சதிராடும் சித்திரமே 22 – 2

மறுநாள் செய்தித்தாள்களில் புகைப்படத்துடன் சசிதரன் வெற்றிபெற்றது வெளிவந்தது. அதை எடுத்துக் கொண்டு வந்து பெருமையுடன் மீனாட்சியிடம் காட்டினாள் திவ்யதர்ஷினி.

 

மூன்று நாட்கள் கழித்து சசிதரன் வீடு திரும்பினான். அவன் வந்த விஷயம் கேட்டு பத்திரிக்கைளில் அவனைப் பேட்டி எடுக்க அவன் வீட்டுக்கே வந்துவிட்டனர். முரளிதரன் எவ்வளவோ மறுத்தும் திவ்யதர்ஷினி அவரைக் கட்டாயப்படுத்தி அவரையும் உடன் நிறுத்தி அனைவரும் குடும்பமாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

 

குடும்பப் புகைப்படத்துடன் சசிதரன் வெற்றி பெற்றது மறுநாள் அனைத்து பத்திரிக்கைகளிலும் அவனது பேட்டியுடன் வெளிவந்தது. அதுவே திவ்யதர்ஷினியின் வாழ்க்கையைப் புரட்டியும் போட்டது.

 

*****

மறுநாள்! மீனாட்சிக்குப் பாராட்டுவிழா. திவ்யதர்ஷினியின் வேலைக்கு இறுதி நாள். ஏற்கனவே அனைத்து வேலைகளையும் ஒழுங்குபடுத்தி முடித்துவிட்டாள். மறுநாள் மீனாட்சியின் வீட்டிற்கு சென்று அனைத்தையும் அவரிடம் ஒப்படைத்துவிட்டால் இனி அவருக்கும் அவளுக்குமான தொடர்பு அறுந்துவிடும்.

 

மனம் ஒரு மாதிரி பாரமாக இருந்தது அவளுக்கு. கள்ளமில்லாமல் அன்பு செலுத்தினார் மீனாட்சி. அவரிடம் பேசாமல் இருப்பது பெரிய இழப்பே என்றாலும் மித்ரனின் அன்னையாகப் போய்விட்டாரே. அதனால் அவரிடமிருந்து தொடர்பை அறுத்துக் கொள்வதே உசிதம். இல்லையென்றால் அவள் மனஉளைச்சலுக்கு ஆளாகக்கூடும்.

 

விழா அங்கிருந்த ஒரு பெரிய அரங்கில் நடைபெற்றது. விருந்தின் முக்கிய விருந்தாளிகள் ஒவ்வொருவராகப் பேசி மீனாட்சியை வெகுவாய்ப் பாராட்டினர். இறுதியில் மீனாட்சியின் முறை வந்தது. அவர் பேசி முடித்ததும் அவருக்கு விருது வழங்குவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

அதன்படியே மீனாட்சி சைகை மொழியில் பேசப் பேச, திவ்யதர்ஷினி அதை மற்றவர்களுக்கு தமிழில் மொழிப் பெயர்க்க வேண்டும். ஆகவே அவள் மேடையில் மீனாட்சியின் அருகிலேயே நின்று கொண்டிருந்தாள்.

 

விருது வழங்கும் விழா என்று தன் நண்பனான கிஷோரையும் அழைத்திருந்தான் மித்ரன். உடன் ரதிப்ரியாவும் வந்து அவனருகில் அமர்ந்திருந்தாள். மித்ரன் வத்சனிடம் எதுவும் சொல்லவில்லை. ஆனால் அவனும் விழாவுக்கு வந்திருந்தான்.

 

மித்ரனின் சித்தப்பா குடும்பத்தினரும் வத்சனுக்கு அருகில் முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர். அவன் சித்தப்பா மேடையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த திவ்யதர்ஷினியைப் பார்த்து புருவம் சுருக்கினார்.

 

‘யார் இந்தப் பெண்? பார்த்த முகம் போலிருக்கிறதே?’ என அவளையே குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்தார்.

