சதிராடும் சித்திரமே 23 – 2

ஆனால் எக்காலத்திலும் அவன் தன் இயலாமையையும் பலவீனத்தையும் யாரிடத்திலும் காட்டியதில்லை. ஆகவே கை முஷ்டியை இறுக்கி தன்னை அடக்கிக் கொண்டவன், கிஷோரையும் ரதிப்பிரியாவையும் பார்த்து, “தயவுசெய்து இங்கிருந்து போயிடுங்க. இனிமேல் என் கண்ணுல பட்டுடாதீங்க” எனக் கடுஞ்சினத்துடன் சொன்னான்.

 

“மித்ரன்” என இருவரும் அவனை நோக்கி அடியெடுத்து வைக்க, “பிளீஸ் போயிடுங்க… ஆஸ்பிட்டல்ல வச்சு பிரச்சனை செய்யாதீங்க” எனச் சிடுசிடுத்தான். அவன் கோபம் பற்றி அறிந்த கிஷோரும் ரதிப்பிரியாவும் அதற்குமேல் அங்கே நிற்கவில்லை கிளம்பிவிட்டனர்.

 

மருத்துவமனைக்கு வந்த சிறிது நேரத்திலேயே மீனாட்சி கண் விழித்து சுயஉணர்வு பெற்றுவிட்டார். ஆனால் அழுகையிலேயே கரைந்து கொண்டிருந்தார். என்ன இருந்தாலும் அந்தத் தோட்டா தன் மகனை குறி வைத்தல்லவா வந்தது?

 

திவ்யதர்ஷினி அந்நேரம் அங்கே இல்லையென்றால் தன் மகனின் உயிருக்கு என்னவாகியிருக்கும் எனப் பதைத்துப் போனார். திவ்யதர்ஷினி தன் உயிரைத் துச்சமென மதித்து மித்ரனின் முன்னால் பாய்ந்து அந்தக் குண்டைத் தாங்கிக் கொண்டாள்.

 

அப்படியென்றால் உயிரைக் கொடுக்கும் அளவிற்கு அவளுக்குத் தன் மகனின் மேல் அன்பு இருக்கிறது என்பதையும் புரிந்து கொண்டார். ஆனாலும் அவளுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்ற பயத்தில் அழுகையில் கரைந்தார்.

 

வத்சன் அவருக்கருகில் இருந்து அவரைக் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டான். விட்டால் இப்படியே விடிய விடிய அழுது கரைந்து விடுவார் என்று எண்ணிய வத்சன் அவருக்குத் தூக்க மருந்தையும் சேர்த்துக் கொடுக்கச் சொல்லி இப்போது மீனாட்சி உறங்கிக் கொண்டிருந்தார்.

 

அன்னையைப் பார்க்க வருகிறேன் என்று சொன்ன சித்தப்பா குடும்பத்தினரை நாளை காலையில் வருமாறு சொல்லிவிட்டான் மித்ரன். அவன் சித்தியை எதிர்கொள்ளும் சக்தி அவனுக்குக் கண்டிப்பாக அப்போது இல்லை.

 

தன் அன்னைக்குப் பெரிதாக எதுவுமில்லை என்று தெரிந்ததும் மித்ரன் திவ்யதர்ஷினிக்கு அறுவை சிகிச்சை நடக்கும் இடத்துக்கு முன் அடிபட்ட புலியாய் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான். அப்பொழுது தான் சந்தோஷ் அங்கே வந்து சேர்ந்தான். கிஷோரின் முகத்திரையும் கிழிந்தது.

 

சசிதரன் அழுதழுது ஓய்ந்து போய் ஓர் ஓரமாக அமர்ந்திருந்தான். என்ன செய்வதென்று தெரியாமல் அவன் தெம்பின்றி அமர்ந்திருக்கையில் சந்தோஷ் வந்து சேர்ந்தான். அவனுக்கு யானைப் பலம் வந்ததைப் போல் உணர்ந்தான். அவனிடம் ஓடி வந்து அவனைப் பிடித்துக் கொண்டு கதறி கதறி அழுதான் சசிதரன்.

 

சந்தோஷ் அவனைச் சமாதானம் செய்து, “இங்க பாரு சசி, நீ இப்படித் தைரியமில்லமல் இருந்தா உன் அக்கா ரொம்ப வருத்தப்படுவா. அழாத” என அவன் முதுகைத் தட்டிக் கொடுத்து அங்கிருந்த கழிவறைக்கு அழைத்துச் சென்று முகம் கழுவச் சொல்லி மீண்டும் அவனை அங்கே அழைத்து வந்தான்.

