சதிராடும் சித்திரமே 2 – 2

அது முற்றிலும் பொய் என்று உலகத்துக்கே தெரியும். பணத்தை வைத்துத் தப்பிவிட்டிருந்தான். அந்த விசயம் அவனுக்குச் சாதகமாக முடியவும் அவன் கவனம் தோழியை உசுப்பிக் கொண்டிருக்கும் திவ்யதர்ஷினியின் மேலே திரும்பியிருக்கிறது.

 

இன்னொரு அதிர்ச்சிகரமான விசயம் என்னவென்றால் அவன் அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் முதலாளியின் மகன் என்று சமீபத்தில் தெரிய வந்தது. முதலாளியின் மகன் என்று தெரிந்தால் அவனால் உலக விஷயம் கற்று கொள்ள முடியாது என்ற எண்ணத்தில் அதை மறைத்துவிட்டதாகப் பின்னர் தெரிய வந்தது.

 

அவன் முதலாளியின் மகன் என்று தெரிந்த பின்னரும் அவர்கள் வழக்கை திருப்பிப் பெறவில்லை என்று அந்தக் கயவனுக்குக் கோபம் வந்துவிட்டது. அவன் காதலித்ததாகச் சொன்ன பெண்ணை எப்படித் தேனொழுகப் பேசி, மயக்கி அவளைத் தன் பக்கம் திருப்புவது என்று அவனுக்குத் தெரியும். ஆனால் அவளுக்கு உறுதுணையாக இருக்கும் இந்தப் பெண்ணை முதலில் கவனிக்க வேண்டும்.

 

திவ்யதர்ஷினியின் உந்துதலாலும் அவள் சாட்சியாக இருப்பதாலும் தானே அப்பெண்ணின் பெற்றோர்கள் தைய தக்க என்று குதிக்கிறார்கள். முதலில் அவர்களின் தைரியத்தை முறிக்க வேண்டும் என நினைத்து திவ்யதர்ஷினியைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்திருந்தான் அந்தக் கயவன்.

 

அவளை இப்போது எந்தக் காரணம் சொல்லியும் வேலையிலிருந்தும் தூக்க முடியாது. அது அவனுக்கே பாதகமாக முடியும். அதுவும் அவன் தந்தைக்குத் தெரிய வந்தால் அவன் முடிந்தான். இப்போது தான் பொறுப்புணர்ந்து வேலை செய்வதாக நம்புகிறார். ஆகவே அடியாட்கள் வைத்து அவளை மிரட்ட நினைத்தான்.

 

அவள் கோவிலுக்கு வந்திருக்கையில் அவள் புகைப்படத்தை வைத்து அவளை அடையாளம் கண்டுகொண்ட அவன் அடியாட்கள் அவளைத் துரத்த ஆரம்பித்தனர். அவர்களிடம் இருந்து தப்பித்துக் கூட்டம் நிரம்பியிருக்கும் கடற்கரைக்கு வந்தாள். ஆனால் விதி அவளை வேறு ஒரு இராட்சசனிடம் சிக்க வைத்துவிட்டது.

 

“பயமா இல்லையா திவி?” என சந்தோஷ் அவளை ஊடுருவிப் பார்த்துக் கேட்க, “கொஞ்சம் பயமாத் தான் இருக்கு” என உண்மையை ஒத்துக் கொண்டாள்.

 

“ஆனா, எனக்காக இல்லை. அப்பாவும், தம்பியும் நானில்லைன்னா என்ன பண்ணுவாங்க. கஷ்டப்படுவாங்க இல்லை” எனக் கண் கலங்கினாள்.

 

“இப்படியே அடிச்சிடுவேன்…” என அவளை நோக்கிக் கையை ஓங்க, “ஏய்.., என்ன ஒரு வயசு பொண்ணைப் பார்த்துக் கையை நீட்டற?” என இரண்டு வாலிபர்கள் சட்டையை மடித்துக் கொண்டு சந்தோஷை நோக்கிப் பாய்ந்தனர்.

