அத்தியாயம் – 11
எதிர்பார்த்தது என்றாலும் இத்தனை விரைவாகச் செயல்படுவார்கள் என்று அவள் நினைத்திருக்கவில்லை. இத்தனை நடந்த பின்னும் அவளை அங்கேயே வேலையில் வைத்திருப்பார்களா என்ன? இருந்தாலும் மனம் வலித்தது.
இத்தனை வருடங்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் உழைத்தது சற்றும் பிரியோஜனப் படவில்லையா?
அவள் பொறுப்பில் இருந்த ஒரு கட்டத்தில் அவள் ஏதோ குளறுபடி செய்துவிட்டதாகவும் அதை மீண்டும் இடித்துக் கட்ட வேண்டும் என்றும் அதனால் நிறுவனத்திற்குப் பல லட்சங்கள் இழப்பு என்றும் காரணத்தைக் குறிப்பிட்டு அவளை வேலையிலிருந்து நீக்கிவிட்டதாகத் தகவல் வந்திருந்தது.
இது முற்றிலும் பொய் என்று சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெரியும். அனைத்துமே ஜோடித்து அவள் மேல் அபாண்டமாகக் குற்றம் சுமத்தி வேலையிலிருந்து தூக்கச் செய்திருக்கிறார்கள். யார் இதைச் செய்திருப்பார்கள் என்றெல்லாம் யோசிப்பதற்குப் பெரிதாக மூளை தேவையாயிருக்கவில்லை.
பின்னே நிறுவனத்து முதலாளியின் மகன் மேல் வழக்குப் பதிவு செய்வதற்குத் தூண்டுகோலாக இருந்தால் பார்த்துக் கொண்டு அமைதியாகப் போய் விடுவார்களா என்ன? யாரோ ஒருவன் செய்த தப்பை மறைக்க இவள் பலிகடா ஆகிவிட்டாள்.
அதைவிடக் கொடுமை என்னவென்றால் யாருக்காக இத்தனையும் செய்தாளோ அந்தப் பவித்ரா தான் அவளை வேலையிலிருந்து தூக்கியிருக்கிறாள். அவளுக்குப் பதவி உயர்வு தந்து அவளை வைத்தே திவ்யதர்ஷினியைப் பணி நீக்கம் செய்திருக்கிறார்கள்.
முள்ளை முள்ளால் எடுக்கிறார்களாம். பவித்ராவின் கையொப்பம் அவளைப் பார்த்துச் சிரித்தது.
அதைக் கேள்விப்பட்ட சந்தோஷ், “விடு தர்ஷி. இந்த வேலை மட்டுமே உலகத்தில இருக்கிற மாதிரி” என அவளுக்கு ஆறுதல் அளித்துவிட்டு,
“உன் முதலாளியோட பையன் குடிச்சுட்டு வண்டி ஓட்டி விபத்து ஏற்பட்டப்போ அதை மூடி மறைச்சு அவனை மீட்டது அவனோட அப்பான்னு நான் ஏற்கனவே சொன்னேனே தர்ஷி. நீ அதை நம்பலை. இனியாவது புரிஞ்சு நடந்துக்கோ. எல்லாம் வேஷம் போடறாங்க” என்றான்.
விஷயம் அறிந்ததும் அவள் தன் தோழிக்கு அழைக்க அவளோ இவளின் எண்ணை முற்றிலும் தடை செய்திருந்தாள். எல்லாவற்றையும் விட அதுவே மிகவும் வேதனை தரக்கூடிய விஷயமாக அவளுக்கு இருந்தது.
தோழிக்கு ஒன்று என்றதும் இவளே முதல் ஆளாகப் போய் அவளுக்குப் பக்கபலமாக இருந்தாள். உடனிருந்து தைரியமளித்து இத்தனை தூரம் அழைத்து வந்திருந்தாள். ஆனால் அவளும் பணத்துக்கு விலை போய்விட்டாள். அத்தோடு தன்னையும் ஏமாற்றிவிட்டாள். வாழ்க்கையில் இது ஒரு நல்ல பாடம்.
