சதிராடும் சித்திரமே 13 – 1

அத்தியாயம் – 13

 

மறுநாள் அவள் சமையலறையில் அரக்கப் பறக்க காலை உணவையும் மதிய உணவையும் செய்து கொண்டிருக்க சசிதரன், “அக்கா… அக்கா…” என்று சமையல் அறைக்குள் ஓடி வந்தான்.

 

அவள் எப்போதும் காலை, மதிய உணவைப் பார்த்துக் கொள்வாள். இரவு அவள் தந்தை முடிந்தவரையில் செய்து முடித்துவிடுவார், இதில் சந்தோஷின் அன்னை வேறு அவ்வப் பொழுது அதைச் செய்தேன் இதைச் செய்தேன் என எதையாவது தூக்கிக் கொண்டு வருவார்.

 

அதுவும் இப்போது சந்தோஷ் ஊரில் இல்லையென்றதும் அது தினசரி வாடிக்கையாகிப் போனது அவருக்கு.

 

“என்ன சசி, இவ்வளவு சந்தோஷமா ஓடி வர்ற?” என திவ்யதர்ஷினிக்கும் அவனின் உற்சாகம் தொற்றிக் கொண்டது.

 

“அக்கா, எனக்கு டி. டி. கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் அண்ட் ஃபவுண்டேஷன் ஸ்பான்சர் பண்ணறேன்னு சொல்லிட்டாங்க” என சந்தோஷத்தில் குதித்தான்.

 

“ஹே.. சூப்பர்டா… கங்க்ராட்ஸ் சசி. உன் உழைப்பும் முயற்சியும் வீணாப் போகலை. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” எனக் காபி கலந்து கொண்டிருந்தவள், அங்கிருந்த சர்க்கரையை அள்ளி எடுத்து அவன் வாயில் போட்டாள்.

 

“இதே மாதிரி எப்பவும் நீ சந்தோஷமா இருக்கணும் சசி. எனக்கு அது போதும். நீ மேலும் மேலும் வெற்றிகளைக் குவிக்கணும்” என மனதார வாழ்த்தினாள்.

 

“தேங்க்ஸ் அக்கா. சீக்கிரம் போய் டிரைனிங்ல சேர்றேன். கிட்டதட்ட அஞ்சு மாசம் தான் இருக்கு தேசிய அளவிலான போட்டிக்கு” என்றவன்,

 

“அக்கா, அந்த டி. டி. ஃபவுண்டேஷன்னா என்ன தெரியுமா? இன்னைக்குத் தான் தெரிஞ்சது. டி. டின்னா தினேஷ்-தர்ஷினி. எனக்கு தர்ஷினிங்கிற பேர்ல நிறைய அதிர்ஷ்டம் கொட்டியிருக்குப் போல” என சசிதரன் சொன்னான்.

 

“டேய், நாங்க அண்டார்டிகாக்கே ஐஸ் கொடுக்கிற ஆளு. எனக்கே வா? சொல்லு எதுக்குடா இவ்வளவு ஐஸ் வைக்கிற? என்ன வேணும்?” என திவ்யதர்ஷினி செல்லமாக அவனை முறைத்தாள்.

 

“தெரிஞ்சிடுச்சா அக்கா” என வழிந்தவன்,

 

“அது என் ஃப்ரெண்ட்டுக்கு இன்னைக்கு பர்த்டே. வெளில போறோம். இப்போ இருக்கிற நிலைமைல காசு கேட்கிறது எனக்கே கஷ்டமா இருக்கு. ஆனா கைல கொஞ்சமாச்சு காசு இருந்தா அவனுக்கு ஏதாவது வாங்கித் தரலாம்னு பார்த்தேன்…” என அவன் இழுத்தான்.

 

அவன் தந்தையிடம் கேட்டால் எதற்கு வீண் செலவு என்று முட்டுக்கட்டை போடுவார் என்று அவனுக்குத் தெரியும். அதனால் அவளிடம் வந்திருக்கிறான் என்று புரிந்தது. அதுவும் அடிக்கடி இப்படிப் பணம் கேட்பதற்கு அவள் தம்பி ஒன்றும் ஊதாரி கிடையாது.

 

அவனுக்கு இதுவே கல்லூரியில் கடைசி வருடம். இனி எப்போது இது போன்ற சந்தர்ப்பங்கள் வாய்க்கும் என்றும் தெரியாது. அவன் நண்பர்களுடன் வெளியில் போய்விட்டு வரட்டும் என்று எண்ணினாள்.

