சதிராடும் சித்திரமே 6 – 2

“சும்மா வாய் இருக்குங்கறதுக்காக என்ன வேணா பேசாதீங்க. முதல் ரெண்டு தடவையும் எப்படி எதார்த்தமா நடந்ததோ அதே மாதிரி இதுவும். காரைப் பின்னால எடுக்கறவங்க ரொம்பவும் கவனமா இருக்கணும். நீங்க இப்படித் திடீர்னு காரைப் பின்னால எடுப்பீங்க என ஜோசியமா தெரியும்?” எனத் திவ்யதர்ஷினியும் அமைதியைக் குத்தகைக்குக் கூட எடுக்கவில்லை.

 

தொடர்ந்து, “உங்ககிட்டே பணம் பறிச்சு சாப்பிட்டு நான் உயிர் வாழணும் என்கிற நிலை வந்தாலும் போய்ச் சாவேனே தவிர, உங்ககிட்டே வாங்கிச் சாப்பிடமாட்டேன்” என எரிச்சலுடன் மொழிந்தாள்.

 

அவள் பேசிய வார்த்தைகள் மித்ரனின் அகந்தையைச் சீண்டியது. பார்க்கும் பொழுதெல்லாம் தன் பொருளுக்கு ஏதோ விதத்தில் சேதத்தை விளைவிக்கும் இவளுக்கு இத்தனை திமிரா? அத்தோடு அவன் அப்படி என்ன செய்துவிட்டான் என்று இப்படித் தன்னைப் பற்றி மட்டமாக யோசிக்கிறாள் என்ற ஆங்காரமும் சேர்ந்து கொண்டது.

 

சந்தித்த இரண்டு முறையும் அவளைக் கீழே தள்ளிவிட்டு அவளுக்குச் சங்கடத்தையும் மனஉளைச்சலையும் ஏற்படுத்தியிருக்கிறான் என்பதை வசதியாக மறந்து போனான்.

 

“ம்ஹ்..” என எகத்தாளமாய்ச் சிரித்த ரதிப்ரியா, “இந்த ரோஷத்துக்கு ஒன்னும் குறைச்சலில்லை. உண்மையைச் சொல்லு, திட்டம் போட்டுத் தானே எங்க பின்னாடியே தொடர்ந்து வந்துட்டு இருக்குற?” என அவளைக் கெட்டவளாகச் சித்தரித்தே தீர வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தாள்.

 

“பெரிய தண்டி யாத்திரைக்குப் போறீங்க, உங்க பின்னாடியே வர்றதுக்கு. உங்க மாதிரி எல்லாம் பொய் சொல்லி நடிக்க எனக்கு அவசியமில்லை” என மேலும் எள்ளலாக திவ்யதர்ஷினி சொல்லவும், மித்ரனின் முகம் கருத்தது.

 

அவள் சொன்னது என்னவோ அன்று ரதிப்ரியா கண்ணாடித் துண்டு கொண்டு தன் கையைக் கிழித்ததை எண்ணி. ஆனால் அவனிடம் என்ன பொய்யைக் கண்டுபிடித்துவிட்டாள் இந்த மாயக்காரி என மித்ரன் வெகுண்டான்.

 

ரதிப்ரியா அப்போதும் விடவில்லை. மித்ரனுக்கு அவனைக் குறைத்து யாராவது மதிப்பிட்டுப் பேசினால் அறவே பிடிக்காது. எதிரில் இருந்த பெண் பேசப் பேச, அவன் முகம் கருத்ததை வைத்தே அவன் எப்போது வேண்டுமென்றாலும் வெடிக்கும் எரிமலையின் நிலையில் இருக்கிறான் என்று அவளால் கணிக்க முடிந்தது.

 

தொடர்ந்து அந்த எரிமலைக்கு அழுத்தத்தைக் கொடுத்தாள். இவர்களின் பேச்சுப் பரிமாற்றத்தில் அங்கே கூட்டமும் கூட ஆரம்பித்தது.

 

“எனக்கு வேற ஒரு சந்தேகம் வருது. பார்க்க அழகா, வசதி படைச்சவரா இருக்காரே என இவரை மயக்கறதுக்கு வந்தியா?” எனக் கேட்டு அடக்கப்பட்டு வைத்திருந்த திவ்யதர்ஷினியின் கோபத்தையும் தூண்டினாள்.

