சதிராடும் சித்திரமே 27 – 2

அவளைப் பார்த்ததும் மித்ரன் எப்படி உணர்ந்தான் என்றே சொல்ல முடியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். கண்டிப்பாக முன்பிருந்த எரிச்சலும், கோபமும் காணாமல் போயிருந்தது. தோற்றது தன்னவளிடம் அல்லவா? தோற்பது இவளிடம் என்றால் வாழ்க்கை முழுவதும் தோற்றுப் போக அவன் தயார். தோற்றுப் போயிருந்தாலும் வெற்றி பெற்றதைப் போலிருந்தது அவனுக்கு.

 

மீட்டெடுத்தப் புன்னகையுடன், “சத்தியமா உன்னை எதிர்பார்க்கலை” என உண்மையை உரைத்தவாறே அவளுக்கு அருகில் போய் அமர்ந்தான்.

 

“தெரியும்” என அவள் அவனை ஊடுருவ, “தேங்க்ஸ் திவி. முதல் முதலா தனியா வெளில வந்திருக்கோம். நம்ம ஃபர்ஸ்ட் டேட்” என்றான் புன்னகைத்து.

 

அவள் அவனை முறைத்தவாறே பட்டென எழ, அவள் செய்கையை எதிர்பார்த்தவன் போல் சரிந்து எட்டி அவள் கையைப் பற்றி இழுத்து மீண்டும் அமர வைத்தான்.

 

“உன் உதவியில்லாம என்னால் முன்னேற முடியும்டா என என் மண்டையில அடிச்சுப் புரிய வைக்க நினைக்கிறியா திவி?” என அவளைக் கூரிய விழிகளால் அளவிட ,

 

“பரவாயில்லையே சரியாப் புரிஞ்சுக்கிட்டீங்க” என நக்கலாகச் சொன்னாள். அவள் கண்களில் நட்சத்திரக் கூட்டம் மின்னியது.

 

அதைப் பார்த்து அவன் மனம் வெற்றிக் களிப்பில் கூத்தாடியது. தோல்வி இத்தனை களிப்பைத் தருமென்றால் தினம் தினம் இவளிடம் தோற்பதற்கு அவன் தயாராக இருக்கிறான்.

 

“நான் சொன்னதை மறக்க மாட்டியா? நான் என் மடத்தனத்தைப் புரிஞ்சுக்கிட்டேன். பிளீஸ் திவி… உனக்கு என்னை விட அறிவும் திறமையும் இருக்குன்னு ஒத்துக்கிறேன்…இன்னொரு சான்ஸ் கொடேன்” என்றான்.

 

அவனில்லாமல் அவளால் தனித்து நின்று முன்னேற முடியும் என்று பறைசாற்றுகிறாள். அவளால் அவனில்லாமல் தனித்து இருக்க முடியுமா? தொழிலில், அவள் பணியில் அப்படி இருந்து விடுவாள். அதில் சந்தேகமில்லை. ஆனால் சொந்த வாழ்க்கையில் அவனில்லாமல் வாழ்ந்துவிடுவாளா?

 

அவனால் அவளில்லாமல் சத்தியமாக வாழவே முடியாது.

 

“எனக்கு உங்க பணம் தேவையில்லை” என்றாள் ஒற்றை வாக்கியமாக. “அப்போ மனம் மட்டும் போதுமா?” என அவளைக் குறுகுறுவென்று பார்க்க, “ஷ்ஷ்.. இந்த லவ் பேர்ட்ஸ் தொல்லை தாங்க முடியலை.. ஷூ.. ஷூ..” என யாரோ பக்கத்து மேஜையிலிருந்து விரட்டுவதைப் போல் சத்தம் போட்டனர்.

 

இருவரும் திரும்பிப் பார்க்க, வத்சன் அங்கே அருகில் அமர்ந்திருந்தான். அவனைப் பார்த்ததும் மென்னகையுடன் அவனருகில் சென்று பேசினாள் திவ்யதர்ஷினி.

 

“ஏன்டா எங்க போனாலும் வந்து உயிரை வாங்கற?” என மித்ரன் அவனை நோக்கி முறைக்க, “இது என்ன உன்னோட ரெஸ்டரண்ட்டா. நான் பாட்டுக்கு சிவனேன்னு இங்க சாப்பிட்டுட்டு கார் விற்க வந்தா, இங்கே ஒரே காதல் தொல்லை” என்றான்.

 

பிறகு திவ்யதர்ஷினியைப் பார்த்து, “கங்க்ராட்ஸ்… புது கம்பெனி எப்படிப் போகுது? ஏதோ ப்ராஜக்ட் பண்ணப் போறியாம். சசிதரன் சொன்னான்” என வத்சன் பேசிக் கொண்டே போக, மித்ரன் பொறாமையுடன் அவனைப் பார்த்தான்.

 

திவ்யதர்ஷினி தன் சொந்த நிறுவனம் தொடங்கியதே அவனுக்குத் தெரியவில்லை. இதில் இவன் சசிதரனுக்கு வேறு இவ்வளவு நெருக்கமாக இருக்கிறானே.

