சதிராடும் சித்திரமே 5 – 1

அத்தியாயம் – 5

ரதிப்ரியா தொழிலைப் பற்றிப் பேசுவதற்காக மித்ரனுடன் அங்கே ஒருவரை சந்திக்க வந்திருந்தாள். அவர்கள் இருவரும் அந்தத் தொழில்முறை நண்பரை சந்தித்துவிட்டு வீடு செல்ல கார் நிறுத்தப்பட்டிருந்த இடம் நோக்கிச் சென்றனர்.

 

இடையில் தெரிந்த யாரோ ஒருவர் மித்ரனை இடைமறித்துப் பேச , அவன் பேசிவிட்டு வரட்டும் என ரதிப்ரியா காரில் சென்று அமர்ந்து கொண்டாள்.

 

அதே நேரத்தில்…

தன் தம்பி சசிதரனின் பிறந்தநாளுக்காகப் பரிசு வாங்குவதற்காக அருகிலிருந்த கடைக்கு வந்து காத்திருந்தாள் திவ்யதர்ஷினி. அப்பொழுது அவளை அடையாளம் கண்டுகொண்ட அவள் தோழியின் காதலன் என்ற போர்வையில் இருந்த கயவனின் அடியாட்கள் அவளைத் துரத்த ஆரம்பித்தனர்.

 

முதல் முறை தப்பிவிட்டாள். இன்று எப்படியாவது அவளை மிரட்டி, லேசாகத் தட்டி பயம் காட்டினால் சற்றே அடங்குவாள். இல்லையென்றால் அவர்கள் முதலாளியிடம் யார் திட்டு வாங்குவது? அதனால் அவளைக் கண்டதும் சற்றும் தாமதிக்காமல் அவளைத் துரத்த ஆரம்பித்தனர்.

 

பொழுது சாயும் நேரம் என்பதால் அனைவரும் பரப்பரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தனர். அதனால் ஒரு பெண்ணைத் துரத்துவதை யாரும் கவனிக்கவில்லை. திவ்யதர்ஷினி தினமும் உடற்பயிற்சி செய்வதாலும் கல்லூரி காலத்தில் விளையாட்டு வீராங்கனையாக இருப்பதாலும் அவளால் அவர்களிடம் இருந்து லாகவமாகத் தப்பிக்க முடிந்தது.

 

தடதடவென்று அவள் ஓடுவதைப் பார்த்த அந்த முரடர்கள் கீழே கிடந்த கற்களைப் பொறுக்கி எடுத்து அவளை நோக்கி சரமாரியாக வீசினார்கள். ஏதாவது ஒரு கல் சென்று அவளைப் பதம் பார்த்து விடாதா என்ற நப்பாசையில் கிடைத்ததையெல்லாம் எடுத்து அவளை நோக்கி வீசிக் கொண்டிருந்தனர்.

 

திவ்யதர்ஷினியும் மூச்சை பிடித்துக்கொண்டு அந்தச் சாலையில் தடதடவென்று ஓடி வந்தாள். அப்போது ஒரு பெரிய கல்லொன்று அவள் தலையை நோக்கி வர அதை அவள் கவனிக்கவில்லை. தப்பித்து ஓடுவதிலேயே குறியாக இருந்தாள்.

 

திவ்யதர்ஷினி ஓடி வருவதும் அதைத் தொடர்ந்து அதிவேகத்தில் வந்த கல்லும் தெரிந்தவருடன் பேசிவிட்டு காருக்குச் சென்று கொண்டிருந்த மித்ரனின் கண்களிலிருந்து தப்பவில்லை.

 

சூப்பர்மேனைப் போல் பறந்து சென்று திவ்யதர்ஷினியை அக்கல்லின் பாதையிலிருந்து அகற்றிவிட வேண்டும் என அவன் மனம் துடியாய்த் துடித்தது. பெரும் ஓசையுடன் டம் டம்மென்று அடித்த இதயத்தைப் பொருட்படுத்தாமல் உடனே ஓடிச்சென்று திவ்யதர்ஷினியின் கையை ஒரே இழுப்பாக இழுத்து அவளை அக்கல்லடியிலிருந்து காப்பாற்றினான்.

