அத்தியாயம் – 25
அந்தக் காரில் திவ்யதர்ஷினியும் முரளிதரனும் நெல்லூருக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்துக்குப் பயணம் செய்து கொண்டிருந்தனர். தினேஷ் காரை ஓட்டிக் கொண்டிருந்தான். சசிதரன் ஆசிய சதுரங்கப் போட்டியில் கலந்து கொள்ளச் சென்றிருந்தான்.
அவர்களை விட்டுப் போகவே மாட்டேன் என்று அடம்பிடித்தவனை திவ்யதர்ஷினி பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்தாள். அவனை விமானம் ஏற்றிவிட்டு இதோ அவளும் கிளம்பிவிட்டாள்.
சந்தோஷூம் அங்கிருந்து டெல்லிக்கு மீண்டும் கிளம்பினான். அவன் இப்படியே இங்கே தங்கி இருந்தால் அவன் பார்க்க வேண்டிய வேலைகள் நிறைய இருந்தன. அவன் செய்து கொண்டிருந்த முக்கிய ப்ராஜக்ட் வேறு முடியும் தருவாயில் இருந்தது.
ஆனால் இங்கே திவ்யதர்ஷினியை அப்படியே விட்டுவிட்டுப் போகவும் மனம் வரவில்லை. அன்று அவள் மயங்கி சரிந்தவுடனே சில கணங்களில் மீண்டும் கண் திறந்துவிட்டாள் திவ்யதர்ஷினி. ஏற்கனவே இருந்த அயர்விலும் அப்போது ஏற்பட்ட அதிர்ச்சியிலும் மயங்கியிருந்தாள்.
அவள் மீண்டும் கண் முழித்ததும் மீண்டும் மறுநாள் வருவதாகச் சொல்லிவிட்டு தினேஷ் கிளம்பிவிட்டான். தனிமையை நாடி திவ்யதர்ஷினி மொட்டை மாடிக்குச் செல்ல, சந்தோஷூம் வால் பிடித்துக் கொண்டு அங்கே சென்றான்.
அவளிடம் அவன் பொய் சொன்னதற்கான காரணத்தை விளக்க, அவளோ இவனை மன்னிப்பதாக இல்லை.
“என்ன தர்ஷி இது. உங்க வீட்டுப் பிள்ளையா என்னை நினைச்சு மன்னிச்சிடு” என அவன் இறைஞ்சுதலாகப் பேச, “நானே இப்போ எந்த வீட்டுப் பொண்ணுனு தெரியலை” என விரக்தியுடன் பதில் தந்தாள்.
அப்போது அங்கே வந்த முரளிதரன், “எப்பவும் நீ என்னோட பொண்ணுமா நீ” எனக் கண் கலங்கினார்.
“அப்பா, யார் என்ன சொன்னாலும் நீங்க தான் என் அப்பா” என அவளும் அழுகையில் கரைந்தாள்.
“ ஏன் தர்ஷி, மாமாவுக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா? இது அநியாயம். உனக்காக, உன் உயிருக்காகப் பொய் சொன்ன அப்பாவை மட்டும் மன்னிச்சுட்ட. அதே காரணத்துக்காக நான் பொய் சொன்னா, என்னவோ நான் உலகப் போரை இழுத்துட்ட மாதிரி நடந்துக்கிற. ஏன் இந்த ஓரவஞ்சனை?” என வக்கீலாக மாறி வாதாடினான்.
“நான் அப்போ குழந்தை. இப்போ ஒன்னும் குழந்தையில்லை. என்கிட்டே சொல்லியிருக்கணும்” என்றவள், அப்போது தான் முரளிதரனும் அங்க இருப்பதை உணர்ந்தாள்.
“அப்பா, நாங்க அத்தையைச் சமாதானப்படுத்தப் பொய் சொன்னோம். நாங்க ரெண்டு பேரும் உண்மையில் விரும்பலை. எல்லாம் இவனால தான்” அவன் முதுகில் இரண்டு மொத்து மொத்தியவள்,
“இவன் தான் முதல்ல அந்தப் பொய்யை ஆரம்பிச்சு என்னையும் கோர்த்துவிட்டான்” எனச் சிறு குழந்தையாக மாறி அவரிடம் புகார் வாசித்தாள்.