 

அதுவும் அவளுக்காக எதையும் பார்க்காமல் செலவு செய்யும் தந்தை சசிதரனுக்கு மட்டும் பார்த்து பார்த்தே செலவு செய்தார். அதற்காக அவனை கவனிக்கவில்லை என்றும் சொல்ல முடியாது. என்ன இவள் கேட்டால் எந்தக் கேள்வியுமின்றி உடனே கொடுத்துவிடுவார்.

 

ஆனால் சசிதரன் கேட்டால் மட்டும் விசாரணைக் கமிஷன் கூட்டாத குறையாகக் கேள்விகள் கேட்ட பின்னரே யோசித்துக் கொடுப்பார். தந்தையிடம் அதைப் பற்றிக் கேட்டால், அவள் பொறுப்புணர்ந்து செயல்படுகிறாளாம். அநாவசியமாக எதையும் செய்ய மாட்டாள் என்று அவருக்கு நூறு சதவீதம் உறுதியாகத் தெரியும்.

 

ஆனால் சசிதரன் அப்படியல்ல என விளக்கம் தருவார். அவன் ஒன்றும் அப்படிப்பட்டவன் அல்ல எனப் பலமுறை அவனுக்காக வாதாடிப் பார்த்துவிட்டாள். ஆனால் தந்தை அவர் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவேயில்லை.

 

“சசி, நம்ம ஒன்னும் ரொம்பக் கஷ்டத்துல இல்லை. அதுவுமில்லாம உனக்கு ஸ்பான்சர்சிப் வேற கிடைச்சிருக்கு. அதனால் அதற்காக நிறையச் செலவு செய்ய வேண்டிய கட்டாயமுமில்லை. அப்புறம் எனக்கு வேற வேலை கிடைச்சிருக்கு. நல்ல சம்பளம். நேத்தே சொல்லணும்னு இருந்தேன். ஆனா நான் வர்றதுக்குள்ள நீ தூங்கிட்ட” என்றாள்.

 

அவள் வேலையைப் பற்றித் தெரிந்ததும் மகிழ்ச்சியடைந்தவன், என்ன வேலை என்று தெரிந்ததும், “என்ன அக்கா, நீங்க படிச்சதுக்கும் இதுக்கும் சுத்தமா சம்மந்தமே இல்லையே” எனக் குறைபட்டுக் கொண்டான்.

 

“முதல்ல எந்த வேலையையும் குறைச்சு மதிப்பிடாத. அப்புறம் இந்த வேலை இப்போ நமக்கு ரொம்ப அவசியம். அதுவுமில்லாம எனக்குமே கடந்த காலத்துல நடந்ததற்குப் பிராயச்சித்தமா இருக்கும்ன்னு தோணுது. இத்தனை நாள் அதுக்கு வாய்ப்பு அமையலை. இப்போ அதுவா கிடைச்சிருக்கு.

 

காசு வாங்கிட்டுத் தான் வேலை செய்யறேன். இருந்தாலும் என் மனதிருப்திக்குடா. என்னால ஒரு உயிரைக் காப்பாத்த முடியாம போயிடுச்சேன்னு இப்போ வரைக்கும் மனசைப் போட்டு பிராண்டிட்டு இருக்கு” எனக் கண் கலங்கினாள் திவ்யதர்ஷினி.

 

அதைக் கேட்டவாறே சமையலறைக்குள் நுழைந்த அவர்கள் தந்தை, முரளிதரன், “நல்லா சொல்லிக் கொடும்மா. எப்போ தான் நல்ல விஷயங்களைக் கத்துக்கப் போறியோ?” என்றார்.

 

“ஐயோ அக்கா, நீங்க வேற ஏன் அழுது என் உயிரை வாங்கறீங்க? அப்புறம் இளவரசியோட கண்கள்ல இருந்து கண்ணீர் வரவச்சுட்டேன்னு மகாராஜா அவர்கள் எனக்கு நான்கு கசையடி தந்து என்னைச் சிறையில் தள்ளவா?” என நாடகப் பாணியில் பேசியவன்,

 

“அப்பா, எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட். நீங்க என்னை எங்காவது தத்தெடுத்துட்டு வந்துட்டீங்களா? நான் அக்காவை எதுவும் சொல்லக் கூடாதுன்னு சொல்லறீங்க. அக்கான்னா மட்டும் உருகி உருகி கவனிக்கறீங்க. எனக்குன்னா மட்டும் வாழ்க்கைல மேடு பள்ளம் இருக்கும். நம்ம தான் பார்த்துப் போகணும் எனச் சொல்லறீங்க” என்றான்.