 

முதல் வரிசையில் அமர்ந்திருந்த வத்சனைப் பார்த்துப் புன்னகைத்தவாறே திவ்யதர்ஷினி பேச்சைத் துவங்கினாள். அதைப் பார்த்த ரதிப்ரியா மெதுவாக மித்ரனின் காதருகே குனிந்து, “வத்சனும் இவளும் ரொம்ப க்ளோஸ் போல” எனக் கிசுகிசுத்தாள்.

 

‘அது அவனுக்கு தெரியாதா என்ன? இவள் சொல்லித் தெரிய வேண்டுமா?’ என மித்ரனுக்கு எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது. எதையும் முகத்தில் காட்டாமல், “அதைப் பத்தி எனக்குக் கவலையில்லை” என விட்டேற்றியாகப் பதிலைச் சொல்லிவிட்டு மேடையைக் கவனித்தான்.

 

அதாவது திவ்யதர்ஷினியை! அவளின் குரலைக் கேட்க கேட்க மித்ரனின் உள்ளுக்குள் கலவையான உணர்வுகள் பொங்கி நுரைத்தன. குற்றம் சாட்டியதும் வேறு யாராவதாக இருந்திருந்தால் பெரிய நாடகத்தை அரங்கேற்றி, ‘என் மேல் பொய் குற்றம் சாட்டிவிட்டாய்’ எனப் பணம் பறித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பியிருப்பார்கள்.

 

இவளானால் எதையும் பொருட்படுத்தாமல் அவனிடம் பேசுவதை நிறுத்திவிட்டாள். அதே சமயத்தில் பொறுப்புணர்ந்து அவன் அன்னைக்குச் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் செய்து முடித்துவிட்டுக் கிளம்புகிறாள். அப்படி இருப்பவள் தப்பானவளாக, பொய்யானவளாக இருக்க முடியுமா என்ன? மித்ரனின் மனம் ஊசலாடியது.

 

அவளின் பார்வையும் பேச்சும் நேர்மையை மட்டுமே பறைசாற்றுகின்றனவே. அப்படி இருக்கையில் இவள் காதல் நாடகம் ஆடுவாளா என்ன? அல்லது, தன்னை ஏமாற்றி விடுவாளா? கீழே அமர்ந்திருந்த மித்ரனின் மனம் தராசு தட்டைப் போல் அப்படியும் இப்படியும் ஆடிக் கொண்டிருந்தது.

 

கிட்டத்தட்ட அரை மணி நேரமாக மீனாட்சி சைகை மொழியில் சொல்வதை வாய்மொழியாகப் பேசிய திவ்யதர்ஷினி இறுதியில் நன்றியைத் தெரிவித்தாள். அரங்கில் கரகோஷம் காதுகளைப் பிளந்தது.

 

இதற்கிடையில் மித்ரனின் சித்தப்பா குடும்பம் வேறு ஒரு விழாவுக்குச் செல்ல வேண்டும் என திவ்யதர்ஷினி பேச்சை முடித்ததும் கிளம்பினர்.

 

பேச்சு அவள் எழுதிக் கொடுத்தது என்று மித்ரனுக்கு தெரியும். பேச்சைக் கேட்பவர்களுக்கு அது உத்வேகமும் தன்னம்பிக்கையும் கொடுப்பதாக இருந்தது. விழாவை ஏற்பாடு செய்தவர் மேடைக்கு வந்து, மீனாட்சியை வெகுவாய்ப் பாராட்டி விருதை வழங்கினார்.

 

பரிசை வாங்குவதற்கு முன்னர் மீனாட்சி கீழே அமர்ந்திருந்த தன் மகனைப் பார்த்து அவனையும் மேலே வருமாறு சொன்னார். மித்ரன் சில கணங்கள் தயங்கினான். பின்னே அவர் மகனென்று அவரின் முன்னேற்றத்திற்கு அவன் எதையும் செய்யவில்லை. பார்க்கப் போனால் அங்கே வத்சனே செல்ல வேண்டும் என அவனைத் திரும்பிப் பார்த்தான்.

