சதிராடும் சித்திரமே 23 – 3

வெளியில் வந்த சந்தோஷுக்கு கோபம் தலைக்கேறியது. மித்ரனைப் பார்த்து அவன் சட்டையை பிடித்து, “எல்லாம் உன்னால் வந்தது. உன்னை என்னைக்குப் பார்த்தாளோ அன்னையிலிருந்து அவளுக்குச் சனி ஆரம்பிச்சிடுச்சு” எனத் திட்ட ஆரம்பித்தான்.

 

சந்தோஷனின் கைகளை உடனே விலக்கி மித்ரனை விடுவித்து, “சாரி சார். சந்தோஷ் அண்ணா ஏதோ எமோஷனலா பேசிட்டு இருக்காரு. தப்பா நினைச்சுக்காதீங்க” எனச் சமாதானம் செய்தான் சசிதரன்.

 

சசிதரனுக்கு மித்ரனின் குணம் பிடித்து போனது. உதவி என்று திவ்யதர்ஷினி கேட்டதுமே எந்தவித பந்தாவும் இல்லாமல் அவனைக் காப்பாற்றுவதற்குத் துரிதமாகச் செயல்பட்டான். அந்த ஒரு செயல் போதும் அவன் மனிதாபிமானம் மிக்கவன் என்று எடுத்துரைக்க. மித்ரன் நல்லவன்.

 

அதற்காக சந்தோஷ் ஒன்றும் கெட்டவனில்லை. சிறுவயதிலிருந்தே பழகும் சந்தோஷைப் பற்றியும் அவனுக்கு நன்றாகத் தெரியும். அவர்களின் குடும்ப நலனுக்காக என்றுமே அவன் அனுசரணையாகவும் அக்கறையாகவும் நடந்து கொள்வான்.

 

காலம் தான் இவர்களுக்கு மருந்தாகும். அதுவரையில் இவர்கள் இருவரும் அமைதியாக இருக்க வேண்டும் என முடிவு செய்து சந்தோஷை மித்திரனிடம் இருந்து பிரித்து வெளியில் அழைத்துச் சென்றான் சசிதரன்.

 

திவ்யதர்ஷினி இருந்த அறைக்குள் மீண்டும் மித்ரன் நுழைய, சோர்வில் முக்கியெடுத்த விழிகளுடன்

அவனை நோக்கினாள். “திவி” என மித்ரன் சன்னக் குரலில் அழைத்தவாறே அருகில் சென்று அவள் கையைப் பற்ற, கையைப் படக்கென்று இழுத்துக் கொண்டாள். அவளுக்கு ஆங்காரம் தலைக்கேறியது.

 

அருகில் இருந்த கூடையில் இருந்த ஆப்பிளை எடுத்து ஒவ்வொன்றாக அவன் மேல் விசிறி அடித்தாள். அவள் வெறிகொண்டு விசிறி அடிக்க அடிக்க அனைத்தையும் எதிர்கொண்டு தாங்கிக் கொண்டான் மித்ரன்.

 

அவளின் ஆங்காரத்தினாலும் கோபத்தினாலும் தோள்பட்டையில் போடப்பட்டிருந்த தையல் பிரிந்து ரத்தம் கசிய ஆரம்பித்தது. அதைப் பார்த்து மித்ரன் தவித்துப்போனான்.

 

“திவி, பிளீஸ்டா, என்னை எவ்வளவு வேணா தண்டிச்சுக்கோ. உன்னையே நீ தண்டிச்சுக்காத. ப்ளீஸ் வேண்டாமே” என மன்றாடினான்.

 

“ என் வலியைப் பத்தி உங்களுக்கு என்ன கவலை? தயவுசெஞ்சு இங்க இருந்து போறீங்களா? உங்களைப் பார்க்கவே பிடிக்கலை” என அடி ஆழத்தில் புதைந்திருந்த கோபத்தைத் தூர் வாரி வெளியில் இறைத்தாள். மீண்டும் சாத்துக்குடியை எடுத்து அவன் மேல் வீசி எறிந்தாள்.

 

அவள் அடிப்பது எதுவும் அவனுக்கு வலிக்கவில்லை. ஆனால் அவள் வெறிகொண்டு அவள் உடம்பை வளைத்து பிரயத்தனப்பட்டு வீசுவதால் தையல் போடப்பட்டு இருந்த இடத்திலிருந்து ரத்தம் மேலும் கசிய ஆரம்பித்தது.

 

“பிளீஸ் திவி… வேண்டாமே…” என அப்படியே தரையில் மண்டியிட்டு விழிகளில் நீர்க் கோர்த்துக் கொள்ள இறைஞ்சினான். அவள் கேட்பதாக இல்லை. தன் இயலாமையைக் குறித்து அவனுக்குக் கோபம் கிளர்ந்தது.