சந்தோஷ் சொன்னதைப் போல் பலரும் இரண்டு முகங்களுடனே அலைகிறார்கள். அவள் வேலை செய்யும் கட்டட நிறுவனத்தின் முதலாளியின் கோட்பாடுகள் அவளுக்குப் பிடித்திருந்ததால் தான் அந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தாள். இல்லையெனில் பெரிய நிறுவனத்தில் சேர்ந்திருப்பாளே.
ஆனால் அவர்கள் சொந்த வாழ்க்கையில் அதையெல்லாம் கடைப்பிடிப்பதில்லை என்பது நன்றாகவே புரிந்தது. தன் மகனுக்கு ஒன்று என்றதும் குடித்துவிட்டு வண்டி ஓட்டி விபத்தை ஏற்படுத்திய மகனின் தவறைப் பணத்தை கொண்டு மூடி மறைத்தார்.
இப்போது ஒரு பெண்ணிடம் அவன் தவறாக நடந்து கொண்டதை மூடி மறைக்க அப்பெண்ணையே தங்கள் வலைக்குள் சிக்க வைத்துக் கொண்டார். அவளைத் தன் வீட்டு மருமகளாக ஏற்றுக்கொள்ளவும் அவளது தோழியும் நடந்ததை எல்லாம் மறந்துவிட்டு அப்படியே கிளம்பிவிட்டாள்.
திருமணம் நடந்தால் தான் நிஜம் என்று நம்ப முடியும். இதில் இவள் தான் பைத்தியக்காரியாகிப் போனாள். இதே யோசனையில் அவள் தன்னறைக்குள் அமர்ந்திருக்க, புதிய எண்ணிலிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது. அதை எடுத்துப் பேசினாள்.
“எப்படி இருக்க? டிஸ்சார்ஜ் ஆகிப் போயிட்டதா ஹாஸ்பிடல்ல சொன்னாங்க” என்ற ஆழ்ந்த குரல் செவிக்குள் நுழைய தூக்கிவாரிப் போட எழுந்து அமர்ந்தாள்.
‘அவனா? இருக்காதே. சரியான பந்தா பேர்வழி ஆச்சே. வலிய வந்து பேசுவானா என்ன?’ என மனதுக்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டவாறே, “யாருங்க?” எனத் தெரியாததைப் போல் கேட்டாள்.
அதைக் கேட்ட மறுமுனையிலிருந்த மித்ரனுக்குச் சப்பென்று ஆகிப் போனது. அன்று முழுவதும் அவளை அழைக்கலாமா வேண்டாமா என நிறைய யோசித்ததில் அவன் வேலைகள் மொத்தமும் தடைபட்டன.
அவன் உதவியாளர் கூட, அவனுக்கு உடல்நிலை சரியில்லையா எனப் பலமுறை கேட்டுவிட்டான். அத்தனை கவனச்சிதறல் அவனிடம் இன்று. அதுவும் முதல் முறையாக வேறு பார்க்கிறான்.
இதுவே நாளையும் தொடரும் என மித்ரனே பயந்து போனான். அதனால் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவளை அழைத்தான். இல்லையென்றால் அன்றிரவும் அவனுக்குத் தூக்கம் அண்டியிருக்காது.
மருத்துவமனையில் அவள் எண்ணை வாங்கியிருந்தான். இல்லை, எப்படியும் விசாரித்துக் கண்டுபிடித்திருப்பான். அவள் குதித்துக் கொண்டு அவனிடம் பேசப் போவதில்லை என்று தெரியும். ஆனால் அதற்காக யாரென்றே தெரியவில்லை என்ற அவளது பதிலையும் அவன் எதிர்பார்க்கவில்லை.
ஒருவித எதிர்பார்ப்புடன் அழைத்தவனுக்கு மிதமிஞ்சிய ஏமாற்றமே கிட்டியது.
