ரவிபிரசாத் சென்றதும் முரளிதரனுக்கு உடலிலிருந்து சக்தி அனைத்தும் வடிந்ததைப் போலிருந்தது. ‘குற்றவாளி கைக்கெட்டும் தூரத்தில் இருந்தும் கைக்கு அகப்படாமல் ஓடிக் கொண்டே இருக்கிறான்.’
என்ன செய்வது என முரளிதரன் யோசித்துக் கொண்டிருக்க, அதைப் பற்றியே யோசிக்க வேண்டாம் என்றாள் மகள்.
“அப்பா கடைசி வரைக்கும் எனக்கு நீங்களும் சசியும் போதும்பா. வேறு யாரும் வேண்டாம்” என மீண்டும் அவர் மடியில் தலை சாய்த்துப் படுத்து கொண்டாள்.
****
ஒரு வாரம் கடந்திருந்தது. அன்று சென்ற மித்ரன் அதன்பிறகு அவளை அழைக்கவே இல்லை. அவன் அழைத்தாலும் அதுவரையில் அவள் அலைபேசியை எடுத்ததில்லை. இருந்தும் அவன் அழைக்கவில்லை என்று துணுக்குற்றாள். ஒரு செய்தி கூட அனுப்பவில்லை.
விட்டால் போதும் என்று ஓடி விட்டானோ என்னவோ என இளக்காரமாக எண்ணிக்கொண்டாள். ‘போகட்டும். எனக்கென்ன?’ என திவ்யதர்ஷினி தன் வேலையைக் கவனிக்கச் சென்றாள்.
அவள் ஒவ்வொரு முறையும் வெளியில் கிளம்பும் முன்னர் தன் தந்தையிடம் சென்று, ‘பத்திரமாக இருங்க. கதவைச் சாத்திக்கோங்க. யார் வந்து தட்டினாலும் திறக்காதீங்க’ என இரண்டு நிமிடங்களுக்கு ஆலோசனை மழையைப் பொழிந்துவிட்டே கிளம்புவாள்.
அன்று மித்ரன் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டிருந்தான். காலையில் அவனுக்கு இன்னொரு செய்தி வந்திருந்தது. அவர்கள் அனுப்பி வைத்திருந்த வணிகக் கட்டிடத்திற்கான படிவம் நிராகரிக்கப் பட்டுவிட்டது.
யாரிடம் தோற்றான் என்று யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இன்னும் எத்தனை நாட்கள் தன் மேல் கோபமாக இருக்கப் போகிறாளோ என எண்ணி மனம் வருந்தினான். விரக்திப் புன்னகை தோன்றியது.
எப்படியாவது தன்னை ஏற்றுக் கொள்வாள். மனம் மாறுவாள் என எண்ணியிருந்தான். அதற்கு வாய்ப்பே இல்லாமல் போனதைப் போலிருந்தது. நடப்பது நடக்கட்டும் எனப் பெருமூச்சொன்றை இழுத்து வெளியிட்டான்.
அப்போது அவனது சித்தியிடம் இருந்து அழைப்பு வந்தது. குறுஞ்சிரிப்புடன் அழைப்பை எடுத்தான் மித்ரன்.
“கண்ணா, மித்ரன் கண்ணா.., உன் சித்தப்பாவை போலீஸ் வந்து கைது பண்ணிட்டுப் போறாங்க. என்ன ஏதுன்னு கேளுப்பா. எனக்குக் கையும் ஓடலை .. காலும் ஓடலை. உன் சித்தப்பா எந்தத் தப்பும் பண்ணலை” எனப் படபடவென்று பேசினார்.
“தெரியும் சித்தி போலீஸை அனுப்பி வச்சதே நான் தான்” என்றான் மித்ரன்.
“நீயா?” என அவன் சித்திக்குத் தூக்கிவாரிப் போட்டது.