 

அதைப் பார்த்துக் கொண்டிருந்த மித்ரனுக்கு ஏனோ தான் தனித்து விடப்பட்டதைப் போல உணர்ந்தான். மனம் வேதனையில் துடித்தது. அத்தனை நேரம் அவனும் அங்கே இருந்தான். இருந்தும் சசிதரன் மறந்தும் கூட அவனிடம் ஒரு வார்த்தை பேசவில்லை.

 

ஆனால் இப்போது சந்தோஷ் வந்ததும் ஓடிப்போய் அவன் தோளில் சாய்ந்து கதறிக் கதறி அழுது கொண்டிருக்கிறான். இவர்களின் பிணைப்புக்கு இடையில் அவனால் நுழையவே முடியாது என்று புரிந்தது. எங்கோ தோற்றுவிட்ட உணர்வு தோன்றியது.

 

முரளிதரன் மகளைப் பார்க்க வேண்டும் என்று சந்தோஷிடம் அடம்பிடித்து அங்கே வந்து அமர்ந்து கொண்டார். அவர் வீட்டுக்குச் செல்லலாம் என மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். ஆனாலும் மகள் கண்விழிக்காமல் எங்கேயும் போகப் போவதாக இல்லை என்று சத்தியாக்கிரகம் செய்தார்.

 

அப்போது அறுவை சிகிச்சை முடிந்து திவ்யதர்ஷினியின உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று மருத்துவர் வந்து சொல்ல, அங்கிருந்தவர்கள் அனைவரும் நிம்மதியாக மூச்சுவிட்டனர். சசிதரனும் சந்தோஷின் பெற்றோரும் மருந்தின் வீரியத்தில் உறங்கிக் கொண்டிருந்த திவ்யதர்ஷினியை வெளியில் இருந்தே பார்த்துவிட்டு வந்தனர்.

 

அவள் கண் விழிக்க கிட்டத்தட்ட ஆறு மணி நேரமாகும் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருந்ததால் சந்தோஷ் பெரியவர்கள் மூவரையும் வீட்டுக்குச் சென்று ஓய்வெடுக்குமாறு பணித்தான். முரளிதரன் மசியவே இல்லை.

 

சந்தோஷ் எப்படியோ ஒரு வழியாக அவரிடம் பேசி அவரைச் சம்மதிக்க வைத்து தன் பெற்றோருடன் அனுப்பி வைத்தான்.

 

அங்கே முன்னே போடப்பட்டிருந்த இருக்கையில் சசிதரனும் சந்தோஷூம் அமர்ந்திருக்க, மித்ரன் சற்று தள்ளியிருந்த இன்னொரு இருக்கையில் தனியாக அமர்ந்திருந்தான். அவன் அன்னை நன்றாக உறங்கிக் கொண்டிருக்க வத்சனை வீட்டிற்குப் போகச் சொல்லிவிட்டான் மித்ரன்.

 

அவன் எவ்வளவு மறுத்தும் மித்ரன் கேட்கவில்லை. ஆகவே மறுநாள் காலையில் வருவதாகத் தெரிவித்துவிட்டு வத்சன் கிளம்பிவிட்டான்.

 

அதிகாலை வேளையில் திவ்யதர்ஷினி கண்விழித்து விட்டதாக செவிலியர் ஒருவர் வந்து தெரிவித்தார். மேலும் சற்று நேரம் அவளைப் பரிசோதித்து விட்டு அறைக்குக் கொண்டு வருவதாக சொல்லிவிட்டுச் சென்றார். அவர் சொன்னபடியே அடுத்த இரண்டு மணி நேரத்தில் திவ்யதர்ஷினியை அறைக்குக் கொண்டு வந்தனர்.

 

திவ்யதர்ஷினி கண் முழித்ததைப் பார்த்ததும் மித்ரன் விரைந்து அவளருகில் சென்றான். அவளோ அவனை வெறித்த பார்வையுடன் நோக்கினாள். அதுவும் சில விநாடிகளே. பின்னர் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். மருந்தின் வீரியத்தால் அவளுக்கு வாயெல்லாம் கசந்து வழிந்தது.

 

கிழிந்த நாராகப் படுத்திருந்தவளைப் பார்க்கையில் அவனுக்கு குற்றவுணர்வு குத்தீட்டியாய் நெஞ்சைத் துளைத்தது. அவனது பலம் முழுவதையும் யாரோ உறிஞ்சுவதைப் போல் உணர்ந்தான்.

 

‘எல்லாம் தன்னால்’ என்ற உணர்வில் அவன் அதரங்கள் இயலாமையில் துடித்தன.

 

பார்வையை விலக்கிக்கொண்ட திவ்யதர்ஷினி அப்பொழுதுதான் அங்கே நின்று கொண்டிருந்த சசிதரனையும் சந்தோஷையும் கண்டாள். சசிதரனைப் பார்த்ததும் மெல்ல இதழ்களில் புன்னகை படர்ந்தது.

