“வத்சன்கிட்ட அளவாப் பழகுன்னு நேத்து சொன்னேனே மறந்துட்டியா?. எனக்கென்னவோ அவன் உன்னை என்கிட்ட இருந்து எடுத்துட்டுப் போயிடுவான்னு பயமா இருக்கு” என மனதில் உள்ளதைப் போட்டு பட்டென்று உடைத்தான்.
இதற்கு அவளால் எப்படி வினையாற்ற முடியும்? முதலில் அவனே அவன் எடுத்த முடிவில் எத்தனை உறுதியாக இருக்கிறான் என்று அவளுக்குத் தெரிய வேண்டும். அவன் பேச்சுக்களும், அவனது அருகாமையும் அவளுக்கும் மனதில் மத்தாப்பைப் பற்ற வைத்தாலும், மனம் தித்திப்பைக் குத்தகைக்கு எடுத்தாலும் நடைமுறையில் சாத்தியப்படுமா என்ற குழப்பத்தில் விழுந்தாள்.
அவளால் எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை. இப்படித் தடுமாறிக் கொண்டிருக்கையில் அவன் வேறு வந்து கண்டதை உளறினால் என்ன செய்வாள்?
கீழிருந்து எழுந்தவள், “எனக்குப் புரியலை மித்ரன். நீங்க மனசுல எதை வச்சுக்கிட்டு இப்படியெல்லாம் பேசறீங்கன்னு சத்தியமா எனக்குப் புரியலை? நேத்து பாத்ரூம்ல அப்படி நடந்துக்கிட்டதுக்கு என்ன அர்த்தம்?” எனத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு குரலில் கடினத்தையும் சேர்த்துக் கொண்டு பேச ஆரம்பித்தாள் திவ்யதர்ஷினி.
ஆரம்பிக்கையில் எல்லாம் அமோகமாக வல்லினமாய் ஆரம்பித்தாள். முடிக்கையில் அவள் குரல் குழைந்து போய் மெல்லினமாய் வெளிவந்தது.
“உனக்கு என்ன புரியலை திவி? என் செயல்கள் எதையும் உனக்கு உணர்த்தலையா? வார்த்தைகள்ல சொன்னா மட்டுமே புரியுமா உனக்கு?” என இதமளிக்கும் குரலில் சொன்னவன் அவளை ஆழ்ந்து நோக்கினான்.
அவன் விழிகளை நோக்காது அவள் குனிந்து கொள்ள , மெல்ல எட்டுகள் வைத்து அவளருகில் சென்றான். அவளும் பின்னால் நகர்ந்தாள்.
என்ன காரணத்தினாலோ அவளை முதல் முதலாகக் கடற்கரையில் பார்த்ததில் இருந்தே அவனுக்கு ஒருவித படபடப்பு தோன்றியதை மறைக்காமல் சொன்னான். அன்று அவளை அணைத்து விடுவிக்கையில் ஏனோ அவனது மூச்சு நின்று போவதைப் போல் இருந்ததைச் சொன்னான்.
அவளிடம் மட்டுமே நெருக்கத்தையும், பிணைப்பையும் மனதளவில் உணர்ந்திருக்கிறான் மித்ரன்.
அது எப்படி பார்த்ததும் ஒரு பெண் அவன் உலகில் சத்தமேயில்லாமல் சூறாவளியை ஏற்படுத்த முடியும்? ஏற்படுத்தினாளே! அவன் மனவனத்தை அவ்வளவு எளிதாக யாரும் அண்ட முடியாது, ஆண்டுவிட முடியாது என இறுமாந்திருந்தானே.
“எனக்குச் சின்ன வயசுல இருந்தே நிறைய அரவணைப்பு கிடைச்சது. ஆனா யாரோட நெருக்கமான அணைப்பும் கிடைக்கலை. அம்மாவும் பக்கத்துல இல்லை. மத்தவங்ககிட்ட இருந்து கிடைச்ச அணைப்புல ஏதோ ஒருவித திணிப்பு தெரிஞ்சது.
உண்மையான அணைப்புக்காக ரொம்பவும் ஏங்கி இருக்கேன் திவி. முதல் முதலா உன்னை அணைச்சப்போ அதுல ஒரு இணைப்பு இருந்தது… வாழ்நாள் முழுவதுக்குமான பிணைப்பை உணர்ந்தேன். கடைசி வரைக்கும் அது வேணும் எனத் தோணிச்சு” என்றான்.
