“உன் ஷோரூம்ல ஈ ஓட்டிட்டு இருக்கப் போல. அதனால் உனக்கு போர் அடிக்குதுன்னு காலையில் இருந்து கிச்சன்ல எதையோ கிண்டிட்டு இருக்கிற. எனக்கு ஆபிஸ்ல நிறைய வேலை இருக்குது. நான் கிளம்புறேன்” என வத்சனை இடித்துக் கொண்டு வெளிவாயிலை நோக்கி வெளியேறினான் மித்ரன்.
“அதற்கு ஏன்டா என்னை இடிச்சுட்டுப் போற. போடா போ… நாங்க வெறும் ஃப்ரெண்ட்ஸ்னு சொல்லிக் கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க எத்தனை பேரை நான் பார்த்திருக்கேன்” என வத்சன் சொன்னது அவன் காதுகளில் ஒலித்தது.
அவன் மேலிருந்த கோபம் மீண்டும் விர்ரென்று ஏறியது. இவனைப் பிறகு கவனித்துக் கொள்ளலாம் என மித்ரன் நகர ஆரம்பிக்க, “வத்சன், உனக்கு அந்த திவ்யதர்ஷினியைப் பிடிச்சிருக்கு போல. அதனால் தான் அவ பின்னாடியே போற” எனத் தூண்டிலை வீசி எறிந்தாள் ரதிப்ரியா.
நகர ஆரம்பித்த மித்ரனின் கால்கள் நகராமல் அப்படியே படக்கென்று நின்றுவிட்டன. அவன் மனம் படபடவென்று அடித்துக் கொண்டது.
“ஏன் பிடிச்சிருந்தா எங்களுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கப் பிளான் போடப் போறியா?” என வெடுக்கெனக் வினவினான் வத்சன். அவனுக்கு என்னவோ அலட்டிக் கொள்ளும் ரதிப்ரியாவை அறவே பிடிக்காது.
அதுவும் அவன் கல்லூரி படிக்கையில் எல்லாம் பெரிதாக அவனுக்கு எந்த வசதியுமில்லை. லண்டன் சென்று படித்து, பின்னர் வேலைப் பார்க்க ஆரம்பித்த பின்னரே பொருளாதார முன்னேற்றம் அடைந்தது வத்சனின் குடும்பம்.
அதன்பின்னர் அவன் தந்தை வழிச் சொத்துகள் வழக்கு முடிந்து கைக்கு வந்து சேர்ந்தன. அவன் அன்னையின் பக்கச் சொத்துகளும் வந்து சேர்ந்தன. பிறகே அவன் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம். வசதி குறைந்தவன் என்ற காரணத்தினால் ரதிப்ரியா இவனை மதிக்கக் கூட மாட்டாள்.
இப்போது என்னடாவென்றால் எதுவும் நடக்காததைப் போல் ‘ஈ’யென்று வந்து பழகுகிறாள். யாருக்கு வேண்டும் இவளின் போலியான அக்கறை. அதற்கு அவன் திவ்யதர்ஷினியுடன் நேரம் செலவழிப்பான். எந்த விகல்பமும் இல்லாமல் உண்மையாய்ப் பழகும் அவள் எவ்வளவோ உசத்தி.
வத்சனின் பதில் ரதிப்ரியாவை பதம் பார்த்ததோ இல்லையோ, மித்ரனின் நெஞ்சாங்கூட்டில் பாறாங்கல்லைத் தூக்கி வீசி எறிந்ததைப் போல் உணர்ந்தான்.
‘யாருக்காவும் அவளை விட்டுக் கொடுக்க மாட்டேன்’ எனப் பிடிவாதம் கொண்ட குழந்தையைப் போல் விடுவிடுவென்று திவ்யதர்ஷினி நின்றிருந்த இடத்துக்குச் சென்றான் மித்ரன்.
ரோஜாக்கள் நிறைந்திருந்த செடிகளின் பக்கத்தில் அமர்ந்து அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த திவ்யதர்ஷினி அவன் கண்களுக்குப் புலப்பட்டாள்.
அவளையே பார்த்தவாறு அவளருகில் சென்றவன், “பைனாபிள் கேசரியை வாழ்க்கையில் மறக்க மாட்டேன்” என மெல்ல வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன் சொன்ன மித்ரன்,
“உனக்கும் ஞாபகமிருக்கும்னு நினைக்கிறேன். நீ எனக்கு மட்டும் தான். அதை எப்பவும் மறந்துடாத… கிளம்பறேன்” எனக் காரில் அமர்ந்து காரை உயிர்ப்பித்தான்.
மறந்தும் கூட ரதிப்ரியாவிடம் அலுவலகத்திற்கு வருகிறாயா என்று மித்ரன் கேட்கவில்லை. அவனைப் பின்தொடர்ந்து வந்த ரதிப்ரியாவின் கண்களுக்கு அவன் திவ்யதர்ஷினியிடம் சென்று இரகசியம் பேசியது தப்பவில்லை.
வத்சன் பயந்து போனான். உடனே திவ்யதர்ஷினியின் அருகில் ஓடி வந்து, “என்ன சொல்லிட்டுப் போறான் லார்ட் லபக்கு தாஸ்? உன்னை எதுவும் திட்டலையே” எனக் கேட்க,
“இல்ல… உங்ககிட்ட சொன்ன அதே டயலாக்கைத் தோசையைத் திருப்பிப் போடற மாதிரி திருப்பிப் போட்டுச் சொல்லிட்டுப் போறார். வெட்டியாப் பொழுதைக் கழிக்காம உருப்படியா வேலையைப் பார்க்கச் சொன்னார்” எனப் பேசி மழுப்பினாள்.
