அது மட்டுமல்லாது தன் உயிருக்குமே உத்தரவாதம் இல்லை என்று எண்ணிய முரளிதரன் எங்கும் நிறுத்தாமல் அப்படியே சென்னையை நோக்கிக் காரைச் செலுத்தினார். ஓரளவுக்கு அனைத்தும் அடங்கியதும் திரும்பி வரலாம் என்று எண்ணிய முரளிதரன் அந்த ஊரை விட்டுக் கிளம்பினார்.
யாரும் தொடர்ந்து வரவில்லை என்றதும் சற்று நிதானமாக காரை ஓட்டினார் முரளிதரன். மிதமான வேகத்தில் சென்று கொண்டிருக்கையில், வழியில் யாரோ ஒரு வழிப்போக்கன் தன் மனைவி மற்றும் குழந்தையுடன் நின்று கொண்டிருந்தான். வெகுதூரம் வந்துவிட்டதால் ரவிபிரசாத்தால் இனி தங்களை கண்டுபிடிக்க முடியாது என்று ஆசுவாசப்பட்டுக் கொண்டனர்.
ஆகவே அந்த வழிப்போக்கனுக்காக வண்டியை நிறுத்தி என்னவென்று விசாரித்தனர். அவர்கள் சென்ற வாகனம் பழுதடைந்து நின்றுவிட்டது என்றும் இந்த இருட்டில் மனைவியையும் கைக் குழந்தையையும் வைத்துக் கொண்டு அதிகநேரம் நிற்க முடியாது என்றும் சொன்னான்.
ஆகவே அவர்களை அழைத்துக் கொண்டு போய்ப் பக்கத்து ஊரில் விட்டுவிடுமாறு மன்றாடினான் அவன். குழந்தை வேறு பசியில் வீறிட்டு அழுது கொண்டிருக்க, அதைப் பார்த்ததும் முரளிதரனுக்கும் அவரது மனைவிக்கும் பரிதாபமாக இருந்தது.
சரி என்று அவர்களையும் தங்கள் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு அடுத்த ஊரை நோக்கிப் பயணித்தனர். ஊரின் எல்லையைத் தொடும் பொழுது தான் திவ்யதர்ஷினியின் கையில் வைத்திருந்த கைப்பையைத் திறந்து பார்த்த முரளிதரனின் மனைவி, “பாவா” என அதிர்ந்து போய் அழைத்தார்.
முரளிதரன் என்னவென்று கேட்க மூன்றாம் நபரின் முன்னால் அதைப் பற்றி சொல்வதற்கு அவர் மனைவிக்கு விருப்பமில்லை. ஆகவே கழிவறையை உபயோகிக்க வேண்டும் என ஏதோ ஒரு காரணம் சொல்லவும் முரளிதரன் அடுத்து வந்த ஓர் உணவகத்தின் முன்னால் காரை நிறுத்தினார்.
அந்த வழிப்போக்கனின் குடும்பத்தினர் இறங்கவில்லை. அவன் குழந்தைக்கு ஏற்கனவே முரளிதரன் வைத்திருந்த உணவையும் பவுடர் பாலையும் கலக்கித் தர அவன் சாப்பிட்டுவிட்டு அப்படியே உறங்கிவிட்டான். அப்படியே அவன் மனைவியும் கண்ணயர்ந்துவிட்டாள்.
அவர்களின் உறக்கத்தை கலைக்க கணவன் விரும்பவில்லை. ஆகவே அவர்கள் மூவரும் காரிலேயே அமர்ந்து கொண்டனர்.
திவ்யதர்ஷினியையும் அவளோடு அந்தப் பையையும் இறுக்கமாகப் பற்றிக் கொண்டு முரளிதரனின் மனைவி கீழே இறங்கினார். உறங்கிக் கொண்டிருந்த தன் குழந்தையை முரளிதரன் கைகளில் ஏந்திக் கொண்டு மனைவியைப் பின் தொடர்ந்தார்.