இப்படியெல்லாம் நெஞ்சைப் புரட்டிப் போடும் அளவுக்குப் பேசினால் அவளால் தன் சின்னஞ் சிறு இதயத்தை எப்படிப் பேணிப் பாதுகாக்க முடியும்? குடுகுடுவென்று அவனை நோக்கி ஓடிவிடாதா?
என்று அவள் மூர்ச்சையாகி அவன் கண் முன்னே மயங்கி கீழே விழுந்தாளோ அன்றே அவனது கர்வம் சர்வமும் கீழே விழுந்து அடங்கிப் போனது. அவளுக்கு ஒன்றென்றால் அவனது உலகம் மொத்தமும் இயங்க மறுக்கிறது என அவன் மனதைத் திறக்க, அவள் இதயத்தின் துடிப்பு அதிகரித்தது.
இதற்கு மேல் தெள்ளத் தெளிவாக யாராலும் மனதைத் திறந்து சொல்ல முடியாது. அவன் பேசியதைக் கேட்ட திவ்யதர்ஷினிக்கோ நெஞ்சில் ஊஞ்சல் கட்டி ஆடியதைப் போலிருந்தது.
தூர நின்று எட்டப் பார்க்கையில் மித்ரனின் எந்தக் குணமும் அவளுக்குப் பிடிக்கவில்லை. ஆரம்பத்தில் இருந்தே அவனுடன் முட்டி மோதிக் கொண்டு அவன் செய்கைகள் அனைத்துமே அவளுக்கு பாதகமாகவே அமைந்தன.
அதனாலேயே அவன் மேல் அவளுக்குப் பெரிதாக எந்த பிடிப்பும் இல்லை. இவ்வளவு ஏன், அவனை வெறுக்கவும் செய்தாள்.
ஆனால் கிட்டதட்ட ஐந்து மாதங்களாக மித்ரனை அருகிலிருந்து பார்த்ததும் அவன் அன்னையின் வழியாகவும் வத்சனின் வழியாகவும் அவனின் நற்குணங்களைப் பற்றியும் அறிய நேர்ந்ததும் அவள் தன் எண்ணத்தை முற்றிலும் மாற்றிக் கொண்டாள்.
அவன் மேலிருந்த எதிர்மறையான அபிப்பிராயம் மெல்ல மாறியது. அவன் மேல் இருந்த வெறுப்பும் தூரச் சென்று மறைந்தது.
வத்சன் சொன்ன, ‘பார்த்ததும் பிடிக்காது. ஆனா பழகப் பழக பிடிக்கும் போல’ என்ற வாக்கியம் அந்நேரத்தில் அவள் நினைவின் தாழ்வாரத்தில் வந்து போனது.
உண்மையைச் சொல்லப் போனால் அவனருகில் இருப்பதை அவளும் விரும்ப ஆரம்பித்திருந்தாள். அதை மறுக்க முடியாது. அதுவும் நேற்று அவளை அணைத்து முத்தமிட்ட பின்னர் அவளால் அந்த மயக்கத்தில் இருந்து இன்னுமே வெளிவர முடியவில்லை.
திடீரென்று வந்து அணைத்துச் சூறாவளியை போல் அவளைச் சுருட்டி எடுத்துக் கொண்டு போய் மனப்பெட்டகத்தில் போட்டுப் பூட்டி வைத்துக் கொண்டான். ஆனாலும் அவளால் உடனே அவனிடம் எதையும் வாய் திறந்து சொல்ல முடியவில்லை. முடிவாகத் தெரியும் வரையில் பொறுத்திருக்க வேண்டும்.
திடீரென்று ரதிப்ரியாவின் அண்ணன் கிஷோரின் மிரட்டல் காதுகளில் ஒலித்தது. ஆகவே அவள் மனதை ஒருநிலைப்படுத்திக் கொண்டாள். கலங்கிய விழிகளுடன் ஏறிட்டுப் பார்த்தவளை, “என்ன திவி?” என உயிர் உருகிப் போனான் மித்ரன்.
