சதிராடும் சித்திரமே – 9

அத்தியாயம் – 9

 

மருத்துவமனை! தூங்குவதும் திடுக்கிட்டுத் தூக்கி வாரிப் போட்டு விழிப்பதும் மீண்டும் மயங்குவதுமாகவே அன்றைய இரவு பொழுது திவ்யதர்ஷினிக்குக் கழிந்தது. அயர்வு மற்றும் அதிர்ச்சியால் இப்படி மயங்கியிருக்கிறாள் என மருத்துவர் அவளுக்கு ‘ட்ரிப்’ஸ் ஏற்றச் சொன்னார்.

 

ஏற்கனவே இது போல் அவள் மயங்கி இருக்கிறாளா என மருத்துவர் விசாரித்தார்.

 

அவளுக்கு இருட்டு என்றால் பயம். அந்தப் பயத்தில் மயங்கிவிடுவாள் என சசிதரனும் சந்தோஷூம் சொல்ல, “அப்போ அவங்களுக்குச் சின்ன வயசுல விபத்து மாதிரி ஏதாவது நடந்ததா?” எனக் கேட்டார்.

 

“சின்ன வயசுல இல்ல. கிட்டதட்ட நாலு வருஷத்துக்கு முன்னாடி அவள் வேலை செய்யற இடத்துல மின்தூக்கி வேலை செய்யாம இருந்திருக்கு. அதுல ஒருத்தர் விழுந்து இறந்துட்டார். அதிலிருந்து அக்கா இப்படி ஆகிட்டாங்க. ஆனா இருட்டுன்னா சின்ன வயசுல இருந்தே இப்படித் தான்” என்றான் சசிதரன்.

 

“ஏதாவது திடீரென நடந்தா மனித மனம் அதிர்ச்சியடைஞ்சு மயங்கறது சகஜம். எல்லா டெஸ்ட்டுக்கும் எழுதிக் கொடுத்திருக்கேன். ரிசல்ட் வரட்டும். பார்க்கலாம்” என மருத்துவர் மேலும் அவளைப் பரிசோதித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

 

அவர் சென்றது தான் தாமதம் சசிதரன் அழ ஆரம்பித்துவிட்டான். இவையனைத்துக்கும் காரணம் அவனே என சசிதரன் ஒரு பாட்டம் அழுது புலம்பிவிட்டான். தன் தமக்கையை அந்த நேரத்தில் அந்நிறுவனத்திற்கு போகச் சொல்லவில்லை என்றால் அவள் இந்நேரம் வீட்டுக்குச் சென்றிருப்பாள். அங்கே நிம்மதியாக தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்திருப்பாள்.

 

இப்படிப் புரிந்து கொள்ளாமல் அழுது கொண்டிருப்பவனை என்ன செய்வது எனத் தெரியாமல் சந்தோஷ் திண்டாடினான். இவன் ஒரு பக்கம் புரிந்து கொள்ளாமல் அழ, அவர்களின் தந்தையான முரளிதரன் விசயம் கேள்விப்பட்டு சந்தோஷின் பெற்றோர்களுடன் பதறியவாறு ஓடி வந்தார்.

 

வந்ததிலிருந்து மகளைப் பார்த்துப் பார்த்து அழுது கொண்டிருந்தார். அவ்வளவு எளிதில் எதற்கும் கலங்கமாட்டார் முரளிதரன். நிதானமாகவே செயல்படுவார். இவ்வளவு ஏன், அவருக்கு விபத்து நடந்து, தலையில் அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டு படுத்தப் படுக்கையாகிவிட்ட பின்னரும் கலங்கவில்லையே.

 

பிள்ளைகளுக்குப் பாரமாகிவிட்டோம் என்ற மனக்குறை இருந்தாலும் வைராக்கியத்துடன் போராடி அதிலிருந்து மீண்டு வந்துவிட்டார். தாடை முறிவிலிருந்து மீண்டு கூடிய விரைவில் அவர் பேச ஆரம்பித்ததே உலக அதிசயம் என மருத்துவர்கள் வியந்து போனார்கள்.