 

“என்ன பயந்துட்டியா? உன் கூட சண்டைப் போடாம என்னால எப்படி இருக்க முடியும்” என திக்கித் திணறி சன்னக் குரலில் சசிதரனிடம் சொன்னாள்.

 

சந்தோஷ் அவளருகில் வந்து அவள் கையைப் பிடித்து, “எப்படி இருக்க தர்ஷி? ரொம்பப் பயந்துட்டோம்” என்றான்.

 

“நீ எதுக்கு சந்தோஷ் இப்ப தேவையில்லாம கிளம்பி வந்த? உன் வேலையெல்லாம் என்ன ஆச்சு?” என திவ்யதர்ஷினி கேட்க,

 

“நான் முன்னாடியே சொன்னேனே இந்த மாசக் கடைசில வர்றேன்னு. பயிற்சி, தொழில் தொடங்குகிற திட்டம், முதலீடு பணம் எல்லாம் ஓரளவுக்கு ரெடி. இன்னும் ஒரு வாரம் வேலையிருக்கு. அப்புறம் இங்க வந்து தொழில் தொடங்க வேண்டியது மட்டுமே பாக்கி” என்றான்.

 

சந்தோஷ் டெல்லியிலிருந்து வந்ததும் என்ன செய்தான் என்று நடந்தவற்றை வரி பிசகாமல் சசிதரன் தமக்கையிடம் ஏற்ற இறக்கங்களுடன் சொன்னான். அதைக் கேட்ட திவ்யதர்ஷினிக்கு சந்தோஷின் மேல் கோபம் வந்தது. அவனை உறுத்து விழித்தாள். அந்தப் பார்வையில் சிறிதும் சிநேக பாவமில்லை என்று புரிந்து கொண்டான்.

 

“தர்ஷி” என சந்தோஷ் அவளை நெருங்க, “நீ கூட என்னை ஏமாத்திட்ட இல்ல?” என அவள் மனவருத்தத்தைக் கொட்டினாள். அந்த ஒற்றை வாக்கியத்தில் சந்தோஷ் முற்றிலும் குலைந்து போனான்.

 

கண்டிப்பாக அவன் திவ்யதர்ஷினிக்குத் தீங்கு விளைவிக்க வேண்டும் என்றெல்லாம் அப்படிச் செய்யவில்லை. அவளின் உயிருக்கு ஆபத்து என்றதும் அதை நீக்க எண்ணினான். அவ்வளவே! அவள் நலன் கருதி இப்படி நடந்து கொண்டான்.

 

அவள் சம்பந்தப்பட்ட விஷயத்துக்குக் கூட அவளிடம் கலந்தாலோசிக்காமல் அவனாகவே ஒரு முடிவை எடுத்தது எந்த விதத்தில் நியாயம்? அவள் என்ன சிறு குழந்தையா? அவளுக்கு உள்ளுக்குள் கோபம் கனன்று கொண்டிருந்தது.

 

மனதில் உள்ளதை அவனிடம் தெரிவித்துவிட்டு, “சந்தோஷ், சின்னதுல இருந்து பழகின நீயும் சரி… இப்போ பழக நினைச்சவங்களும் சரி” என மித்ரனை ஒரு பார்வை பார்த்துவிட்டு,

 

“யாருமே என்னைப் புரிஞ்சிக்கலை. என்கிட்டே கேட்கணும்னு கூடத் தோணலை பாரு. என் வாழ்க்கையைப் பத்தின முக்கிய முடிவை எடுக்கறப்போ கூட கலந்தாலோசிக்க மாட்டீங்க இல்லை” என்றாள்.

 

நண்பன் எனச் சொல்லிக் கொண்டவனும் தன்னை ஏமாற்றிவிட்டான். காதலிக்கிறேன் என்று உளறியவனும் தன்னை நம்பவில்லை. மனம் வலித்தது. ஏனென்று தெரியவில்லை. அழுகை அழுகையாய் வந்தது திவ்யதர்ஷினிக்கு.

 

“விடுங்க. எல்லோரும் ப்ளீஸ் இந்த ரூமைவிட்டுப் போறீங்களா? எனக்குத் தனியா இருக்கணும்” எனக் கத்தினாள்.

 

ஏமாற்றப்பட்ட வலியும் வேதனையும் அவள் வார்த்தைகளில் தெரிந்தன. எப்படியும் காலம் தான் அவளது புண்பட்ட மனதுக்கு மருந்தாகும் என ஆண்கள் மூவரும் வெளியில் வந்தனர்.

error: Alert: Content selection is disabled!!