சதிராடும் சித்திரமே 20 – 1

அத்தியாயம் – 20

கிஷோர் அப்படி திவ்யதர்ஷினியை எடை போடும் பார்வை பார்ப்பதை மித்ரன் சற்றும் விரும்பவில்லை.

 

“என்ன கிஷோர்?” என அவன் கவனத்தைக் கலைக்க, “இல்ல.. இவங்களை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு பார்த்தேன். இவங்க சந்தோஷோட லவ்வர் தானே?” எனப் பட்டென்று சந்தேகத்துடன் வினவினான்.

 

படக்கென இருக்கையிலிருந்து எழுந்துவிட்டான் மித்ரன். கிஷோரின் வார்த்தைகளின் வீரியம் அவன் உடலில் நடுக்கத்தை வரவழைத்தது.

 

“அம்மாவுக்கு உதவியா புதுசா வேலைக்கு சேர்ந்திருக்காங்க. அவங்க சொந்த விஷயம் பத்தியெல்லாம் எனக்குத் தெரியாது” என்று மித்ரன் சொன்னாலும் அவன் மனம் உலைக்களமாய்க் கொதித்துக் கொண்டிருந்தது. ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

 

பொசுக்கென்று அவனுக்குச் சொந்தமானவளை வேறொருத்தனுடன் கோர்த்துவிட்டானே. பேச்சுக்குக் கூட அவளை யாருக்கும் விட்டுத் தர முடியாது. அவன் தன் மனதைத் திறந்த பொழுது அவளும் சந்தோஷை விரும்புகிறேன் என்று சொல்லவில்லையே.

 

“அதில்ல மித்ரன். நம்ம பைனான்ஸ்ல சந்தோஷ் தொழில் தொடங்கறதுக்காக லோன் அப்ளை பண்ணியிருக்கான். அவன் ப்ராஜக்ட் பத்தி மேலும் தெரிஞ்சிக்க அவனை ஏற்கனவே சந்திச்சிருக்கேன்” என்றான் கிஷோர்.

 

கிஷோர் சொன்னது அனைத்தும் முற்றிலும் உண்மை. சந்தோஷ் தான் புதிய தொழில் தொடங்குவதற்காகப் பல இடங்களில் கடனுதவி கேட்டிருக்கிறான். தொழில் விரிவடைய வேண்டுமானால் அவன் வைத்திருக்கும் பணம் மட்டும் போதாது. ஆகவே தெரிந்த இடத்தில் எல்லாம் பணத்திற்காக கடனுதவி கேட்டிருந்தான்.

 

ரதிப்ரியா நேற்று கிஷோரை அழைத்து அழுததும் அவன் முதல் வேலையாக திவ்யதர்ஷினியின் மொத்த ஜாதகத்தையும் ஒரே நாளில் புரட்டி எடுத்து விட்டான். அவளுக்கும் சந்தோஷூக்குமான உறவைக் கண்டுபிடித்தான்.

 

பழம் நழுவி பாலில் விழுந்ததைப் போல் சந்தோஷ் அவனிடம் கடனுதவி கேட்டிருக்கிறான் எனத் தெரிந்ததும் திட்டம் ஒன்றை உருவாக்கி, மெதுவாகக் காயை நகர்த்த ஆரம்பித்தான் கிஷோர்.

 

“இவங்க ஃபோட்டோவைக் காட்டி இவங்க ரெண்டு பேரும் திருமணம் செய்துக்கப் போறதாகவும், அவன் தொழிலில் ஓரளவுக்கு நிலையாகும் வரையில் இருவரும் காத்திருக்கிறார்கள் என்றும் சந்தோஷ் சொன்னான். இல்லைனா எனக்கு எப்படி இவங்களைத் தெரியும்?” என அமைதியாகச் சொல்லவும், மித்ரனுக்கு இருப்புக் கொள்ளவில்லை.