சற்றுதூரம் சென்றதும் கிசுகிசுவென்று குரலில் அவர் மனைவி அனைத்தையும் சொல்ல அந்தப் பையில் குடும்பத்தின் மொத்த நகைகளும் இருந்ததைப் பார்த்தார் முரளிதரன். திருவிழா மற்றும் திருமண வைபவங்களுக்கு நகைகள் வேண்டுமென அப்பொழுதுதான் அவர்கள் வங்கிக்குச் சென்றுவிட்டு வந்தது முரளிதரனுக்கு ஞாபகத்திற்கு வந்தது.
கையிலிருக்கும் நகையை வெகுதூரம் சென்ற பின்னரே அவர்கள் கண்டுகொண்டனர். இப்படியே ஊருக்குத் திரும்பிவிடலாம், இல்லையென்றால் நகையைத் திருடிக் கொண்டு ஓடிவிட்ட குற்றவாளியாகி விடுவானே என நெஞ்சம் பதைபதைத்தது முரளிதரனுக்கு.
உடனே திரும்பிச் செல்ல எத்தனித்த முரளிதரனை அவரது மனைவி தடுத்து நிறுத்தினார். எப்படியும் வெங்கடேஷூம் அவர் மனைவியும் உயிரோடு இருக்கப் போவதில்லை. முரளிதரன் குற்றவாளி அல்ல என்று நிரூபிப்பதற்கு அவர்கள் உயிரோடு இருந்தால் மட்டுமே சாத்தியம்.
அத்தோடு இப்போது ஊருக்குச் சென்றால் அந்தக் கயவன் ரவிபிரசாத்தின் கைகளில் சிக்கிக் கொள்ள அதிக வாய்ப்பிருக்கிறது. நண்பனின் குடும்பத்தையே கொலை செய்யத் துணிந்தவன் தங்களை மட்டும் விட்டு வைப்பானா என்ன?
வெங்கடேஷின் பெற்றோர்களும் வயதானவர்கள். தனித்து இருப்பார்கள். இவன் அங்கே சென்று அவர்களுக்கும் துன்பத்தை இழுத்து வைக்க வேண்டாம் என எண்ணினார்.
வெங்கடேஷின் தங்கை அமெரிக்காவில் இருந்து திரும்பி வரட்டும். அதன்பிறகு நிலைமை ஓரளவுக்குச் சீரானதும் அந்த நகைகளுடன் ஊருக்குச் செல்லலாம் என முடிவு செய்தனர்.
அந்தச் சமயத்தில் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவர்கள் காரின் மீது கட்டுக்கடக்காமல் வந்த லாரி ஒன்று டமாரென்று வந்து இடித்தது. அந்தோ பரிதாபம் அந்தக் காரில் இருந்த வழிப்போக்கனின் குடும்பத்தினர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர்.
அந்த விபத்தில் சிக்கிய காரின் எண்ணை வைத்து அதில் வந்தவன் தான் முரளிதரன் என்றும் அவன் தான் அவர்கள் தேடிக் கொண்டிருக்கும் குற்றவாளி என்றும் அவர்கள் பேசியதிலிருந்து தெரிந்தது.
ஆனால் காரில் நகைகளையும் கடத்திக் கொண்டு வந்த நாலு வயது பெண் குழந்தையையும் காணவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தனர். அதற்கு மேல் முரளிதரனால் அமைதியாக இருக்க முடியவில்லை. காவல்துறையினரின் உதவியை நாடலாம் என அவர் அவர்களை நோக்கி மறைந்திருந்த இடத்திலிருந்து நகர ஆரம்பிக்க, அப்போது வேகமாக மற்றொரு கார் அங்கே வந்து நின்றது.
அந்தக் காரிலிருந்து ரவிபிரசாத் இறங்கியதைப் பார்த்ததும் முரளிதரன் மீண்டும் பின்னால் பதுங்கிக் கொண்டார். அனைவரின் கவனத்தையும் முரளிதரனின் மேல் திருப்பி விட்டிருக்கிறான் இந்த ரவிபிரசாத் என்று புரிந்தது.
முரளிதரன் நகைகளைத் திருடிக் கொண்டு அவர்களின் மகளான திவ்யதர்ஷினியையும் கடத்திக் கொண்டு குடோனுக்குத் தீயை வைத்துவிட்டதாகக் கட்டுக்கதையைப் பரப்பிவிட்டு இருக்கிறான் ரவிபிரசாத்.
