சதிராடும் சித்திரமே 4 – 2

“பெரிய ஜேம்ஸ் வாட்சன் இவன். டி. என். எ. அமைப்பை அவர் கண்டுபிடிச்ச மாதிரி என் வாழ்க்கைக் கட்டத்தைக் கண்டுபிடிச்சுட்டான்” என மித்ரன் கிண்டலடிக்க,

 

“நடக்கும்டா கண்டிப்பா நடக்கும். நான் அப்படி என்னடா தப்புப் பண்ணிட்டேன் இப்படி மூஞ்சிய திருப்பிட்டு போற? ஒழுங்கா பேசுடா” என்றான்.

 

“அம்மா, எனக்கு நாளைக்கு நேரத்துல மீட்டிங் இருக்கு. வேற எதுவும் இல்லைன்னா நான் போய்க் குளிச்சிட்டுப் படுக்கிறேன்” என சொல்ல, மீனாட்சி தன் தமக்கை மகனைப் பாவமாகப் பார்த்தார்.

 

“விடுங்க சித்தி… யானைக்கு ஒரு காலம் வந்தா, பூனைக்கு ஒரு காலம் வரும். அவன் வந்து என்கிட்டே பேசச் சொல்லி ஒருநாள் கெஞ்சுவான். அப்போ வச்சுக்கிறேன் இவனை” என வத்சன் சொல்ல,

 

“ம்ஹ்..” எனச் சிரித்த மித்ரன், “நினைப்பு தான் பிழைப்பைக் கெடுக்குமாம். உலகமே அழிஞ்சாலும் உன்கிட்ட கண்டிப்பா வர மாட்டேன்” எனச் சொல்லிவிட்டு தன்னறைக்குச் சென்று கதவைச் சாத்தினான்.

 

வத்சன் சொன்னதை போல் மித்ரன் தன் கோபத்தையும் அகந்தையையும் விட்டுவிட்டு அவனிடம் வந்து ஒரு நாள் கெஞ்சப் போகிறான் என்று அப்போது இருவருமே அறியவில்லை.

 

கவலை தோய்ந்த முகத்துடன் நின்றிருந்த மீனாட்சியைப் பார்த்த வத்சன், “இவன் எப்போதும் இப்படித் தான். ஒருநாள் மாறுவான். காத்திருப்போம். நான் இப்போ கிளம்பறேன்” என அவரிடம் சைகையால் பேசிவிட்டு அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு கிளம்பினான் வத்சன்.

 

தன் அன்னைக்குப் பேச வராது என்பது இரண்டு வருடங்களுக்கு முன்பு வரையிலுமே மித்ரனுக்குத் தெரியாது. மித்ரனின் அன்னை, மீனாட்சி பிறவியிலேயே ஊமையல்ல. பத்து வயது வரையிலும் நன்றாகப் பேசிக் கொண்டிருந்தார். அதன்பிறகு வந்த மூளைக் காய்ச்சலுக்குப் பிறகு அவரால் பேச முடியாமல் போய்விட்டது.

 

அப்படியிருந்தும் கஷ்டப்பட்டுப் படித்து பள்ளிப் படிப்பை முடித்துவிட்டார் மீனாட்சி. அவருக்கு ஓவியம் வரைய மிகவும் பிடிக்கும். அதனால் ஓவியக் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆசை. ஆனால் அவரால் பேச முடியாதது ஒரு குறையாகவே தெரிந்தது மற்றவர்களுக்கு.

 

ஆகவே வரையும் திறனை வீட்டில் இருந்தபடியே வளர்த்துக் கொண்டார் மீனாட்சி. ஒருமுறை ஓர் ஓவிய கண்காட்சியில் மீனாட்சியைப் பார்த்த ராம்பிரசாத்துக்கு அவரை மிகவும் பிடித்து போனது.

 

அவர் தன் விருப்பத்தை மீனாட்சியிடம் தெரிவிக்க முதலில் தான் பேச முடியாததால் ஒத்துக் கொள்ளவில்லை மீனாட்சி. ராம்பிரசாத் தொடர்ந்து மீனாட்சியிடம் பேசிப் பேசி அவரைக் கரைய வைக்க, அவரிடம் சரணடைந்தார்.