 

“இப்போ என்ன உனக்கு என்னை அடிக்கணும்… அவ்வளவு தானே?” என்றவன், தானே தன் கன்னங்களில், ‘பளார்.. பளார்’ என்று அறைந்து கொண்டான். அவள் மனம் குளிர்ந்ததோ இல்லையோ, கண்டிப்பாக அவன் மனப்புழுக்கத்துக்கு அது இதமளித்தது.

 

அவன் செய்கையைப் பார்த்துத் திடுக்கிடலுடன் விழியுயர்த்தினாள் திவ்யதர்ஷினி. ‘வேண்டாம்’ என அவனிடம் சொல்ல நினைத்தாலும் தொண்டைக்குழிக்குள் வார்த்தைகள் சிக்கிக் கொண்டன. அவளுக்கு எப்படித் தன் மனக்குமுறலைக் கொட்டுவது என்று தெரியவில்லை.

 

பழங்களை வீசுவதை நிறுத்திவிட்டிருந்தாள். ஆனால் அவன் செய்கை பேதை நெஞ்சை மிகவும் பலவீனப்படுத்தியது. இரத்தம் பாயும் இதயத்தில் கூரான கத்தியைப் பாய்ச்சியது. நாழிகைகள் மெள்ள ஊர்ந்தன.

 

அவனே அவனைத் துன்புறுத்திக் கொள்வதைக் காணச் சகிக்கவில்லை. அவசரமாக விழியசைத்து யாராவது வருகிறார்களா என்று பார்த்தாள். யாரும் வருவதாகத் தெரியவில்லை.

 

“லூசாடா நீ? என் உயிரைக் கொடுத்து உன்னைக் காப்பாத்தியிருக்கேன். அறிவில்லை” எனச் சிடுசிடுத்தாள். அவளின் அக்கறையில் அதுவரையில் அவனைச் சுற்றி இறுக்கியிருந்த குழப்ப முடிச்சுகள் நீங்கி நெஞ்சில் இதம் பரவுவதை உணர்ந்தான் மித்ரன்.

 

“சாரி திவி… கண்டிப்பா என் உயிர் உனக்குச் சொந்தமானது. இனிமேல் பத்திரமா பார்த்துக்கிறேன்” என்றவாறே அவன் எழ, அப்போது அறைக்குள் செவிலியர் ஒருவர் நுழைந்தார்.

 

அங்கே சிதறிக் கிடந்த பழங்களையும், கட்டு போட்டிருந்த தோளிலிருந்து கசிந்த குருதியையும் பார்த்து, “சார் என்னதிது? கஷ்டப்பட்டு இத்தனை நேரம் டாக்டருங்க போராடி அவங்களுக்கு அறுவை சிகிச்சை செஞ்சிருக்காங்க. பேசண்ட்டுக்கு ரெஸ்ட் முக்கியம்” என அதட்டினார்.

 

திவ்யதர்ஷினி மித்ரனைக் காட்டி, “அவரை வெளிய போகச் சொல்லறீங்களா? அப்போ தான் நான் நிம்மதியா இருக்க முடியும்” எனச் சுள்ளென்று சொல்ல,

 

“தயவுசெய்து வெளியில போறீங்களா? பேசண்ட்டுக்கு இப்போ ஓய்வு ரொம்ப முக்கியம். உங்க பிரச்சனை எல்லாம் அவங்க சரியாகி வந்ததும் வீட்ல போய் வச்சுக்கோங்க. கிளம்புங்க” என மித்ரனை விரட்டிவிட்டார்.

 

அவளை ஆழ்ந்து நோக்கினான். அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை அவள். வலுக்கட்டாயமாக வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன், “ரெஸ்ட் எடு திவி. அப்புறம் வர்றேன்” என்றான்.

 

“வர வேண்டாம். என்னைப் பார்த்துக்க ஆளுங்க இருக்காங்க” எனத் தேளாய்க் கொட்டினாள்.

 

சில நொடிகள் அவளை ஆழ்ந்து நோக்கிய மித்ரன், தோல்வியுடன் தலையைத் தொங்கப் போட்டவாறே அறையிலிருந்து வெளியேறினான். வீல் சேரில் அமர்ந்திருந்த மீனாட்சி மகனை எதிர்கொண்டார். சோர்ந்து போய் வந்த மகனைப் பார்த்து மெல்ல அவனை அருகில் வருமாறு அழைத்தார்.