 

என்ன, இழுத்த இழுப்பில் எங்கே அவள் கீழே விழுந்துவிடுவாளோ என்ற அச்சத்தில் அப்படியே அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்திருந்தான் மித்ரன். சில நொடிகள் என்ன நடந்ததென்றே திவ்யதர்ஷினிக்குப் புரியவில்லை.

 

அடுத்தடுத்து நடந்த நிகழ்வில் அதிர்ந்து போய் அப்படியே இழுத்தவனின் மார்பில் தலையைச் சாய்த்து பேச்சற்று கண்மூடி நின்றாள். இவனை ஏற்கனவே நமக்குத் தெரியும் என உடனே மூளை சொல்லியது.

 

திவ்யதர்ஷினியைக் குறிவைத்துப் பாய்ந்து வந்த கல்லின் இலக்கு எதிரே நிறுத்தி வைத்திருந்த மித்ரனின் காரானது. அந்தக் கல் காரின் முன் கண்ணாடியைச் சென்றடைந்து சிலீரென்று சத்தம் எழுப்பியது.

 

கண்ணாடி உடையும் சத்தத்தில் திவ்யதர்ஷினி தன்னுணர்வு பெற்றாள். முரசு கொட்டுவதைப் போல் தடக் தடக்கென்று இதயம் அதிரும் ஓசையைக் கேட்டு மெல்ல கண் திறந்து பார்த்தாள்.

 

யாரோ ஒருவன் அவளை அணைத்திருக்க, அவள் முன்னே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடி கீறல் விட்டுப் போய் சில்லு சில்லாக உடைந்திருந்தது.

 

அந்தக் காரின் உள்ளே யாரோ ஒரு பெண் அமர்ந்திருப்பது திவ்யதர்ஷினிக்குத் தெரிந்தது. அந்தப் பெண்ணை எங்கோ பார்த்ததைப் போலிருக்க புருவம் சுருக்கி உற்றுப் பார்த்தாள். சில வாரங்களுக்கு முன் கடற்கரையில் யாரிடமிருந்து அறை வாங்கினாளோ அந்தப் பெண் உள்ளே இருந்தாள்.

 

முதல் அதிர்ச்சி அதுவென்றால் “வேணும்னே என்னை மயக்கறதுக்கு ஓடி வந்து என் மேலே விழுந்தியா?” எனக் காதுக்கருகில் கேட்ட குரலில் ஆடிப் போனாள். யாரை இந்த ஜென்மத்தில் பார்க்கக் கூடாது என்று நினைத்திருந்தாளோ அந்த ராட்சசனின் குரல்! அதுவும் தன்னை அணைத்தவாறு நின்றிருக்கிறான்.

 

‘இது என்ன அநியாயம்? ஓடி வந்தவளை இழுத்து அணைத்துவிட்டு அவள் போய் விழுந்தாளாம்’

 

“நீ என்னைப் பார்த்து மயங்காம இருந்தாத் தான் அதிசயம். ஆனா உன் தந்திரத்திற்கு எல்லாம் வேற ஆளைப் பாரு” எனத் தொடர்ந்து காதருகில் கேட்ட குரலில், மெல்ல தலையை உயர்த்திப் படபடக்கும் விழிகளால் ஏறிட்டாள்.

 

‘இராட்சசனே’ என அவள் மூளை எச்சரிக்கையுடன் செயல்பட்டு அவனை ஒரே தள்ளாகத் தள்ளிவிட்டு நின்றவளின் பார்வை மீண்டும் காரின் பக்கம் திரும்பியது.

 

அவர்கள் நின்றிருந்த நிலையைப் பார்த்தோ, அல்லது, மித்ரனின் கவனத்தைத் தன் மீது திருப்ப வேண்டும் என்ற எண்ணத்தினாலோ உடைந்து சிதறிக் கிடந்த கண்ணாடித் துண்டை எடுத்து தன் இடது கையில் கீறிக் கொண்டாள் ரதிப்ரியா.