 

“கண்ணு வைக்காதடா. நம்ம வீட்டுப் பொண்ணுன்னாலும் கூடிய சீக்கிரம் வேற வீட்டுக்குப் போயிடுவா. ஆனா நீ அப்படியில்லையே” என்றார் முரளிதரன்.

 

“அப்பா…” என திவ்யதர்ஷினி சிணுங்க, “எங்க போகப் போறாங்க அக்கா. எல்லாம் பக்கத்து வீட்டுக்குத் தானே. சந்தோஷ் அண்ணாவும் அக்காவும் கல்யாணம் பண்ணிக்கிட்டா நீங்க சொல்லறது எதுவும் பொருந்தாது” என்றான் சசிதரன்.

 

திவ்யதர்ஷினி அப்படியே வாயடைத்துப் போனாள். இவர்கள் அனைவரும் அது உண்மை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களே. கூடிய விரைவில் உண்மையைச் சொல்லிவிட வேண்டும் என நினைக்க,

 

“அது நடக்கிறப்போ பார்க்கலாம். போய் வேலையைப் பாரு” என முரளிதரன் அந்தப் பேச்சுக்கு முற்றுபுள்ளி வைத்தார்.

 

“முதல் நாளே நான் வேலைக்கு லேட்டாப் போனா நல்லா இருக்காது. நான் போய் வேலையைப் பார்க்கிறேன்” என அவளும் நழுவிவிட்டாள்.

 

****

மித்ரனின் வீடு என்று தெரியாமல் அங்கே வேலைக்குச் சென்ற திவ்யதர்ஷினி மீனாட்சிக்கு வேண்டிய அனைத்து வகையிலும் ஒத்தாசையாக இருந்தாள். அவரிடம் நிறையக் கதைகளைச் சொன்னாள்.

 

சைகை மொழியில் பேசுவதற்கு முழுநேரமாக ஓர் ஆள் கிடைக்கவும் இத்தனை நாட்களாக வெறுமையை உணர்ந்தவர், இன்று உற்சாகமாக வளைய வந்தார்.

 

அவர் ஓவியர் என்று திவ்யதர்ஷினிக்குத் தெரியும். ஆனால் அவர் மிகவும் பிரபலமான ஓவியர் என்று தெரிந்ததும் பிரம்மித்துப் போனாள். நிறைய ஓவியங்களைக் கதை, கட்டுரைகளுக்கு வரைவார் என்றதும், அதுவும் அவரது பெயரைக் கேட்டதும் உருகியே போனாள்.

 

‘மித்து’ என்ற புனைபெயரில் அவர் வரைந்த ஓவியங்கள் அனைத்தும் தத்ரூபமாக இருக்கும். அதில் குடும்பத்து உறவுகளின் உணர்வுகளை அப்படியே கடத்தியிருப்பார். அவரின் குறையைப் பொருட்படுத்தாமல் முயன்று முன்னேறியிருக்காரே என்று வியந்து போனாள். அதை அவரிடம் சொல்லிப் பாராட்டவும் செய்தாள்.

 

ஆனால் அடுத்த கணமே, இவரிடம் பணம் நிறையக் கொட்டிக் கிடப்பதால் அது சாத்தியமாயிற்றோ என்னவோ? இதுவே சராசரி மனிதனின் வாழ்க்கையில் இது சாத்தியப்படுமா என எண்ணினாள்.

 

சாத்தியப்படும் என்றார் மீனாட்சி. மீனாட்சியின் தந்தை பள்ளி ஆசிரியர். ஆகவே படிப்புக்கு முக்கியத்துவம் தருபவர். ஆனால் சிறுவயதில் வந்த மூளைக் காய்ச்சலால் அவருக்கு மூளை பாதிக்கப்பட்டு பேச்சு வராமல், காது கேட்காமல் போனதும் மீனாட்சி உடைந்து போனார்.

