“இராட்சசன்!” என அவள் முணுமுணுக்க, “ஒழுங்காப் போயிடு, இல்லை, காரை விட்டு ஏத்திடுவேன்” என எச்சரித்தவாறே காரில் ஏறி அமர்ந்து அதை உயிர்ப்பித்தான்.
இவன் அதைச் செய்வானென்று நூறு சதவிகிதம் என்ன இருநூறு சதவிகிதம் நிச்சயம். அதனால் அவள் கையை ஊன்றி எழ நினைக்கையில் தடதடவென்று ஓடி வந்த சந்தோஷ், “தர்ஷி, என்ன ஆச்சு தர்ஷி? ஏன் கீழே விழுந்து கிடக்கிற?” எனக் கை கொடுத்து அவளை அங்கிருந்து தூக்கிவிட்டான்.
பின்பு அவள் கை, கால்களில் ஏதாவது சிராய்ப்பு இருக்கிறதா என ஆராய்ந்து பார்த்துவிட்டு, பாக்கெட்டில் இருந்து தன் கைக்குட்டையை எடுத்து அவள் முழங்கையில் சிராய்ப்பு இருந்ததை மெல்லத் துடைத்துவிட்டான்.
அதை பார்த்துக் கொண்டிருந்த மித்ரன் பொறுமையிழந்தான். கார் ஹாரனை பலமாக ஒலிக்கவிட, திவ்யதர்ஷினியை அங்கிருந்து நகர்த்திச் சென்று நடைபாதையின் மேல் ஏறினான் சந்தோஷ்.
அதைப் பார்த்த மித்ரனின் நெஞ்சம் காந்தியது. யார் இவன்? எங்கே சென்றாலும் துரத்திக்கொண்டு வருகிறான் என சினம் எழுந்தது. ஆனால் அதை யார் மேலே காட்டுவது என்று அவனுக்குத் தெரியவில்லை. பாவம் உயிரில்லாத காரே அவன் கைகளில் சிக்கித் தவித்தது.
விர்ரென்று காரை அழுத்திக் கொண்டு அங்கிருந்து மருத்துவமனை நோக்கிப் பறந்தான் மித்ரன். அவன் அப்படி வேகமாக அழுத்தியதில் சாலையில் தேங்கியிருந்த மழைநீர் சகதியுடன் சேர்ந்து கார் சக்கரத்தில் சிக்கி அவர்கள் மேல் வாரியிறைத்தது.
அதை எதிர்பார்த்தவன் போல் சந்தோஷ் திரும்பி நின்று திவ்யதர்ஷினியின் மேல் சகதி தெறிக்காமல் அவளைப் பாதுகாத்தான். அவன் அப்படிப் பாதுகாவலனாய் அவளுக்கு நின்றதைக் கார் கண்ணாடியின் வழியே பார்வையிட்ட மித்ரனுக்கு ஏனோ இனம்புரியா அவஸ்தை நெஞ்சில் தோன்றியது.
ஏன் இந்தத் தேவையில்லாத உணர்வு என எவ்வளவு முயன்றும் அவனால் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. யாரோ ஒருத்தியை எவனோ பாதுக்காத்தால் இவனுக்கு என்ன வந்தது? அவள் யாரென்று கூடத் தெரியாது. அப்படி இருக்கையில் இரண்டு தடவை மட்டுமே பார்த்த ஒருத்தியைப் பற்றி ஏன் இவ்வளவு நினைக்கிறான்?
அதன் பொருட்டுத் தோன்றிய கடுங்கோபத்தை காரின் வேகத்தைக் கூட்டிக் காட்டினான்.
“யாரவன் தர்ஷி? இப்படி முரட்டுத்தனமா நடந்துட்டுப் போறான்? உனக்குத் தெரிஞ்சவனா?” எனக் கார் சென்ற திசையை முறைத்துப் பார்த்த சந்தோஷ், “எதுக்கு நீ எப்பப் பாத்தாலும் எதையோ ஒன்னு இழுத்து வச்சுட்டு இருக்குற?” என அவளைத் திட்டுவதையும் மறக்கவில்லை.
“ப்ச் சந்தோஷ், எனக்குப் புழுதியில் படுத்துப் புரள ஆசையா என்ன? அன்னைக்குத் துரத்தின அதே ரவுடிக் கூட்டம் இன்னைக்கும் துரத்திட்டு வந்தாங்க. எப்படியோ தப்பிச்சு இங்க ஓடி வந்தேன். என்னைத் தாக்கக் கல்லை எடுத்து எறிய ஆரம்பிச்சாங்க” என நடந்ததைச் சொன்னவள் அந்தக் கார்காரனே கல்லடியில் இருந்து அவளைக் காப்பாற்றினான் என்று சொன்னாள்.