 

தொடர்ந்து, “அவர் வாழ்க்கையில் உன்னை விட அழகான பெண்களை நிறையப் பார்த்துட்டார். உனக்கு சான்ஸே இல்லை” என ரதிப்ரியா விடாமல் அவள் கோபத்தைக் கிளறினாள்.

 

அவ்வளவுதான்! நிதானமாக இருக்க வேண்டும் என கருதியதைத் தீயிலிட்டு கருக்கினாள் திவ்யதர்ஷினி.

 

“முதல்ல பார்த்து மயங்கறதுக்கு அங்க ஏதாவது மயக்கற மாதிரி இருக்கணும். ரொம்பவும் கனவு கண்டு ஏமாந்து போகாதீங்க. மயக்க வந்துட்டாங்களாம். மயங்க அங்க ஒன்னுமே இல்லை” எனச் சத்தமாகவே முணுமுணுத்தாள்.

 

தன்னைப் பார்த்து எப்படி இவள் இப்படிச் சொல்லலாம் என மித்ரனின் ஆணவம் தட்டி எழுப்பப்பட்டது. பின்னே அவன் அவளை நினைத்து நினைத்து மயங்கிக் கொண்டிருக்க, அவளோ தன்னைப் பற்றி இப்படிக் கேவலமாக எண்ணிக் கொண்டிருக்கிறாள்.

 

அவனுக்கு வேற வேலை வெட்டியில்லையா, அல்லது, வேறு ஆளே கிடைக்கவில்லையா மயங்கிக் கிடக்க? இவள் என்ன பெரிய ரதியா?

 

“இவ பெரிய ஐஸ்வர்யா ராய்” என மித்ரனும் சத்தமாக முணுமுணுத்தான்.

 

“கரெக்ட்.நான் ஐஸ்வர்யா ராய் கிடையாதுன்னு எனக்கே நல்லாத் தெரியும். அதனால் வளர்ந்த” என அவனை மேலும் கீழும் பார்த்த திவ்யதர்ஷினி, “அபிஷேக்கைத் தேடாமல், எனக்கேத்த ‘மில்க் ஷேக்’ தேடிக்கிறேன். நீங்க போங்க சார்” என அவனுக்குச் சளைக்காமல் பதிலடி கொடுத்தாள். ஏனோ கையால் சைகை வேறு செய்து காட்டினாள்.

 

அங்கே கூடியிருந்த கூட்டம் அதைக் கேட்டு கொல்லென்று சிரிக்க, அவனுக்குத் தலையிறக்கமாகப் போய்விட்டது.

 

“பெரிய ஆட்டக்காரின்னு நினைப்பு… இதுல அபிநயம் வேறு” எனச் சத்தமாகவே முணுமுணுத்துக் கொண்டவன்,

 

“தேவையில்லாம கண்டவங்களோட பேச எனக்கும் ஒண்ணும் ஆசையில்லை. பாக்குறப்பல்லாம் எனக்குச் சேதாரத்தை உண்டு பண்ணின உன்னை அப்படியே விட நான் ஒன்னும் குபேரன் இல்லை” எனச் சொன்னவன், அவள் வண்டியின் காலுக்கடியில் மாட்டி வைத்திருந்த அவளது கைப்பையை குனிந்து எடுத்தான்.

 

“எ.. என்ன பண்ணறீங்க?” என திவ்யதர்ஷினி பதற்றமடைந்தாள். மித்ரன் அதைக் கெட்டியாகப் பற்றி கொண்டு , திறந்து பார்த்தான். அவள் அப்போது தான் வங்கியிலிருந்து எடுத்து வந்த பணமிருக்க, விசிலடித்தவாறே அந்தப் பணக்கட்டை எடுத்துக் கொண்டான்.