“என்ன சித்தி எதுவும் தெரியாத மாதிரி கேக்கறீங்க? நம்ம நிறுவனத்துல யார் தவறு செஞ்சாலும் தண்டனை அனுபவிச்சே தீரணும். கணக்கு வழக்குகளைப் பார்த்ததில் சித்தப்பா ரொம்ப நாளா நிறையப் பணத்தைக் களவாடி இருக்கிறார் எனப் புரிஞ்சது.
அவர்கிட்ட ரெண்டு வருஷமா சொல்லிட்டு இருக்கேன். அவர் தன்னை மாத்திக்கிறதா இல்லை. இப்போ எல்லாம் அவர் ஏன் நம்ம நிறுவனத்துக்கு வர்றது இல்லைன்னு யோசிச்சீங்களா? நான் தான் வரவேண்டாம்னு சொன்னேன். கட்டடம் மனுசங்க குடியிருக்கப் போறது. தொழில் பண்ணப் போறது. அதுல போய்க் கலப்படம் அது இதுன்னு பண்ணினா எப்படி?
அதனால் தான் வினோத் இப்போ இங்கே வர்றான். ஆனா அவனும் சொல்லிக்கிற மாதிரி இல்லை. சட்டம் தன் கடமையைச் செய்யும்” எனச் சட்டம் பேசினான் மித்ரன்.
அவருக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் ஆடம்பரச் செலவுக்குப் பணம் நிறையத் தேவை. அதில் கணவனுக்குச் சூதாட்டப் பழக்கம் வேறு. முதலில் இந்தக் கட்டட நிறுவனத்தில் ரவிபிரசாத்துக்கு இருபது சதவீதம் மட்டுமே பங்கிருக்கிறது. மிச்சமெல்லாம் மீனாட்சி மற்றும் மித்ரனின் பெயரில் இருக்கிறது.
“உன் சித்தப்பா அப்படியெல்லாம் பண்ணமாட்டார் மித்ரன்” என ஓவென்று கதற ஆரம்பித்தார் மறுமுனையில் இருந்தவர்.
“எனக்கு நிறைய வேலை இருக்கு சித்தி. நான் வைக்கிறேன்” என அழைப்பை வைத்துவிட்டான். அவனுக்கு நெஞ்சம் கொதித்துக் கொண்டிருந்தது. அவன் நேராக சென்று நின்ற இடம் அருகில் உள்ள காவல்நிலையத்தில். அங்கே அவன் சித்தப்பாவை அடைத்து வைத்திருந்தனர்.
ஏற்கனவே அனுமதி கேட்டிருந்ததால் அவனை உடனே சித்தப்பாவைப் பார்க்க விட்டனர் காவலர்கள்.
அவன் சித்தப்பாக்கு அருகில் செல்ல, “வா மித்ரன். இங்க இருக்குற எல்லோரையும் வேலையை விட்டுத் தூக்கணும். அத்தனை சொல்லியும் கேட்கலை. யாரைப் போய்க் கைது செஞ்சுக் கூட்டிட்டு வந்திருக்காங்க” என இறுமாப்பில் பேசிக் கொண்டிருந்தார்.
“சித்தப்பா, இன்னுமே உங்களுக்கு நீங்க செஞ்ச தப்பு புரியலையா?” எனக் கேட்டான் மித்ரன்.
“நான் அப்படி என்ன பெருசா செஞ்சுட்டேன். பிசாத்துப் பணம். நம்ம நிறுவனம் கடன்ல மூழ்கிட்டு இருக்கிறப்போ நான் மட்டும் பணம் கொடுக்கலைன்னா நீ இப்படி வந்து நின்னு பேசிட்டு இருப்பியா?” எனத் தெனாவெட்டாகக் கேட்டார். இதையே இன்னும் எத்தனை வருடங்களுக்குச் சொல்வார்?
“அந்தக் கறை படிஞ்ச பணத்தைச் சொல்லறீங்களா சித்தப்பா?” எனக் கேட்டான்.