உண்மையும் அதுவல்லவா? அவன் மேல் இருக்கும் சினத்தில் நன்றி உணர்வை அவள் மறக்கக்கூடாது.
“ஆனா, அவர் கார் கண்ணாடி உடைஞ்சதுல கோபம் வந்திருச்சு போல. அத்தோட அவர் கூட வந்த பொண்ணுக்குக் கையில கண்ணாடி கிழிச்சு ரத்தம் வந்துடுச்சு. எல்லாம் என்னால நடந்தது. அதனால் அவரோட கோபத்துல நியாயமிருக்கு” என சந்தோஷைச் சமாதானப்படுத்தினாள்.
என்ன தான் அந்தப் பெண் வேண்டுமென்று செய்தாலும், அவன் எதுவும் நடிக்கவில்லை. உண்மையில் அவளைக் காப்பாற்ற மட்டுமே நினைத்தான்.
“எல்லாப் பக்க நியாயத்தையும் நிதானமா அலசி ஆராய்ஞ்சு பேசுற தர்ஷி” என அந்த நேரத்திலும் தோழியை மெச்சிக் கொள்ள அவன் மறக்கவில்லை.
திவ்யதர்ஷினி மறந்தும் கூட இந்த மித்ரனே அவளைக் கடற்கரை அலையில் தள்ளிவிட்டான் என்று சொல்லவில்லை. மறைக்க வேண்டுமென்று நினைக்கவில்லை. எதற்குத் தேவையில்லாமல் அந்த முகம் அறியாதவனைப் பற்றி வம்பு பேச வேண்டும் என்ற எண்ணத்தில் அதைப் பற்றிக் கூறவில்லை.
“ஆமா அந்த ரௌடிங்களை அனுப்பினது நீ வேலை செய்யற கம்பெனி முதலாளியோட பையன் தானே. அவன் அப்பாக்கு இதெல்லாம் தெரியாம இருக்குமா?” என சந்தோஷ் அக்கறையுடன் கேட்க,
“அவர் ரொம்ப நல்லவர் சந்தோஷ். இல்லைனா மகனை இப்படி அடிமட்டத்துல இருந்து வேலை செய்ய வைப்பாரா?” என நம்பிக்கையுடன் பேசினாள்.
“ப்ச்.. மக்களுக்கு எப்போதும் ரெண்டு முகம் இருக்கும் தர்ஷி. சூழ்நிலை பொறுத்து மாறிடுவாங்க. நீ அதைப் புரிஞ்சுக்க மாட்டேங்கிற” என சந்தோஷ் அவளுக்குப் புரிய வைக்க முயல,
“நானும் நீயும் இல்லையா? நமக்கு என்ன ரெண்டு முகமா? எல்லா சூழ்நிலையிலேயும் நம்ம ஒரே மாதிரி அல்லவா நடந்துக்கிறோம்” என்றாள்.
“உனக்கு இப்போ புரியாது. ஆனால் அப்படி நடக்கிறப்போ அதைப் பக்குவமா ஏத்துக்கிற மனநிலைமையை மட்டும் வளர்த்துக்கோ” என்றான்.
“நீ ரொம்ப யோசிக்கிற சந்தோஷ்” என திவ்யதர்ஷினி சொல்ல, “எனக்கு என்னவோ நீ உன் வேலையை விட்டுட்டு வேற வேலை தேடிக்கிறது நல்லதுன்னு படுது. இப்போ இல்லைனாலும் பின்னாடி உனக்குப் பிரச்சனை வர வாய்ப்பிருக்கு” என தோழிக்காக கலக்கமடைந்தான் சந்தோஷ்.
“பிரச்சனையைப் பார்த்து பயந்து ஓடச் சொல்றியா சந்தோஷ்?” என அவள் பதிலடி கொடுக்க,
“அப்படி இல்ல தர்ஷி, நீ கோர்ட்ல போய் சாட்சி சொல்றதுக்காவது உயிரோட இருக்கணுமே” என அவளிடம் தணிவாகச்ப் பேசி விளக்கினான்.
அவன் சொல்வது புரிந்தது அவளுக்கு. திடீரென்று வேலையை விட்டுவிட்டு என்ன செய்வது? தம்பி இன்னும் படித்துக் கொண்டிருக்கிறான். தந்தையால் எதுவும் செய்ய முடியாது. ஆகவே அவள் ஒருத்தி போய் சம்பாதித்தால் மட்டுமே அவளது குடும்பச் சக்கரம் சுழலும்.