“மித்ரன் பேசறேன்” என அவன் தன் ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு சொல்ல, “ஓஹ்” என அவளுக்கு அதற்கு மேல் என்ன சொல்வது எனத் தெரியவில்லை.
‘நல்லவேளையாக எந்த மித்ரன் என்று அவள் கேட்கவில்லை’ என ஆசுவாசப்பட்டுக் கொண்டான்.
“எப்படி இருக்க திவ்யா? ஒன்னும் பிரச்சனை இல்லையே” என அவன் குழைவான குரலில் கேட்க, தான் கனவு காண்கிறாளோ என அவள் தன்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்டாள். பின்னே குழைவான குரலில் பேசியது ஒருபுறம் என்றால் தன்னை திவ்யா என்று வேறு அழைக்கிறானே.
மீண்டும், “திவ்யா” என மித்ரன் அழைக்க, மெள்ள அதிர்ச்சியிலிருந்து வெளிவந்தாள்.
“ஒன்னும் பிரச்சனை இல்லைங்க சார். நல்லாயிருக்கேன். லிப்ட்டுக்குள்ள அடைச்சு வச்ச மாதிரி இருந்ததால மயங்கிட்டேன். வேற ஒன்னும் இல்லையே” என அழைப்பை வைப்பதில் குறியாக இருந்தாள்.
பின்னே அதுவரையில் அவளிடம் சண்டைக் கோழியாய்ச் சிலிர்த்துக் கொண்டிருந்தவன் திடீரென்று சமாதானப் புறாவாக மாறி சமரசத்திற்கு வந்து அவளைச் சோழியாய்ச் சுழற்றிப் போட்டால் அவள் என்ன செய்வாள்?
மித்ரனுக்கு ஏனோ அவளின் இந்த அமைதியான பேச்சு சற்றும் பிடிக்கவில்லை. எண்ணையில் போடும் கடுகைப் போல் படபடவென்று பொரியும் அவனின் திவ்யதர்ஷினியையே மனம் நாடியது.
‘ஏதாவது திட்டேன்’ என அவன் மனம் முணுமுணுத்துக் கொண்டது. அவன் மனதில் நினைப்பதை அவளால் புரிந்து கொள்ள முடியாததால், “சரிங்க சார் நான் வச்சிடறேன்” என அழைப்பை அவள் வைத்து விட்டாள்.
‘வைத்தே விட்டாளா?’ என மித்ரனுக்கு எரிச்சல் வந்தது. அழைத்தவன் பேசி முடித்து வைக்கும் வரையில் காத்திருக்க வேண்டும் என்ற நாகரீகம் கூட அவளுக்குத் தெரியாதா? துண்டித்தாலும் பரவாயில்லை என்று மீண்டும் அவளை அழைத்தான்.
மீண்டும் ஏன் அழைக்கிறான் என எண்ணியவாறே எடுத்து, “ஹலோ” என்றாள் திவ்யதர்ஷினி.
“உன் தம்பி விஷயமா பேசலாம்னு நினைச்சேன்” அப்போதாவது அவள் மசிவாள் என நினைத்தே அவன் பேச்சை எடுத்தான்.
“நீங்க அவனுக்கு ஸ்பான்சர்ஷிப் கொடுக்கிறதா அவங்கிட்ட சொன்னதை சசி சொன்னான். அவன் மறுத்துட்டானே. அப்புறம் அதற்கு மேல் அதைப் பத்திப் பேசறதுக்கு என்ன இருக்கு?” என அவனையே கேள்வி கேட்டாள்.
“இந்த ஸ்பான்சர்ஷிப்பை ஏத்துக்கிட்டா தான் உண்மையிலேயே நீ என்னை மன்னிச்சிட்டதா அர்த்தம்” பட்டென்று கிடுக்குப்பிடி போட்டான்.
