவளைப் பார்க்க, அவளோ தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். அதாவது மித்ரனை உதாசீனப்படுத்தினாள்.

 

‘அப்பாடா’ என சந்தோஷூக்கு இமயமலையின் உச்சியைத் தொட்டதைப் போல் நிம்மதியாக இருந்தது.

 

“ஏன், நல்லா இருந்தா மறுபடியும் அந்த லிப்ட்குள்ள தள்ளி கதவைச் சாத்தி, அவளைக் குளோஸ் பண்ணலாம்னு பார்க்கறீங்களா?” எனக் கோபமாக கேட்டவாறே மீண்டும் அவனருகில் சென்றான் சந்தோஷ்.

 

தெரியாமல் நடந்த தவறுக்கு இவன் ஏன் ஆத்து மீனைப் போல் இந்தத் துள்ளு துள்ளுகிறான்? எதுவும் நடக்காததைப் போல் சந்தோஷை ஏறிட்டுப் நோக்கினான்.

 

“முதல் தடவை கடல்ல தள்ளிவிட்டீங்க. ரெண்டாவது தடவை கீழே தள்ளிவிட்டீங்க. அப்புறம் அவளோட பணத்தையும் பிடுங்கிட்டீங்க. இப்ப என்ன ஆளையும் க்ளோஸ் பண்ண திட்டம் போட்டுட்டு இருக்கீங்களா? அப்படி அவ உங்களுக்கு என்ன பண்ணிட்டா?” எனப் படபடவென்று சந்தோஷ் பொரிந்து தள்ளினான்.

 

‘நடந்த அனைத்தையும் இவனிடம் ஒப்பித்திருக்கிறாள் என்றால் இவன் அவளுக்கு எத்தனை முக்கியமானவன்’ மித்ரனின் மனம் எரிச்சலில் காந்தியது. அவன் பேசவே இல்லை என்பதைப் போல் பாவித்து மீண்டும் திவ்யதர்ஷினியை நோக்கித் திரும்பினான் மித்ரன்.

 

“உங்க காதலி முன்னாடி உங்க ஹீரோயிசத்தைக் காட்ட எங்க வீட்டுப் பொண்ணு தான் கிடைச்சாளா?” என சந்தோஷ் விடாமல் பொரிந்து தள்ள, மித்ரனின் நடு நெஞ்சில் கடப்பாரையை வைத்து இறக்கியதைப் போல் சுரீரென்று வலித்தது.

 

ரதிப்ரியாவைத் தன் காதலி என்றா நினைத்துக் கொண்டிருக்கிறாள் இவள் என இதயம் சில்லுச் சில்லாய் உடைந்து நொறுங்கியது. அவனுக்கு அந்த எண்ணம் எப்போதும் இருந்தது இல்லையே.

 

‘ஆரம்பத்தில் நீயே அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்தாயே. அன்றைக்குக் கடற்கரையில் அவளுக்கு மோதிரத்தைப் போட்டுவிட்டு அவளைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டிருந்தால் அவள் இன்று உனக்குக் காதலி ஆகியிருப்பாளே.

 

எதிரில் இருப்பவள் அல்லவா வந்து தடுத்தாள்? ஆனால் நீ அவளை எதிரியாக அல்லவா பாவித்தாய்’ என அவன் மனம் அவனைக் குத்திக் கிழித்தது.

 

திவ்யதர்ஷினி அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவன் ரதிப்ரியாவுக்கு அல்லவா முக்கியத்துவம் கொடுத்திருந்தான். கண்ணும் கருத்துமாகக் கவனித்தும் கொண்டான். உரிமையுடன் அவளிடம் பேசவும் செய்தான். அப்படியிருக்கையில் ரதிப்ரியா அவன் காதலி என்று எண்ணாமல் என்ன செய்வாள்.

 

அவள் அப்படி எண்ணுவது மித்ரனுக்குச் சற்றும் பிடிக்கவில்லை. மூச்சு முட்டுவதைப் போலிருந்தது. மற்றதையெல்லாம் விட்டுவிட்டு, “ரதியை நான் காதலிக்கலை. அவ ஒரு நல்ல ஃப்ரெண்ட்” என்று பட்டென்று சொன்னான் மித்ரன்.

 

அப்படிச் சொன்ன அடுத்த நிமிடம் அடைத்து வைத்திருந்த வலியனைத்தும் மதகிலிருந்து திறந்துவிட்ட வெள்ளம் போல் அவன் நெஞ்சைவிட்டுப் பாய்ந்தோடியது.

 

‘இப்போ இது ரொம்ப முக்கியம்’ என்பதைப் போல் சந்தோஷ் மனதுக்குள் நொடித்துக் கொண்டான்.

 

“எங்க நிறுவனத்தோட அஜாக்கிரதையினால் உனக்கு இப்படி நடந்துருச்சு. அதனால உன் மருத்துவமனைச் செலவையெல்லாம் எங்க நிறுவனமே பார்த்துக்கும்” என்றான் மித்ரன்.

 

அவளின் மருத்துவமனை செலவுக்காகப் பணம் தருகிறேன் என்ற போர்வையிலே திவ்யதர்ஷினியை அந்நேரத்திற்கு அங்கே பார்க்க வந்திருந்தான் மித்ரன். ஆனால் அங்கே சத்தியமாக அவன் சந்தோஷை எதிர்பார்க்கவில்லை.

 

அப்படியென்றால் இவனா இரவெல்லாம் கண்விழித்துப் அவளைப் பார்த்துக் கொண்டான். இவனுக்கு அத்தனை உரிமையா என்ன? சிறு குழந்தையாய்ப் பொறாமை கொண்டான்.

error: Alert: Content selection is disabled!!