அத்தியாயம் – 26
எப்பொழுதும் போல் திவ்யதர்ஷினியைப் பார்க்க அவளது வீட்டுக்குச் சென்ற மித்ரனைப் பூட்டியிருந்த வீடே வரவேற்றது. அவளை அழைத்துப் பார்த்தும் பலனில்லை. அவள் அவனின் எண்ணை தடை செய்து வைத்திருந்தாளே.
ஒருவேளை அருகிலிருக்கும் கோவிலுக்குச் சென்றிருப்பாளோ, அல்லது, உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்குச் சென்றிருப்பாளோ என அவன் மனம் சூறாவளியில் சிக்கிக் கொண்ட காற்றாடியைப் போல் இயங்கிக் கொண்டிருந்தது.
‘சீக்கிரம் வந்துவிடுவாள்’ என இருக்கும் வேலைகளை எல்லாம் விட்டுவிட்டுத் தனது காரினுள் அமர்ந்து வெகுநேரமாகக் குடியிருப்பு வளாகத்தின் நுழைவாயிலின் மேலேயே கவனத்தை வைத்திருந்தான். இரவு பத்து மணி தாண்டியும் அவள் கண்களில் படவேயில்லை.
அவர்கள் வீட்டினுள் விளக்கும் எரியவில்லை. சந்தோஷ் அவன் பெற்றோரை அழைத்துக் கொண்டு டெல்லிக்கு சென்று விட்டான் என்று தெரியும். சசிதரனும் ஆசியப் போட்டியில் பங்கு கொள்ள சீனாவுக்கு சென்று விட்டான் என்று தெரியும். அவன் சென்றபொழுது மித்ரனும் விமான நிலையத்திற்குச் சென்று அவனுக்கு வாழ்த்து சொல்லி அனுப்பி வைத்தான்.
ஆகவே யாரை அழைத்துக் கேட்பது என யோசித்துக் கொண்டிருந்தான். சந்தோஷை அழைக்க அவனுக்குச் சற்றும் விருப்பமில்லை. மேலும் ஒரு அரைமணி நேரம் காத்திருந்துவிட்டு மறுநாள் வந்து பார்க்கலாம் என வீட்டிற்குச் சென்றான்.
அன்னையை அதிக நேரம் காக்க வைக்கவும் விருப்பமில்லை. என்று அன்னையின் மடி சாய்ந்து கதறினானோ அப்போதிருந்தே தன் அன்னையிடம் ஒருவித நெருக்கம் தோன்றியிருந்தது அவனுக்கு.
‘திவ்யதர்ஷினி எப்படி இருக்கிறாள்?’ எனச் சைகையில் கேட்ட மீனாட்சியிடம் அவள் வீட்டில் இல்லை என்றான். மகனின் மனம் அவருக்கு நன்றாகப் புரிந்து போனது. அதில் அவருக்கும் மிக்க மகிழ்ச்சியே. ஆனால் இவன் ஏதோ சொல்லி அவள் மனதைக் காயப்படுத்தி இருக்கிறான் என்று தெரிந்தது.
அவரால் எதுவும் செய்ய முடியாது. முள்ளைத் தைத்தவனே அதை வெளியில் எடுக்க வேண்டும். அப்போது தான் இறுதிவரையில் அவர்களுக்குள் புரிதல் நன்றாக இருக்கும் என்று நம்பினார். ஆகவே நல்லதே நடக்கும் எனப் பொறுமையாகக் காத்திருந்தார்.
சாப்பிட்டேன் எனப் பெயர் பண்ணிக் கொண்டு தனது அறைக்குச் சென்ற மித்ரனுக்கு உறக்கம் அவ்வளவு எளிதாக வந்து விடவில்லை. அயர்ந்து போய்க் கண்ணயர்ந்தவனுக்குக் கனவில் வந்து கோப முகத்தைக் காட்டினாள். அதாவது பரவாயில்லை.
‘மித்ரன்’ என அவள் அலறுவதும், அதைத் தொடர்ந்து அவள் உடம்பிலிருந்து ரத்தம் குபுகுபுவென்று வெளியேறுவதும் தெரிந்தது. ‘திவி’ என இவன் ஓடிப் போய் அவளைப் பிடிக்க நினைக்கையில் அந்த இடமே இருட்டாகிப் போனது.
‘திவி… திவி…’ என அலறிக் கொண்டு எழுந்தமர்ந்தான். அவளை அன்று முழுவதும் பார்க்காமல் இருந்ததே கொடுமையென்றால் கனவில் கூட அவன் கைகளில் இரத்த வெள்ளத்தில் அவள் துடிப்பதைக் காண நேரிட்டது அதையும் விடக் கொடுமை.
இந்த ரணத்துக்கு அந்தக் குண்டு அவன் மேலே பட்டிருந்தால் அவன் நிம்மதியாகப் போய்ச் சேர்ந்திருப்பான். ஆனால் இப்போது உயிரோடு அவனைக் கொன்று புதைத்துக் கொண்டிருக்கிறாள்.