 

அப்படி இருந்தவர், இன்று மகளுக்கு ஒன்றென்றதும் ஒரேடியாகக் கலங்கிப் போனார். அவர் அழுவதைப் பார்த்த சந்தோஷின் தந்தை கூட, “அட விடுப்பா, சின்ன மயக்கத்துக்குப் போய் ஏன் இப்படி அழற? வாழ்க்கையில என்னென்னவோ பார்த்துட்ட” எனச் சமாதானம் செய்தார்.

 

ஆமாம்! திவ்யதர்ஷினியும் சசிதரனும் சிறு குழந்தையாக இருக்கும் பொழுதே அவர்களின் அன்னை உடல் சுகமில்லாமல் இறந்து போனார். அதைத் தாங்கிக் கொண்டு பிள்ளைகள் இருவரையும் கண்ணும் கருத்துமாக வளர்த்து ஆளாக்கி இருக்கிறாரே.

 

அப்படிப்பட்டவர் இன்று ஒரு சின்ன மயக்கத்திற்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம் செய்கிறார் என்று முரளிதரனை வியப்பாகப் பார்த்தனர்.

 

அவரை வீட்டுக்குப் போகச் சொல்லி எத்தனையோ முறை சசிதரனும் சந்தோஷூம் சொல்லியும் அவர் கேட்பதாக இல்லை. திவ்யதர்ஷினி முழுமையாகச் சரியாகி எழுந்து அமரும் வரையில் மருத்துவமனையை விட்டு எங்கும் நகரமாட்டேன் என முரளிதரன் அடம்பிடித்தார்.

 

திவ்யதர்ஷினி உடல் தேறி வீட்டிற்கு வந்த பின்னர் ஏன் தந்தையைக் கவனிக்காமல் அப்படி மருத்துவமனையே கதி என்று விட்டீர்கள் என அவர்களிடம் சண்டைக்கு வருவாள் எனப் பயமுறுத்தி, அவளிடம் திட்டுகள் வாங்க அவன் தயாராக இல்லை என நடித்து அவரை அங்கிருந்து ஒருவாறாகக் கிளப்பிக் கொண்டு சென்றான் சந்தோஷ்.

 

எப்படியும் ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் திவ்யதர்ஷினிக்குத் துணையாக அன்றிரவு இருக்க முடியும். ஆகவே மற்றவர்கள் அனைவரும் வீட்டிற்குக் கிளம்பிப் போக, சசிதரன் உடனிருந்து பார்த்துக் கொண்டான்.

 

*****

 

சந்தோஷ் ஓடி வந்து பதறியவாறே திவ்யதர்ஷினியைக் கைகளில் அள்ளிக் கொண்டு சென்றதே மித்ரனின் விழித்திரையில் படமாக ஓடிக் கொண்டிருந்தது. ஏனோ அவனுக்கு மூச்சு முட்டுவதைப் போலிருந்தது.

 

ஏன் அவனால் அவளைத் தூக்கிக் கொண்டு போக முடியாதா? இவன் என்ன சூப்பர் மேனா?

 

இப்படியே அமர்ந்து புலம்பிக் கொண்டிருப்பது அவனது குணம் அல்லவே. எதையும் அடுத்தடுத்து எனப் பிரச்சனைகளை ஆராய்ந்து, செயல்பட்டு அதைக் களைந்து போய்க் கொண்டிருப்பானே.

 

இன்று மட்டும் ஏனிப்படி செயலிழந்து போய் அமர்ந்து இருக்கிறான்? முதலில் என்ன பிரச்சனை என்றே அவனுக்குப் புரியவில்லை. எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. தவறு அவன் மேல் இருப்பதால் அப்படி உணர்கிறானோ என்ற முடிவுக்கு வந்தான்.

 

ஆகவே முதலில் திவ்யதர்ஷினியை அழைத்துச் சென்ற மருத்துவமனையைப் பற்றி விசாரித்து அங்கு அவனுக்குத் தெரிந்த மருத்துவரைப் பிடித்து அவளின் உடல்நிலையைப் பற்றி அறிந்து கொண்டான் மித்ரன்.