வெங்கடேஷின் நண்பன் என்பதால் அவன் சொன்னதை அனைவரும் நம்பினார்கள். ஆகவே காவல்துறையினரிடம் புகாரளித்து இதோ காவல்துறையினர் இங்கு வந்துவிட்டனர். இதற்கு மேல் அவர்களிடம் போய் நின்றால் முரளிதரனின் வாழ்க்கையே முடிந்துவிடும். அத்தோடு தன் குடும்பத்தினரின் வாழ்க்கையும்.
அவை எல்லாவற்றையும் விட தன் முதலாளி வெங்கடேஷின் மகளான திவ்யதர்ஷினியின் வாழ்க்கையும் நாசமாகிவிடும். கொலையாளியான ரவிபிரசாத்திடம் இவளை நகையுடன் ஒப்படைத்தால் அவ்வளவுதான். அவளை என்ன வேண்டுமென்றாலும் செய்து விடுவான்.
அதை விடக் கூடாது. ஒருநாள் இந்த ரவிபிரசாத் கட்டாயமாக அவன் செய்த குற்றத்துக்காகக் கண்டிப்பாகத் தண்டனையை அனுபவிப்பான். முரளிதரனுக்குப் பழிவாங்கும் எண்ணமெல்லாம் இல்லை. திவ்யதர்ஷினியின் வளமான வாழ்க்கை மட்டுமே கண்களின் முன்னால் நின்றது.
யாரும் கவனிக்காத வண்ணம் அங்கிருந்து மனைவி, சசிதரன் மற்றும் திவ்யதர்ஷினியை அழைத்துக் கொண்டு எப்படியோ சென்னை வந்து சேர்ந்தார். இனிமேல் ஊருக்குத் திரும்பி போகவே முடியாது என்று தோன்றியது முரளிதரனுக்கு.
கொலைகாரன் ஒருவன் குடும்பத்தோடு துரத்திக் கொண்டிருக்கிறான். மற்றொரு பக்கம் வேலை செய்த வீட்டிற்கு இரண்டகம் செய்து விட்டான் என்று அனைவரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்குமேல் எங்கே ஊருக்குச் செல்வது என அப்படியே சென்னையிலேயே தங்கிவிட்டார். முரளிதரனின் மனம் வலித்தது. தான் யாருக்கும் தீங்கு இழைக்கக் கூட நினைக்கவில்லையே. அப்படி இருக்கும் தனக்கு ஏன் இப்படி ஒரு நிலைமை எனத் தினமும் இரவில் கண்ணீர் சிந்தினார்.
சென்னை வந்த நான்கு வருடத்திலேயே முரளிதரனின் மனைவி நோய்வாய்ப்பட்டு இறந்து போக அப்பொழுதிலிருந்தே திவ்யதர்ஷினியையும் சசிதரனையும் முரளிதரனே தனித்திருந்து கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தார்.
அதனால் தான் திவ்யதர்ஷினிக்கு ஏதாவது ஒன்று என்றால் பதறிப் போவார். அவள் தன் மகள் இல்லை என்றாலும் தன் மகனை விடவும் தங்கத் தட்டில் வைத்துத் தாங்கினார். ஏனெனில் தங்கள் முதலாளியின் பெண்ணல்லவா திவ்யதர்ஷினி!
மகாராணி போல் வாழ வேண்டியவளை இப்படி ஒரு புறாக் கூண்டுக்குள் அடைத்து விட்டதாக எண்ணி மருகினார். ஏற்கனவே அவளை அவள் குடும்பத்தில் இருந்து பிரித்துவிட்ட குற்றக் குறுகுறுப்பு அவரைத் தினமும் வாட்டிக் கொண்டிருந்தது.
அதனால் அவரால் முடிந்த வரையில் உழைத்துச் சம்பாதித்து மொத்தப் பணத்தையும் திவ்யதர்ஷினிக்கே வாரி இறைத்தார். அதைப் பார்த்துத் தான் சசிதரன் கூட, ‘நான் வேறு வீட்டில் பிறந்தேனா, இல்லை, என்னை தத்தெடுத்துக் கொண்டு வந்து விட்டீர்களா’ எனப் பலமுறை கிண்டலாக வினவியிருக்கிறான்.