 

நெஞ்சை அடைக்கும் துக்கத்தை விழுங்கிக் கொண்டிருக்கிறான் என்பதை ஏறி இறங்கிய தொண்டைக் குழி உணர்த்தியது. அன்னையின் அருகில் சென்ற மித்ரனால் அதற்குமேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. திடமாக இருக்கிறேன் என அதுவரையில் அவன் கட்டி வைத்திருந்த பிம்பம் முற்றிலும் சரிந்தது.

 

கால்கள் வலுவிழந்து போகப் பொத்தென அப்படியே தரையில் மடிந்து அமர்ந்து தலையை அன்னையின் மடியில் வைத்துப் பேரழுகையில் வெடித்தான். அன்னையின் அரவணைப்பு அவன் மனதில் படாரென்று மோதி கவிழ்ந்திருந்த வேதனையைத் தூர்வார, விழிநீர் படி தாண்டியது.

 

மீனாட்சிக்குமே அழுகை வந்தது. மகன் திவ்யதர்ஷினியின் மேல் வைத்திருக்கும் காதலைப் புரிந்து கொண்டார். என்ன ஆனாலும் எப்பாடுபட்டாவது திவ்யதர்ஷினியை இவனுக்கு மணம் முடித்து வைக்க வேண்டுமென்று மனதினுள் சூளுரைத்துக் கொண்டார்.

 

விசும்பலுடன் மகனின் தலைக்கேசத்தை மெல்ல ஆதுரமாக வருடிவிட்டார் மீனாட்சி. மீனாட்சியுமே தன்னால் தான் திவ்யதர்ஷினிக்கு இந்த நிலைமை என்று மருகிக் கொண்டிருந்தார். அவர் மட்டும் விருது வழங்கும் விழாவிற்குச் செல்லவில்லை என்றால் இது எதுவும் நடந்திருக்காது.

 

அவரது மகனைத் தாக்க வேண்டிய தோட்டாவை இடையில் விழுந்து ஏந்திக் கொண்டு அவனைக் காப்பாற்றிவிட்டாள். இதற்குக் கைமாறாக அவரால் எதுவுமே செய்ய முடியாது. அந்த மகனை அவளுக்குக் கொடுப்பதைத் தவிர.

 

அன்னையை அழ வைத்துவிட்டோமே என உடனே ஓரளவுக்குச் சரியாகிவிட்டான் மித்ரன். மிச்சத்தைக் காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்றும் தனக்கு என்று ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்று படுக்குமாறும் மகனிடம் சொன்னார் மீனாட்சி.

 

அதற்குமேல் மித்ரன் மறுப்புத் தெரிவிக்கவில்லை. தன்னவளின் விழிகள் தொடுக்கும் மொழிகளற்ற குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கவும், தன்னவளிடம் போராடவும் அவனுக்கு நிறையத் தெம்பு அவசியம்.

 

சசிதரனும் சந்தோஷூம் அங்கே வந்து அமர்வது விழியோரத்தில் தெரிந்தது. ஏதாவது தேவையென்றால் அவர்கள் திவ்யதர்ஷினியைப் பார்த்துக் கொள்வார்கள் என அன்னையை தள்ளிக் கொண்டு அவர் இருந்த அறைக்குள் சென்றான்.

 

கிஷோர் மற்றும் ரதிப்ரியாவின் நடத்தைக்கு மறுநாளே மித்ரன் தண்டனை வழங்க ஆரம்பித்துவிட்டான். கிஷோரும் இப்படியெல்லாம் ஆகுமென்று கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் அவன் சத்தியமாக யார் உயிரையும் பறிக்கவெல்லாம் நினைக்கவில்லை.

 

அதைப் பலமுறை மித்ரனிடம் சொல்ல முயன்றும் அவனால் சொல்ல முடியவில்லை. மித்ரன் சொல்ல விடவில்லை. கிஷோருடன் சம்மந்தப்பட்ட அனைத்துத் தொழில் விஷயங்களையும் அறவே துண்டித்துவிட்டான் மித்ரன். எத்தனை வருடத்து பழக்கம்? ஒரு நொடியில் துண்டித்து தங்களை தண்டித்துவிட்டானே.

 

தனக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை என்ற வெறி கூடியது மித்ரனுக்கு. அந்த இழப்பெல்லாம் தன் வேதனைக்கும் அவளின் வலிக்கும் முன்னால் ஒன்றுமேயில்லை.

 

பின்னே இந்த கிஷோர் மட்டும் குட்டையைக் குழப்பவில்லை என்றால் அவன் இந்நேரம் திவ்யதர்ஷினியை மேலும் நெருங்கியிருப்பான். அவளும் தன் மனதைத் திறந்திருப்பாள். அடுத்தக் கட்டத்தை நோக்கி அடியெடுத்து வைத்திருப்பார்கள். அனைத்தையும் கெடுத்துவிட்டான் படுபாவி!

error: Alert: Content selection is disabled!!