 

தான் சொன்ன விஷயத்தில் எள்ளளவும் உண்மை இல்லை என்று கிஷோருக்குத் தெரியும். சந்தோஷ் அப்படியெல்லாம் திவ்யதர்ஷினியின் புகைப்படத்தைக் காட்டவில்லை. ஆனால் அவன் விசாரித்த வரையில் சந்தோஷின் அன்னை திவ்யதர்ஷினியைக் காட்டி இவள் தான் என் வீட்டு மருமகள் என அனைவரிடமும் டமாரம் அடித்துக் கொண்டிருந்தார்.

 

அந்த விஷயம் கிஷோரின் செவிகளை எட்டியது. மித்ரனிடம் போய் சந்தோஷின் அன்னை சொன்னார் என்றால், ‘உனக்கு அவரை எப்படித் தெரியும்?’ எனக் கேள்விகளால் துருவுவான்.

 

ஆகவே அதையே அவன் திரித்து அவர்கள் காதலர்கள், கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று சந்தோஷ் சொன்னான் என மித்ரனிடம் தெரிவித்தான் கிஷோர்.

 

அப்படிச் சொன்னால் மித்ரனின் மனம் கல் விழுந்த குளம் போல் கலங்கிவிடும். கலங்கிய குட்டையில் மீனைப் பிடிப்பது எளிதாகி விடும். முதலில் மித்ரனுக்கு அவள் மேல் சந்தேகத்தை வரவழைக்க வேண்டும். பிறகே அவன் மனம் மாறி ரதிப்ரியாவின் பக்கம் திரும்புவான் என கிஷோரின் புத்தி கணக்கிட்டது.

 

“இவங்க கூட கட்டடக்கலைப் படிச்சிட்டு இத்தனை நாள் வேறு ஒரு நிறுவனத்துல வேலையில இருந்தாங்க போல. இப்போ சமீபமா தான் வேலையை மாத்திட்டாங்கனு சந்தோஷ் சொன்னான். ஆனா இங்க வந்து வேலை செய்வாங்கன்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கலை”

 

தொடர்ந்து வந்த கிஷோரின் வார்த்தைகள் மித்ரனின் மனதில் சந்தேக விதையைத் தூவி தண்ணீர் ஊற்ற ஆரம்பித்தன.

 

“இவங்களுக்குமே தனியா ஒரு கட்டட நிறுவனம் ஆரம்பிக்கணும்னு திட்டமிருக்கு போல. பணம் கொஞ்சம் பத்தலைன்னு சந்தோஷ் சொன்னான். கடனுதவி வேணும்னா என்கிட்டே வரச் சொன்னேன்.

 

முதல்ல நல்ல ப்ராஜக்ட் கிடைக்கணும். அதற்கு யாராவது உதவுவாங்களான்னு எல்லா இடத்துலேயும் எல்லா விதத்துலேயும் இவங்க முயற்சி பண்ணிட்டு இருக்காங்க. அப்படியொரு பிராஜெக்ட் கிடைச்சதும் சொல்லறேன் என சந்தோஷ் சொன்னான்” எனத் தொடர்ந்து கிஷோர் நஞ்சை நெஞ்சமெல்லாம் பாய்ச்சிக் கொண்டிருந்தான்.

 

அவன் சொல்வது அனைத்தும் மித்ரனுக்குத் தெரியும். தெரியாதது சந்தோஷை இவள் கல்யாணம் செய்து கொள்ளப் போவது மட்டுமே. ‘அது கண்டிப்பாக உண்மையாக இருக்காது’ எனத் தனக்குத் தானே சொல்லிக் கொண்டான் மித்ரன்.

 

“மித்ரன் எனக்கு ஒரு சந்தேகம். ஒருவேளை உன்கிட்ட உதவி கேட்கறதுக்கு இப்படி குறுக்குவழியில உன் வீட்டுல வேலைக்கு வந்திருப்பாங்களோ? இல்லைனா படிச்ச படிப்புக்கு ஏற்ற வேலையில சேராம, சம்பந்தமே இல்லாத வேலைக்கு ஏன் வரணும்?” எனக் கிஷோர் அவன் மனதில் வெற்றிகரமாகச் சந்தேக விதையை ஊன்றி நட்டுவிட்டான்.

