சதிராடும் சித்திரமே 24 – 1

அத்தியாயம் – 24

 

ஒரு வார மருத்துவமனையின் வாசத்திற்குப் பிறகு திவ்யதர்ஷினி வீட்டிற்குச் செல்லலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். சந்தோஷூம் சசிதரனும் போய், ஆக வேண்டிய கட்டணத்தைச் செலுத்த முற்படுகையில் ஏற்கனவே அதை யாரோ கட்டிவிட்டார்கள் என்று சொன்னார்கள்.

 

யாரோ என்ன யாரோ? மித்ரன் தான் கட்டியிருக்கிறான் எனப் புரிவதற்கு பெரிய அறிவாளியாக இருக்கத் தேவையில்லை என சந்தோஷ் எண்ணிக்கொண்டான்.

 

திவ்யதர்ஷினி அனைவரையும் அறையிலிருந்து துரத்திய பிறகு யாரும் அவளது அறைக்குள் நுழைய முற்படவில்லை. சசிதரன் மட்டுமே அவளுக்குப் பக்க பலமாகவும் துணையாகவும் இருந்து பார்த்துக் கொண்டான்.

 

சந்தோஷ் காலையிலிருந்து இரவு வரையில் மருத்துவமனையே கதியாகக் கிடந்தான். அவன் மட்டுமல்ல மித்ரனும் அங்கே தான் இருந்தான் ஆனால் இருவரும் பேசிக் கொள்ளவே இல்லை.

 

இரண்டு நாட்களிலேயே மீனாட்சி உடல்நிலை தேறி வீடு திரும்பினார். அவரும் இரண்டு முறை வந்து திவ்யதர்ஷினியைப் பார்த்துவிட்டுச் சென்றார். அவரையும் வத்சனையும் மட்டுமே அறைக்குள் அனுமதித்தாள் திவ்யதர்ஷினி.

 

திவ்யதர்ஷினியை மருத்துவமனையில் இருந்து சந்தோஷூம் சசிதரனும் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். திவ்யதர்ஷினியின உள்ளம் ஆறாமல் கொதித்துக் கொண்டிருந்தது. ஏனென்று தெரியாமல் துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டது. இனிமேல் மித்ரனைப் பார்க்க முடியாது என்பதாலா என அவளையே கேள்வி கேட்டுக் கொண்டாள்.

 

சந்தோஷ் என்ற ஒருவன் அங்கே இருப்பதை காட்டிக் கொள்ளக் கூட இல்லை. மித்ரன் தான் ஒரு பக்கம் அவளை நம்பாமல் கழுத்தறுத்தான் என்றால் இத்தனை நாட்கள் பழகிய சந்தோஷ் கூட அவளிடம் அனைத்தையும் மறைத்து காலை வாரிவிட்டானே.

 

ஏனோ அவர்களின் இந்தச் செய்கை அவள் உள்ளத்தில் ஆறாத வடுவாகிப் போனது.

 

வீட்டிற்குச் செல்லும் வழி நெடுகிலும் அயர்ந்து போய் உட்கார்ந்திருப்பதாக வெளியில் காட்டிக் கொண்டு கண்களை மூடிக் கொண்டாள். ஆனால் உள்ளமோ ரீவைண்டு பட்டனை திரும்பத் திரும்ப அழுத்தி ஒரு வாரத்திற்கு முன்னால் சென்று அன்று மித்ரன் அவளிடம் பேசியதைப் பற்றி அசை போட்டுக் கொண்டிருந்தது.

 

‘அவன் மேல் இத்தனை கோபத்திலும் எரிச்சலிலும் இருக்கிறாயே? பிறகு ஏன் அந்தத் தோட்டா அவனை நோக்கிப் பாய்கையில் உயிரைத் துச்சமென மதித்து நடுவில் விழுந்து அதைத் தாங்கிக் கொண்டாய்?’ என அவள் மனம் அவளையே கேலி செய்தது.

 

அவன் மேல் அத்தனை பிரியம் இருக்கிறது என்று அவளுக்கே அப்பொழுது தானே புரிந்தது. அவன் உயிருக்கு ஆபத்து என்றதும் அவளால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது என்பதை அவளும் அப்பொழுதுதானே உணர்ந்து கொண்டாள். தன்னை நினைத்தே எரிச்சல் வந்தது

 

அவளுக்குள் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது என்று தம்பிக்கும் சந்தோஷுக்கும் தெரியவில்லை. அவள் உண்மையில் சோர்ந்து போயிருக்கிறாள் என்றே நம்பினார்கள்.

 

ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்ததும், மெல்ல அவளை அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றான் சசிதரன். அவர்கள் உள்ளே நுழைந்ததும் சந்தோஷூம் பின் தொடர்ந்து வீட்டினுள் நுழைந்தான்.