 

மீனாட்சியை அறவே ராம்பிரசாத்தின் அன்னைக்கு பிடிக்கவில்லை. எதிலும் சிறந்தவனான தன் மகனுக்கு இப்படிப்பட்ட வாய் பேசாத பெண்ணையா திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எத்தனையோ முறை தன் கணவரிடம் வாதாடிப் பார்த்துவிட்டார்

 

அவரோ மகனின் விருப்பம் தான் தன் விருப்பம் என்று மீனாட்சியை ராம்பிரசாத்துக்குத் திருமணம் செய்து வைத்தார்.

 

கணவனுக்காகவும் மகனுக்காகவும் விருப்பமில்லாமல் ஒத்துக் கொண்டாலும் மீனாட்சியை பார்க்கும் போதெல்லாம் திட்டிக்கொண்டே இருந்தார் ராம்பிரசாத்தின் அன்னை. திருமணமாகி இரண்டாம் வருடத்திலேயே மித்ரன் பிறக்க மீனாட்சியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

 

ஆனால் அவரின் மகிழ்ச்சி அனைத்துக்கும் ஆயுள் குறைவே. மித்ரனுக்கு ஏழு வயது ஆகையில் ராம்பிரசாத்தும் அவரது தந்தையும் வெளியூருக்குச் சென்றுவிட்டு திரும்புகையில் அவர்கள் சென்ற கார் விபத்தில் சிக்கிக் கொள்ள ராம்பிரசாத்தின் தந்தை அங்கேயே இறந்து போனார்.

 

ராம்பிரசாத்துக்குக் கால்களில் எலும்பு முறிவு., பல நாட்கள் சுயநினைவு இல்லாமல் கிடந்தார். அந்தத் தருணத்தைப் பயன்படுத்திக் கொண்ட ராம்பிரசாத்தின் அன்னை, மீனாட்சியை வீட்டை விட்டுத் துரத்திவிட்டார்.

 

மீனாட்சிக்கு ஆதரவாக மாமனாரும் கணவனும் இல்லாததால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. தனக்காக வாய் பேசக் கூட முடியவில்லை மீனாட்சியால். அதையும் விடக் கொடுமை ராம்பிரசாத்தின் அன்னை மித்ரனையும் அவரிடமே வைத்துக் கொண்டார். மீனாட்சியின் கண்களில் கூடக் காட்டவில்லை.

 

பல போராட்டங்களுக்குப் பிறகு சுயநினைவு பெற்று, கால் முறிவு அனைத்தும் சரியாக ஆறு மாதங்கள் பிடித்தது. அதுவரையில் மீனாட்சி ஏன் தன்னை வந்து பார்க்கவில்லை என்று தினந்தோறும் தன் அன்னையிடம் கேட்டுக் கொண்டிருந்தார் ராம்பிரசாத். அவரும் ஏதேதோ சொல்லி மழுப்பிவிட்டார்.

 

பின்னர் ஓரளவுக்கு ராம்பிரசாத் சரியாகிவிட அதற்குமேல் தாங்க முடியாமல் மருத்துவமனை அறையிலேயே ஓவென்று கதறி அழுதார் ராம்பிரசாத்தின் அன்னை. இங்கே ஏன் இப்படி அழுகிறார் என்று ராம்பிரசாத் அன்னையிடம் விசாரித்தார்.

 

அதற்கு அவர்களின் தொழில் படுத்துவிட்டதாகவும் கணவனும் இல்லாமல் மகனும் படுத்த படுக்கையாகிவிட பலத்த நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும் ஒரு மூச்சு அழுதார்.

 

அது மட்டுமல்லாது ராம்பிரசாத்துக்கு எலும்பு முறிவு ஆனதுமே அவரால் நடக்க முடியாது என்றும் படுத்த படுக்கையாகிவிடுவார் என்றும் நினைத்தார் மீனாட்சி. தொழில் வேறு நஷ்டத்தில் போய்க் கொண்டிருக்கிறதே, இனிமேலும் இங்கேயே இருந்தால் பணம் எதுவும் பெயராது என நம்பினார்.