“இவன் திருந்தமாட்டான். ஹிட்லர்” என வத்சன் சலித்துக் கொண்டான்.
வத்சன் வேண்டுமானால் அவள் சொல்வதை நம்பிவிடலாம். ஆனால் ரதிப்ரியா ஒன்றும் முட்டாள் இல்லை அதை நம்புவதற்கு. ஏனெனில் மித்ரனின் முகபாவனையை வைத்தே அவள் ஒரு அகராதியை உருவாக்கிவிடுவாள். அவனைப் பற்றிய விஷயங்கள் அவ்வளவு அத்துப்படி அவளுக்கு.
மித்ரன் ஒன்றும் அவளைக் கடிந்து பேசவில்லை என்று அவளால் சத்தியம் செய்ய முடியும். ‘யார் காதில் பூ சுற்றுகிறாள்?’ இதை இப்படியே விடக்கூடாது என அவளுக்குள் பொறாமையும் பிடிவாதமும் ஒருசேரத் தீயாய்க் கனன்றது.
நேராக வீட்டுக்குச் சென்ற ரதிப்ரியா அன்னையிடம் ஏனோ தானோ என்று பேசிவிட்டு தன்னறைக்குள் சென்று ஓவென்று கதறியவாறே அண்ணனை அழைத்தாள்.
என்னவோ ஏதோ என்று பயந்து போன கிஷோரிடம் அவள் விஷயத்தைச் சொல்ல, “நீ கவலைப்படாத. நான் பார்த்துக்கிறேன்” எனத் தங்கையைச் சமாதானப்படுத்திவிட்டு அழைப்பை வைத்தான்.
அவன் சற்று மெத்தனமாக இருந்துவிட்டான். மித்ரன் எல்லாம் யாரையும் காதலிக்க மாட்டான் என்று தவறாகக் கணக்குப் போட்டுவிட்டான். அப்படிப்பட்டவனையே மாற்றிவிட்டாள் என்றால் அந்தப் பெண் எவ்வளவு பெரிய நாடகக்காரியாக இருப்பாள். அவளைச் சும்மா விடக்கூடாது.
உடனே தன் உதவையாளரை அழைத்து திவ்யதர்ஷினியைப் பற்றிய விவரங்களைச் சேகரிக்கச் சொன்னான். அவள் தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து அவளை அழைத்தான் கிஷோர்.
“என்னம்மா, ரொம்ப சந்தோஷமா இருக்கிற போல” எனக் கேட்டுவிட்டு அவள் பதில் தர இடம் கொடுக்காமல், “இருக்காதா பின்னே. பெரிய வலையை வீசி திமிங்கலத்தைப் பிடிக்க முயற்சி செஞ்சுட்டு இருக்கியே” என்றான்.
“யார் சார் நீங்க? உங்களுக்கு என்ன வேணும்? ஏன் இப்படி உளறிட்டு இருக்கீங்க?” என அவள் சற்றுக் கோபத்துடன் வினவ,
“இங்க பாரு எனக்கு உன்னோட விளையாடிட்டு இருக்கவெல்லாம் நேரமில்லை. வேலைக்குப் போனோமா, அதை மட்டும் பார்த்தோமான்னு இருக்கணும். அதை விட்டுட்டு அங்கிருக்கறவங்களை மடக்கிப் போடணும்னு நினைக்காத” என மிரட்டல் தொனியில் சொன்னான்.
“இன்னுமா புரியலை. மித்ரன் என் தங்கை ரதிக்கு மட்டுமே சொந்தம்” என்றவன், அவர்கள் இருவரும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள் என்றும் அவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் சொன்னான்.
நடுவில் புகுந்து அவள் ஏதாவது குட்டையைக் குழப்ப நினைத்தால் அவள் அந்தக் குட்டையிலேயே மக்கிப் போவாள் என அச்சுறுத்தினான்.
“ஞாபகமிருக்கட்டும். அடுத்த தடவை பேசிட்டு இருக்க மாட்டேன். அவன்கிட்ட இருந்து விலகியே இரு. இல்லை, தொலைச்சிடுவேன்” எனப் பயங்கரமாக எச்சரித்துவிட்டு அழைப்பை வைக்கப் போன கிஷோர்,
“ஒருவேளை பணம் உனக்குக் குறிக்கோளா? சொல்லு, எவ்வளவு பணம் வேணும். தர்றேன்” என்றான்.
“வேணுங்கிறப்போ உங்ககிட்ட வர்றேன்” என அழைப்பைப் பட்டெனத் துண்டித்துவிட்டாள் திவ்யதர்ஷினி.
‘தன்னை என்னவென்று நினைத்துக் கொண்டான் இவன்? முதலில் இவன் யார் தன்னை இப்படியெல்லாம் எடை போட? பணம் கொடுக்கிறானாம் பணம். யாருக்கு வேணும் இவன் பணம்?’
‘இவன் என்னடாவென்றால் மித்ரன் ரதிக்குச் சொந்தம் என்கிறான். அந்த மித்ரனோ அவள் தனக்குச் சொந்தம் என்கிறான். இவர்களின் சடுகுடு ஆட்டதுக்கு அவள் தான் கிடைத்தாளா?’ அன்று இரவு முழுவதும் ஏனோ கனவில் கூட எரிச்சல் எரிச்சலாய் வந்தது அவளுக்கு.
அது மித்ரனை விரும்ப முடியாமல் தடை எழுகிறதே என்ற வருத்தமா, அல்லது, எதையும் செய்ய முடியாத அவளது இயலாமையா என்று அவளால் வரையறுத்துக் கூற இயலவில்லை.