 

அவள் உயிருக்கு எந்த ஆபத்துமில்லை என்றும் உடல்நிலை ஓரளவுக்கு நன்றாக இருக்கிறது என்றும் அறிந்த பின்னரே அவனால் வீட்டிற்குச் செல்ல முடிந்தது. என்ன வீட்டுக்குச் செல்கையில் மணி நள்ளிரவை நெருங்கியிருந்தது.

 

அன்று அவன் பிறந்த நாள் என்பதும் மறந்து போயிருந்தது அவனுக்கு. அவன் வீட்டிற்குச் செல்லும் வரையிலுமே அவனுக்காக அவன் அன்னை காத்திருந்தார்.

 

இது எப்போதும் நடப்பது அல்லவா என எண்ணிய மித்ரன், “லேட் ஆகிடுச்சும்மா. இப்படி முழிச்சிருக்க வேண்டாம் என எத்தனை தடவை சொல்லறது உங்களுக்கு” எனச் சைகையில் சொல்லிக் காட்டினான் மித்ரன்.

 

கடந்த இரண்டு வருடங்களாக ஒருவாறு அவன் சைகை மொழியில் தன் அன்னையிடம் உரையாடக் கற்று கொண்டிருந்தான். என்ன அவனால் மனம் விட்டுப் பேசவோ, இல்லை, வெகுநேரம் அவருடன் செலவழிக்கவோ முடியாது.

 

மகனின் பிறந்தநாளை அவனுடன் கொண்டாட வேண்டும் என எண்ணி அவனுக்காகப் பார்த்துப் பார்த்துச் சமைத்து வைத்திருந்தார் மீனாட்சி. ஆனால் மித்ரனோ அவரிடம் பசிக்கவில்லை என்றும் அயர்வாக இருக்கிறது என்றும் சொல்லிவிட்டுத் தன் அறைக்குள் புகுந்து கொண்டான்.

 

அவனுக்காகச் சமைத்து வைத்த உணவு வகைகள் அனைத்தும் அப்படியே மேஜையின் மேலிருந்து கேலி செய்வதைப் போல் உணர்ந்தார். மீனாட்சியின் கண்கள் கலங்க ஆரம்பித்தன.

 

அப்படி என்ன பாவம் செய்துவிட்டோம் என்று அவருக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்கிறது என மருகினார். தவறே செய்யாமல் கணவனை விட்டுப் பல வருடங்கள் பிரிந்து வாழ்ந்தார். அதனால் அவருக்குக் கிடைக்க வேண்டிய பிள்ளைப் பாசம் கூட கிடைக்கவில்லை.

 

கணவர் உண்மையை அறிந்து சேர நினைக்கையில் அவர் இவ்வுலகை விட்டே மறைந்துவிட்டார்.

ஒருவேளை கடமைக்காக மித்ரன் தன்னை இங்கே வைத்திருக்கிறானோ என்று கூட அவருக்கு அடிக்கடி தோன்ற ஆரம்பித்துவிட்டது.

 

எவ்வளவு நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்தார் என்று அவருக்குத் தெரியவில்லை. கால்கள் விண்விண்னென்று வலிக்க ஆரம்பிக்கவும் மேஜையை சுத்தப்படுத்திவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

 

மகனுக்காகக் காத்திருப்பதால் அவரும் அன்று இரவு உணவையும் அருந்தவில்லை. மித்ரன் எதையும் கண்டுகொள்ளாமல் சென்றதும் அவர் மனம் வேதனையில் துடித்தது. அவரும் சாப்பிடாமல் போய் அப்படியே படுத்துக் கொண்டார்.

 

அறைக்குள் சென்ற மித்ரனுக்கோ திவ்யதர்ஷினி ஒருத்தி மட்டுமே சிந்தையை ஆக்ரமித்திருந்தாள். அவளை உடனே சென்று பார்க்க வேண்டும் என மனம் துடியாய்த் துடித்தது. ஆனால் இந்நேரம் பார்வையாளர்கள் நேரம் முடிந்திருக்கும் என்று புரிந்தது.

 

இந்த நட்ட நடுஇரவில் மருத்துவமனைக்குள் முதலில் யாரையும் விடமாட்டார்கள். அவன் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி மருத்துவமனைக்குச் செல்லலாம். ஆனால் அயர்ந்து போய் உறங்கிக் கொண்டிருப்பவளை அவன் தொல்லை செய்யவும் விரும்பவில்லை.