“நீங்க ரதிப்ரியாவை விரும்பறீங்க… “ என ஆரம்பித்தவளை முடிக்கக் கூட விடவில்லை அவன்.
ரதிப்ரியாவின் தந்தையும் அவன் தந்தையும் வெகுகாலமாகத் தொழிலில் இணைந்து வேலை செய்து வருகின்றனர். அப்படி அறிமுகமான கிஷோர் நீண்ட நாட்களாவே அவனுக்கு நண்பன் என்றும் கிஷோரின் தங்கை ரதிப்ரியாவும் அவனும் ஒரே கல்லூரியில் படித்ததாலும் மேற்படிப்பை ஒன்றாகத் தொடர்ந்ததாலும் அவளை நன்கு அறிவான் என்றும் சொன்னான்.
நட்பு ரீதியாக மட்டுமே அவளிடம் பழகுகிறான் எனத் தெளிவாக திவ்யதர்ஷினியிடம் உரைத்தான் மித்ரன். “வத்சன் சொல்லறதை எல்லாம் கேட்டு நீ கலங்காத. அவளை நான் கண்டிப்பா விரும்பலை” என அவளுக்கு வாக்குறுதி தந்தான்.
அவன் ரதிப்ரியாவை விரும்பவில்லை என அறிந்ததும் அவளுக்குத் தலைகால் புரியவில்லை.
மித்ரன் மெல்ல அவளை நெருங்கி, அவள் தாடையைப் பற்றி அவளை நிமிர்ந்து பார்க்கச் சொன்னான். அவளின் மனம் படபடவென்று அடித்துக் கொள்ள, கருவிழிகள் அங்குமிங்கும் அலைந்தன.
“திவி என்னைப் பாரேன்” என்ற மித்ரனின் கரகரத்தக் குரலில் மெள்ள அவனைப்
புன்னகையுடன் ஏறெடுத்துப் பார்த்தாள். அவனால் அதற்குமேல் கட்டுப்படுத்த முடியவில்லை. நேற்று தந்த முத்தத்திலேயே அவன் மனம் பித்து கொள்ள, நேற்றிரவு தூக்கம் வராமல் சித்தம் கலங்கிப் போயிருந்தான்.
அவளின் துடிக்கும் அதரங்களைப் பார்த்தவாறே மெல்ல குனிந்து படபடக்கும் இமைகளின் மேல் அழுந்த முத்தமிட்டான். அவள் இமைகளின் குறுகுறுப்பு அவன் அதரங்கள் தொட்டு உள்ளம் வருடின.
தொடர்ந்து மூக்கின் நுனியில் உதடுகளை உரசி எடுத்தான். “நேத்து உன்னை முத்தமிட்டதுல இருந்து நான் நானாக இல்லை திவி” எனச் சற்றுக் கீழே குனிந்து அவளது அதரங்களை முற்றிலும் முற்றுகையிட்டான்.
நாழிகைகள் மொழியின்றிக் கழிந்தன. எத்தனை நேரம் இப்படியே நின்றிருந்தார்கள் என்று தெரியாது. “மித்ரன்” என்ற யாரோ ஒருவரின் குரலில் இரண்டு பேரும் அவசரமாக விலகி நின்றனர்.
“நான் உனக்குன்னு புரிய இந்த அச்சாரம் போதும் என நினைக்கிறேன்” எனச் சொல்லிவிட்டு, எதுவும் நடக்காததைப் போல் அறையிலிருந்து வெளியில் வந்த மித்ரன், தன்னைத் தேடிக் கொண்டு வந்த கிஷோரைப் பார்த்தான்.
“வா கிஷோர், என்ன ஏதாவது முக்கியமான விஷயமா?” எனக் கேட்டவாறே அங்கிருந்த வரவேற்பறையில் போய் அமர்ந்தான்.
அவனும் உடன் அமர்ந்தவாறே, “ஆமாம்டா..” எனச் சொன்னவன், “உன்கிட்டே தனியாப் பேசணும். ரதியைப் பத்தி” என்றான்.
அதே சமயத்தில் அங்கே மீனாட்சி வர, அவரிடம் நலம் விசாரித்துவிட்டு மித்ரனிடம் பேச ஆரம்பித்தான்.
