அரவம் கேட்டு திரும்பி பார்த்த திவ்யதர்ஷினி, “என்ன வத்சன் சாப்பிடலையா?” என முயன்று வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன் கேட்டாள்.
“என்ன நடக்குது?” என வத்சன் புருவம் உயர்த்தி அவளைப் பார்க்க, “ஒன்னும் பெருசா இல்ல. தம்பி டெல்லிக்குக் கிளம்பிப் போனது ஒரு மாதிரியா இருக்குது” என அவன் நம்பும்படியாக ஒரு காரணத்தைச் சொன்னாள்.
மித்ரனின் கைப்பேசியில் அவளது புகைப்படத்தைப் பார்க்காமல் இருந்திருந்தாலோ, அல்லது மித்ரன் அவளிடம் கோபத்தில் கத்தாமல் இருந்திருந்தாலோ அதை நம்பியிருப்பான்.
“நம்பற மாதிரி ஒரு காரணத்தைச் சொல்லு தர்ஷ்” என அவளை அளவிட்டான்.
“வேற என்ன இருக்குது. நிஜமா சசி ஊருக்கு போனது ஒரு மாதிரியா இருக்கு” என அவள் அதையே திருப்பிச் சொன்னாள்.
“உனக்கும் மித்ரனுக்கும் நடுவுல என்ன பிரச்சனை? அவன் காதலை நீ ஏத்துக்கலையா? அதான் கோபமா இருக்கானா?” என அவன் ஊகித்த காரணத்தை நேரடியாகவே கேட்டுவிட்டான். எப்படியோ வத்சன் தெரிந்து கொண்டான் என அதற்குமேல் திவ்யதர்ஷினியும் மறைத்துக் கொண்டிருக்க அரும்பாடு படவில்லை.
“இதை அவர்கிட்டேயே கேட்க வேண்டியது தானே? தேவையில்லாத பேச்சையெல்லாம் என்கிட்டே பேசாதீங்க வத்சன்” என வேலையில் கவனமானாள்.
“அவன் பதில் சொல்லிட்டுத் தான் அடுத்த வேலையைப் பார்ப்பான் பாரு. தர்ஷ், சொல்லேன். என்ன நடந்தது? அவன் உன்னை விரும்புறான்னு தெரியுது. இத்தனை வருஷத்துல அவன் யாருக்காகவும் இப்படித் தன்னிலை இழந்து நான் பார்த்ததில்லை” என உண்மையை உரைத்தான்.
“அவர் ரதியைக் கல்யாணம் பண்ணிக்கிறதா இருந்தாரே” என அவள் சொல்ல, “நானும் அப்படி நினைச்சேன். ஆனா அவனுக்கு அவளைப் பிடிக்கலைன்னு நினைக்கிறேன்” என்றான்.
“இல்லை, அவங்களைக் கல்யாணம் பண்ணிக்கறதா இப்போ என்கிட்டே சொன்னார்” என்றாள்.
“ஏதாவது கோபத்துல சொல்லியிருப்பான். அவன் ரொம்ப நல்லவன். அவன் ஏதாவது தப்பு பண்ணியிருந்தா மன்னிச்சுடு. அவன் காதலை ஏத்துக்கோ” எனச் சொல்ல, “நீங்க கூட நல்லவங்கன்னு மித்ரன் சொன்னார். பார்க்கிற நல்லவங்களையெல்லாம் காதலிக்க முடியுமா?” என நக்கலாகக் கேட்டாள்.
“என் விஷயம் வேறு தர்ஷ். நான் நல்லவன்னு வெளியில காட்டிக்குவேன். ஆனா அவன் அப்படிக் காட்டவே மாட்டான். அவனுக்கு நடிக்கத் தெரியாது. பிளீஸ் புரிஞ்சுக்கோ. சின்ன வயசுல இருந்து அவன் அம்மாவோட வளரலை” எனப் பரிதாப அலையை பறக்க முற்பட்டான்.
“நான் கூட அம்மாவோட வளர முடியலை. எனக்கும் அந்தக் குடுப்பினை இல்லை. அதுக்காக நான் என்ன அவர் மாதிரியா நடந்துக்கிறேன்?” என அவனை மடக்கினாள்.
