அவனிடமிருந்து அதை வாங்காமல் அவனையே வெறித்துப் பார்க்க, “உன் பிளட் க்ரூப் ஏ பாசிட்டிவ் தானே? நீ அட்மிட் ஆகியிருந்த மருத்துவமனைக்கு நான் ஏற்கனவே வந்து எனக்குத் தெரிஞ்ச டாக்டர் மூலமா உன் பிளட் சாம்பிள் எப்பவோ எடுத்துட்டேன். நம்ம தாத்தா-பாட்டியோட, என் அம்மாவோட என்னோட இரத்தம் எல்லாத்தையும் வச்சு ‘டி என் ஏ’ டெஸ்ட் ரிப்போர்ட் ரெடி பண்ணிட்டேன். பார்க்கறியா?” என்றான்.
அனைத்திற்கும் தயாராகவே வந்திருக்கிறான். அங்கிருந்த மற்றவர்களுக்கு வேண்டுமென்றால் ரத்தப் பரிசோதனை தேவையாக இருந்தது. ஆனால் முரளிதரனுக்கு தெரியாதா திவ்யதர்ஷினி யார் வீட்டு பெண் என்று.
“திவிமா… அவர் சொல்றது எல்லாம் உண்மை. நான் உன்னைப் பெத்த அ… அப்பா இல்லை” என மேலும் குலுங்கி குலுங்கி அழுதார் முரளிதரன்.
அதைக் கேட்ட திவ்யதர்ஷினிக்கு உதடுகள் துடிக்க அழுகை பீறிட்டது. யாரோ என்னவோ சொல்லிக் கொண்டு போகட்டும். ஆனால் தந்தையே அவ்வாறு சொன்னால் அவளால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்?
“அப்பா, உங்களுக்கு என் மேலே என்ன கோவம் இருந்தாலும் அதை வேற விதமா காட்டுங்க ப்ளீஸ்பா. நான் உங்க பொண்ணு இல்லைன்னு மட்டும் சொல்லாதீங்க” என அவளும் கதறி அழ ஆரம்பித்தாள்.
“இல்லடா நான் உண்மையைத் தான் சொல்றேன். உனக்கு நாலரை வயசு இருக்குறப்ப உன்னை வீட்ல இருந்து கூட்டிட்டு வந்துட்டேன். நான் உன் வீட்டு கார் டிரைவர். என்னை மன்னிச்சுடுமா” என அவரின் அழுகை கூடியது.
“அப்போ நானு?” என்ற சசிதரனின் குரலில் அவனைத் திரும்பிப் பார்த்தாள் திவ்யதர்ஷினி.
“நீ என் பையன் ” என்றார் முரளிதரன்.
அதைக் கேட்ட திவ்யதர்ஷினிக்கு மனம் வெடித்துச் சிதறியது. தந்தை தான் சொந்த தந்தை இல்லை என்றால் தம்பியும் அவளுடைய தம்பி கிடையாதா என்று அவள் மேலும் துயரத்தில் அழுதாள்.
அவள் அழுவதைப் பார்த்துப் பொறுக்காத தினேஷ், “தர்ஷினி உன்னை அழ வச்சு பார்க்கணும்னு நான் இப்போ இங்க வரல. உன்னைக் காணாம இத்தனை வருஷமா நாங்க தவிச்ச தவிப்பை எல்லாம் வார்த்தைகளால் சொல்ல முடியாது. நீ எப்பவாவது தேடி வருவேன்னு பாட்டியும் தாத்தாவும் அந்த ஊரைவிட்டுக் கூடக் கிளம்பாம அங்கேயே இருக்காங்க.
அன்னைக்கு ஊர்ல நம்ம பருத்தி குடோன்ல நடந்த தீ விபத்துல உன் அம்மா-அப்பாவும் இறந்துட்டாங்க. நீ காணாம போயிட்ட” என்ற தினேஷ் நிறுத்தி, முரளிதரனைப் பார்த்து, “உன்னை நகையோட கடத்திட்டு வந்துட்டார் இந்த சார்” என்றான் நக்கலாக.
“என் அப்பா அப்படிப்பட்ட ஆளில்லை” என அக்கா-தம்பி இருவரும் சிலிர்த்தெழ, “அப்புறம் பாட்டி-தாத்தா படுத்தப் படுக்கையாகி ரொம்ப வருஷம் கழிச்சு உடல் தேறி வந்தாங்க” என அவனுக்குத் தெரிந்ததைக் கோர்வையாக விளக்கினான் தினேஷ்.
