சதிராடும் சித்திரமே 16 – 2

ஆகவே அன்று பயிற்சிக்காக வந்த சசிதரனிடம் பேச்சை வளர்த்தி அருகிலிருந்த சந்துக்கு அழைத்துச் சென்றான் அந்த இளைஞன். பின்பு நண்பர்களின் உதவியுடன் சசிதரனுக்கு மயக்க மருந்து தந்து அவனைத் தூக்கிக் கொண்டு போய்க் காலியாக இருந்த அவனது வேறொரு வீட்டில் வைத்து அடைத்து வைத்திருந்தான்.

 

இதற்காக மெனக்கெட்டு மூளையை உபயோகித்துக் குறுக்குவழியில் செல்வதற்குப் பதிலாக அதே மூளையை உபயோகித்து விளையாட்டில் மெனக்கெட்டிருந்தால் அவன் முன்னேற வாய்ப்பிருந்திருக்கும். இப்போது அனைத்தையும் தொலைத்துக் கொண்டான்.

 

அதுவும் அந்த இளைஞன் ஒன்றும் தேர்ந்த குற்றவாளி அல்ல தடயங்கள் அனைத்தையும் அழிப்பதற்கு. காவல்துறை விசாரித்ததில் சசிதரனை அழைத்துச் சென்றது அங்கிருந்த சி. சி. டி. வி.யில் பதிவாகியிருந்தது.

 

ஆகவே யார் செய்தது என்று கண்டுபிடிக்க காவல்துறைப் பெரிதாக மெனக்கெடத் தேவை இருக்கவில்லை. விரைவிலேயே குற்றம் புரிந்தவனைப் பிடித்துவிட்டனர். அவனும் கல்லூரி மாணவனே. ஆனால் வேறு கல்லூரி.

 

அவன் மேல் இன்னும் வழக்குப் பதிவு செய்யாமல் இருந்தது காவல்துறை. அதைக் கேட்ட திவ்யதர்ஷினிக்கு ‘ஐயோ’ என்றிருந்தது.

 

“யோசிச்சு சொல்லுங்க மேடம். காலேஜ் படிக்கிற பையன். நீங்க கேஸ் கொடுத்தா அவன் மேலே ஃப். ஐ. ஆர். பதிவு செய்யறோம். இல்லை, பெற்றோர்களைக் கூப்பிட்டு வச்சு மிரட்டி, இதுபோல் இனிமேல் செய்யமாட்டோம்னு கையெழுத்து வாங்கிட்டு விட்டுடறோம்” என்றார்.

 

“கேஸ் எதுவும் வேண்டாம் சார். என் தம்பி வயசு தானே. விட்டுடுங்க” எனச் சொல்லவும் அவர்கள் மேலும் சில விவரங்களை பெற்றுக்கொண்டு கிளம்பிச் சென்றனர்.

 

அறையில் படுத்திருந்த சசிதரனைப் போய்ப் பார்க்க, அவன் இன்னுமே மயக்கத்தில் இருந்தான். துவண்டுபோய் தன்னுணர்வு இல்லாமல் படுத்துக் கொண்டிருந்தவனைப் பார்த்ததும் திவ்யதர்ஷினிக்கு அழுகைப் பீறிட்டுக் கொண்டு வர, அப்படியே கீழே சரிந்து அமர்ந்து குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள்.

 

“திவ்யா.. அதான் தம்பி கிடைச்சுட்டானே. எழுந்திரு” என மித்ரன் கீழே குனிந்து அவளைக் கை பற்றி எழுப்ப, எழுந்தவள், அப்படியே அவன் மார்பின் மேலேயே விழுந்து தேம்பி தேம்பி அழுதாள்.

 

“அவனுக்கு ஒன்னுன்னா என்னால தாங்கிக்கவே முடியாது மித்ரன். இதுவரைக்கும் இப்படி அவன் படுத்து நான் பார்த்ததில்லை” என அழுகையினூடே சொன்னாள்.