“என்ன, என்ன கறை படிஞ்ச பணம்?” என அவர் எதுவும் தெரியாததைப் போல் முழிக்க, “என்ன சித்தப்பா இருபது வருஷத்துக்கு முன்னாடி நடந்ததை மறந்துட்டீங்களா?” எனக் கேட்டான்.
“நான் என்ன மறந்தேன்? நீ காதலிக்கிற பொண்ணு உன்னைக் கூப்பிட்டுக் கட்டுக்கதை சொன்னாளா? நம்பாத.. எல்லாம் பொய். அவளும் அவ அப்பாவும்…” என அவர் ஆரம்பிக்கும் முன்னரே, இடையிட்டு,
“நான் என்ன விசயம் எனச் சொல்லறதுக்கு முன்னாடியே இருபது வருஷம்னு சொன்னதும் திவியோட ஞாபகம் வருது உங்களுக்கு. எப்படிச் சித்தப்பா?” எனக் கேட்டான் மித்ரன்.
தான் வாய்விட்டு உளறிவிட்டதை புரிந்து கொண்டார் ரவிபிரசாத். சமாளிக்க முயன்றார். “அன்னைக்கு அவங்க நடந்துகிட்டதை வச்சு…” என அவர் மேற்கொண்டு பேசும் முன்னர்,
“சித்தப்பா சும்மா பொய்ச் சொல்லி நீங்களே உங்களை தரம் தாழ்த்திக்காதிங்க. அன்னைக்கு நீங்க திவியோட வீட்டுல பேசுனது எல்லாத்தையும் நான் கேட்டேன்” என அன்று அவன் தன் கைப்பேசியில் பதிவு செய்த அவர்களின் பேச்சைப் போட்டுக் காட்டினான்.
ஆம்! அன்று என்ன பிரச்சனை, ஏன் முரளிதரன் அன்று அப்படி நடந்து கொண்டார் எனக் கேட்பதற்காக அவன் தன் அன்னையை கார் ஓட்டுநருடன் அனுப்பி வைத்துவிட்டு திவ்யதர்ஷினியின் வீட்டுக்கு மீண்டும் சென்றான் மித்ரன்.
அப்போது அவன் சித்தப்பா உள்ளே செல்வது தெரிந்தது. இவர் ஏன் இங்கே செல்கிறார் என ஒட்டுக் கேட்டவனுக்கு அனைத்தும் அதிர்ச்சிகரமான தகவல்களே கிடைத்தன. முற்றிலும் ஒடிந்து போனான்.
தன் குடும்பத்து ஆள் , தன் சொந்த சித்தப்பா தான் அவள் குடும்பத்தின் மொத்தப் பேரிழப்புக்கும் காரணம் என்று தெரிய வருகையில் அவன் நெஞ்சே சிதறிவிடும் போலிருந்தது. இதற்குத் தான் ஆரம்பத்திலிருந்தே அவனுக்கும் அவளுக்கும் முட்டிக் கொண்டதோ?
“நீங்க சின்ன வயசுல பண்ணின தப்புக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்க எந்த ஆதாரமும் என்கிட்டே இல்லை. ஆனா, இதற்கு நீங்க தண்டனை அனுபவிச்சே ஆகணும். அதுவும் கறைபட்ட பணத்தைக் கொண்டு வந்து குடும்பத் தொழில்ல போட்டிருக்கீங்க. நான் வேற வழியில்லாம இந்தத் தொழில்ல இறங்கினேன். இப்போ அதை திவி பார்த்துக்கட்டும். நான் எனக்குப் பிடிச்சதைப் பண்ண போறேன்” என்றான்.