அந்தச் சமயத்தில் தினேஷின் பெற்றோர்கள் குடும்பத்துடன் அமெரிக்காவில் இருந்தனர். அவன் தந்தைக்கு ஆறு மாதப் பணிக்காக அவர் வேலை செய்த நிறுவனத்திலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்திருந்தனர்.
அவர்கள் விஷயம் கேள்விப்பட்டு ஊர் திரும்பிய பிறகே எதையும் தீவிரமாக விசாரிக்க முடிந்தது. திவ்யதர்ஷினியின் பெற்றோர்கள் இருந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டு அவர்கள் அங்கேயே உயிரிழந்தனர்.
அந்தச் சமயத்தில் திவ்யதர்ஷினி முரளிதரனுடன் அவர்களின் காரில் சென்றதைப் பார்த்ததாக ஊர்க்காரர்கள் பலரும் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் எங்கு தேடியும் முரளிதரனைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆகவே அந்தப் பருத்தி குடோனுக்கு தீ வைத்துவிட்டு அவர்களின் பரம்பரை நகைகள் அத்தனையையும் எடுத்துக் கொண்டு திவ்யதர்ஷினியையும் கடத்திக்கொண்டு அங்கிருந்து தப்பி விட்டான் என்ற முடிவுக்கு வந்தனர் அனைவரும்.
ஆனால் அப்படிச் சென்றவனின் கார் சென்னைக்கருகே விபத்துக்குள்ளாகி அவன் குடும்பமே உருத்தெரியாமல் சிதைந்து இறந்து போனதாக காவல்துறை அவர்களிடம் தெரிவித்தனர்.
திவ்யதர்ஷினியின் வீட்டிற்குச் சொந்தமான காரினுள் பயணம் செய்த கணவன் மனைவி மற்றும் ஆண் குழந்தை என அனைவரும் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்ததாகச் சொன்னார்கள்.
ஆனால் கார் ஓட்டுனரான முரளிதரன் எடுத்துச் சென்ற நகைகளும் கடத்திச் சென்ற திவ்யதர்ஷினியையும் அந்த இடத்தில் காணவில்லை. அவள் எங்காவது பத்திரமாக இருப்பாள் என இத்தனை நாட்கள் நம்பிக்கொண்டிருந்தனர்.
அவர்களின் காத்திருப்புக்கு இப்போது தான் பலன் கிட்டியிருக்கிறது. ஒருவழியாகத் திவ்யதர்ஷினியைக் கண்டுபிடித்தாகிவிட்டது.
“தர்ஷினி, உனக்காக தாத்தா பாட்டி, உன் அத்தை- மாமா, நான், என் தங்கச்சி எல்லாரும் காத்துட்டு இருக்கிறோம். உனக்குச் சேர வேண்டிய சொத்துகள், உன் அப்பா ஆரம்பிச்ச கட்டட நிறுவனம் என எல்லாம் உனக்காகக் காத்துட்டு இருக்கு. என்னோட வந்திடு” என்றான் தினேஷ்.
“டி. டி. கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், உன் அப்பா நம்ம ரெண்டு பேர் பேர்லேயும் ஆரம்பிச்சது” எனச் சொல்லிவிட்டு சசிதரனைப் பார்த்து, “நம்ம கம்பெனி தான் சசிதரனுக்கு ஸ்பான்சர்ஷிப் செஞ்சது” என விளக்கம் தந்தான்.
“உன் அப்பா இறந்ததுக்கு அப்புறம்” என தினேஷ் ஆரம்பிக்க, “அப்படிச் சொல்லாதீங்க. என் அப்பா என் கண்ணு எதிர்ல உயிரோடதான் இருக்கார்” எனக் கத்தினாள் திவ்யதர்ஷினி.
“திவிம்மா” என முரளிதரன் சொல்ல, “விஜயவாடால டி. டி. கன்ஸ்ட்ரக்ஷன்ஸை என் அம்மாவும் அப்பாவும் தொடர்ந்து பார்த்துக்கிறாங்க. இங்கே சென்னையில நான் அதோட ப்ரான்ச் ஆரம்பிச்சு ஆறு வருஷமா நடத்திட்டு இருக்கேன்” என தினேஷ் தொடர்ந்தான்.
“எல்லாத்துலேயும் நீ பாதி நான் பாதி” என்றதும், இவன் என்ன பொடி வைத்துப் பேசுகிறானா என்று விலுக்கென்று நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
முதலில் தினேஷ் அவளை எப்படித் தேடிக் கண்டுபிடித்தான்?
“எப்படித் தேடிக் கண்டுபிடிச்சேன்னு பார்க்கறியா?” என அவள் மனதைப் படித்தவன் போல் கேட்டுவிட்டு, “சசிதரன் செஸ் போட்டியில் ஜெயிச்சு எங்களுக்கு நல்லது செஞ்சிருக்கான்” என்றான்.