 

அவள் தோள்களை மெல்லத் தட்டிக் கொடுத்து, “அவனுக்கு ஒன்னுமில்லை. மயக்க மருந்து கொடுத்ததால கொஞ்சம் மயங்கியிருக்கான். மருந்தோட வீரியம் தீர்ந்ததும் அவன் சரியாயிடுவான். இதுக்காக நீ அழுது உன் உடம்பைக் கெடுத்துக்காத” என அக்கறையுடன் சமாதானம் செய்து பேசினான்.

 

அந்த நொடியில் அவளை இனி எக்காரணம் கொண்டும் அழ வைக்கக் கூடாது என முடிவு செய்து கொண்டான் மித்ரன். அந்தோ பரிதாபம்! அவனே சில வாரங்களில் அவளைக் கதற வைக்கப் போகிறான் என்று தெரியவில்லை.

 

அவளது அலைபேசி ஒலிக்க, அப்பொழுது தான் அவள் தன் நிலையை உணர்ந்தாள். ‘இப்படி அவன் தோள் மீது சாய்ந்து அழுது கொண்டிருக்கிறாளே. அவன் என்ன நினைத்திருப்பான்?’ எனப் படக்கென்று அவனை விட்டு விலகியவள், சற்றுதூரம் விலகிப் போய் நின்று அழைப்பை ஏற்றாள்.

 

“ஆ.. அப்பா… இதோ கிளம்பிட்டேன். நீங்க சாப்பிட்டீங்களாப்பா. போய் தூங்குங்க நான் வந்துடுறேன்” எனச் சொல்லிவிட்டு அழைப்பை வைத்தாள்.

 

இப்போது என்ன செய்வது? சும்மாவே அவள் தந்தை சசிதரன் சதுரங்கம் விளையாடுவதற்கு, ‘வீண் செலவு’ என்று பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. இதில் அவனுக்கு இப்படி ஆகிவிட்டது என்று சொன்னால் அவ்வளவு தான். பெரிய சுவர் எழுப்பி அவனை எங்கேயும் விட மாட்டார்.

 

கையைப் பிசைந்து அவள் யோசித்துக் கொண்டிருக்க, அவளருகில் வந்த மித்ரன், “திவ்யா, நீ வீட்டுக்குக் கிளம்பு. உன் தம்பியை நான் பார்த்துக்கிறேன். காலையில எப்போதும் போல வேலைக்கு கிளம்பிப் போற மாதிரி இங்க வந்துடு. உன் அப்பாகிட்ட சசிதரன் ஃப்ரெண்ட் வீட்ல இருக்கான்னு சொல்லிடு” என்றான்.

 

“இது சரிபட்டு வருமா?” என அவள் யோசிக்க, “யோசிக்காதம்மா.. சீக்கிரம் கிளம்பு. நேரமாயிட்டே இருக்கு. எப்படியும் அவன் மயக்கம் தெளிய அதிகாலையில் ஆகிடும். நான் பார்த்துக்கிறேன். என் டிரைவரை வரச் சொல்லியிருக்கேன். நான் உன்னை வீட்ல விட்டுட்டு வர்ற வரைக்கும் அவர் உன் தம்பியைப் பார்த்துக்குவாரு. வா கிளம்பலாம்” என அவன் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே மித்ரனின் கார் ஓட்டுனர் அங்கே வந்து சேர்ந்தார்.

 

தனக்காக இப்படியெல்லாம் யோசித்து செயல்படும் மித்ரன் மேல் நன்றியுணர்வு பொங்கியது. அதனால் அதற்குமேல் அவள் மறுப்பு சொல்லவில்லை.

 

சசிதரனுக்குத் துணையாக கார் ஓட்டுநர் இருக்க, திவ்யதர்ஷினியை அழைத்துக் கொண்டு அவள் வீடு நோக்கிச் சென்றான் மித்ரன்.

 

காரில் பயணித்துச் செல்லும் நேரம் முழுவதும் மௌனமாகவே கழிந்தது. திவ்யதர்ஷினியின் சோர்ந்த தோற்றத்தைப் பார்த்த மித்ரனும் வேறெதுவும் பேசவில்லை. விரைவிலேயே அவள் வீடிருக்கும் இடத்திற்கு வந்துவிட்டான்.