அது மிகவும் நன்றாகவே சந்தோஷ்க்கும் தெரியும். ஆனாலும் ஆதங்கத்தில் வேலையை விடச் சொல்கிறான்.
“கவலைப்படாத சந்தோஷ். நான் கராத்தேல கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் மறக்காம இறக்கிவிடறேன்” எனச் சிரித்தவாறே அவள் சொல்ல, “எல்லாமே உனக்கு ஜோக்காப் போயிடுச்சு. அவனும் அதே வித்தையைக் கத்து வச்சிருந்தா என்ன பண்ணுவ?” என சந்தோஷ் அவளை முறைத்தான்.
“ஆமாமில்லை. அப்பப்போ நீ புத்திசாலியாகிடற சந்தோஷ். சரி வா வீட்டுக்கு போகலாம். இன்னைக்கு வந்த வேலை எதுவும் நடக்காது போல. நாளைக்கு மறுபடியும் வரலாம். இப்படியே சகதியோட எப்படிக் கடைக்குள்ள போறது?” என அவனிடம் சொல்ல, அதுவும் சரியென்று பட்டது அவனுக்கு. அவளை அழைத்துக் கொண்டு வீடு நோக்கிச் சென்றான்.
அதே நேரத்தில்…
மருத்துவமனை நோக்கிச் சென்று கொண்டிருந்த மித்ரனுக்கு பின்னால் அமர்ந்திருந்த ரதிப்ரியா சற்றும் நினைவுக்கு வரவில்லை. திவ்யதர்ஷினியின் முகமும் அவளைப் பாதுகாக்கிறேன் என அவளுக்கு அரணாக முளைத்த அந்த இளைஞனுமே அவன் எண்ணத்துக்குள் சிக்கி சீட்டி அடித்தனர்.
எவனோ ஒருவன் திரும்பத் திரும்ப வந்து ஏன் அந்தப் பெண்ணைக் பாதுகாக்கிறான் என்ற எரிச்சல் அவனறியாமல் மூண்டது.
‘பெரிய கிருஷ்ண பரமாத்மா… வந்துட்டான் பாதுகாக்க’ என மனதில் கரித்துக் கொண்டு வந்தவனுக்கு ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது.
‘அந்த தர்ஷி என்ற பெண்ணுக்கு அந்த இளைஞன் மிகவும் முக்கியம், அல்லது, அந்த இளைஞனுக்கு தர்ஷி மிகவும் முக்கியம்.’ மித்ரன் தன் பாட்டில் அவன் சிந்தனை சுழலுக்குள் சிக்கி மூழ்கியிருக்க,
“ஆஹா வலிக்குதே” என்ற ரதிப்ரியாவின் குரல் அவனை அந்தச் சூழலிலிருந்து மீட்டது.
“சாரி ரதி… ரொம்ப வலிக்குதா? இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ… இதோ ஹாஸ்பிடல் பக்கத்துல வந்துருச்சு” என அவளுக்கு ஆறுதல் மொழி கூறியவனின் பேச்சில் அவளுக்குக் கண்களில் கண்ணீர் தளும்பி நின்றது.
அவள் ஏதோ ஒரு வேகத்தில் மித்ரனின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற அவசரத்தில் கண்ணாடியைக் கொண்டு தன் கையைக் கிழித்துக் கொண்டாள். மித்ரன் ஏதோ ஒரு பெண்ணை அணைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் அவளுக்கு மனதில் பெரும் தீ மூண்டது.
அந்தத் தீயை அணைக்க மட்டுமே எண்ணி அப்படிச் செய்தாள். ஆனால் கண்ணாடிக் காயம் இத்தனை வலியை உண்டாக்குமென்று அவள் சற்றும் யோசிக்கவில்லை. ரத்தம் வழிந்த நொடியிலிருந்து வலி விண் விண்னென்று தெறித்தது.
எனினும் மித்ரனின் இந்த அனுசரணையான பேச்சும் ஆதரவான நடத்தையும் அவளின் மனதிற்கு இதமளிக்க, இதற்காக அவள் உலகின் எந்த எல்லை வரையும் செல்வாள். பல்லைக் கடித்துக் கொண்டு வலியை பொறுத்தவள் அருகில் அமர்ந்திருந்த மித்ரனைப் பார்த்துப் மென்மையாக முறுவலித்தாள்.

