சதிராடும் சித்திரமே 8 – 1

அத்தியாயம் – 8

 

இரண்டு வாரங்கள் கழிந்திருந்தன. மித்ரனை முற்றிலும் அவள் மறந்திருக்கவில்லை. ஆனால் அவன் மேலிருந்த கோபம் தணிந்திருந்தது. அவன் இடத்திலிருந்து பார்த்தால் அவனுக்கு இழப்புகள் அதிகமாகவே இருந்தன. அதற்காக அவன் மேல் பெரிதாக எந்த மதிப்பும் வந்து விடவில்லை.

 

இனிமேல் அவனைப் பார்த்தால் தூர விலகிப் போய்விட வேண்டும் என முடிவு செய்து கொண்டாள். அவள் விலகிப் போக நினைத்தால் மட்டும் போதுமா? விதி அப்படி நடக்க விட்டுவிடுமா என்ன?

 

அன்று வேலைக்குச் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தாள் திவ்யதர்ஷினி. மித்ரனை ஒருவாறு ஒதுக்க முடிந்தவளால் தன் உயிர்த் தோழி, பவித்ராவை அப்படி ஒதுக்க முடியவில்லை.

 

பவித்ராவுக்காக இவள் பரிந்து கொண்டு நியாயம் கேட்கப் போனால் இப்போது அப்படியே தட்டை மாற்றிப் போடுகிறாள். அவர்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் முதலாளியின மகன் மேல் போட்டிருக்கும் கேஸை வாபஸ் வாங்கிவிட்டதாகச் சொன்னாள் பவித்ரா.

 

அவள் பயப்படுகிறாள் என்ற எண்ணத்தில் பயப்பட வேண்டாம் எனப் பலமுறை திவ்யதர்ஷினி தைரியமளித்தத பின்னர் போட்டாளே ஒரு போடு.

 

“பயப்பட என்ன இருக்கு தர்ஷினி? முதல்ல என் அம்மா-அப்பாக்கு இது பிடிக்கலை. உன் பேச்சைக் கேட்டுகிட்டு நானும் தேவையில்லாத வம்பை இழுத்துக்கிட்டேன்னு என்னைத் திட்டறாங்க. அப்போவே கொஞ்சம் பொறுமையா நடந்துக்கச் சொன்னாங்க. உன் பேச்சைக் கேட்டு இப்படிப் பண்ணிட்டேன்” என்றதும் அவளுக்குத் தலையெல்லாம் கிறுகிறுத்துப் போய்விட்டது.

 

இறுதியாக, “நம்ம முதலாளி ரொம்ப நல்லவர் தெரியுமா? எங்க வீட்டுக்கு வந்து நேரா அப்பாகிட்டே என்னைப் பெண் கேட்டுட்டார். வீட்ல அம்மா-அப்பாக்கு ஒரே சந்தோஷம்” என்றதும், “என்னடி சொல்லற?” என திவ்யதர்ஷினியும் அதிர்ந்து போனாள்.

 

அவன் காதலன் என்று நம்பிக் கொண்டிருந்தவன் சரியான பொறுக்கி என அவளிடம் வந்து அவள் அழுததென்ன? இப்போது அதை எப்படி வசதியாக மறந்துவிட்டுப் பேசுகிறாள்?

 

“நம்ம முதலாளியோட பையன் தானே அவர். நம்ம எம். டிக்கு நடந்தது எல்லாம் இப்போ தான் தெரிய வந்திருக்கு. அவர் எல்லாத்தையும் சரி செய்யறதா சொல்லிட்டார். எனக்கும் வேலைல ப்ரமோஷன் கிடைக்கப் போகுது. அப்புறம் கல்யாணம் தான்” என்றவள் அத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை.

 

“நல்லவேளை என் வளமான எதிர்காலத்தைக் கெடுத்துக்க இருந்தேன்” என்றவள், இனிமேல் அவள் விஷயத்தில் திவ்யதர்ஷினி தலையிட வேண்டாம் எனத் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டாள்.

 

“என்ன பவி பேசற? அவன் ஏற்கனவே காரை ஏத்தி ஒரு ஆளைக் கொன்னிருக்கான்” என்றதும் அவளுக்குக் கோபம் தலைக்கேறியது.

 

“நீ பார்த்தியா? என்னமோ பார்த்த மாதிரி சொல்லிட்டுத் திரியற. முதல்ல மரியாதையாப் பேசப் பழகு. அவன் இவன்னு சொல்லற. எனக்கு இப்போ வேற தோணுது. எனக்கு கிடைக்கற நல்ல வாழ்க்கையைப் பொறாமையில கெடுக்கப் பார்க்கறியோன்னு சந்தேகமா இருக்கு” என நாக்கில் நரம்பில்லாமல் பேசினாள் பவித்ரா.