ஒரு பிரைவேட் டிடெக்டிவ் வைத்து கடந்த இரண்டு நாட்களாக திவ்யதர்ஷினியின் குடும்பத்தில் நடந்த விஷயங்கள் அனைத்தையும் தெரிந்து கொண்டான் மித்ரன். அதைக் கேட்டதும் அன்று நடந்ததைப் போல் முற்றிலும் குலைந்து போனான் மித்ரன்.
ஆனால் இப்படியே விடக் கூடாது எனக் காவலர்களிடம் சித்தப்பா பணம் கையாடல் செய்துவிட்டதாகப் புகார் தந்தான்.
“கட்டட நிறுவனம் நியாயமாப் பார்த்தா திவ்யதர்ஷினிக்கே சேரணும். அதை அவப் பேருக்கு மாத்த ஏற்பாடு செஞ்சுட்டேன்” என்றதும், “ஐயோ, அப்போ என் பையன் என்ன பண்ணுவான்? உனக்கென்ன பைத்தியமா?” எனச் சுயநலத்துடன் கத்தினார்.
“வினோத்துக்கு வேற திட்டம் வச்சிருக்கிறேன்” என்றதும் அவர் முகம் தெளிவானது.
கணவனை எப்படி வெளியில் கொண்டு வருவது என சித்தி யோசித்துக் கொண்டிருக்க அவர் மகன் வினோத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டான் என்ற செய்தி அவர் காதுகளுக்கு எட்டியது. கொலை செய்யத் துணிந்த குற்றத்துக்காக காவல்துறை அவனைத் தேடிச் சென்று கைது செய்தனர்.
அந்நேரம் அவன் நண்பர்களுடன் தங்கள் கடற்கரை பங்களாவில் குடித்துக் கும்மாளமிட்டுக் கொண்டிருந்தான். கைது செய்ய வந்த காவலர்களைத் தாக்கி அது வேறு பெரியப் பிரச்சனையாகிவிட்டது.
அன்று விருது வாங்கும் விழாவில் மித்ரனைக் கொல்ல யார் ஆள் அனுப்பியது எனக் காவல்துறை விசாரித்ததில் ரவிபிரசாத்தின் மகன் வினோத்தே குற்றவாளி என்று தடயங்களை வைத்துக் கண்டுபிடித்தனர். அப்பாவுக்கு தப்பாமல் வந்து பிறந்திருக்கிறான்.
திவ்யதர்ஷினியின் வீட்டில் நடந்ததை ஒட்டுக் கேட்டதே பெரிய அதிர்ச்சியென்றால் இன்று காலையில் காவலர்கள் அவனை அழைத்துக் குற்றவாளியை நெருங்கிவிட்டனர் என்று சொன்னார்கள்.
மித்ரனின் சொத்தின் மேல் ஆசை கொண்டு அவ்வாறு செய்திருக்கிறான் வினோத். மித்ரன் இல்லாவிட்டால் அனைத்தும் அவனுக்கே வந்து சேரும் எனக் கணக்கிட்டிருக்கிறான். அவனுக்கு உழைத்துச் சம்பாதிக்க வேண்டும், தன் அறிவை வைத்துப் பணத்தைப் பெருக்க வேண்டும் என்றெல்லாம் சிறிதும் எண்ணமில்லை.
மித்ரன் சம்பாதித்து வைத்திருந்ததை அப்படியே அவன் பெயருக்கு மாற்றிக் கொண்டு வாழ்க்கையை இனிமையாகக் கழிக்கலாம் என்று எண்ணியிருந்தான். அதற்கு மித்ரன் முட்டுக்கட்டையாக இருக்கிறான் என்று புரிந்தது.
அதனால் நிறையப் பணம் கொடுத்து ஒருவனை வாடகைக்கு எடுத்து மித்ரனின் உயிருக்கு உலை வைக்க முயன்றான். மித்ரனின்நல்ல நேரமோ கெட்ட நேரமோ திவ்யதர்ஷினி அதைப் பார்த்து அவன் உயிரைக் காப்பாற்றி விட்டாள்.