 

இரண்டு இருக்கைகள் தள்ளி அமர்ந்திருந்த வத்சன், “நீ போனா சித்தி ரொம்பச் சந்தோஷப்படுவாங்க. போய் அந்தச் சந்தோஷத்தையாவது அவங்களுக்குக் கொடு. நீ அவரோட மகன்னு ஊரறிய எல்லோருக்கும் அவர் தெரியப்படுத்தனும்னு ஆசைப்படறாங்க. ஏற்கனவே என்கிட்டே சொல்லிட்டாங்க.” என அதுவரையில் தீவிரமாகச் சொன்ன வத்சன்,

 

“எல்லோரும் என்னை அவரோட மகனா நினைச்சுப் பொண்ணுங்களைக் கூட்டிட்டு வந்து லைன்ல நிறுத்துறாங்க கல்யாணத்துக்கு” எனக் கிண்டலாக முடித்தான்.

 

எது எப்படியோ? மித்ரனுக்கும் அவன் அன்னைக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் உறவு சுமுகமாக இருக்கிறது. என்ன அவன் நாடகமாடி விட்டான் என்று அவனிடம் தான் பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொள்கிறான் மித்ரன். கூடிய சீக்கிரம் மனம் மாறுவான் என எண்ணிக் கொண்டான் வத்சன்.

 

மேடையில் இருந்த அனைவரும் மித்ரனையே பார்க்க அதற்குமேல் அவன் தாமதிக்கவில்லை. விடுவிடுவென்று மேடையின் மேல் ஏறி தன் அன்னையின் அருகில் போய் நின்றான். அங்கே அவன் நின்றிருந்ததற்கு அந்தப் பக்கம் தான் சற்று தள்ளி திவ்யதர்ஷினி நின்று கொண்டிருந்தாள்.

 

ஒருவேளை வேண்டுமென்றே அந்தப் பக்கம் போய் நின்றானோ என்பது மித்ரனுக்கே வெளிச்சம்.

 

அவனிடம் பேசச் சொல்லி ஒருங்கிணைப்பாளர் சொல்ல அவன் உண்மையை உள்ளபடியே உரைத்தான். அவரின் முன்னேற்றத்திற்கு அவன் எதுவும் செய்யவில்லை என்றும் அனைத்தும் அவரின் சொந்த முயற்சியும் அவன் பெரியம்மா பையன் வத்சனின் உந்துதலும் மட்டுமே காரணம் எனச் சொன்னான்.

 

அதைக் கேட்ட வத்சனின் இதழோரத்தில் புன்னகை விரிந்தது. அவன் எப்பொழுதும் உண்மைக்குப் புறம்பாகப் பேசமாட்டான். என்ன உண்மை என்னவென்று அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் திவ்யதர்ஷினியின் விஷயத்தில் சொதப்பியதைப் போல் சொதப்பி வைப்பான்.

 

மித்ரன் அந்த விருதினை எடுத்து அவன் அன்னையின் கைகளில் தந்தான். புன்னகையுடன் மகன் கையிலிருந்து வாங்கிக் கொண்ட மீனாட்சியின் கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் உதிர்ந்தன.

 

அனைவரின் பார்வையும் அங்கே இருக்க, ‘டிஸ்யூம்’ எனத் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. தொடர்ந்து, “மித்ரன்” என மித்ரனைத் தள்ளிவிட்டு அவன் முன்னால் திவ்யதர்ஷினி நிற்க, அவள் தோள்பட்டையை குண்டு துளைத்தது.

 

அரங்கில் இருந்து அனைவரும் தலைதெறிக்க நாலா பக்கமும் ஓட, வத்சன் மேடையை நோக்கி ஓடினான். குபுகுபுவென்று இரத்தம் வெளியேறி, மித்ரனின் மேல் தெறிக்க, அப்படியே மயங்கிச் சரிய ஆரம்பித்தாள் திவ்யதர்ஷினி.

 

“திவி” எனக் குனிந்து அவளைத் தாங்கிப் பிடித்துக் கொண்ட மித்ரனுக்கு அவள் தோள்பட்டையிலிருந்து குபுகுபுவென்று வெளியேறிய ரத்தத்தைப் பார்த்ததும் அவனது உலகமே இயங்காமல் நின்றது.

error: Alert: Content selection is disabled!!