சதிராடும் சித்திரமே 28 – 1

அத்தியாயம் – 28

 

அதன்பிறகு மித்ரன் அமைதியாக இருக்கவில்லை. அவள் மனம் இளகி இருக்கையிலேயே காரியத்தைச் சாதித்துக் கொள்ள வேண்டும் என மளமளவென்று வேலையில் இறங்கினான்.

 

முதற்கட்டமாக திவ்யதர்ஷினியைப் பெண் கேட்டு தன் அன்னை மற்றும் சித்தி சித்தப்பாவுடன் அவள் வீட்டுக்குச் சென்றான். திடுதிடுப்பென்று சொல்லாமல் கொள்ளாமல் வந்தவர்களை விரட்டவா முடியும்?

 

அவர்களை வரவேற்று வீட்டினுள் அமர வைத்தவள், முரளிதரனை அழைத்து, பெண் கேட்டு வந்திருப்பதாகச் சொன்னாள். அவர் ஏதோ ஒரு சிறுவேலையாகக் கடைக்குச் சென்றிருந்தார். சசிதரன் எப்போதும் போல் பயிற்சிக்குச் சென்றிருந்தான்.

 

மகள் சொன்னதைக் கேட்டதும் உடனே விரைந்து வந்தார்.

 

அதற்குள் வந்தவர்களுக்குச் சிற்றுண்டி தந்து, காபி-டீ வைத்துத் தந்தாள். எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருந்தது. மித்ரனின் சித்தி வந்ததிலிருந்து திவ்யதர்ஷினியின் குடும்ப சூழ்நிலையைப் பற்றி மறைமுகமாகக் குத்திக் காட்டிக்கொண்டே இருந்தார்.

 

அவருக்குத் தன் சொந்தத்திலிருந்து பெண் எடுக்க வேண்டும் என்ற ஆசை. பின்னே சொத்துகள் அனைத்தும் கை நழுவிப் போய்விடுமே. அதுமட்டுமல்லாது அவள் பிறந்த வீட்டுச் சொந்தத்திலிருந்து பெண் எடுத்தால் அங்கே கெத்தாக வலம் வரலாம் என்ற அவரது எண்ணத்தில் கூடை நிறைய மண்ணை அள்ளிப் போட்டுவிட்டாள் இவள்.

 

அதனால் அவளை முடிந்தவரையில் மட்டம் தட்டிக் குதர்க்கமாகப் பேசிக் கொண்டிருந்தார். எல்லாவற்றையும் மித்ரனுக்காகப் பொறுத்துக் கொண்டாளோ இல்லையோ, மீனாட்சிக்காக எதையும் பொருட்படுத்தவில்லை திவ்யதர்ஷினி.

 

பரபரவென்று வீட்டுக்கு வந்த முரளிதரன், “வாங்க வாங்க” என மீனாட்சியைப் பார்த்துச் சொன்னவர், மித்ரனின் சித்தப்பாவைப் பார்த்து அதிர்ந்தார்.

 

“நீயா?” என அவரருகில் சென்று அவர் சட்டையைப் பற்றி ஒரே இழுப்பில் அப்படியே இருக்கையில் இருந்து தூக்கிவிட்டார்.

 

“ஏய், என்ன செய்யற?” என மித்ரனின் சித்தி கத்த, மித்ரனும், மீனாட்சியும் என்ன நடக்கிறது என்று வாயடைத்துப் போனார்கள்.

 

“மாமா… என்னதிது.. அவர் என் சித்தப்பா. அவரை விடுங்க. அவர் என்ன செஞ்சார்?” என மித்ரன் அவர்களுக்கருகில் சென்று தன் சித்தப்பாவை முரளிதரனின் பிடியிலிருந்து விலக்கிவிட்டான்.

 

“சித்தப்பாவா? இவன் ஒரு துரோகி… நண்பனுக்குத் துரோகம் செஞ்சவன்.. கொ..” என அவர் மேற்கொண்டு பேசும் முன்னர், மித்ரனின் சித்தப்பா, ரவிபிரசாத் சுதாரித்துக் கொண்டார்.