 

“என்னடா நண்பா முறைக்கிற? சசிதரன் என்னோட க்ளோஸா இருக்கான்னு பொறாமையா? எனக்கும் செஸ் விளையாடப் பிடிக்கும்னு உனக்குத் தெரியுமில்லை. அப்போ தேசிய செஸ் சாம்பியன் கூடவெல்லாம் நட்பா இருக்க சான்ஸ் கிடைச்சா விடுவேனா?” என்றான்.

 

“சரி சரி.. முறைக்காத. நீங்க ரொம்ப தீவிரமா பேசிட்டு இருந்தீங்க போல. சட்டுபுட்டுன்னு பேசி சீக்கிரம் ஆஹா கல்யாணம்.. டும் டும் கல்யாணம்னு பாடுங்க” என வத்சன் கேலியாகச் சொன்னான்.

 

“பூவைக் கத்தியால் கீறிட்டு வாசம் வீசுன்னா எப்படி?” என திவ்யதர்ஷினி சொல்ல, “அதுக்கா நீ பூ மரத்தை அருவாளால் வெட்டிட்டியே” என்றான் மித்ரன்.

 

“மறுபடியும் முதல்ல இருந்தா? டேய் எண்டு கார்டு போட நேரம் வந்துருச்சு. சீக்கிரம் சட்டு புட்டுன்னு பேசிக் கல்யாணத் தேதியைக் குறிங்கடா. அப்புறம் நாங்க எல்லாம் எப்போ பெர்ஃபார்ம் பண்ணறது” எனச் சொல்லி அவன் முதுகில் இரண்டு தட்டு தட்டிவிட்டுச் சென்றான் வத்சன்.

 

இரண்டு அடியெடுத்து நடந்தவன், “நீங்க ஹனி மூன் போறீங்களோ இல்லையோ, எனக்கு டபுள் ரூமை மறக்காம புக் பண்ணிக் கொடுத்திடுங்க. அவ்வளவு தூக்கம் கெட்டிருக்கேன்” எனச் சொல்லிவிட்டுச் சென்றான்.

 

மீண்டும் போய் இருவரும் இருக்கைகளில் அமர, ஹனிமூன் என்ற வார்த்தையில் கன்னங்கள் சிவந்து போயிருந்த திவ்யதர்ஷினியை மித்ரன் பார்க்க நேரிட்டது. மனம் துள்ளலைத் தத்தெடுத்துக் கொண்டது.

 

“என்ன திவி, கல்யாணம் பண்ணிக்கலாமா? என் பக்கத்துலேயே இருந்தா நீ இன்னும் நிறைய நேரம் என் மேலே கோபத்தைக் காட்டலாமே” என்றான்.

 

‘என்னடா இது லாஜிக்’ என அவனைப் பார்த்தவள், “வேலையைப் பத்தி எதுவும் கேட்கலையா?” என்றாள்.

 

“ஏற்கனவே விடை தெரிஞ்ச கேள்வியைக் கேட்டு எந்தப் பிரயோஜனமும் இல்லை” என்றான். கண்டிப்பாக அவன் நிறுவனத்துடன் கூட்டணி வைத்துக் கொள்ள ஒத்துக் கொள்ள மாட்டாள் என்று தெரியும்.

 

“நீ சொந்த விஷயத்தையும் தொழிலையும் போட்டு குழப்பிக்கமாட்டேன்னு தெரியும். கல்யாணம் பண்ணிக்கலாமா?” என மீண்டும் அதே கேள்வியைக் கேட்டான்.

 

அங்கு வந்த பணியாளரிடம் அவர்களுக்கு வேண்டிய உணவைச் சொல்லிவிட்டு, “மனசு நிறைஞ்சு சாப்பிட்டு நிறைய நாளாச்சு” என்றான். உணவு வரும் வரையில் பேசிக் கொண்டே இருந்தான். அவள் எழுந்து போகாமல் இருந்ததே பெரிய விஷயம் அவனுக்கு.

 

இத்தனை நாட்கள் எப்படியோ, இனி வரும் காலங்களில் அவளுக்குக் கண்டிப்பாக எல்லாவற்றிலும் உறுதுணையாக இருப்பான் என்று வாக்களித்தான். அவள் கண்களிலிருந்து கண்ணீரை வரவே விடமாட்டான் என்றெல்லாம் வாக்குத் தரவில்லை.

 

அப்படி அவளுக்கு ஒரு நிலை ஏற்பட்டால் அவளின் துயரத்துக்கு மருந்தாக, அவளுக்குப் பக்கபலமாக இருப்பான் என்று சொன்னான். அவன் நிறையப் பேசினான். இனி ஒரு வாய்ப்புக் கிடைக்கப் போவதில்லை என்று மனதில் இருந்ததையெல்லாம் அவளிடம் பகிர்ந்து கொண்டான்.