 

அவளின் செய்கையால், ‘இது என்ன முட்டாள்தனமான காரியம்?’ என அதிர்ந்து போய்ப் பேச்சு வராமல் நின்றுவிட்ட திவ்யதர்ஷினியின் கருவிழிகள் அவனையும் உள்ளே இருந்தவளையும் மாறி மாறிப் பார்த்தன.

 

விழிகளின் வழித்தடத்தில் வீழ்ந்தான் அவன். அவனுக்கு அந்த நிமிடத்தில் திவ்யதர்ஷினியைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை. அவளையே இமைக்காது நோக்கியிருந்தான்.

 

அவளை ஆபத்தில் இருந்து பாதுகாத்திருக்கிறான். கொஞ்சம் கூட நன்றி உணர்வில்லாமல் இப்படித் தள்ளி விடுகிறாளே என அவனுக்குள் நூறாயிரம் எரிமலை வெடித்துச் சிதறின. அவளை அணைத்துக் கொண்டிருக்கையில் லட்சம் பூக்களின் இதத்தை உணர்ந்தானே.

 

இப்போது அந்தப் பூக்காடு பற்றி எரிந்தது. அனற்குழம்பு பீறிட்டு வழிந்தது. அவன் வாய் திறந்து ஏதோ சொல்ல வருவதற்குள் திவ்யதர்ஷினியும் சுதாரித்து ஏதோ சொல்ல வாயைத் திறந்தாள்.

 

ஆனால் இவர்களையெல்லாம் வெற்றி கொண்டாள் காரிலிருந்து இறங்கிய ரதிப்ரியா. தன் இடது கையைப் பிடித்தவாறே, “ஐயோ அம்மா… மித்ரன்… ரொம்ப வலிக்குது” என அரற்றினாள்.

 

மித்ரனின் பார்வை சட்டென ரதிப்ரியாவின் பக்கம் திரும்ப, அவளது இடது கையிலிருந்து ரத்தம் வடிந்து சொட்டிக் கொண்டிருந்தது.

 

அவனின் வானிலை சட்டென மாற, “ஓஹ் காட்” எனச் சூழ்நிலையின் தீவிரம் புரிந்தது. உடனே ரதிப்ரியாவின் அருகில் ஓடிச்சென்று கையைப் பற்றி மேலே உயர்த்தினான்.

 

“என்ன ஆச்சு ரதி?” எனக் கேட்டவனுக்கு அந்தக் கேள்வியே அசட்டுத்தனமாகப் பட்டது. கல்பட்டு உடைந்த கண்ணாடித் துண்டொன்று அவள் கையைப் பதம் பார்த்துவிட்டது எனச் சிறுபிள்ளை கூட அறியும்.

 

ஆனால் அக்காயத்தை வேண்டுமென்று அவளே உண்டு பண்ணிக் கொண்டாள் என்று திவ்யதர்ஷினி மட்டுமே அறிவாள்.

 

“மேலே தூக்கிப் பிடி” என்றவன் சுற்றும் முற்றும் பார்த்தான். என்ன செய்வதென்று புரியாமல் நின்று கொண்டிருந்த திவ்யதர்ஷினி கண்களில் பட, “சீக்கிரம் இங்கே வா” என அழைத்தான்.

 

எதற்காக அழைக்கிறான் என்று புரியாமலேயே சாவி கொடுத்த பொம்மை போல் அவனை நெருங்கினாள் திவ்யதர்ஷினி. அவள் அணிந்திருந்த துப்பட்டாவை அவளிடம் கேட்காமலேயே வெடுக்கென்று ஒரே இழுப்பாக இழுத்தான்.

 

அவளிடம் கேட்டிருந்தால் அவளே அவனிடம் தந்திருப்பாள். எதற்காக இந்த முரட்டுத்தனம்? அவன் இழுத்ததில் பின்னூசி வைத்துக் குத்தப் பட்டிருந்த துப்பட்டா கிழிந்து அவன் கைகளில் சென்றது. கூடவே அவன் இழுத்த வேகத்தில் திவ்யதர்ஷினி பிடிமானம் இன்றி தடுமாறி கீழே போய் விழுந்தாள்.