சற்றுநேரம் அமைதியாக இருந்த முரளிதரன், “எனக்குத் தெரியும். அன்னைக்கு நீங்க மொட்டை மாடில பேசிட்டு இருந்ததை நானும் கேட்டேன்” என்றார்.
“அப்போ உங்ககிட்ட நான் பொய் சொல்லலை. அப்படித் தானே அப்பா” எனச் சந்தோஷத்தில் அவள் முகம் மலர்ந்தது.
‘இல்லை’ என்பதைப் போல் அவர் தலையசைக்க, “சரி சரி.. உன்னை மன்னிச்சுவிடறேன். போய் வேலையைப் பாரு. சும்மா இங்கேயே நின்னு தொண, தொணத்திட்டு இருக்காத” என்றாள். அவள் தனக்காக, தன் வேலை கெடும் என்பதற்காகப் பார்க்கிறாள் என்று சந்தோஷூக்குப் புரிந்தது.
“இனிமேல் பொய் அப்படின்னு வர்ற வாக்கியத்தைக் கூட உன்கிட்ட சொல்லமாட்டேன்” எனச் சத்தியம் செய்வதைப் போல் பாவனை செய்தான்.
“பிழைச்சுப் போ” எனக் கையை உயர்த்தி அவனுக்கு அருள் தருவதைப் போல் நின்றாள்.
“அப்படியே என்னையும் மன்னிச்சிடேன் திவி” எனக் கேட்டவாறு அங்கே மொட்டை மாடியின் வாயிலில் நின்று கொண்டிருந்தான் மித்ரன்.
‘இவன் எப்போது இங்கே வந்தான்?’ என அனைவரும் திரும்பிப் பார்த்தனர். ‘அத்தையை சமாதானப்படுத்தவே பொய் சொன்னோம்’ என திவ்யதர்ஷினி சொன்னபொழுதே மேலேறி வந்தான் மித்ரன்.
“உன்கிட்டே கொஞ்சம் தனியாப் பேசணும்” என மித்ரன் சொல்ல, சந்தோஷ் விடுவிடுவென்று அங்கிருந்து நகர்ந்தான். செல்லும் பொழுது வழியில் நின்று கொண்டிருந்த மித்ரனை வேண்டுமென்றே இடித்துவிட்டுச் சென்றான்.
முரளிதரனும், “பேசிட்டு வாம்மா” எனக் கீழே செல்ல, “எனக்கு இவரோட பேச எதுவுமில்லை” என அவளும் கீழே இறங்க முற்பட்டாள். ஆனால் மித்ரன் அவள் கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு தன்னை நோக்கி இழுத்தான்.
சதிராடும் சித்திரம் போல் அவனிடம் அகப்படாமல் ஓடிக் கொண்டிருப்பவளை தன் மனப்பெட்டகத்தில் வைத்துப் பூட்டி வைக்க வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு.
“பிளீஸ் திவி. எல்லோரையும் மன்னிக்கிற, ஆனா என்னை மட்டும் ஏன் இப்படிச் சோதிக்கிற? என்னைப் பார்த்தா பாவமாயில்லையா?” எனப் பரிதாபமாகக் கேட்டான் மித்ரன். அவன் கேட்ட விதத்தில் கண்டிப்பாக யாருக்கும் நெஞ்சம் இளகிவிடும். திவ்யதர்ஷினி மட்டும் விதிவிலக்கா என்ன?
ஆனால் அன்று அவன் பேசிய வார்த்தைகளை வலுக்கட்டாயமாக ஞாபத்துக்குக் கொண்டு வந்தாள்.
“இங்க பாருங்க. எனக்கும் உங்களுக்கும் எந்தச் சம்மந்தமுமில்லை. என் கையை விடுங்க” என்றாள் குரலில் வரவழைத்துக் கொண்ட கடினத்துடன் பேசினாள் .