சற்றுமுன்னர் அவன் திவ்யதர்ஷினியை முத்தமிட்டதைக் கிஷோர் பார்த்துவிட்டான் என்பது மித்ரனுக்குத் தெரியவில்லை. அத்தோடு நேத்தும் முத்தமிட்டிருக்கிறான் என்பதையும் அவர்கள் பேச்சிலிருந்து அறிந்து கொண்டான்.
அவன் தங்கை நின்று கொண்டு இருக்க வேண்டிய இடத்தில் வேறொரு பெண்ணா என கிஷோரின் மனம் தீயாய்க் கனன்றது.
இவளை அத்தனை எச்சரித்தும் சொல்பேச்சுக் கேட்காமல் இப்படி மித்ரனைத் தன் வலையில் சிக்க வைத்துக் கொண்டாளே என ஆத்திரம் மூண்டது. விடக்கூடாது. இவளை ஏதாவது செய்ய வேண்டும் எனக் கோபம் தலைக்கேறினாலும் நிதானமாக மித்ரனிடம் அந்தக் கேள்வியைக் கேட்டான்.
“எங்க வீட்டு மருமகனாக வர உனக்குச் சம்மதமா? ரதிக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு. எங்களுக்கும் எந்த ஆட்சேபனையும் இல்லை” என்றான் கிஷோர்.
மீனாட்சியின் அரவம் கேட்டு அவருக்கு ஏதாவது தேவையா எனக் கேட்பதற்கு திவ்யதர்ஷினியும் தன்னைச் சுதாரித்துக் கொண்டு அலுவலக அறையிலிருந்து வெளியில் வந்தாள். அவள் வந்த பொழுது கிஷோர் கேட்டது அவள் செவிகளில் விழுந்தது.
திடுக்கிட்டு மித்ரனை ஏறிட்டாள். கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த மித்ரனும் அப்போது அவளைத் தான் பார்த்திருந்தான். ஆழ்நெஞ்சைத் துளைத்தெடுக்கும் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் உடனே அவள் பார்வையை விலக்கிக் கொண்டாள்.
இப்போது அவளின் விழிகள் கிஷோரைத் தொட்டுத் தழுவியது. இவனா அந்த ரதிப்ரியாவின் அண்ணன் என அவனைக் கூர்ந்து பார்த்தாள்.
“ரதியை நான் அப்படியெல்லாம் நினைச்சுப் பார்க்கலை கிஷோர்.” ஒற்றை வாக்கியத்தில் மித்ரன் இருவருக்குமே முடிவான பதிலைச் சொல்ல, “இனிமேலாவது அப்படி நினைச்சுக்கோ. நீ இல்லைன்னா அவ கல்யாணமே வேண்டாம்னு சொல்லறா” என்றான் கிஷோர்.
“பிளீஸ் கிஷோர் புரிஞ்சுக்கோ. எனக்கு அந்த மாதிரி நினைப்பு அவ மேலே சுத்தமா இல்லை. சாரி” என்ற மித்ரனின் உறுதியான பேச்சைக் கேட்டதும் அதற்குமேல் திவ்யதர்ஷினி அங்கேயே நின்று கொண்டிருக்கவில்லை.
முதலாவதாக மித்ரனின் பதிலைத் தெரிந்து கொண்டாள். அடுத்து அங்கேயே நின்றால் ஏதோ அவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்பதை போலிருக்கும் என அங்கிருந்து மெதுவாக நகர்ந்துவிட்டாள்.
“பிளீஸ் மித்ரன்… ரதிக்காக நாங்க என்ன வேணா செய்யறோம். யோசிடா…” என்ற கிஷோர், அப்போது தான் அங்கே வந்த திவ்யதர்ஷினியைப் பார்ப்பதைப் போல பார்த்தான்.
அவளைப் பார்ப்பதற்காகவே அன்று மித்ரனின் வீட்டுக்குச் சென்றான் கிஷோர். அவள் என்ன தன் தங்கையை விடப் பெரிய ரதியா என மனதில் திட்டிக் கொண்டு வந்தான்.
பார்த்ததும் அப்படி ஒன்றும் மோசமில்லை என்று தோன்றியது. ஆனால் அவன் தங்கையின் கால் தூசிக்குக் கூட இவள் தகுதியில்லை என அவன் மனக் கொதிப்பு அதிகரித்தது.