 

பணம் பாதாளம் வரையில் பாயும் என்று சும்மா சொல்லவில்லை. உண்மையே!

 

இதுவரையில் அவளுக்காக திவ்யதர்ஷினி பட்ட இன்னல்கள் கொஞ்சமா நஞ்சமா? அதைப் பற்றிய எவ்வித சிந்தனையுமில்லாமல் இப்படிப் பேசுகிறாள். நன்றாக மூளைச் சலவை செய்திருக்கிறார்கள் இவளை. சொல்லிப் பார்த்தாகிவிட்டது. இனிமேல் அவள் ஒன்றும் செய்வதற்கு இயலாது.

 

அன்று சந்தோஷ் சொன்னதும் காதுகளில் ஒலித்தது. ‘மனிதர்களுக்கு இரண்டு முகம் இருக்கும்’ இனியும் அந்த நிறுவனத்திலேயே தொடர்ந்து வேலை செய்வதற்கு அவளுக்குப் பிடிக்கவில்லை. வேறு வேலை தேட வேண்டும் என நினைத்தவாறே டிராபிக் சிக்னலுக்காக நின்றிருக்கையில் அவளது அலைபேசி சிணுங்கியது.

 

இந்நேரத்துக்கு யார் அழைக்கிறார்கள் என்ற யோசனையில் வண்டியை சற்று ஓரம் கட்டியவள், அலைபேசியை எடுத்துப் பார்த்தாள். அவள் தம்பி சசிதரன் அழைத்திருந்தான். அவனை உடனே அவள் அழைக்க,

 

“அக்கா எங்க இருக்கீங்க?” எனக் கேட்டான். அவள் இருக்கும் இடத்தைச் சொல்ல, “நல்லதாப் போச்சு. எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?” என அவளிடம் வேண்டினான்.

 

“சொல்லு சசி, என்ன வேணும்?” என அவள் கேட்க, “ஸ்பான்சர்ஷிப் பிடிக்க ஒருத்தரை இன்னைக்குப் பார்க்க வர்றதா அப்பாயின்ட்மென்ட் வாங்கியிருக்கேன். ஆனால் இப்போ என்னால உடனே அங்க வர முடியாம டிராபிக் ஜாம்ல மாட்டிகிட்டேன். எனக்காக நீங்க போய் அவரைப் பார்த்துப் பேசுங்க. நான் வந்து சேர்ந்திடறேன்” எனத் தன் நிலையை விளக்கினான்.

 

“அட்ரெஸ் சொல்லு” என விவரங்களை வாங்கிக் கொண்டவள், “நீ பத்திரமா வா சசி” என அக்கறையுடன் சொல்லிவிட்டு அழைப்பை வைத்தாள். அவன் தந்த முகவரி அங்கிருந்து வெகு தூரமில்லை. அதனால் விரைவிலேயே அங்கே சென்றுவிட்டாள்.

 

நல்ல பெரிய அலுவலகம் அது. அவள் ஏற்கனவே இந்த நிறுவனத்தைப் பற்றி அறிந்திருக்கிறாள். அவள் வேலையில் சேரும் பொழுது சுமாராக இயங்கிக் கொண்டிருந்த இந்த நிறுவனம், அதன் முதலாளி இறந்ததும் அவர் மகன் கையிலெடுத்துக் கடந்த இரண்டு வருடங்களில் மிகப் பெரிய உயரத்தைத் தொட்டுவிட்டது எனக் கேள்விப்பட்டிருக்கிறாள்.

 

தன் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்று விசாரித்து, முதலாளியைச் சந்திக்க மேல்தளத்தில் இருக்கும் அவரது அறைக்குச் செல்ல படிகளில் ஏறினாள். என்ன சொல்ல வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்று மனதுக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டு ஏறினாள்.

 

அவள் மேல்தளத்தை அடைந்ததும் மின்தூக்கியின் கதவுகள் திறக்கும் சத்தம் கேட்டது. தலையை உயர்த்திப் பார்க்க, அங்கே மின்தூக்கிக்காகக் காத்திருந்தவனும் அவளைப் பார்த்தான்.

 

திவ்யதர்ஷினியை அங்கே அவ்வளவு அருகில் சற்றும் எதிர்பார்க்கவில்லை மித்ரன். உள்ளுக்குள் குப்பென மகிழ்ச்சி பொங்கியது. இதயம் குதியாட்டம் போட்டது. ஜிவ்வென்று விண்ணில் ஏறி மிதப்பதைப் போலிருந்தது.

 

ஒருவித மயக்கம் அவனைச் சூழ்ந்துகொள்ள, ஆழ்ந்து போய் அவள் வாசத்தை சுவாசத்தினுள் நிரப்பிக் கொண்டான். அன்று அவளிடம் கடினமாகப் பேசிவிட்டு பணத்தையும் பறித்துக் கொண்டு வந்துவிட்டான்.