‘பின்னறடா மித்ரன்’ என மனதிற்குள் தன்னையே மெச்சிக் கொண்டான்.
“நடந்தது ஒரு விபத்து. அதைக் கெட்ட கனவா நினைச்சு எல்லோரும் மறந்திடலாம். ஆனா ஸ்பான்சர்ஷிப்பை ஏத்துக்கிறதும் ஏத்துக்காததும் சசிதரனோட விருப்பம். அதில் நான் தலையிட முடியாது” என நிதானமாகச் சொல்லி கிடுக்குப்பிடியை பீஸ் பீஸாகப் பிய்த்துப் போட்டாள் திவ்யதர்ஷினி.
அதற்குமேல் என்ன சொல்லி அவளைத் தன் வழிக்கு கொண்டு வருவது என்று மித்ரனுக்குத் தெரியவில்லை.
“உன் விருப்பம்” என அழைப்பை வைத்துவிட்டான். சற்று ஏமாற்றத்துடன் தான்!
*****
வேலை போனதைப் பற்றி மெல்ல தன் தந்தையிடம் சொல்ல அவர் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஏனெனில் அவருக்குமே மகள் இப்படி நீதி, நியாயம், நேர்மை என்று அனைவருக்காகவும் பரிந்து கொண்டு போராடுவதைப் பார்க்கப் பயமாகவே இருந்தது.
என்ன தான் தைரியமானவளாக வளர்த்திருந்தாலும் மகள் என்ற பாசம் இருக்குமல்லவா? அதுவுமில்லாமல் அவள் பொறியியல் படிப்பில் சேர்கையில் கட்டடக்கலை (பி. ஆர்க்) பிரிவு வேண்டும் என்றதும் முதல் ஆளாக எதிர்த்தார்.
அவர் படிப்பு விஷயத்தில் இதுவரையில் தலையிட்டதில்லை என்பதால் அதைக் கேட்டதும் அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. வெயிலில் சிரமப்பட வேண்டும், அது இது என ஏதேதோ காரணம் சொன்னார். இறுதியில் மகளின் பிடிவாதத்திற்கு முன்னால் அவர் காரணங்கள் அனைத்தும் காலாவதியாகிவிட்டன.
சில நாட்கள் ஓய்வு எடுத்துக் கொண்ட பிறகு வேறு வேலையைத் தேடுமாறு சொன்னார் முரளிதரன். அவளுக்கோ வீட்டில் சும்மா அமர்ந்து கொண்டிருக்கப் பிடிக்கவில்லை.
அவர்களின் வாழ்க்கைச் சக்கரம் தங்குதடையில்லாமல் சுழல அவளது சம்பளம் கண்டிப்பாகத் தேவை. சேமிப்பு இருக்கிறது என்றாலும் குந்தித் தின்றால் குன்றும் குறையும். விரைவில் கரைந்துவிடும். அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என யோசித்தாள்.
அதுமட்டுமல்லாமல் அவளுக்கு நீண்ட நாட்களாக தானே ஒரு கட்டட நிறுவனத்தை நிறுவி அதைக் கையாள வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. என்ன அதற்கு பணமும் அனுபவமும் நிறைய வேண்டும்.
அதனாலேயே இத்தனை நாட்கள் எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்தாள். இப்போதும் அவளிடம் அதிகப் பணம் இல்லை. ஆனால் முன்பிருந்த தயக்கமும் பயமும் இல்லை. கூடுதலாக அனுபவமும் சேர்ந்திருக்கிறது.
அவள் தாய் விட்டுச் சென்ற நகைகள் ஏராளமாக இருந்தன. ஆனால் அதை ஒரு போதும் தந்தை விற்க சம்மதித்ததில்லை. அது முழுவதுமே அவளுக்கு மட்டும் சொந்தம் என்று கூறிவிட்டார். அதில் சசிதரனுக்குக் கூட பங்கில்லை என்று சொல்லியிருந்தார்.