 

காலையில் முதல் வேலையாக அவளைச் சென்று பார்த்து, அப்படியே மன்னிப்பும் கேட்கலாம் எனத் திட்டமிட்டுக் கொண்டு அவன் படுக்கைக்குச் சென்றான். அப்போதும் அவனால் முழுமையாக உறங்க முடியவில்லை.

 

அவளின் மயங்கியிருந்த தோற்றமே அவன் மனக் கண்ணுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. அப்படியே அரைத் தூக்கத்தில் அன்றைய இரவைக் கழித்தான் மித்ரன். அவன் இருந்த மனஉளைச்சலில் அன்னையின் வேதனையைக் கவனிக்கத் தவறிவிட்டான்.

 

மித்ரனின் நிலை இப்படி இருக்க, ரதிப்ரியாவின் நிலையோ வேறு மாதிரி இருந்தது. மித்ரனின் அலுவலகத்தில் அனைத்து களேபரமும் முடிந்து அவன் திரும்பி வந்து தன்னிடம் பேசுவான் என வெகுநேரம் அவனுக்காகக் காத்திருந்தாள் ரதிப்ரியா.

 

அவனோ தன் உதவியாளரிடம் சொல்லி அவளை அங்கிருந்து கிளம்பச் சொல்லிவிட்டான். அதைக் கூட அவனால் நேரில் வந்து சொல்ல முடியாதா? அப்படி என்ன அந்தப் பெண் முக்கியமானவளாக போய்விட்டாள்?

 

அவள் மயங்கித்தானே சரிந்தாள்? செத்துப் போய்விடவில்லையே என ரதிப்ரியாவின் உள்ளம் உலைக்களமாய்க் கொதித்தது. பின்னே அவள் எத்தனை சந்தோஷமாகத் திட்டமிட்டு கேக்கை வாங்கிக் கொண்டும் அலங்கரித்துக் கொண்டும் மித்ரனைச் சந்திக்க அலுவலகத்திற்கு வந்திருந்தாள்.

 

கேக்கை வெட்டி முடித்துவிட்டு அவனுடன் அப்படியே வெளியில் சென்று பெரிய நட்சத்திர விடுதியில் இரவு உணவையும் முடிக்கலாமெனத் திட்டமிட்டிருந்தாள். ஆனால் அனைத்தையும் எங்கிருந்தோ வந்த ஒருத்தி நாசம் செய்துவிட்டாள்.

 

அவளுக்கு இதே வேலையாகப் போய்விட்டது. அன்று கடற்கரையிலும் அவர்களின் தனிமையைக் கெடுத்துவிட்டாள். இன்றும் அதையே செய்திருக்கிறாள். அவளுக்கு மட்டும் சக்தி இருந்திருந்தால் அவளை இந்த உலகத்திலிருந்து காணாமல் போகச் செய்திருப்பாள். அவளுக்கு அந்தக் கொடுப்பினை இல்லாததால் கோவமும் அழுகையும் ஒருங்கே போட்டிப் போட்டுக் கொண்டு வந்தன.

 

வீட்டினுள் நுழைந்ததுமே கையிலிருந்த கைப்பையையும், அலைபேசியையும் மூலைக்கு ஒன்றாய்த் தூக்கி எறிந்துவிட்டு, கதறியவாறே மேலிருந்த தன் அறையை நோக்கி ஓடினாள் ரதிப்ரியா.

 

வரவேற்பறையில் அமர்ந்து தன் மடிக்கணினியில் வேலையில் ஆழந்திருந்த அவள் அண்ணன் கிஷோருக்கு, ‘யார் தன் தங்கையை இப்படி அழ வைத்தார்கள்?’ என ஆத்திரம் மூண்டது.

 

தங்கையைப் பின் தொடர்ந்து அவளது அறைக்குச் செல்ல, அவளோ படுக்கையில் விழுந்து குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தாள். அவள் தலையை ஆதூரமாகத் தடவிவிட்டவன், “என்னடா ஆச்சு? ஏம்மா இப்படி அழற?” எனப் பாசமாகக் கேட்டான்.