 

அதற்காகத் துவண்டு போகவில்லை. அவரின் மனதைரியமும், குடும்பத்தினரின் அரவணைப்பும் சேர்ந்து அவரை அவருக்குப் பிடித்த ஓவியத் துறையில் வெற்றி பெற வைத்தது.

 

மீனாட்சியை வியப்புடன் நோக்கி அவள் உணர்ந்ததை அப்படியே அவரிடம் சொன்ன திவ்யதர்ஷினி, “உங்க படங்கள் எல்லாம் எங்கே இருக்கு ஆன்ட்டி?. நிறைய வச்சிருப்பீங்களே. காட்டுங்களேன். முதல் வேலையை அங்கிருந்து ஆரம்பிக்கலாம்” என்றாள்.

 

அவரை எடுத்தவுடனே மேடம் என்று அவள் அழைக்க, மீனாட்சியே ஆன்ட்டி என்று அவளை அழைக்கச் சொன்னார். அவளை வீட்டின் பணியாளராக அவரால் எண்ண முடியவில்லை.

 

‘ரொம்ப நாளா எடுக்கவேயில்லை. மேலே அறையில இருக்கு. இரும்மா நான் போய் எடுத்துட்டு வரேன். கீழே இருக்கிற ஆபீஸ்ல வச்சு வேலையைச் செய்யலாம்’ எனச் சைகையில் சொல்லிவிட்டு எழுந்தார் மீனாட்சி.

 

“எங்கே இருக்குதுன்னு சொல்லுங்க ஆன்ட்டி . நான் போய் எடுத்துட்டு வரேன்” என்றாள். அவர் இருக்கும் இடத்தைச் சொல்ல, விடுவிடுவென்று துள்ளலுடன் மேலேறி ஓடினாள். அவளின் அந்த மனநிலை மீனாட்சியையும் தொற்றிக் கொண்டது.

 

இதுநாள் வரையில் களையிழந்து காணப்பட்ட அவர் வீடு திடீரென்று பிரகாசமானதைப் போலிருந்தது. அவருக்கும் ஒரு பெண் இருந்திருந்தால் அவளும் இப்படி இருந்திருப்பாளோ? அவரிடம் பெருமூச்சு தோன்றியது.

 

மித்ரன் தன்னை உடன் வைத்திருக்கிறான் என்றாலும் ஏனோ தள்ளியே நிற்கிறான் என்று அவருக்குப் புரிந்தது. அவராலும் நெருங்க முடியவில்லை. பேச முடிந்தால் வார்த்தைகளால் விளக்கியிருப்பார். ஆனால் அவருக்கு அது கொடுத்து வைக்கவில்லை.

 

உள்ளத்து உணர்வுகளை ஓவியத்தில் கொட்டிக் கவிழ்த்தார். அதை நிறுத்தி நிதானமாகப் பார்க்கக் கூட மித்ரனுக்கு நேரமில்லை.

 

அவர் குறிப்பிட்ட அறைக்குள் நுழைந்து அவர் சொன்ன இடத்தில் பார்க்க, ஓவியங்கள் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஏதோ கட்டடம் சம்மந்தப்பட்ட படங்களே இருந்தன.

 

அது யாரோ ஒருவரின் படுக்கையறையைப் போலிருந்தது. தவறுதலாக வந்துவிட்டாள் போல. இடது பக்கத்துக்குப் பதிலாக வலது பக்கம் வந்துவிட்டாளோ. இருக்கும்.

 

உடனே அங்கிருந்து கிளம்ப எத்தனித்தவளின் பார்வை அங்கே மேஜையின் மேலிருந்த சில பெண்களின் புகைப்படம் மேல் விழுந்தது. பார்த்த மாத்திரத்திலேயே வீட்டில் யாருக்கோ திருமணத்துக்குப் பெண் பார்க்கிறார்கள் என்று புரிந்து கொண்டாள்.

 

அந்தப் புகைப்படங்களைப் பார்க்க வேண்டும் என்றெல்லாம் அவள் பார்க்கவில்லை. கண்களில் பட்டதும் அவர்களின் அழகும், பணக்காரத் தன்மையும் தெரிந்தது. இது போன்ற மாளிகையில் இருக்கும் ஒருவனுக்கு அவன் தகுதிக்கு ஏற்ப அல்லவா பெண் தேடுவார்கள்?

error: Alert: Content selection is disabled!!