“விட்டா ஓடிடுவியே. என் நம்பரையும் பிளாக் பண்ணிட்ட. நான் எப்படி உன் கூடப் பேசறது? என்ன பண்ணறதுனு தெரியலை. எனக்குப் பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு. பிளீஸ் திவி. எனக்கு இன்னொரு சான்ஸ் கொடேன்” எனக் கரகரத்தக் குரலில் கேட்கவும் பெண் மனது இளகிப் போனது.
ஆனால் அவள் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க, அவளைத் தன்னுடன் சேர்த்து அணைத்து, தலையின் மேல் முத்தம் வைத்தான். “நீ என்னை உன் உயிரை விட அதிகமா நேசிக்கிறேன்னு எனக்கு நல்லாவே தெரியும் திவி” என மித்ரன் சொல்ல இமையோர விளிம்பில் நீர் தழும்பியது அவளுக்கு.
“நீயும் சந்தோஷமா இல்லை. நானும் சந்தோஷமா இல்லை. நடந்ததையெல்லாம் மறந்துட்டு மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கலாமா? ப்ளீஸ்” எனக் கேட்டான் மித்ரன்.
கல்லென உடல் இறுக நின்றாள். ஆனால் கண்கள் தன்னையுமறியாமல் நீரைச் சிந்த ஆரம்பித்தன. பாறையிலும் ஈரம் கசியும் என்பது இது தானா? சட்டையில் ஈரத்தை உணர்ந்த மித்ரன் அவளைத் தன்னிடமிருந்து பிரித்து அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான்.
“பிளீஸ் திவி, அழாத. உன்னை எப்போதும் அழவிடக் கூடாதுன்னு நினைச்சிருக்கேன். ஆனா உன் அழுகை மொத்தத்துக்கும் நானே காரணமாகிட்டேன். இதை மட்டும் உறுதியாச் சொல்லறேன் கேளு. இனிமேல் உன்னை யார் அழ வைச்சாலும் அவங்களை நான் சும்மா விடமாட்டேன். இப்போக் கிளம்பறேன். ஆனா திரும்பவும் நாளைக்கு வருவேன்.
நீ என்னை மன்னிக்கிற வரைக்கும் என் முயற்சியைக் கைவிட மாட்டேன். நீ என்னை அடிச்சாலும், உதைச்சாலும் பாரவாயில்லை வந்துட்டே தான் இருப்பேன். நீ என்னை விரும்பறேன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் எப்படி என்னால உன்ன விட முடியும்?” என்றவன், மீண்டும் அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்து விடுவித்துவிட்டு கீழிறங்கிச் சென்றான்.
மித்ரன் சொன்னதைப் போலவே தினமும் அவளைச் சந்திக்க வீட்டிற்கு வந்தான். மளமளவென்று காரியங்கள் நடக்க சந்தோஷ் டெல்லிக்குக் கிளம்பிவிட்டான். சசிதரன் ஆசிய போட்டிகளில் கலந்து கொள்ளச் சென்றுவிட்டான்.
மித்ரன் வந்ததைப் போலவே தினேஷூம் தினமும் வருகை புரிந்தான். மறுநாள் வந்த பொழுது அவன் தன் பெற்றோர்களிடம் அவளைப் பேச வைத்தான். அதற்கடுத்த நாள் வந்த போது தாத்தா பாட்டியுடன் பேச வைத்தான். இன்னொரு நாள் அவன் தங்கையுடன் பேச வைத்தான்.
கஜினி முகமதுவைப் போல தொடர்ந்து வந்து அவளை ஒவ்வொருவரிடமும் பேச வைக்கவும் அவளால் அதிகம் மறுக்க முடியவில்லை. அவர்கள் அனைவரும் ஒருசேர கேட்ட ஒரே விஷயம் எங்களையெல்லாம் எப்பொழுது பார்க்க வருகிறாய் என்பதே.