 

வாழ்நாள் முழுவதும் படுக்கையில் இருக்கும் கணவனுக்குச் சேவகம் செய்து தன் வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்ள விருப்பமில்லை மீனாட்சிக்கு. ஆகவே ஈவு இரக்கமில்லாமல் கணவனையும் மகனையும் விட்டுவிட்டுப் போய்விட்டார் என்று கதறி அழுதார்.

 

சில ஆண்டுகள் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து போயிருந்த ராம்பிரசாத்தின் தம்பி, ரவிபிரசாத் தந்தையின் மரணத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு தான் தொழில் செய்து வந்த ஊரிலிருந்து திரும்பி வந்தார். அநாதரவாக இருக்கும் அன்னைக்குப் பக்க பலமாக நின்றார்.

 

“கவலைப்படாதீங்கம்மா. என்கிட்ட கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வச்ச பணமிருக்கு. அதை வச்சு தொழில்ல திரும்பவும் மீண்டு விடலாம். இனி நான் எங்கேயும் போகப் போறதில்லை. உங்க கூடயே இருக்கிறேன்” என தன் மனைவி மகனுடன் அன்னைக்கு ஆதரவாக நின்றார்.

 

தொழில் ஒரு பக்கம் படுத்துக்கொள்ள, தான் காதலித்த பெண் இப்படி ஏமாற்றிவிட்டாளே என்று ராம்பிரசாத் உள்ளுக்குள் மருகினார். ஆனாலும் மீனாட்சி அப்படி செய்பவர் அல்ல என்ற ஒரு பக்க நியாய நெஞ்சம் நம்பியது.

 

ஆகவே மீனாட்சியிடம் சென்று பேசப் போவதாகச் சொல்லிவிட்டு மருத்துவமனையிலிருந்து நேராக மீனாட்சியின் ஊருக்குச் சென்றார். அவர் சென்ற வேளையில் மீனாட்சியின் அன்னை இறந்து போக, சொந்தங்கள் அனைவரும் கூடியிருந்தனர்.

 

ராம்பிரசாத்தைப் பார்த்த மீனாட்சிக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. ஆனால் மனதிற்குள் கோபத்தை வைத்துக் கொண்டிருந்த ராம்பிரசாத்தால் மீனாட்சியிடம் தனித்துப் பேச முடியாமல் போனது.

 

ஏனோ தானோ என்று அங்கிருந்த உறவினர்களிடம் பேசிவிட்டுத் திரும்பிவிட்டார். கணவர் தன்னைத் தேடி திரும்பி வருவார் என நம்பினார் மீனாட்சி. ஏனெனில் ராம்பிரசாத்தின் அன்னையின் முன்னிலையில் அவரால் எதையும் சொல்லக் கூட முடியாது.

 

ஆனால் மீனாட்சி தன்னை வந்து பார்க்கவில்லை என்ற கோபத்தை நாளுக்கு நாள் வளர்த்துக் கொண்டார் ராம்பிரசாத்.

 

மறுமுறை ராம்பிரசாத் மீனாட்சியைப் பார்க்க வந்த பொழுது, மித்ரன் தீவிரமான காய்ச்சலில் விழுந்தான். அதைப் பற்றிச் சொல்ல நினைத்து மீனாட்சியைப் பார்க்கப் போக, அப்போது தமக்கை மகன் ஏதோ சொன்னான் என வாய்விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தார் மீனாட்சி.

 

ராம்பிரசாத்தின் கோபம் கண்களை மறைத்தது. புத்தியையும். தானும் மகனும் அங்கே தனித்துக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க, மீனாட்சியோ இங்கே அவர் கொடுத்த பணத்தை வைத்து சொகுசு வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

 

திருமணம் முடிந்ததுமே ராம்பிரசாத் மனைவியின் பெயரில் கணிசமான ஒரு தொகையை வங்கியில் அவர் பெயரில் போட்டு வைத்தார். அதுவுமில்லமல் கடந்த எட்டு வருடங்களில் எத்தனை நகைகள், எத்தனை விலையுயர்ந்த பரிசுப் பொருட்கள்?

 

error: Alert: Content selection is disabled!!