 

அவன் தாய்-தந்தையின் பிரிவு, அதனால் அவனுக்கு ஏற்பட்ட மனஉலைச்சல், அவன் பாட்டியின் சதித் திட்டம் என அனைத்தையும் சொன்னான். ஆரம்பத்தில் அவன் அன்னை மேலிருந்த வெறுப்பு, பின்பு உண்மை தெரிந்ததும் அவன் பாட்டியின் மேலிருக்கும் அவநம்பிக்கை என அனைத்தையும் சொன்னான்.

 

அதனால் அவனுக்கு எந்தவொரு நல்லது நடந்தாலும் அது நிரந்திரமில்லை என்று நம்பினான். அதனாலேயே வத்சன் மேல் ஏமாற்றிவிட்டான் என்று குற்றம் சாட்டினான். பின்னர் ரதிப்ரியாவை ஏன் திருமணம் செய்ய நினைத்தான் என்று சொன்னான்.

 

நல்லவேளையாகச் சித்திரமாய்த் தோன்றி அவன்மேல் வண்ணங்களை வாரியிறைத்தாள் திவ்யதர்ஷினி. இல்லையென்றால் கருப்பு வெள்ளையாய் அவன் வாழ்க்கை முடிந்து போயிருக்கும்.

 

அதுவும் அவன் உயிருக்கு இன்றியமையாதவள் ஆகிவிட்ட அவளை வேறு யாரும் சொந்தம் கொண்டாடிக் கொண்டு வந்துவிடுவார்களோ என்ற பயத்திலேயே இருந்ததாகச் சொன்னான். அதைப் போலவே கிஷோர் கட்டுக் கதைச் சொன்னதும், சந்தோஷ் அதற்கு எண்ணை ஊற்றியதும் அவனால் அந்த ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றான்.

 

அவன் பேசுவதைக் கேட்க கேட்க அவளுக்கு அழுகை வந்தது. அவள் வாழ்க்கையிலும் நிறைய நடந்திருக்கிறது. ஆனால் அவையெல்லாம் இப்போது தான் அவளுக்குத் தெரிய வந்தது. அதனால் அவள் பெரிதாக மனஉளைச்சலுக்கு ஆளானதில்லை.

 

இவன் வாழ்க்கையில் அப்படியல்ல. நிறைய மனஉளைச்சல் அனுபவித்திருக்கிறான். ஆனால் அதையே பிடித்துக் கொண்டு எத்தனை நாட்கள் அதன் பின்னாலேயே ஓடிக் கொண்டிருக்க முடியும்? ஏதோ ஒரு வேகத்தில் செய்துவிட்டான்.

 

இன்று அவன் கோபத்தை, அந்த நம்பிக்கையின்மையை அவளிடம், நண்பனிடம் என்று காட்டுகிறான். நாளைக்கு அவன் பிள்ளைகளிடம் காட்டினால் வாழ்க்கையில் நிம்மதி எங்கே கிடைக்கும்? மகிழ்ச்சி எப்படி நிலைக்கும்?

 

“உங்க அடி மனசுல ஏற்பட்ட காயத்தால நீங்க யாரையும் நம்பறதில்லை. எல்லோர் மேலேயும் கண் மண் தெரியாமல் கோபப்படறீங்க. பெரியவங்க எங்களாலேயே உங்க வார்த்தைகளையும் செய்கைகளையும் தாங்கிக்க முடியலை. நாளைக்கு நம்ம பிள்ளைங்க எப்படித் தாங்குவாங்க என யோசிச்சீங்களா?” என அவள் வினவ,

 

பட்டென்று முகம் மலர்ந்தவன், “தேங்க்ஸ் திவி. நீ சம்மதம் சொல்லறதுக்காக எத்தனை நாளா காத்திருக்கிறேன் தெரியுமா?” என அவன் சொல்லவும், ‘தான் எங்கே சம்மதம் சொன்னோம்?’ என அவள் குழம்பிப் போனாள்.

 

“நான் எங்கே சம்மதம் சொன்னேன்?” என அவள் கேட்க ஆரம்பிக்கையிலேயே, இடையிட்டு, “நம்ம பிள்ளைங்கன்னு நீ சொன்னப்பவே அதைக் கேட்க ரொம்பச் சந்தோஷமா இருந்தது. கண்டிப்பா மாத்திக்கிறேன். உனக்காக, நமக்காக, நம்ம எதிர்காலத்துக்காக, நம்ம குழந்தைகளுக்காக” என அவள் கைகளைப் பற்றி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அதில் முத்தமொன்றைப் பதித்தான்.

 

“மித்ரன்.. நான்..” என அவள் மறுக்க முயல, “பிளீஸ்டா… நான் உன் அப்பாக்கிட்டே வந்து பேசறேன்… எனக்கு நீ வேணும். மறுக்காத..” என்றான். உயிரை உருக்கும் குரலில் கேட்டால் அதன்பிறகு மறுக்கத் தோன்றுமா என்ன?

error: Alert: Content selection is disabled!!