சதிராடும் சித்திரமே – 3

அத்தியாயம் – 3

 

திவ்யதர்ஷினிக்குக் கார் கதவைத் திறந்துவிட்ட சந்தோஷ், “என் ஃப்ரெண்ட்டோட அப்பா போலீஸ்ல பெரிய பதவில இருக்கார் தர்ஷி. அவர்கிட்ட பேசிப் பார்க்கலாம்” என அவளுக்குத் தைரியமளித்தான்.

 

தொடர்ந்து, “கவலைப்படாத… கோவிலுக்கு நாளைக்குக் கூட்டிட்டு வரேன்” எனச் சொல்ல, “தாங்க்ஸ் சந்தோஷ்” என்றவள், “ஆமா, நான் கோவிலுக்கு வந்தது உனக்கு எப்படித் தெரிஞ்சது?” எனக் காரை நகர்த்தியவனை ஊடுருவி நோக்கினாள்.

 

“என்ன தர்ஷி.. நீ ஃபோன்ல சொன்னியே.. மறந்துட்டியா?” என அசடு வழிய, “நான் சொல்லவேயில்லை. என்கிட்டே என்ன காரியம் ஆகணும் சொல்லு?” என அவனைத் துருவி விசாரித்தாள்.

 

“தெரிஞ்சிடுமே…” என முணுமுணுத்தவன், “அது… நான் உன்கிட்டே கொஞ்சம் தனியாப் பேசணும்” என அவளைக் கூர்ந்து நோக்கினான். அவனின் பார்வையே அவன் ஏதோ இடக்கு மடக்காகச் செய்திருக்கிறான் என்று சொல்லாமல் சொல்லியது.

 

சந்தோஷ் அவளின் நண்பன். சிறுவயதிலிருந்தே ஒரே பள்ளியில் படித்தனர். ஆனால் சந்தோஷ் அவளை விட மூன்று வயது பெரியவன். திவ்யதர்ஷினியின் தந்தை கார் ஓட்டுநராகப் பணிபுரிந்தவர். அவர்கள் இருவரும் அருகருகில் வசித்ததால் அவளைப் பள்ளியில் கொண்டு விடும் பொழுதும் அழைக்கும் பொழுதும் சந்தோஷுக்கும் சேர்த்து இலவச பயணம் கிட்டியது.

 

அதன் பின்னர் இருவரும் படித்து முடித்து வேலையில் சேர்ந்தனர். இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் சந்தோஷ் வீடு வாங்குகையில் அவளையும் வாங்குமாறு ஊக்கமளித்து, உந்தினான். ஆகவே இருவரும் அருகருகே வீடு வாங்கினர்.

 

சந்தோஷ் மூன்று படுக்கையறை கொண்ட வீட்டை வாங்க, திவ்யதர்ஷினி இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டை வாங்கினாள். சந்தோஷின் பெற்றோருக்குத் திவ்யதர்ஷினியை மிகவும் பிடிக்கும். தங்கள் மகன் சந்தோஷ் உருப்படுவதற்குக் காரணமே அவள் தான் என்று நம்புகிறவர்கள்.

 

பின்னே அவள் ஒன்பதாவது படிக்கையில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் சந்தோஷூக்குக் கணிதம் சொல்லிக் கொடுத்தால் அப்படி எண்ணாமல் என்ன செய்வார்கள்?

 

அதுவும் அவன் நல்ல மதிப்பெண்கள் பெற்று பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கு அவளே காரணம் என்று முற்றிலும் நம்பி, அவளைக் கொண்டாடினர். விட்டால் சிலை வைத்து அவளுக்குக் கோவில் கட்டிக் கும்பிட்டு, அதே சந்தோஷைக் கிடாவாக்கி அந்தக் கோவிலுக்கு நேர்ந்தும் விட்டுவிடுவார்கள்.

 

அந்தக் காரணத்தாலேயே அவளை வைத்தே சந்தோஷ் அனைத்துக் காரியங்களையும் சாதித்துக் கொள்வான் என்பது வேறு விஷயம்.