“ப்ச்.. என்ன தர்ஷ், எந்த ‘சைட்’ போனாலும் இப்படி ‘கோல்’ போடுற? உங்களுக்குள்ள என்ன பிரச்சனைன்னு எனக்குத் தெரியாது. அவனுக்கு நிறைய நம்பகத்தன்மை இருக்கு. என்கிட்டே கூட அவன் பேசறதில்லை” என அவனுக்கும் மித்ரனுக்கும் இடையில் இருக்கும் பிரச்சனையைப் பற்றிச் சொன்னான்.
“அவன் யார் மேலே அதிகமா நம்பிக்கை வைக்கிறானோ அவங்க கோட்டை விட்டு அப்படி இப்படின்னு விலகிடக் கூடாது. அவன் நம்பிக்கை உடைந்து போய்விட்டதா நினைப்பான். அவனுக்கு இன்னொரு சான்ஸ் கொடேன் “ எனத் தொடர்ந்து அவனுக்காகக் கெஞ்சினான் வத்சன்.
“உங்களுக்கும் அவருக்கும் எவ்வளவு வருஷப் பழக்கம்?” எனக் கேட்டாள்.
“கிட்டதட்ட ஒன்பதரை வருஷமா பழக்கம். அதுல கடந்த ரெண்டு வருஷமா பேச மாட்டேங்கிறான்” என வத்சன் சொல்ல, “ஒன்பதரை வருஷத்துக்கே இந்த நிலைமைனா ஒன்பதே மாசம் தெரிஞ்ச எனக்கு என்ன நிலைமைன்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க வத்சன்” என்றாள் திவ்யதர்ஷினி.
போட்டாளே ஒரு போடு! “ப்ச் அதில்ல தர்ஷ். என் விஷயம் வேற. ஆனா அவனுக்கு உன்னைப் பிடிச்சிருக்கு” என அவன் மித்ரனுக்காக வாதாடிக் கொண்டிருந்தான்.
“சபாஷ், உனக்கு டிஸ்கௌண்ட் கொடுப்பான்னு சொல்லற மாதிரி இருக்கு. விருப்பமான்னு முழுசா புரிஞ்சு, விரும்பலாமானு யோசிக்கிறதுக்குள்ளயே வெறுப்பை இப்படிக் கொட்டுனா என்னால எப்படி வாழ்க்கை முழுவதும் இதைத் தாங்கிக்க முடியும்?” என அவள் மசிவதாக இல்லை.
“கொஞ்சமாவது போராடலாமே..” என மித்ரனுக்காகக் கொடியை உயர்த்திப் போராடாத குறையாகப் பேசினான். ஆனால் அவள் மசியவில்லை.
“எப்படியும் போர் மூளும்னு தெரிஞ்சதுக்கு அப்புறமும் ஏன் போராடனும். என்னால முடியாது. எனக்கு அப்படிப்பட்ட வாழ்க்கைத் தேவையே இல்ல” என்றாள். அவனுக்கும் இதற்குமேல் பேச வார்த்தைகள் கிடைக்கவில்லை.
“ஆசைப்படலாம் அப்படின்னு மனசு கொஞ்சம் சஞ்சலப்பட ஆரம்பிக்கிறப்போவே ஆசையைத் தூக்கிக் கால்ல போட்டு நசுக்கி மிதிச்சா பரவாயில்லை. ஆனா தீயிலிட்டுக் கருக்கிட்டார். வெறும் சாம்பல் தான் இருக்குது. உனக்கு என்ன தகுதி இருக்குனு கேட்கிற மாதிரி இருக்கு. வேண்டாம்டா சாமி. ஆளை விடுங்க” எனக் கையெடுத்துக் கும்பிட்டவள்,
“எனக்கு முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்குது. நான் போய் அதைக் கவனிக்கிறேன். அப்புறம் சொல்ல மறந்துட்டேன். இன்னும் ஒரு வாரத்துல ஆறு மாசக் கெடு முடியப் போகுது.