ஆனால் தத்தெடுத்துக் கொண்டு வந்தது அவனை அல்ல, திவ்யதர்ஷினியை என்று தெரிய வருகையில் அனைவரும் தங்களைப் பெரும் சூறாவளி ஒன்று சுழற்றிப் போட்டதைப் போல் உணர்ந்தனர்.
பூட்டிய அறையில் இருந்தால் ஏன் வேர்த்து மயக்கமாகி விடுகிறாள் என்று திவ்யதர்ஷினிக்குத் தெளிவானது. சிறு வயதில் நடந்த தீ விபத்து அவள் மனதில் ஆழப் பதிந்து போயிருக்கிறது.
நடந்த விஷயங்களை எல்லாம் கேட்டதும் வெங்கடேஷின் பெற்றோர்களும் தங்கையும் ஓவென்று கதறி அழுதனர். பல வருடங்களாகக் கார் ஓட்டுனராக இருந்த முரளிதரன் சொல்வதை நம்பாமல் இருக்க முடியவில்லை.
அதுவும் திவ்யதர்ஷினியைத் தனித்திருந்து சிறப்பாக வளர்த்த விதத்தைப் பார்த்தப் பிறகும் அவரின் நற்குணத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்றால் அவர்கள் மனிதர்களே அல்ல. அந்தத் துரோகி ரவிபிரசாத் மட்டும் தங்கள் கைகளில் கிடைத்தால் அவனை உயிருடன் கொன்று விடுவதாக அனைவரும் வெகுண்டு எழுந்தனர்.
வெங்கடேஷ் இறந்தபிறகு அங்கேயே ஒரு மாதமாகத் தங்கியிருந்து நிதி நிறுவனத்தில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாகச் சொல்லி அதை மூடிவிட்டு, நீலிக் கண்ணீர் வடித்து, அங்கிருந்து சென்றுவிட்டான் ரவி பிரசாத்.
அன்று கிளம்பியவன் தான். அதன்பிறகு அவர்களின் கண்களில் படவுமில்லை, அந்த ஊர்ப் பக்கம் தலை வைத்தும் படுக்கவில்லை. நண்பனே இறந்த பிறகு அவன் ஏன் இங்கே வரப் போகிறான் என்று இத்தனை நாட்களும் அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் அவன் தான் குற்றவாளி என்றும் அவனே அனைத்திற்கும் காரணம் எனத் தெரிய வருகையில் அனைவரும் கதறி அழுதனர். பார்க்கப் போனால் அவன் மேல் தான் முதலில் சந்தேகப்பட்டிருக்க வேண்டும்.
தேவையில்லாமல் அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான கார் ஓட்டுநரான முரளிதரனின் மேல் சந்தேகத்தையும் வன்மத்தையும் கோபத்தையும் இத்தனை வருடங்களாக வளர்த்துக் கொண்டிருந்தார்கள்.
அவன் ஒருவனின் பேராசையினால் ஒரு குடும்பமே அழிந்து, அந்தக் குடும்பத்தின் இளவரசி குடும்பத்தை விட்டுப் பிரிய நேர்ந்திருக்கிறது.
முரளிதரன் என்றுமே தனக்கு அப்பா என்று திட்டவட்டமாக அனைவரிடமும் சொல்லிவிட்டாள் திவ்யதர்ஷினி. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்கக் கூடாது என்று ஒரேடியாக அடித்துக் கூறினாள். அவர்களும் அதை மறுத்துக் கூறாமல் ஏற்றுக் கொண்டனர்.
இங்கே திவ்யதர்ஷினி தன் தாத்தா-பாட்டி மற்றும் அத்தை மாமாவுடன் ஒன்று சேர்ந்ததில் சற்று மகிழ்ச்சியாக இருக்க, அங்கே அவளைக் காணாது துடித்து ஊரெல்லாம் தேடி அலைந்தான் ஒருவன்.