 

“உனக்குச் சொல்ல வேண்டியது இல்லை. நிறுவனத்துல வேலைக்குச் சேர்ந்தா நீ உதவ மாட்டேன்னு தெரிஞ்சிருக்கும். அதான் இந்த வழியை தேர்ந்தெடுத்திருப்பாங்க. வெரி ஸ்மார்ட். ஆனா எதுக்கும் நீ ஜாக்கிரதையா இருந்துக்கோ” என மேலும் சற்றுநேரம் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் கிஷோர்.

 

கிஷோர் கிளம்பிய அடுத்தக் கணமே திவ்யதர்ஷினியைத் தேடிச் சென்றான் மித்ரன். அவள் ஏற்கனவே வீட்டுக்குச் சென்றுவிட்டாள் என்று மீனாட்சி சொல்லவும், தன்னிடம் கூட சொல்லாமல் எப்படிப் போகலாம் என அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது.

 

சசிதரன் அன்று டெல்லிக்குக் கிளம்புவதால் அவள் நேரத்திலேயே கிளம்பிவிட்டாள் எனக் கூடுதலாகத் தகவல் தந்தார் மீனாட்சி. அவருக்கு மகனின் முகத்தையும் செய்கையும் வைத்து அவன் மனம் லேசாகப் புரிவதைப் போலிருந்தது.

 

எங்கே ரதிப்ரியவைத் திருமணம் செய்து கொள்வானோ என ஒருவித கலக்கமாக இருந்தது அவருக்கு. ஆனால் மகனின் மனம் திவ்யதர்ஷினியை நாடுகிறது எனப் புரிகையில் அவர் மனம் பூரிப்பில் திளைத்தது.

 

அன்னை சொல்வதைக் கேட்டு ஏமாற்றம் கலந்த ஆத்திரம் வந்தது மித்ரனுக்கு . ஒருவேளை நான் உதவுவேன் என்றா தன் வீட்டுக்கு வேலைக்கு வந்து சேர்ந்தாள்?

 

மித்ரன் கட்டடக்கலையில் நன்கு தேர்ச்சிப் பெற்றவன். அத்தோடு அவனது நிறுவனமும் சென்னையிலேயே முதலிடத்தைப் பிடித்திருந்தது. ஆகவே அவனிடம் உதவி பெறுவதற்காகப் பலரும் வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

 

அப்படியெல்லாம் அனைவருக்கும் அவனால் உதவி செய்து கொண்டிருக்க முடியாது என அனைவரையும் ஒதுக்கிவிட்டான். பிறகு அவன் தொழில் என்னாவது?

 

தன் நிறுவனத்தில் வேலைக்கு வந்தால் அவனை ஒப்புக் கொள்ள வைக்க முடியாது என்று எண்ணியே வீட்டிற்கு வந்திருக்கிறாளோ? அவள் அவனிடம் இந்தத் துறையைப் பற்றியல்லவா நிறையப் பேசியிருக்கிறாள்.

 

அவன் வரைந்து வத்திருந்ததை எல்லாம் நோட்டம் வேறு விட்டிருக்கிறாள். குட்டையைக் குழப்பிவிட்டு சென்றுவிட்டான் கிஷோர். மித்ரன் மனம் கலங்க ஆரம்பித்தது. இப்படியே எத்தனை நேரம் தனியாகக் குழம்பிக் கொண்டிருப்பது?

 

பேசாமல் அவளிடமே நேரடியாகக் கேட்டுவிடலாம் என எண்ணி திவ்யதர்ஷினியை அழைத்தான் மித்ரன். ஆனால் அவனின் அழைப்பு ஏற்கப்படவே இல்லை.

 

எத்தனையாவது அழைப்பு என்று கணக்கில்லை. தொடர்ந்து அவளை அழைத்துப் பார்த்துச் சலித்துப் போனான். அழைப்பு எடுக்கப்படாமல் போகக் கடுஞ்சினம் தோன்றியது அவனுக்கு. அவன் அழைப்பை எடுக்கும் அளவுக்குக் கூட அவனுக்கு முக்கியத்துவம் தரவில்லையா?