 

“என்ன செஞ்சு வச்சிருக்க?” எனக் கேட்க, “அது வந்து தர்ஷி… கல்யாணம் பண்ணச் சொல்லி வீட்ல அம்மா-அப்பா நச்சரிச்சிட்டு இருக்காங்கன்னு உனக்குத் தெரியும் இல்ல” என முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு சொன்னான்.

 

“ஜாலியா கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே?” என அவனுக்கு ஆலோசனை வழங்க, “சொல்ல வர்றதை முழுசாக் கேளு” என அவளை அதட்டிவிட்டு,

 

“நேத்து நைட்டு ஒரு பொண்ணு போட்டோவைக் காட்டி, பொண்ணோட ஜாதகம் நல்லாப் பொருந்தி இருக்கு… நல்ல குடும்பம் அது இதுன்னு சொல்லி என் முடிவைச் சொல்லச் சொன்னாங்க…” என நிறுத்தினான்.

 

“பொண்ணு எப்படி இருந்தா? என்னை விட அழகா இருந்தாளா?” என அவனை வம்புக்கு இழுத்தாள் திவ்யதர்ஷினி.

 

“விளையாடாத தர்ஷினி. உனக்கு என் லட்சியங்கள் எல்லாம் தெரியுமே. இன்னும் ரெண்டு வருஷத்துக்குக் கல்யாணமே வேண்டாம்னு இருக்கேன். இப்படி எனக்கு அழுத்தம் கொடுத்தா என்ன பண்ணறது?” என்றான்.

 

சந்தோஷ் ஒரு கணினி மென்பொருள் நிறுவனத்தில் வேலையில் இருந்தாலும் அவனுக்குத் தனித்து நின்று ஒரு மென்பொருள் நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்ற ஆசை சில காலங்களாக இருக்கின்றது.

 

பொருளாதார ரீதியாக ஓரளவுக்கு ஒரு நிலைக்கு வந்த பின்னர் நிறுவனம் தொடங்குவதைப் பற்றிச் சிந்திக்கலாம் எனக் காத்திருந்தான். அதன்படியே படித்து வேலையில் சேர்ந்து இத்தனை வருடங்கள் வேலை செய்து கணிசமாக ஒரு தொகையைச் சேர்த்து வைத்திருக்கிறான். மிச்சத்துக்கு கடனுதவி பெற்றுக் கொள்ளலாம்.

 

தாய்-தந்தையருக்கு எனச் சொந்தமாக ஒரு வீடும் வாங்கிக் கொடுத்துவிட்டான் அதற்காகக் கட்ட வேண்டிய லோன் பணத்தையும் சில வருடங்களுக்கு எனச் சேர்த்தும் வைத்திருந்தான்.

 

சரி இப்போதாவது தொடங்கலாம் என அவன் எண்ணிக் கொண்டிருக்கையில் அனைத்துப் பெற்றோரைப் போலவே அவனைத் திருமணம் செய்யுமாறு வீட்டில் வற்புறுத்திக் கொண்டிருக்கின்றனர்.

 

“எனக்கு டெல்லில ஒரு ஆறு மாசப் பயிற்சி கோர்ஸ் ஒண்ணு செய்யணும். அங்க போனா நிறையப் பெரிய முதலீட்டாளர்கள் தொடர்பு கிடைக்கும். அவங்ககிட்டே பேசி அப்படியே தொழில்ல முதலீடு செய்யக் கேட்கலாம். இப்பப் போய்க் கல்யாணம் அது இதுன்னா எப்படி?” என அவன் தன் பக்க நியாயத்தை எடுத்துச் சொன்னான்.

 

“இப்போ என்ன? அத்தை-மாமாகிட்ட நான் வந்து கொஞ்சம் பேசி சம்மதிக்க வைக்கணும். இதெல்லாம் ரொம்ப ஈஸி” என திவ்யதர்ஷினி அவனிடம் இதெல்லாம் ஒரு விஷயமா என்பதைப் போல் சொல்ல,

 

“ஆமா, கொஞ்சமா இல்ல, நிறையப் பேசணும்” என வார்த்தைகளில் பொடி வைத்துச் சொன்னான். அதை அவள் சற்றும் நுகரவில்லை.