 

இவனை பேசவிட்டால் நிலைமை மோசமாகிவிடும். எனவே, “யார் நீங்க? எதுக்காக என் சட்டையைப் பிடிக்கறீங்க? உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு. உங்க பொண்ணு நல்ல பொண்ணுன்னு நினைச்சு எங்க பையனுக்குக் கேட்க வந்தோம். ஆனால் நீங்களே இப்படி நடந்துக்கறீங்க” என ரவிபிரசாத் சொல்ல,

 

“எங்க தகுதிக்கு கோடீஸ்வர வீட்டுப் பெண்களைக் கொடுக்க ரெடியா இருக்காங்க தெரியுமா? எங்க தலைவிதி உங்க பொண்ணை எங்க வீட்டுப் பையன் விரும்பிட்டான்” கிடைத்தது வாய்ப்பென்று ரவிபிரசாத்தின் மனைவி வாய்க்கு வந்ததையெல்லாம் பேசினார்.

 

“சித்தி, அமைதியா இருங்க. அவர் ஏதோ தப்பா நினைச்சுப் பேசிட்டு இருக்கார்” என மித்ரன் சமாதானம் செய்ய முயல, “உன் அப்பாவையோ, அம்மாவையோ யாராவது இப்படி நடத்தியிருந்தா சும்மா இருந்திருப்பியா? நாங்க யாரோ தானே?” எனப் புகையும் நெருப்பில் எண்ணெயை ஊற்றினார்.

 

இதென்னடா வம்பாகிவிட்டது என மித்ரன் தலையைப் பிடித்துக் கொண்டான். மீனாட்சிக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. எதற்காக முரளிதரன் கோபப்பட்டார் என்றும் தெரியவில்லை.

 

இப்போது இவர்களும் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் புரியவில்லை. மாறி மாறி அனைவரின் முகத்தையும் கலவரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

 

திவ்யதர்ஷினி இத்தனை நடந்தும் எதுவும் சொல்லாமல் தன் தந்தை முரளிதரனையும் மித்ரனின் சித்தப்பாவையும் மட்டுமே அளவிட்டுக் கொண்டிருந்தாள். பார்த்தவுடன் ஒரு மூன்றாம் நபரின் மேல் கோபப்படும் அளவுக்கு அவள் தந்தை மோசமானவர் அல்ல.

 

முக்கியமாக இதுவரையில் அவர் பிறரிடம் கோபப்பட்டுப் பார்த்ததே இல்லை. ஆகவே அவர் எதற்காக இப்படி இயங்கிக் கொண்டிருக்கிறார் என அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். அதுவே மித்ரனின் சித்தியின் நெஞ்சில் சீற்றத்தைக் கிளப்பியது

 

“இவ்ளோ நடக்குது. நீ வேணும்னு சொன்ன பொண்ணு கொஞ்சமாவது வந்து தடுக்கறாளா பாரு? அவ அப்பா உன் சித்தப்பாவை அடிக்கிறதைப் பார்த்துட்டு நிக்கிறா? இதுக்கு மேலேயும் உனக்கு இந்தப் பொண்ணு வேணும்னா தாராளமாக் கல்யாணம் பண்ணிக்கோ. எங்களை மறந்துரு” என மித்ரனைப் பார்த்துக் கத்தினார்.

 

பிறகு கணவரை பார்த்து, “மரியாதை இல்லாத வீட்ல நமக்கு என்ன வேலை… வாங்க போலாம்” எனச் சொல்லிக் கணவனைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு வெளியில் சென்றுவிட்டார்.

 

“சித்தி-சித்தப்பா நில்லுங்க எங்க போறீங்க? இருங்க…” என மித்ரன் எவ்வளவோ மன்றாடியும் அவர்கள் நிற்கவே இல்லை.

 

இது என்னடா வம்பாகிப்போய் விட்டது என மித்ரன் பரிதாபமாக தன் அன்னையைப் பார்க்க,

 

முரளிதரன் மித்ரனைப் பார்த்து, “நீங்களும் தயவுசெய்து வெளியில போறீங்களா? உங்க குடும்பத்துல என் பொண்ணைக் கொடுக்கறதுக்கு எனக்குச் சுத்தமா இஷ்டமில்ல. அவ இருக்குற இடத்துக்கும் உங்களுக்கும் ஏணி வச்சாலும் எட்டாது. உங்களுக்கும் அவளுக்கும் கல்யாணம் நடக்கும்னு கனவுல கூட நினைச்சுடாதீங்க” எனத் திட்டவட்டமாகச் சொல்லிக் கதவை நோக்கிக் கை நீட்டினார்.