 

“அம்மாகிட்ட நான் சொல்லிக்கிறேன். நாளைக்கு வேலைக்கு வர வேண்டாம். காலைல பார்க்கலாம்” எனச் சொல்லி இறக்கிவிட்டுச் சென்றான் மித்ரன்.

 

என்ன தான் மித்ரன் தைரியமளித்தாலும் அன்றிரவு அவளுக்கு உறக்கமில்லாமலேயே கழிந்தது. மித்ரனை அழைத்து சசிதரனைப் பற்றி வினவ வேண்டும் என எண்ணினாள். ஆனால் உதவி செய்பவனை தொல்லை செய்ய வேண்டாம் எனத் தயங்கிக்கொண்டு அமைதி காத்தாள்.

 

அவளின் நிலை உணர்ந்தோ என்னவோ, மித்ரன் அவளுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை வாட்ஸ்ஆப்பில் சசிதரனைப் பற்றிய செய்தி அனுப்பிக் கொண்டே இருந்தான். அதனால் திவ்யதர்ஷினியும் நிம்மதியாக இருந்தாள்.

 

மறுநாள் காலையில் எப்போதையும் விட நேரத்திலேயே கிளம்பி மருத்துவமனைக்கு சென்றாள் திவ்யதர்ஷினி. அவள் சென்றபொழுது மருத்துவர் வந்து சசிதரனைப் பரிசோதித்து விட்டு அவன் முற்றிலும் குணமாகிவிட்டதாகவும், நன்றாகத் தேறிவிட்டதாகவும் மயக்க மருந்து அவன் உடலில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் சொன்னார்.

 

ஆகவே அன்று மதியம் போல் அவன் வீடு திரும்பலாம் என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

 

தன் தமக்கையின் கலங்கிய தோற்றத்தை பார்த்ததும், “என்னக்கா இதுக்கெல்லாமா பயந்துக்குவீங்க? சாதாரண மயக்கம் தானே? விடுங்க” என திவ்யதர்ஷினியிடம் சொன்னவன் மித்ரனைப் பார்த்து, “ரொம்ப தேங்க்ஸ் சார்” என்றான்.

 

மித்ரனை தன் அறையில் பார்த்தவுடனேயே சசிதரனுக்கு அனைத்தும் புரிந்து போனது. மித்ரனின் வீட்டில் வேலையில் இருக்கிறாள் என்று சசிதரனுக்கு ஏற்கனவே தெரியும். அதுவே அவனுக்குப் பிடிக்கவில்லை.

 

ஆனால் மித்ரனைப் பற்றி தமக்கை பெரிதாக எந்தப் புகாரும் வாசிக்கவில்லை என்றதும் அவனும் அமைதியாகவே இருந்தான். அத்தோடு அவனுக்கும் சதுரங்க விளையாட்டு, படிப்பு என நேரம் இறக்கைக் கட்டிக் கொண்டு பறக்க மித்ரனைப் பற்றி மறந்தும் போனான்.

 

ஆனால் இன்று மித்ரனைப் பார்த்ததும் அவன் தான் உதவியிருக்கிறான் என்று அவனுக்குச் சொல்லாமலேயே புரிந்தது. இல்லையென்றால் மயங்கிய நிலையில் இருக்கும் அவனை எப்படி யார் கண்டுபிடித்திருப்பார்கள்?

 

அவள் தமக்கைக்கு வானம் முட்டும் அளவுக்குப் பாசம் இருந்தாலும், அவனைத் தேடி அலைந்திருந்தாலும் அவளால் மட்டுமே தனித்து இத்தனை சீக்கிரத்தில் அவனைக் கண்டு பிடித்திருக்க முடியாது.

 

ஆகவே இந்த மித்ரனே இதற்கு முழுக் காரணம் எனப் புத்திசாலியான சசிதரன் கண்டுகொண்டான். அதனாலேயே மித்ரனைப் பார்த்ததும் அவனிடம் நன்றி தெரிவித்தான். அவன் மேல் கொண்டிருந்த அபிப்பிராயத்தையும் மாற்றிக் கொண்டான் சசிதரன்.

 

error: Alert: Content selection is disabled!!