 

“அதெல்லாம் நமக்கு அல்வா சாப்பிடுற மாதிரி. கவலைப்படாத சந்தோஷ். யாமிருக்க பயமேன்?” என வலது கையை உயர்த்தி அவனுக்கு அபயமளித்தாள்.

 

“கண்டிப்பா? அப்புறம் பேச்சு மாறக் கூடாது” என அவன் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே அவர்கள் வசிக்குமிடம் வந்துவிட்டது.

 

“வீட்டுக்குப் போய்க் குளிச்சுட்டு டிரெஸ் மட்டும் மாத்திட்டு ஃபிரெஷ்ஷா வரேன். அப்புறம் பாரு நம்ம திறமையை” என இறங்கிச் சிட்டாகப் பறந்துவிட்டாள் திவ்யதர்ஷினி.

 

ஏதோ வேலையாக வெளியில் சென்றிருந்த அவள் தம்பி, சசிதரன் இன்னும் வீட்டுக்கு வந்திருக்கவில்லை. அவள் தந்தை முன்னறையில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார்.

 

மகளைக் கண்டதும் முகம் மலர்ந்தவர், நனைந்திருந்த உடையைக் கவனித்து, “என்னம்மா இது சின்னப்பிள்ளையாட்டம் தண்ணில விளையாடிட்டு வந்தியா?” எனச் செல்லமாகச் சலித்துக் கொண்டார்.

 

“ஆமாப்பா, இருங்க குளிச்சிட்டு வரேன். அத்தை-மாமாகிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்” என நேராகக் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

 

திவ்யதர்ஷினியின் தந்தை முரளிதரன், பல வருடங்களாகக் கார் ஓட்டுனராக இருந்தார். படிப்படியாக முன்னேறிச் சொந்தமாக மூன்று கார்களை வாங்கும் அளவுக்கு வளர்ந்தார். தனித்து மகளையும், மகனையும் வளர்த்தார்.

 

சென்ற வருடம் வெளியூர் பயணம் சென்று விட்டு வருகையில் நடந்த ஒரு சிறு விபத்தில் வலது கால் மற்றும் இடது கை முறிந்து அவரால் இன்னுமே சரியாக நடக்க முடியவில்லை.

 

அதன்பிறகு அவரால் வாடகைக்கு விட்டிருந்த காரையும் சரியாகப் பார்த்துக் கொள்ள இயலவில்லை திவ்யதர்ஷினி வேலைக்குச் செல்ல அரம்பித்ததில் தினசரி செலவுக்கு என்று திண்டாட வேண்டியிருக்கவில்லை.

 

ஆகவே மகளின் வற்புறுத்துதலில் அதையெல்லாம் விற்று இந்த வீடு வாங்குகையில் அதில் வந்த பணத்தை இந்த வீட்டுக்கு என்று கட்டிவிட்டனர். சசிதரன் மூன்றாம் ஆண்டு பொறியியல் படிப்புப் படித்துக் கொண்டிருக்கிறான்.

 

அவசரம் அவசரமாகக் குளித்து முடித்தவள் நேராக சந்தோஷின் வீட்டிற்குச் சென்றாள். அவளைக் கண்டதும், முகம் மலர்ந்த சந்தோஷின் அன்னை, சரஸ்வதி, “வாம்மா… சந்தோஷ் எல்லா விஷயத்தையும் சொன்னான். எங்க மனசுல இருந்தது அப்படியே நடக்குது. எங்களுக்கு ரொம்பச் சந்தோஷம்” என அவளை வரவேற்றார்.

 

‘நம்ம பேசுறதுக்கு வாய்ப்பில்லாம அவனே பேசிட்டானோ?’ என மனதுக்குள் எண்ணிக் கொண்டவள், “அது அத்தை… நல்ல விஷயம்னு” என அதற்கு மேல் என்ன சொல்வது என தெரியாமல் நிறுத்தினாள்.