 

“என் மோதிரத்தைத் தொலைச்ச, கார் கண்ணாடியை உடைச்ச, இதோ இப்பவும் புது காரை இடிச்சு வச்சிருக்க. இதுவரைக்கும் நீ செஞ்ச சேதாரத்திற்கு எல்லாம் இந்தப் பணம் பத்தாது. இருந்தாலும் இதுவரைக்கும் நீ செஞ்ச தப்புக்கு தண்டனையா இதை எடுத்துக்குறேன். அப்போ தான் அடுத்தமுறை நீ யோசிச்சு நடந்துக்குவ” என்றவன் பணத்தைத் தன் பேண்ட் பாக்கெட்டில் திணித்துக் கொண்டான்.

 

அவன் செய்கையைப் பார்த்து அதிர்ந்து போனாள். ‘ஐயோ! அந்தப் பணத்தை வைத்தே சசிதரனை அடுத்த கட்டத்திற்கு அனுப்ப முடியும்.’ அவளுக்கு உடலெல்லாம் ஆடிப் போனது. இந்தப் பணமில்லை என்றால் அவள் என்ன செய்வாள்?

 

“பிளீஸ் அந்தப் பணத்தை திருப்பிக் கொடுங்க சார். எனக்கு அது ரொம்பத் தேவை” என அவள் கைப்பையை அவனிடமிருந்து பிடுங்க முயன்றாள். அவளின் தீண்டலில் அவன் உள்ளம் குலுங்கியது உண்மையே.

 

முதல் இரண்டு முறை அவளைச் சந்திக்கையில் அவளை அணைத்து அவன் இதயத்துடிப்பை எகிறச் செய்தது உண்மையே. அதனாலேயே இன்று அவளைத் தீண்டாதவாறு பார்த்துக் கொண்டான் மித்ரன். அவன் அப்படி என்ன கட்டுப்பாட்டை இழப்பவனா?

 

ஆனால் கைப்பையைப் பறிக்கிறேன் பேர்வழி என அவள் அவனைத் தீண்டி சோதனைக் கூடம் அமைக்காமலேயே அவனைச் சோதித்தாள் அப்பெண். கண்டிப்பாக அவனுள் இரசாயன மாற்றம் நிகழ்ந்தது. அதுவும் வேறு யாராலும் நிகழ்த்த முடியாத சாதனை!

 

மித்ரன் சுயஅலசலில் ஈடுபட்டிருக்க, “அது என் பணம். என்கிட்டே இருந்து அதைத் திருடாதீங்க” என திவ்யதர்ஷினி அவனிடம் கோபமாகச் சொல்ல, ‘திருடன்’ என்ற வார்த்தையில் அவன் மொத்த மதியையும் இழந்தான்.

 

“உன் பணத்தைத் திருடிட்டுப் போய்த் தான் என் கோட்டையை எழுப்பனும்னு இல்லை. உன்னை விட, நீ நினைச்சுப் பார்க்கக் கூட முடியாத அளவுக்கு என்கிட்ட நிறையவே பணமிருக்கு. ஆனா பாரு மகாராணி மாதிரி பல்லக்குல வந்து என் காரை இடிச்சுட்டு அதுக்குக் காசு கொடுக்காம தப்பிச்சுப் போகலாம்னு நினைக்கிற நீதான் ஏமாத்துக்காரி” என அவன் சத்தம் போட கூட்டம் அவளை ஐயத்துடன் நோட்டமிட்டது.

 

அருகில் நின்றிருந்த ஒருவரைப் பார்த்து, “சார், இது என்ன கார்னு உங்களுக்குத் தெரியுமில்லை. அப்படியே அதோட மதிப்பும் தெரியுமில்லை?” எனக் கேட்க, அவர் என்ன தெரியாது என்றா சொல்வார்?

 

அதுவும் ஒருவன் தன்னை மதித்து, தன் அறிவை மெச்சிப் பேசுகையில் அதைப் பற்றி தெரியாவிட்டாலும், எனக்குத் தெரியாது என்று சொல்லவா முடியும்?

 

ஆனால் அந்த நபருக்கு அந்தக் காரைப் பற்றி நன்றாகவே தெரியும் என்பதால், “ஆமாம் சார்.. விலை அதிகமான கார் இது” என அவனுக்குச் சாதகமாகப் பேச, சுற்றியிருந்தவர்கள் அனைவரும் திவ்யதர்ஷினியைச் சந்தேகத்துடன் நோக்கினர்.

error: Alert: Content selection is disabled!!