 

திடீரென்று ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்று மித்ரனுக்குத் தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போலிருந்தது. அவள் வசதி படைத்தவள் என்பதால் அவர் இப்போது ஒத்துக் கொள்ளவில்லையோ என்று நினைத்தான்.

 

“மாமா..” என மித்ரன் ஆரம்பிக்க, “தயவுசெய்து அப்படிக் கூப்பிடாதீங்க. உங்களுக்கு அந்தக் கொடுப்பினை இந்த ஜென்மத்துல கிடையாது. கிளம்புங்க” என மித்ரனையும் மீனாட்சியையும் துரத்துவதிலேயே குறியாக இருந்தார் முரளிதரன்.

 

அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பின்னே இத்தனை வருடங்கள் கழித்து அந்த அயோக்கியன் ரவிபிரசாத்தைப் பார்த்துவிட்டார். ஆனால் என்னவென்று போய் காவல்துறையினரிடம் புகாரளிக்க முடியும்?

 

எவ்வித சான்றும் இல்லாமல் இருபது வருடங்களுக்கு முன்னால் நடந்ததைப் பற்றிச் சொன்னால் இந்த ரவிபிரசாத் வழக்கின் திசையை அப்படியே திருப்பிவிடுவான். அதுவும் இருபது வருடங்களுக்கு முன்பே தன் மேல் இவன் புகார் அளித்துக் காவல்துறையினரை நம்ப வைத்திருந்தான்.

 

இப்போது காவல்துறையின் உதவியை நாடினால் தன்னையே சிறைக்குள் தள்ளினாலும் தள்ளிவிடுவான் . என்ன செய்வது என்று தலையைப் பிடித்துக் கொண்டார். திடீரென்று அவருக்கு தினேஷின் ஞாபகம் வந்தது.

 

அவனை அழைத்து விவரங்களைக் கூறிவிடலாம் என்று எண்ணி அலைபேசியில் தினேஷை அழைத்தார். அவன் வேறு ஏதோ வேலையில் மூழ்கியிருந்ததால் வந்த அழைப்பை கவனிக்கவில்லை.

 

“அப்பா…” என திவ்யதர்ஷினி அவருக்குக் குடிக்கச் சுக்குக் காபியை போட்டுக் கொண்டு வந்து நீட்டினாள். விண்விண்னென்று அவருக்குத் தலை வலித்துக் கொண்டிருந்தது. மகள் நீட்டியதை எதுவும் பேசாமல் வாங்கிக் கொண்டார் முரளிதரன்.

 

“என்னப்பா? மித்ரனோட சித்தப்பா தான் என் அப்பாவுக்குத் துரோகம் பண்ணினவரா?” எனக் கேட்க, முரளிதரன் அப்படியே இருக்கையில் அமர்ந்து குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தார்.

 

‘ஆமாம்’ எனத் தலையை ஆட்டியவர், “குற்றவாளி யாருன்னு தெரிஞ்சும் என்னால எதுவும் செய்ய முடியலயேம்மா” என அழுகையில் வெடித்தார்.

 

அவர் காலடியில் அமர்ந்து கொண்ட திவ்யதர்ஷினி, அவர் மடியில் சாய்ந்து படுத்துக்கொண்டு, “அப்பா எனக்கு இருக்கிறது நீங்களும் தம்பி மட்டும் தான். நடந்ததை நினைச்சு உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா என்னால தாங்கிக்க முடியாது. குற்றவாளி தண்டனையை அனுபவிக்கணும்னு இருந்தா அனுபவிச்சே தீருவான்” என்றாள்.

 

அப்போது யாரோ வீட்டினுள் நுழையும் அரவம் கேட்டது. இருவரும் திரும்பிப் பார்க்க, ரவிபிரசாத் நின்று கொண்டிருந்தார்.