 

அதைச் சிறிதும் சட்டை செய்யாத மித்ரனுக்கு ஒன்றே குறிக்கோளாக இருந்தது. எப்படியாவது ரதிப்ரியாவின் கையிலிருந்து வரும் ரத்தத்தை நிறுத்த வேண்டும். அவனுக்கு இரத்தம் என்றாலே ஆகாது.

 

அதனால் திவ்யதர்ஷினியின் துப்பட்டாவைக் கொண்டு ரதிப்ரியாவின் இடதுகையில் இறுக்கமாகக் கட்டி ரத்தம் வருவதை தடுத்து நிறுத்த முயன்றான். சிறுவயதில் அவன் தந்தை விபத்துக்குள்ளாகி மருத்ததுவமனைக்குச் சென்றபொழுது அவன் தந்தையை இரத்தக்கறையுடன் பார்த்ததிலிருந்தே அப்படி உணர்கிறான்.

 

அந்தச் சிறுவயதில் அவனை ஏன் தன் பாட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் என்று அப்போது விளங்கவில்லை. ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன்பு நன்கு அறிந்து கொண்டான். அவனைத் தன் அன்னையிடம் இருந்து பிரிப்பதற்காக அவன் பாட்டி போட்ட சதி என்று.

 

அவன் கவனம் முழுவதும் ரதிப்ரியாவின் கையிலிருக்க, திவ்யதர்ஷினி கீழே விழுந்தது அவன் கவனத்தில் பதியவில்லை. அதைப் பார்த்த ரதிப்ரியாவின் உதடுகளில் மெல்ல இளக்காரச் சிரிப்பொன்று மலர்ந்தது.

 

“இரத்தம் ஓரளவுக்கு நின்னுடுச்சு. சீக்கிரம் வா ரதி, ஹாஸ்பிடல் போகலாம். வா வந்து பின்னாடி உட்கார்ந்துக்கோ. முன்னாடி கண்ணாடிச் சில்லு இருக்கும்” என அக்கறையுடன் அவளை அழைத்துச் சென்று காரின் பின்னால் அமர வைத்தான்.

 

பின்னர், காரைச் சுற்றிக்கொண்டு போக, காரின் முன்னே கீழே விழுந்து கிடந்த திவ்யதர்ஷினியைத் திகைத்துப் போய் ஒரு கணம் நின்று பார்த்தான்.

 

அதற்குள், “மித்ரன்…” என ரதிப்ரியாவின் குரல் இறக்கியிருந்த ஜன்னல் வழியே கேட்க, திவ்ய தர்சினியிடம், “எதுக்கு இப்படி முன்னால விழுந்து இன்னும் நடிச்சிட்டு இருக்க? சிம்பதி கிரியேட் பண்ண நினைக்கிறியா?

 

என் கார் முன்னாடி படுத்து உருளாம ஓரமா போய் புழுதியில புரளு. உனக்குப் பொருத்தமா இருக்கும்” எனச் சற்றுமுன்னர் காட்ட வேண்டிய கோபத்தை வார்த்தைகளில் கொட்டிக் கவிழ்த்தான் மித்ரன்.

 

“செய்யறதையும் செஞ்சுட்டு நான் நடிக்கிறேனா? முதல்ல உங்க கண்ணைத் திறந்து பாருங்க” என அவளும் பதிலுக்குச் சீறினாள்.

 

அவன் அமைதியாகச் சென்றிருந்தால் அவளும் பேசாமல் எழுந்து அங்கிருந்து அகன்றிருப்பாள். இப்படி அபாண்டமாக அவள் மேல் பழி சொன்னால் எப்படிப் பொறுத்துக் கொண்டு போக முடியும்?

 

முதல் முறையும் இப்படியே. தன்னை இழுத்துக் கொண்டு போய்க் கடல் அலைகளில் தள்ளிவிட்டான். இன்றும் அவளைக் கீழே தள்ளிவிட்டு எதுவும் நடக்காததைப் போல் அவள் மேலேயே பழியைத் திருப்புகிறான்.

error: Alert: Content selection is disabled!!