 

அவர்கள் பெற்றோர்கள் ஒரு மாதம் சுற்றுலாப் பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார்கள். ஆகவே அவர்கள் இருவரைத் தவிர வீட்டில் வேறு யாருமில்லை. சிறுவயதிலிருந்தே ரதிப்ரியா என்றால் வீட்டில் உள்ள அனைவருக்கும் வெகு செல்லம்.

 

அவள் கேட்டதனைத்தும் அவளுக்குக் கிடைத்தது. அவள் சொல்லும் பேச்சுக்கு மறுவார்த்தை யாரும் சொல்வதில்லை. அப்படி இளவரசி போல் இருப்பவளை யாராவது அழ வைத்தால் அவர்களை வெட்டிக் கொல்லும் வெறி அவனுக்கு வருமா வராதா?

 

அண்ணன் கேட்டது தான் தாமதம் ஓவென்று கதறி அழுதாள். பின்னர் அழுகையோடு அவளுக்கு மித்ரனைப் பிடித்து இருப்பதாகச் சொன்னாள். ஆனால் மித்ரனுக்கு அவள் மேல் எந்த பிடிப்பும், ஈர்ப்பும் இருப்பதாகத் தெரியவில்லை என்றாள்.

 

பிறகு அன்று கடற்கரையில் நடந்ததையும், இன்று அவன் அலுவலகத்தில் நடந்ததையும் சொன்னாள். “அவளை நினைச்சா எனக்குப் பத்திட்டு வருது அண்ணா” என மூக்கை உறிஞ்சியவாறே மீண்டும் தேம்பினாள்.

 

“கவலப்படாதே ரதி. எனக்கு மித்ரனை நல்லாத் தெரியும். இது மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் அவன் மசியமாட்டான். அதுவும் அந்தப் பெண் வேண்டுமென்றே மித்ரனைத் தொடர்ந்து வர்ற மாதிரி தெரியுது. மித்ரன் அவ்வளவு சீக்கிரம் யாரையும் நம்ப மாட்டான்.

 

ஏனோ சின்ன வயசிலிருந்தே அப்படி ஒரு குணம். அதை வச்சு இந்தப் பொண்ணு மேல் நம்பிக்கை வராத மாதிரி செஞ்சுடலாம். அத்தோட இன்னொரு தரம் அந்தப் பொண்ணு உன் வழியில வந்தா சொல்லு, அவளை உன் வழியிலிருந்து தூக்கிப் போட்டுடறேன்” என்றான்.

 

அழுவதை நிறுத்திவிட்டு, ‘நிஜமா?’ என்பதை போல் கண்களில் மின்னலுடன் அண்ணனை ஏறிட்டுப் பார்க்க, “கண்டிப்பா.. அவ உன் வழியில அடுத்த தடவைக் குறுக்கிட்டாச் சொல்லு. அவளை உண்டு இல்லைன்னு பண்ணிடறேன். நம்புடா” எனத் தங்கைக்கு வாக்குறுதி தந்தான்.

 

அவள் கண்களைத் துடைத்துக் கொண்டு தெளிந்த மனதுடன் கிஷோரைப் பார்க்க, “சொல்லு ரதி, நான் வேணா மித்ரன்கிட்ட உன்னைப் பத்தி பேசட்டுமா?” எனக் கேட்டான்.

 

“அவரு ஒத்துக்கலைன்னா?’ என அவள் கேள்வியாக இழுத்து நிறுத்த, “ஒத்துக்க வைப்போம். உன் அழகுக்கும் அறிவுக்கும் அந்தஸ்துக்கும் அவனுக்கு உன்னை விட உசந்தவங்க வேற யாரு கிடைப்பாங்க சொல்லு? நேரம் வரும் போது நானே அவன்கிட்ட பேசறேன்” எனத் தங்கைக்கு உறுதிமொழி தந்தான்.

 

அதைக் கேட்டதும் அவள் மனம் பட்டாம்பூச்சியாய்ச் சிறகடிக்க ஆரம்பித்தது. அவள் அண்ணன் எதையும் நடத்திக் காட்டிவிடுவான் என்ற நம்பிக்கையும் துளிர்த்தது. மெல்ல அண்ணனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

error: Alert: Content selection is disabled!!