 

அதன்பிறகு அவன் அந்தப் பணத்தை பத்திரமாகப் பூட்டி வைத்துக் கொண்டான். என்னவோ அதில் அவள் வாசம் நிறைந்திருப்பதாகப் பட்டது. அதன்பிறகு அவள் கண்களில் படவில்லை. அவள் வண்டி எண்ணை வைத்து ஆளைக் கண்டுபிடிக்கலாமா என்று கூட நினைத்தான்.

 

அதுவுமில்லாமல், அன்று வத்சன் அந்தப் பெண்ணைக் கண்டுபிடித்து அவளிடம் பணம் வாங்க எண்ணி அவளைத் தடுத்து நிறுத்தியிருக்கிறான் என்று சொல்லவும் மித்ரனுக்குச் சிரிப்பு வந்தது.

 

நன்றாக அவளிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு வந்திருக்கிறான் வத்சன் என எண்ணிக் கொண்டான். ஆனால் அடுத்து அவன் சொன்னது அவன் இதய மத்தியில் ஈட்டியைக் கொண்டு பதம் பார்த்ததைப் போலிருந்தது.

 

‘நல்லவேளை நல்லவங்களா இருக்கப் போய் இனிமையா நடந்துக்கிட்டாங்க. அதைவிடக் காமெடி, நீ என் டிரைவர் என நினைச்சுட்டாங்க. ஆஹ் உனக்கு லார்ட் லபக்குதாஸ்னு நல்லாப் பேரு கூட வச்சாங்க’ என வத்சன் சிரித்தவாறே அடுக்கிக் கொண்டு போனான்.

 

அது எரியும் நெருப்பில் எண்ணையை வார்த்தது போலிருந்தது. பின்னே பார்க்கையில் எல்லாம் அவனிடம் சண்டை போட்டுவிட்டு இவனைச் சும்மா விட்டிருக்கிறாளே. அவளிடம் மாட்டி வைத்ததே இவன் திட்டுகள் வாங்கட்டும் என்றல்லவா?

 

மித்ரனுக்கு ஒன்று புரியவில்லை. அவள் ஒன்றும் இவனிடம் எடுத்ததுமே சண்டைக்கு வரவில்லை. இவன் முதலில் அவளைச் சீண்டவும் தான் பொறுத்துக் கொள்ள முடியாமல் பொங்கிவிட்டாள். ஆனால் வத்சன் அவளிடம் அடாவடியாக எல்லாம் நடந்து கொள்ளவில்லை. ஆகவே அவனிடம் தன்மையாகப் பேசிவிட்டுக் கிளம்பினாள்.

 

‘என்ன உன் பிளான் பிளாப் ஆகிடுச்சுன்னு பார்க்கிறயா. நான் நல்லவன்டா. அதனால் எனக்கு நல்லது மட்டுமே நடக்கும்’ என்றான் வத்சன்.

 

ஏற்கனவே அந்தத் தீ மித்ரனின் மனதில் புகைவிட்டுக் கொண்டிருந்தது. ஆகவே பட்டென மனதில் பற்ற வைத்த ஆயிரம் மத்தாப்புகளை அப்புகையை வைத்து மறைக்க முயன்றான். அதனால் எதையும் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. காட்டிவிட்டால் பிறகு அவன் எப்படி மித்ரனாக இருக்க முடியும்?

 

“யாரைப் பார்க்கணும்?” என மித்ரன் சற்று அதிகாரத்துடன் அவளிடம் கேட்க, அவனைச் சத்தியமாக அவளும் அங்கே எதிர்பார்க்கவில்லை. இவனா? தம்பி சொன்ன இந்த நிறுவனத்தின் முதலாளி மித்ரன் இவனா? அன்று கூட வந்த பெண் அப்படி அல்லவா அவனை அழைத்தாள்.

 

அவளுக்கு அன்று பணத்தை இழந்த பொழுது எழுந்த ஏமாற்றத்தையும் விரக்தியையும் விட இன்று பல மடங்கு ஏமாற்றம் உள்ளுக்குள் எழுந்தது.

 

“மித்ரன் சாரைப் பார்க்கணும்… அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு” என அவள் இழுத்து நிறுத்தினாள்.

 

‘யாரோ ஓர் இளைஞனை, கல்லூரி மாணவனை அல்லவா அந்நேரத்துக்குச் சந்திப்பதாக இருந்தது. ஒருவேளை அவள் தன் பணத்தைத் திருப்பி வாங்குவதற்காகத் தன்னைக் கண்டுபிடித்து வந்து விட்டாளோ?’ என மித்ரனின் மனம் ரங்கராட்டினமாய்ச் சுழன்றது.

error: Alert: Content selection is disabled!!