அதுக்கப்புறம் நான் வேலையை விட்டுடலாம்னு இருக்கேன். ஆன்ட்டிக்கு விருது கொடுக்கும் விழாக்குப் பிறகு நான் வரலை. மெயில் அனுப்பனும்னா சொல்லுங்க அதையும் செய்யறேன்” என வத்சனிடம் கறாராகச் சொன்னாள்.
“எதுக்கு இப்ப வேலையை விட்டுட்டுப் போற? அவன் மேல கோவம்னா அவன்கிட்ட காட்டு. என் மேல ஏன் கோவத்தைக் காட்டற?அதை விட்டுட்டு ஏன் வேலையை விடற? நான் தான் உனக்குச் சம்பளம் கொடுக்கிறேன். அவனில்லை” என வத்சன் சற்றுக் கோபமாகவே பேசினான்.
“எதுக்கு வம்பு ? நான் எதுக்கும் எல்லோர்கிட்ட இருந்தும் தூரத் தள்ளியே நின்னுக்குறேன். இல்லைன்னா மயக்கறதுக்காக வந்தியான்னு நாளைக்கு நீங்களும் கேட்பீங்க” என திவ்யதர்ஷினி சொல்லவும் வத்சனுக்குப் பிரச்சனையின் நுனி பிடிபட்டுவிட்டது.
ஆக மொத்தம் எதையோ மித்ரன் தவறாக எண்ணிக் கொண்டு இவளிடம் சந்தேகப்பட்டுப் பேசி விட்டான். எதிரிலிருப்பவளைக் கூர்ந்து பார்த்தான். இவளைப் பேசி மாற்ற முடியாது என்று அவளது பிடிவாதமான முகத்திலிருந்து அவனுக்குத் திட்டவட்டமாகத் தெரிந்தது.
ஆரம்பத்திலேயே அவன் நண்பனுக்காக அவளிடம் ஆலோசனை கேட்கையில் அவள் சொன்னது வத்சனின் காதுகளில் ஒலித்தது. ‘இது மனம் சம்பந்தப்பட்டது. அவங்களா சரியாக வரைக்கும் யாராலும் எதையும் செய்ய முடியாது’
‘ம்ஹ்’ எனப் பெருமூச்சு விட்டவன், பார்க்கலாம் எத்தனை நாட்கள் இந்த மித்ரன் இப்படித் தெனாவெட்டாகத் திரியப் போகிறான் என்று. உண்மையில் இவளை விரும்பியிருந்தால் கூடிய சீக்கிரமே தவறுணர்ந்து வருவான்.
“என்ன, என்னை வச்சி அப்படியே நீங்களும் உங்களுக்கு தூது விட்டு ஒன்னு சேரலாம்னு போட்ட பிளான் பிளாப்பா?” என அவள் நக்கலாகக் கேட்கவும் அவன் பக்கென்று சிரித்துவிட்டான்.
“போய்க் குடும்பப் பாட்டு பாடிச் சேரணும். இன்னொருத்தரோட குடுமியைப் பிடிச்சுட்டு ஒன்னு சேரக் கூடாது” எனத் தொடர்ந்து அவள் சொல்லவும், “சான்ஸஸே இல்லை தர்ஷ்” என அவன் மேலும் சிரிக்க, சரியான நேரத்தில் தப்பா என்ட்ரி கொடுப்பது போல் கீழே இறங்கி வந்தான் மித்ரன்.
அவன் இதழ்கள், ‘விலகிப் போ” எனக் கோபக் கணைகளை வீசிவிட்டாலும் நெஞ்சம் மட்டும் கையில் ஒட்டிக் கொண்ட செந்தூரமாய் அவளையே அப்பிக் கொள்கிறேதே. ஆனால் இத்தனை நடந்தும் இவளுக்குக் கவலையேயில்லையா?
அல்லது, ஒன்று இல்லையென்றால் இன்னொன்று என்று தாவிவிட்டாளா? அவள் தான் அப்படியென்றால் வத்சனும் இப்படிச் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிறானே. துரோகி!
“சரி உன் இஷ்டம்… இதற்கு மேலே நான் வற்புறுத்தலை. ஒரு மெயில் மட்டும் அனுப்பிடு” என வத்சன் அங்கிருந்த உணவறையை நோக்கி நகர்ந்தான்.