 

“வாங்கடா வாங்க… ஒண்ணுமே நடக்காததுக்கு அந்தக் கடல் தோத்துப் போற அளவுக்குப் பொங்கி எழுங்க. ஒருத்தன் இவளைக் கடல்ல தள்ளிவிட்டிருக்கான் அதை நின்னு கை தட்டி வேடிக்கைப் பாருங்க” என அவர்களை அடிக்கும் பாவனையில் திரும்ப,

 

“சாரி ப்ரோ… உங்க பிரச்சனைக்குள்ள நாங்க ஏன் வர்றோம்?” என ஜகா வாங்கவும், கலகலவென்று சிரித்த திவ்யதர்ஷினி, “நீங்க போங்க தம்பிகளா. சாரை எனக்கு நல்லாத் தெரியும். என் ஃப்ரெண்ட் இவர்” என்றாள்.

 

“நீ வா, காருக்குப் போகலாம்” என அவள் கையைப் பிடித்து அழைத்துச் சென்றான் சந்தோஷ்.

 

*****

வீடு நோக்கிக் காரைச் செலுத்திக் கொண்டிருந்த மித்ரனுக்கு ஏனோ இனம் புரியா எரிச்சல் இதயத்தில் சூழ்ந்திருந்தது. சற்றுமுன்னர் கூட அவன் இப்படி உணரவில்லை.

 

ரதிப்ரியாவைத் திருமணம் செய்து கொள்ளலாம் என எண்ணியே அவளிடம் பேசச் சென்றான்.

அதை எங்கிருந்தோ வந்த ஒருத்தி கெடுத்துவிட்டாள். அதன்பின்னர் அவனுக்கு அதைப் பற்றிப் பேசவே தோன்றவில்லை. ஏன் தோன்றவில்லை என்ற கேள்விக்கு அவனிடம் விடையில்லை.

 

ஆனால் சில நாட்களாய் ரதிப்ரியாவைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனத் தோன்றிய எண்ணம் முற்றிலும் கிணற்றில் போட்ட கல்லாய் மனதின் அடி ஆழத்தில் அமுங்கிப் போயிற்று.

 

அவன் மனம் முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த ஒரே விஷயம் அந்தப் பெயர் தெரியாப் பெண்ணைப் பற்றி மட்டுமே. அவன் அப்பெண்ணை அணைத்தது ஒரு சில நொடிகளே. இருந்தும் அவனுக்குள் பல கோடி மாற்றங்கள். ஏனோ உள்ளம் குதித்துக் குதித்து மேலெழும்பியது. ஜிவ்வென்ற உணர்வு அடிவயிற்றிலிருந்து எழும்பியது.

 

இத்தனை வருடங்களில் அவனுக்குள் இப்படி ஒரு மாற்றம் நிகழ்ந்ததில்லை. ஒருவேளை இன்று பரவசத்துடன் இருந்ததால் அப்படி உணர்ந்தானோ என்று எண்ணினான்.

 

உணவகத்தில் இருந்து வெளியில் வந்து அவன் கார் வருவதற்காகக் காத்திருக்கையில், அப்பெண் மீண்டும் அவன் கண்களில் பட்டாள். யாரோ ஒருவனுடன் காரில் ஏறிப் போவதைப் பார்த்தான். அந்த இளைஞன் பார்க்க நன்றாகவே இருந்தான்.

 

அவள் கையைப் பிடித்து இழுத்துச் சென்றதென்ன? அவள் காரில் ஏறுவதற்குக் கதவைத் திறந்து விட்டதென்ன? ஆகமொத்தம் அவன் காட்டிய அக்கறையில் அவனுக்கு அப்பெண் மிகவும் முக்கியமானவள் என்று புரிந்து கொண்டான்.

 

‘இவ பெரிய மகாராணி. இவ கார்ல ஏற கதவை வேறு ஒருத்தர் வந்து திறந்துவிடணுமா? இவளுக்குக் கை இல்லையா?’ எனப் பொருமிக் கொண்டான்.