அவர்களே கிளம்பி அவளைப் பார்க்க வருவதாக இருந்தனர். ஆனால் தினேஷ் தான் அவர்களைத் தடுத்து அனைவரையும் பொறுமையாகக் காத்திருக்கச் சொல்லிவிட்டான். அவளுக்குச் சற்று அவகாசம் தந்து அவள் மனம் மாறிய பின்னர் அவனே அவளை அழைத்துக் கொண்டு வருவதாக வாக்குறுதி தந்தான்.
அது மட்டுமல்லாது முரளிதரனும் பேசிப் பேசியே அவளைக் கரைத்தார். அவர்களின் பாசத்தை பார்க்கையில் திவ்யதர்ஷினியால் அதற்கு மேல் மறுக்க முடியவில்லை. அத்துடன் மித்ரனின் தொடர் தாக்குதலில் இருந்து தப்பிக்கவும் அவளுக்கு வேறு இடம் தேவையாக இருந்தது.
உடனே முடிவு செய்துவிட்டாள். போய்ச் சில நாட்கள் அவர்களுடன் தங்கி இருந்துவிட்டு திரும்பிவிடலாம் என்ற முடிவில் இதோ இப்போது காரில் பயணம் செய்து கொண்டிருக்கிறாள்.
முரளிதரன் நடந்த விவரங்களை எல்லாம் அவர்களிடம் செல்லும் வழியில் பகிர்ந்து கொண்டார். சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் நெல்லூரில் பெரும்புள்ளியான வெங்கடேஷூக்குக் கார் ஓட்டுநராக முரளிதரன் பணிபுரிந்து வந்தார்.
வெங்கடேஷின் பெண்ணான திவ்யதர்ஷினிக்கு அவர்தான் ஆஸ்தான ஓட்டுனர்.
அதனால், ‘முள்ளி மாமையா… முள்ளி மாமையா’ என்று முரளிதரனின் பின்னாலேயே ஓடிக் கொண்டிருப்பாள் திவ்யதர்ஷினி. அதுவும் முரளிதரனுக்கு அப்பொழுதுதான் ஆண் குழந்தையொன்று பிறந்து இருக்க அந்தக் குழந்தையை பார்க்க வேண்டும் என்ற சாக்கில் அடிக்கடி அவரின் வீட்டிற்கு சென்று வருவாள் திவ்யதர்ஷினி.
வெங்கடேஷூக்கு ரவிபிரசாத் என்ற நண்பன் ஒருவன் இருந்தான். அவன் வெங்கடேஷிடம் வந்து தான் ஆரம்பிக்கப் போகும் நிதிநிறுவனத்தில் பங்குதாரராக வர முடியுமா என்று கேட்டான். ஏற்கனவே குடும்பத் தொழிலான ஸ்பின்னிங் மில் இயங்கிக் கொண்டிருந்தது.
அது போக அவர் தன் சொந்த உழைப்பில், டி. டி. கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் வேறு ஆரம்பித்திருக்கிறார். இதில் நிதி நிறுவனத்தை வேறு ஆரம்பிக்க வேண்டுமா? அதைப் பார்க்க நேரம் இருக்குமா? அதில் முதலீடு வேறு செய்ய வேண்டுமே எனப் பலவாறாக யோசித்துக் கொண்டிருந்தார் வெங்கடேஷ்.
அவரை யோசிக்க விடாமல் பேசியே மனதைக் கரைத்துத் தொழிலில் பங்குதாரர் ஆக்கிவிட்டான் ரவிபிரசாத். ஆகவே அந்தத் தொழிலில் வெங்கடேஷ் நிறையப் பண முதலீடு செய்தார். ஆரம்பத்தில் அனைத்தும் சுமூகமாகவே போய்க் கொண்டிருந்தது.
அவர்கள் தொழில் அமோகமாக பெருகிக் கொண்டு செல்ல, ரவிபிரசாத் நிறையக் கையாடல் செய்து பணத்தை சுரண்ட ஆரம்பித்திருந்தான். அதைக் கேள்விப்பட்ட வெங்கடேஷ் ரவிபிரசாத்திடம் அதைப் பற்றி தெலுங்கில் வினவினார். அவர் அப்படி விசாரிக்கையில் முரளிதரனும் அங்கே தான் அருகில் இருந்தார்.