 

அதே நேரத்தில்…

 

அங்கே ரயில்நிலையத்தில் சசிதரனுக்குப் பல அறிவுரைகளும், சில ஆலோசனைகளும் வழங்கி, நீர்வீழ்ச்சியாய்க் கண்ணீரைச் சிந்தி, அவனுக்கு வாழ்த்துச் சொல்லி அனுப்பி வைத்தாள் திவ்யதர்ஷினி.

 

முரளிதரனும் அவளும் ரயில் நிலையத்துக்குச் சென்று சசிதரனை ரயிலில் ஏற்றிவிட்டு வந்தனர். அந்தக் கூட்ட நெரிசலிலும், இரைச்சலிலும், தம்பியைப் பிரியப் போகிறோம் என்ற வேதனையிலும் கைப்பையில் வைத்திருந்த அலைபேசி அடிப்பது சற்றும் திவ்யதர்ஷினிக்குக் கேட்கவில்லை.

 

அடிபட்ட புலியாய் மித்ரன் தனது அறைக்குள் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்க அவனின் கைப்பேசி சிணுங்கியது. திவ்யதர்ஷினி தான் அழைத்து விட்டாளோ என எதிர்பார்ப்புடன் எடுக்க, தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்திருந்தது.

 

அழைப்பை எடுத்தது தான் தாமதம், “உனக்கு ஒரு தரம் சொன்னா புரியாதா? ஏன் சும்மா சும்மா தர்ஷியைத் தொந்தரவு பண்ணிட்டு இருக்க? அவள் தான் உன்னை ஏற்கனவே துஷ்டன்னு சொல்லிட்டாளே. எதுக்காக அவளை மயக்கப் பார்க்கிற?” என ஆரம்பத்திலேயே ஏகவசனத்தில் எதிர்முனையில் இருந்தவன் பேச ஆரம்பித்தான்.

 

“யாருடா நீ? ராங் நம்பருக்குக் கூப்பிட்டு உளறிட்டு இருக்க” என மித்ரன் கேட்க,

 

“சரியான நம்பருக்குக் கூப்பிட்டுத்தான் பேசிட்டு இருக்கேன். என் பெயர் சந்தோஷ். தர்ஷியைக் கல்யாணம் பண்ணிக்கப் போறவன். நம்ம ஏற்கனவே சிலமுறை பார்த்திருக்கோம். ஞாபகமில்லை” என்றான் எதிர்முனையில் இருந்த சந்தோஷ்.

 

மித்ரனின் நெஞ்சம் முழுவதும் விறகுகள் அடுக்கி வைத்துத் தீ மூட்டியதைப் போல் தகதகவென்று பற்றி எரிந்தது.

 

“என்ன அமைதியாகிட்ட. நானும் அவளும் சின்ன வயசுல இருந்தே ஒன்னா பழகிட்டு இருக்கோம். உயிருக்கு உயிரா காதலிக்கிறோம். எனக்கும் அவளுக்கும் கூடிய சீக்கிரம் கல்யாணம் நடக்கப் போகுது. நீ வந்து நடுவுல குழப்பிட்டு இருக்காத” என சந்தோஷ் சொல்லவும் கையிலிருந்த அலைபேசியைத் தூக்கித் தூர வீச வேண்டும் என்ற கோபம் கனன்றது மித்ரனுக்கு.

 

“ரொம்ப நாளா கட்டட நிறுவனம் ஆரம்பிக்கணும்னு பெரிய கனவு வச்சிருக்கா தர்ஷி. அதுக்காகத் தான் உன் வீட்டுக்கு வேலைக்குக் கூட வந்தா. ஆனா நீ அந்தக் கனவை உனக்குச் சாதகமாப் பயன்படுத்தி அவளுக்கு உதவறேன்னு ஆசை காட்டி மோசம் செஞ்சிடாத.”

 

சந்தோஷ் பேசப், பேச மித்ரனுக்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்று கூடத் தெரியவில்லை. அவள் தன்னிடம் உதவியை நாடியா வந்தாள்? அதற்காக ஏன் நடிக்க வேண்டும்? தன் மனதையும் கலைக்க வேண்டும்?

 

error: Alert: Content selection is disabled!!