வெகுநேரம் அப்படியே விட்டத்தைப் பார்த்துக் கொண்டு வெறுமெனப் படுத்திருந்தான் மித்ரன். திடீரென்று ஞாபகம் வந்தவனாக தன் அலுவலக எண்ணிலிருந்து திவ்யதர்ஷினியைக் காலையில் எழுந்தவுடன் அழைத்தான்.
ஆனால் அவனது அழைப்பு எடுக்கப்படவில்லை. தெரியாத எண் என்று அவள் எடுக்கவில்லை.
அவளுக்கு ஏதாவது ஆகிவிட்டதோ? அவள் தந்தையின் எண் தெரிந்தால் அவரையாவது அழைத்துப் பார்க்கலாம். மண்டையைப் பிய்த்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது அவனுக்கு. நல்லவேளையாக சசிதரனின் எண் அவனிடம் இருந்தது.
அவனுக்கு வாட் ஸ்ஆப்பில் ‘எப்படி இருக்கிறாய்?’ எனப் பொதுவாகச் செய்தி அனுப்ப, அவன் உடனே பதில் அனுப்பினான்.
அவன் பத்திரமாகச் சேர்ந்துவிட்டதாகவும் இன்றைய பயிற்சிக்குக் கிளம்பிவிட்டதாகவும் பதில் அனுப்பியிருந்தான். இவன் இவ்வளவு அமைதியாக பதில் அனுப்பியிருக்கிறான் என்றால் அவன் தமக்கை பத்திரமாக இருக்கிறாள் என்று தானே அர்த்தம் என மனதைச் சமாதானம் செய்து கொண்டான் மித்ரன்.
அன்று காலையில் மீண்டும் திவ்யதர்ஷினியின் வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டினான். பதிலில்லை. அன்று முழுவதும் எத்தனை முறை அவர்கள் வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டினான் என்ற கணக்கேயில்லை.
இரவு பத்து மணியானதும் அதற்கு மேல் அவனால் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை. அவள் எங்கே இருக்கிறாள் என்று தெரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் நெஞ்சம் வெடித்துச் சிதறிவிடும் போலிருந்தது மித்ரனுக்கு.
அவளைக் காணாது அவனால் இயங்கவே முடியாது என்ற நிலைக்கு வந்திருந்தான். அன்றைய பொழுதை தண்ணீர் மற்றும் உணவின்றி அலைந்து திரிந்து கழித்தான். முதல் நாள் சரியாக உறங்காததாலும் அன்றைய வேலை பளுவினாலும், அவளைக் காணவில்லை என்று தேடியதாலும் மிகவுமே அயர்ந்து போயிருந்தான்.
‘யாரிடம் கேட்கலாம்?’ என எண்ணியவனுக்கு உடனே ஒருவனின் ஞாபகம் வந்தது. வாழ்க்கையில் இதுவரையில் செய்யாத ஒன்றையும் செய்தான். அதாவது கெஞ்சினான்! அதுவும் யாரிடம்? நண்பன் எனப் பழக வந்த வத்சனிடம்.
தன் கோபத்தை, ஆணவத்தை, அகந்தையை என அனைத்தையும் மூட்டைக் கட்டி வைத்துவிட்டு, இரவு பதினொரு மணிக்கு அவன் வீட்டுக் கதவைப் போய்த் தட்டினான்.
தூக்கக் கலக்கத்துடன் கதவைத் திறந்த வத்சன், தான் காண்பது கனவா, இல்லை, நிஜமா என்பதைப் போல் கண்களைப் பலமுறை கசக்கிக் கசக்கிப் பார்த்தான். மித்ரனின் பிம்பம் கண்களை விட்டு மறையவில்லை என்றதும் சற்று முன்னால் வந்து கைகளை நீட்டி எதிரே நின்றிருந்த மித்ரனின் கைகளில் கிள்ளினான்.
அவன் நிஜமாகவே அங்கே வந்திருக்கிறான் எனப் புரிந்ததும், “என்னடா, அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனேன்னு என்னைப் பார்க்க வந்துட்டியா?” எனக் கிண்டலாக வினவினான் வத்சன்.
அவனுடன் விளையாடவெல்லாம் அவனுக்கு நேரமில்லை. அதனால் நேராக, “திவ்யதர்ஷினியைக் கூப்பிடேன்” என்றான்.
“ஏன், அதை நீங்க செஞ்சா ஆகாதா?” என வத்சன் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே அவனைத் தள்ளிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான் மித்ரன்.