 

உள்ளத்தில் திகுதிகுவென்று தீ பற்றிக் கொழுந்துவிட்டு எரிவதைப் போல் உணர்ந்தான். அவனின் இனிமையான மாலை நேரத்தைக் கெடுத்துவிட்டு அவள் மட்டும் சந்தோஷமாகக் கிளம்பிச் செல்கிறாளே என்ற எரிச்சல் இன்னுமே அவனுக்குள் விரவியிருந்தது.

 

ஏதோ எண்ண வலைக்குள் சிக்கிக் கொண்டு எதுவும் பேசாமல் காரை ஓட்டிக் கொண்டு வருபவனை ஓர விழிகளால் அளவிட்டாள் ரதிப்ரியா.

 

“மித்ரன், எதுக்கு அந்த மோதிரம் கொடுத்தீங்க?” என அவள் அதுவரையில் பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தவள் ஒருவாறு மனதில் இருந்ததை வினவ, தன் மாய உலகிலிருந்து வெளிவந்தான் மித்ரன்.

 

சில நொடிகள் என்ன சொல்வது எனத் தெரியாமல் அமைதியாக வந்தான். பின்னர், “அது… சும்மா.. பார்க்க நல்லா இருந்தது. உனக்குப் பொருத்தமா இருக்கும்னு நினைச்சேன்” எனச் சொல்லி, சொல்ல வந்ததை மறைத்துவிட்டான்.

 

அவனுக்கே ஏன் அப்படிச் செய்தான் என்று புரியவில்லை. ஒருவேளை அப்பெண் அவனுக்குள் ஏற்படுத்திய மாற்றங்களா? அவனுக்கே தெளிவாக அதற்கு விடை தெரியும் வரையில் எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என்று மூளை அவனை அப்படி ஒரு முடிவை எடுக்க வைத்தது.

 

“எப்படியும் தேவையில்லாம தூக்கிக் கடல்ல போட்டுட்ட. இப்போ அதைப் பத்தி பேசி என்ன ஆகப் போகுது? அடுத்த முறை யூ. எஸ். போகறப்போ வாங்கிட்டு வரேன்” எனக் குரலில் எந்தவொரு பிசிறும் இல்லாமல் அவன் சொல்லி முடிக்க, அதைக் கேட்ட ரதிப்ரியாவுக்குச் சப்பென்று ஆகிப்போனது.

 

தோழி என்ற முறையில் அவன் அடிக்கடி அவளுக்குப் பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொண்டு வருவான். இந்த முறையும் அப்படி எண்ணி வாங்கி வந்தானோ? அதற்குமேல் அவளால் என்ன கேட்க முடியும்?

 

ரதிப்ரியாவை அவள் வீட்டில் இறக்கி விட்டவன், அவள் அண்ணன், கிஷோர் எவ்வளவோ வற்புறுத்தியும் வீட்டுக்குள் செல்லவில்லை. அப்படியே விடைபெற்றுக் கொண்டு கிளம்பிவிட்டான்.

 

ஏனோ அமைதியான அறைக்குள் சென்று தனிமையில் பதுங்கிக் கொள்ள வேண்டும் என்றிருந்தது அவனுக்கு. விசித்திரமாய் ஓர்வித ஆழ்ந்த அமைதி அவனை ஆக்கிரமித்திருந்தது. ஏதோ ஒரு ரம்மியம் சூழ்ந்து அவனை அரவணைத்துக் கொண்டிருப்பதைப் போலுணர்ந்தான். அதே சமயத்தில் எரிச்சலில் சிக்குண்டதைப் போலவும் இருந்தது.

 

‘என்ன இம்சை இது?’ என வீட்டுக்குச் சென்றால் எப்போதும் வீட்டின் முன்னால் அவன் கார் நிறுத்தி வைத்திருக்கும் இடத்தில் வேறொரு கார் நின்றிருப்பதைக் கண்டான். அவனுக்கு எரிச்சலின் அளவு தங்கம் விலை போல் கூடிப் போனது.

error: Alert: Content selection is disabled!!