 

அவர்கள் சென்றபொழுது வரவேற்பறையில் யாரோ ஓர் புதிய இளைஞன் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டிருந்தான். அவளின் தந்தை கூனிக்குறுகி அப்படியே இருக்கையில் அமர்ந்திருப்பதைக் கண்டாள் திவ்யதர்ஷினி.

 

‘யார் இந்தப் புதியவன்?’ என அங்கே அமர்ந்திருந்தவனை நோட்டம் விட்டாள். அவனுமே இவளையே எடை போட்டுக் கொண்டிருந்தான். அவன் உதட்டோரத்தில் இளம் நகையொன்று தோன்றியது.

 

முரளிதரன் எதுவும் பேசாமல் அமைதியாகத் தலைகுனிந்து அமர்ந்திருப்பதைப் பார்த்ததும், “என்னங்க சார், நான் யாருன்னு அறிமுகப்படுத்த மாட்டீங்களா உங்க பொண்ணுகிட்ட?” என அழுத்தம் கொடுத்துப் பேசினான் அந்த இளைஞன்.

 

அப்போதும் அவர் எதுவும் பேசாமல் என்ன சொல்வது என்று தெரியாமல் கண்கள் கலங்கிப் போய்த் திணறிக் கொண்டிருக்க, “நீங்க யாராக இருந்தாலும் சரி இப்போதைக்கு கிளம்புறீங்களா? எனக்கு உங்க அறிமுகம் தேவையே இல்லை” என வெடுக்கென்று பேசினாள் திவ்யதர்ஷினி.

 

பின்னே இவனால் தன் தந்தை கண்கலங்கி அமர்ந்திருப்பதையும் கூனிக் குறுகி உட்கார்ந்திருப்பதையும் பார்க்க அவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இவன் எவ்வளவு பெரிய அப்பாடக்கராக இருந்தாலும் அவளுக்கு என்ன வந்தது? அவன் இங்கிருந்து கிளம்பினால் போதும் என்று எண்ணினாள் திவ்யதர்ஷினி.

 

“என்ன தர்ஷினி இப்படிக் கோவிச்சிகிற? உன்னை எங்கெல்லாம் தேடிச் சிரமப்பட்டு கடைசியில கண்டுபிடிச்சு வந்தா, இப்படி விரட்டற?” என அவன் கோபம் கொள்ளாமல் அதே புன்னகையுடன் பேசினான்.

 

இப்பொழுது சந்தோஷுக்குக் கோபம் தலைக்கேறியது. “என்ன கேட்கிறதுக்கு ஆள் இல்லலைன்னு வந்து கலாட்டா பண்ணிட்டு இருக்கியா?” என சந்தோஷ் தன் கோபத்தை வெளிப்படுத்தினான். அதாவது திவ்யதர்ஷினிக்கு ஒத்து ஊதினான். அப்படியாவது திவ்யதர்ஷினி அவனை மன்னித்து விடமாட்டாளா என்ற நப்பாசையில்.

 

“முரளி, மீரு செப்பண்டி (நீங்க சொல்லுங்க)” என அவன் திடீரென்று தெலுங்கில் பேசினான். அங்கிருந்தவர்கள் அனைவரும் அவனை வியப்புடன் பார்க்க, “செப்தானு (சொல்லறேன்)” என்றார் முரளிதரன்.

 

அதைக் கேட்ட அனைவருக்கும் அதிர்ச்சியாகிவிட்டது. திவ்யதர்ஷினிக்கு விவரம் தெரிந்ததிலிருந்து அவள் தந்தை சென்னையை விட்டு வேறு எங்கும் போனதில்லை. அவருக்குத் தெலுங்குத் தெரியும் என்பதே இன்று தான் அறிவாள்.

 

இதற்கு மேல் தயங்கிக் கொண்டு பேசாமல் இருந்தால் எங்கே அடிதடியாகி விடுமோ என்று பயந்தார் முரளிதரன். “அவர் நமக்கு தெரிஞ்சவர்” என நிறுத்தினார்.

 

“சும்மா தெரிஞ்சவர்னு சொன்னா எப்படிங்க முரளி சார். நான் தர்ஷினியோட அத்தைப் பையன்னு செப்பண்டி” என்றான் அமர்ந்திருந்த இளைஞன்.

 

அதைக் கேட்ட மூவருமே திகைத்துப் போனார்கள். இதுவரையில் முரளிதரனின் சொந்தம் என்று யாரும் அவரைத் தேடி வந்ததில்லை. இவர்களும் சொந்தம் என்று யார் வீட்டிற்கும் சென்றதில்லை. அப்படி இருக்கையில் மழைக்கு முளைத்த காளான் போல இவன் எங்கிருந்து திடீரென்று முளைத்து வந்தான்?