ஆம்! சசிதரன் தேசிய அளவிலான போட்டியில் வென்று அடுத்து ஆசிய அளவிலான போட்டிக்குத் தேர்வாகி இருந்தான். அவன் வெற்றியைக் கொண்டாடி அனைத்து செய்தித்தாள்களும் அதைப் பற்றிய விவரங்களை வெளியிட்டது.
அத்தோடு விட்டிருந்தால் அவர்களால் கண்டுபிடித்திருக்க முடியாது. ஆனால் அவனுடன் முரளிதரன் மற்றும் திவ்யதர்ஷினியும் நின்று கொண்டிருந்த புகைப்படம் ஒன்றையும் சேர்த்து வெளியிட்டிருந்தனர்.
அந்தப் புகைப்படம் இவன் வீட்டில் உள்ளவர்களின் கண்களில் பட, முரளிதரனைக் கண்டுகொண்டனர். மறக்கக் கூடிய முகமா? அவன் இறந்துவிட்டதாக அல்லவா நினைத்திருந்தனர். அத்தோடு உடன் நிற்கும் பெண் அச்சு அசலாக அவர்கள் வீட்டின் மருமகளின் மறுஉருவமாக அல்லவா இருக்கிறாள்.
அதைப் பார்த்ததும் வீடே அதிர்ந்து போய் பேசி, முடிவெடுத்து முரளிதரனைப் பார்த்து வரக் கிளம்பினர். சென்னையிலேயே இருப்பதால் முதலில் தினேஷ் சென்று விசாரிதத்து வருவதாகச் சொன்னான்.
அவன் வந்து சொன்னால் உடனே, “இந்தா எடுத்துக் கொள்” என்று அவளை ஒன்றும் கொடுத்துவிட மாட்டார் முரளிதரன் என்று தெரியும். அதுவும் அவன் திவ்யதர்ஷினியின் சொந்தக்காரன் என எப்படி எடுத்ததுமே நம்புவார்.
ஆகவே யாரும் மறுக்க முடியாதபடி அனைத்து ஆதாரங்களையும் திரட்டினான். அவன் வந்த பொழுது திவ்யதர்ஷினி மருத்துவமனையில் இருந்தாள். அது இன்னுமே அவனுக்கு வசதியாகப் போய்விட்டது.
தினேஷூக்கு முரளிதரனை ஞாபகமெல்லாம் இல்லை. ஆனால் முரளிதரனுக்கு அவன் யார் என்று அவன் தன்னை அறிமுகப்படுத்தியதுமே தெரிந்து போனது. தினேஷுக்கும் காரியம் இத்தனை எளிதாக முடியும் என்று நினைக்கவில்லை.
அவன் அவரிடம் விளக்கம் தந்து பேசிக் கொண்டிருக்கையிலேயே திவ்யதர்ஷினியும் வந்து சேர்ந்தாள். முரளிதரனும் மூடி எல்லாம் மறைக்க நினைக்கவில்லை. உண்மையை உடனே ஒத்துக் கொண்டார்.
திவ்யதர்ஷினிக்குத் தான் ஏதோ கெட்ட கனவு ஒன்றை கண்டு கொண்டிருப்பதாகப் பட்டது.
“எனக்கு உங்க சொத்து வேண்டாம். எதுவும் வேண்டாம். எனக்கு என் அப்பா மட்டும் போதும். நான் எங்கேயும் வரலை” என திவ்யதர்ஷினி முரளிதரனின் காலைக் கட்டிக் கொண்டு அழுதாள்.
“தர்ஷினி, உனக்கு எங்க அன்பு புரியலையா, இல்லை, பாசம் புரியலையா? ஏன் இப்படிப் புரிஞ்சிக்காம அடம் பிடிக்கிற? உன்னைக் கிட்டத் தட்ட கடந்த இருபது வருஷமா தேடிட்டு இருக்கோம்” என தினேஷ் குரலை உயர்த்த,
தடாலென்று எழுந்தவள் கையெடுத்துக் கும்பிட்டு, “தயவுசெய்து இங்கிருந்து போயிடுங்க. எனக்கு யாரும் வேண்டாம். என் அப்பாவும் தம்பியும் மட்டும் போதும்” என்றாள்.
“அதில்லை..” என தினேஷ் மேற்கொண்டு சொல்லும் முன்னால், திவ்யதர்ஷினி அப்படியே தடாலென்று மயங்கி தரையில் சரிந்தாள்.