“ பிளீஸ்டா, அவளைக் கூப்பிட்டு எங்க இருக்கான்னு மட்டும் கேளு. அவ பத்திரமா இருக்கான்னு தெரிஞ்சாப் போதும். ரெண்டு நாளா வீட்டுக்குப் போய்ப் பார்த்துட்டு வரேன்” என இறைஞ்சுதலாகப் பேசவும், வத்சன் அவனை விசித்திரமாகப் பார்த்தான்.
“ஓஹ்… அவ உன் நம்பரைப் பிளாக் பண்ணிட்டாளா” எனச் சிரித்தான் வத்சன். பின்னர் தொடர்ந்து, “உலகமே அழிஞ்சாலும் உன்கிட்ட கண்டிப்பா வரமாட்டேன்னு இந்த வாய் சொல்லுச்சே” எனக் கேலியாகக் கேட்டான்.
“என்னால முடியலைடா.. அவளைப் பார்க்காம, பேசாம இருக்க முடியலை. பிளீஸ் கூப்பிடேன்.” மீண்டும் மன்றாடுவதைப் போல் மித்ரன் பேசவும், “ம்ம்ம்.. காதல் படுத்தும் பாடு இருக்கே..” எனச் சொல்லிவிட்டு, திவ்யதர்ஷினியை அழைத்தான்.
அந்நேரத்தில் அவன் அழைக்கவும் திவ்யதர்ஷினி பதற்றத்துடன் அழைப்பை எடுத்தாள்.
‘இந்நேரம் எதற்காக இவன் அழைக்கிறான்?’ என எண்ணியவாறே, “சொல்லுங்க வத்சன், என்னாச்சு? எதுக்கு இந்நேரத்துல கூப்பிட்டிருக்கீங்க. எல்லாரும் நல்லா இருக்காங்க தானே?” எனப் படபடவென்று பேசினாள்.
மித்ரனுக்கு ஏதாவது ஆகிவிட்டதோ என்று பயந்து போனாள்.
“எல்லாரும் நல்லாயிருக்கோம். நீ எங்க கிளம்பிட்ட? அதைச் சொல்லு முதல்ல. உன்னைத் தேடி வீட்டுக்குப் போயிட்டு வந்தா..தேன்” என அவன் சொன்னதும், அவள் நடந்த விவரங்களைச் சுருக்கமாக அவனிடம் தெரிவித்தாள்.
இரவு நேரம் அமைதியாக இருந்ததாலும், அருகிலேயே நின்று கொண்டிருந்ததாலும் அவள் பேசியது அனைத்தும் மித்ரனுக்குக் கேட்டது.
“என்னடா இது, இவ்வளவு ஷாக்கிங் நியூஸ், பிரேக்கிங் நியூஸ் எல்லாம் ஒரே நைட்ல தர்றீங்க?” என அவன் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே மித்ரன் அலைபேசியைப் பிடுங்கிப் பேச ஆரம்பித்தான்.
“திவி, உனக்கு ஒன்னும் இல்லை தானே? பத்திரமா இருக்க இல்லையா? என்கிட்டே பேச வேண்டாம். ஆனா எங்காவது போறதா இருந்தா சொல்லிட்டுப் போயேன். ஏனிப்படி சொல்லாம கொள்ளாம போயிட்ட. உன்னைப் பார்க்காம தவிச்சுப் போயிட்டேன்” என அவன் படபடவென்று பேசினான். அவளைத் தவிர அவன் உயிரை யாராலும் இப்படியெல்லாம் வதம் செய்ய இயலாது.
“ம்க்கும்.. பேச வேண்டாமாம்.. ஆனால் சொல்லிட்டுப் போக வேண்டுமாம். என்ன லாஜிக்கோ?” என முணுமுணுத்தான் வத்சன்.
மித்ரனின் குரலைக் கேட்டதும் திகைத்துப் போனாள் திவ்யதர்ஷினி. அவன் குரலிலிருந்த வருத்தத்தையும், வேதனையையும் பார்க்காமலேயே அவன் குரலை வைத்தே புரிந்து கொள்ள முடிந்தது.
அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, “இங்க பாரு தர்ஷ், நான் உன்னை மாட்டியெல்லாம் விடலை. உனக்குப் ஃபோன் போட்டு எங்கே இருக்கன்னு கேட்கச் சொன்னான் ஒருத்தன். நான் பேசிட்டு இருக்கறதுக்குள்ளேயே குரங்கு மாதிரி ஃபோனைப் பிடுங்கிட்டான். எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. இதுக்காக என்னோட பேசாம எல்லாம் இருக்காத” எனக் கத்தினான் வத்சன்.
அதைக் கேட்ட திவ்யதர்ஷினியின் இதழோரத்தில் சன்னமாகப் புன்னகை எட்டிப் பார்த்தது. மித்ரனை ஒருத்தன் குரங்கு என்று சொன்னால் அது வத்சனாக மட்டுமே இருக்க முடியும். அப்படியென்றால் அவனிடம் சமரசமாகிவிட்டானா எனப் புன்னகை பூத்தாள்.