 

அனைவரும் அப்புதியவனையே திகைத்துப் போய்ப் பார்த்திருப்பதைப் பார்த்தவன், மெல்ல எழுந்து திவ்யதர்ஷினியின் அருகில் வந்தான். “என்ன பார்க்குற தர்ஷினி? உண்மையைச் சொல்லறேன். நான் உன் அத்தைப் பையன், தினேஷ்” என்றான்.

 

அவனிடமிருந்து விலகி நின்று தந்தையைப் பார்த்து, “அப்பா என்னப்பா இது? இவர் சொல்லறது உண்மையா?” என திவ்யதர்ஷினி கேட்க,

 

“உண்மையான அத்தைப் பையன் வந்து உண்மையைச் சொன்னா அதை நம்பறது இல்லை. ஆனா இத்தனை வருஷமா அப்பான்னு உன்னை ஏமாத்திட்டு இருக்குற இவரு சொன்னா மட்டும் எல்லாத்தையும் நம்புவியா?” எனக் கேட்டான் தினேஷ்.

 

“டேய்… எங்க வந்து என்ன உளறிட்டே இருக்குற?” என தினேஷின் சட்டையைப் பிடித்துவிட்டான் சந்தோஷ்.

 

“சந்தோஷ், அவரை விடு” என முரளிதரன் இருக்கையிலிருந்து எழுந்து, திடீர் என்று கடினமான குரலில் அதட்ட, அனைவருமே அதிர்ந்து போய் முரளிதரனைப் பார்த்தனர்.

 

இதுவரையில் யாரையும் கடிந்து பேசிப் பார்க்காத முரளிதரனை இப்போது அப்படிப் பார்க்கையில் ஏதோ எட்டாவது அதிசயத்தைப் பார்ப்பதை போல் அவரையே அனைவரும் வெறித்தனர்.

 

சந்தோஷ் அவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அவன் சட்டையை விட்டான். தினேஷ் தன் சட்டையைச் சரி செய்து கொண்டு மீண்டும் போய் இருக்கையில் அமர்ந்தான்.

 

“அப்பா..” என திவ்யதர்ஷினியும் சசிதரனும் அவரையே பார்க்க, “அவரு சொல்றதெல்லாம் உண்மை” எனச் சொல்லிவிட்டு இருக்கையில் அமர்ந்து தலையை இரு கைகளாலும் தாங்கிக் கொண்டு குனிந்து குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தார்.

 

அதைக் கேட்ட திவ்யதர்ஷினிக்கு உடலெல்லாம் உதற ஆரம்பித்துவிட்டது. அவன் சொல்வதில் எது உண்மை என்று அவளுக்குத் தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை. மளமளவென்று நடந்து சென்று தந்தையின் காலுக்கடியில் அமர்ந்தவள், அவர் கைகளைப் பற்றிக்கொண்டு, “அப்பா என்னப்பா சொல்றீங்க? எனக்கு எதுவும் புரியலை” என்றாள்.

 

“இதுல புரியாம என்ன இருக்குது தர்ஷினி. முரளிதரன் உன்னோட பெத்த அப்பா கிடையாது. என் அம்மா கூடப் பிறந்த அண்ணனோட பொண்ணு நீ” என்றான் தினேஷ்.

 

“பொய் நான் நம்ப மாட்டேன்…” என முரளிதரனின் முகத்தை கூர்ந்து பார்த்தாள். அவர் முகத்தை வைத்தே தினேஷ் சொல்வது உண்மை என்று அவளுக்கு விளங்கியது. ஆனாலும் உண்மையை ஒத்துக் கொள்ள அவள் மனம் இடம் தரவில்லை.

 

பின்னே இத்தனை காலமாக இவர் தன் தந்தை என்று பாசம் வைத்தாகிவிட்டது. அதற்கேற்ப முரளிதரனும் அவளைக் கண்ணுக்குள் பொத்தி வைத்துப் பாதுகாத்துக் கொண்டிருந்தார்.

 

இப்போது திடீரென்று எவனோ ஒருவன் வந்து இவர் உன் தந்தை இல்லை என்று சொல்லிவிட்டால் அவள் அவ்வளவு எளிதாக நம்பி விடுவாளா என்ன?

 

“வேணா டி. என். ஏ. டெஸ்ட் ரிபோர்ட் பார்க்கிறியா?” என்ற தினேஷ், அங்கே வைத்திருந்த காகிதத்தை எடுத்து அவள் முன்னால் நீட்டினான்

error: Alert: Content selection is disabled!!