 

“சாபம் எல்லாம் பலமா இருக்கு. அன்னைக்கு அவார்ட் ஃபங்ஷன்ல உன்னைப் பார்த்தப்பவே எங்கயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு நினைச்சேன்” என திவ்யதர்ஷினியை மேலும் கீழும் அளந்தார்.

 

முரளிதரனின் கோபம் மீண்டும் ஏற ஆரம்பித்தது. தந்தையின் கைகளைப் பற்றி அவரை ஆசுவாசப்படுத்தினாள் திவ்யதர்ஷினி. கோபப்பட்டால் அவர்களுக்கே பலத்த பாதிப்பு.

 

“இருபது வருஷத்துக்கு முன்னாடியே உன்னால என்னை எதுவும் பண்ண முடியலை. இப்ப மட்டும் என்னத்தை கிழிக்க போற? நீ உயிரோட இருக்குறன்னு ஆந்திரா போலீஸூக்கு ஒரு ஃபோன் செஞ்சா போதும். உன்னை உடனே வந்து தூக்கிட்டுப் போயிடுவாங்க. என்ன போறியா?” என மிரட்டலாக ஆரம்பித்தார் ரவிபிரசாத்.

 

“உங்களுக்கு கொஞ்சம் கூட குற்றம் செஞ்ச குறுகுறுப்பே இல்லையா? என் அம்மா-அப்பாவை உயிரோட எரிச்சிருக்கீங்க” என திவ்யதர்ஷினி கேட்க, “ஹ ஹ ஹா” எனச் சிரித்த ரவிபிரசாத்,

“இதுவரைக்கும் வரலை. அப்படி வந்தா சொல்லி அனுப்பறேன்” என எகத்தாளமாகச் சொன்னார்.

 

அங்கிருந்த இருவருக்குமே ரவிபிரசாத்தின் முகத்தில் ஓங்கி குத்து விட வேண்டும் போல் தோன்றியது.

 

“நான் குற்றவாளின்னு யாருக்கும் தெரியாது. இப்போ அதை யார்க்கிட்டே சொன்னாலும் நம்பமாட்டாங்க” எனச் சிரித்தார் ரவிபிரசாத்.

 

தொடர்ந்து, “இங்க பாரு, யாரோட ஆதரவும் இல்லாம தனித்து இருக்கீங்க. நான் ஒரு ஃபோன் போட்டா உன் அப்பா ஜெயிலுக்குப் போயிடுவான். ஆனா பழசை எல்லாம் ஏன் கிளறணும்? இப்படியே விட்டுடலாம்னு நான் நினைக்கிறேன்.

 

இல்லைனா, இருபது வருஷத்துக்கு முன்னாடி எரிக்க முடிஞ்ச என்னால இப்ப பண்ண முடியாதுன்னு நினைக்கிறீங்களா? அப்புறம் நாளைக்கு நியூஸ்பேப்பர்ல முதல் பக்கச் செய்தியா, ‘தந்தை தன் மகள் மற்றும் மகனுடன் கடன் தொல்லையிலிருந்து தப்பிக்க முடியாததால் தற்கொலை’ அப்படினு வரும். எப்படி வசதி?” என இளித்தவாறே சொன்னார்.

 

முரளிதரன் ஏதோ சொல்ல வாய் திறக்க, அவர் கையை பலமாகப் பற்றி அமுக்கியவள் தந்தையைப் பார்த்து எதுவும் சொல்லாதே என்றாள்.

 

“சார் சார் எங்களை விட்டுருங்க சார். நாங்க எந்த வம்பு தும்புக்கும் வரலை. நாங்க உண்டு எங்க வேலை உண்டுன்னு நாங்க பாட்டுக்கு இருக்கிறோம்” என்றாள் திவ்யதர்ஷினி.

 

“அந்தப் பயம் இருக்கட்டும், இத்தோட இந்த ஊரைவிட்டுக் கிளம்புங்க. உங்களால எந்த ஆணியையும் பிடுங்க முடியாது” எனச் சொன்னவர், “மித்ரனையும் மறந்திடு. அப்படி மட்டும் பண்ணலை” என ஆட்காட்டி விரல் நீட்டி எச்சரித்துவிட்டு அங்கிருந்து விடுவிடுவென்று கிளம்பிச் சென்றார்.

error: Alert: Content selection is disabled!!