 

“நல்ல விஷயம்னு சொல்ற? அப்புறம் ஏன் கல்யாணத்தை இன்னும் ரெண்டு வருஷத்துக்குத் தள்ளி போடணும்னு சொல்ற? நாங்க என்ன உன் தம்பிக்கு உதவ வேண்டாம்னா சொல்லப் போறோம். என்னவோ போ…” என சரஸ்வதி பேசிக் கொண்டே போக,

 

‘என்னது அவளுக்குக் கல்யாணமா?’ சந்தோஷின் திருமணத்தைப் பற்றிப் பேச வந்தவளிடம் அவள் திருமணத்தைப் பற்றி ஏன் பேசுகிறார்கள்? திரும்பி சந்தோஷைக் கேள்வியுடன் நோக்கினாள்.

 

அவனோ இரண்டு கைகளையும் கோர்த்து சுட்டுவிரல் இரண்டையும் சுற்றிக் கொண்டு அவளைப் பார்க்கவே இல்லை.

 

“நீயும் சந்தோஷூம் விரும்பறது எங்களுக்கு ரொம்பச் சந்தோஷம். எனக்குக் கையும் ஓடலை… காலும் ஓடலை. சரி உன் இஷ்டப்படி கல்யாணத்தை வச்சுக்கலாம். ரெண்டு வருஷம் காத்திருக்கோம்” என சரஸ்வதி சொல்ல, திவ்யதர்ஷினி அதிர்ந்து போய் சந்தோஷை மீண்டும் திரும்பிப் பார்த்தாள்.

 

அவன் இப்போது மன்றாடுவதைப் போல் அவளைப் பார்த்தான். ‘டேய் கடங்காரா… இதைத் தான் நிறையப் பேசணும் நிறையப் பேசணும்னு சொன்னியா? உனக்கு இருக்குடா மவனே. இன்னைக்கு நீ செத்த’ என சந்தோஷூக்குப் பார்வையாலேயே மறைமுக கொலை மிரட்டல் விட்டுவிட்டு சரஸ்வதியைப் பார்த்தாள்.

 

“ஆமாங்கத்தை… சசியோட படிப்பு முடிஞ்சதும் ஒரு நல்ல வேலைல அவன் சேர்ந்துட்டா கொஞ்சம் நிம்மதியா இருப்பேன். நீங்க புரிஞ்சிக்குவீங்க எனத் தெரியும்” என அவர்களை எப்படியோ சமாளித்து, சரஸ்வதியின் இரு கைகளையும் பற்றித் தன் கைக்குள் வைத்துக் கொண்டு அவள் சொல்லவும் அவள் தந்த கதகதப்பில் அவர் உருகியே போய்விட்டார்.

 

சற்றுநேரம் அங்கேயே இருந்து பேசிக் கொண்டு இருந்தவள் அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினாள். அதுவரையில் அமைதியாக இருந்த சந்தோஷப் பார்த்து மொட்டை மாடிக்கு வா என பார்வையாலேயே சொல்லிவிட்டுச் சென்றாள்.

 

“என்ன நடக்குது?” மேலே வந்தவனை நோக்கி திவ்யதர்ஷினி முறைக்க, “பிளீஸ் பிளீஸ் தர்ஷி.. உன் பேரைச் சொன்னதும் சும்மா அதிருது இல்ல… பாரு வீட்ல இனி என்னைத் தொந்திரவு செய்ய மாட்டாங்க. நான் பெரிய பிசினஸ் மேக்னேட் ஆகறப்போ நீ பண்ணற உதவிக்கு உன்னை நல்லா கவனிச்சுக்கிறேன்” என அவள் கைகளைப் பற்றிக் கொண்டு மன்றாட,

 

“இருந்தாலும் அவங்ககிட்டே பொய் சொல்லறது தப்பில்லையா?” எனக் கலக்கத்துடன் வினவினாள்.

 

“பொய்மையும் வாய்மையிடத்த…” என அவன் திருவள்ளுவரை இழுக்க, “அடி வாங்காத” என அவன் கைகளை உதறிவிட்டு கை பிடிச் சுவர் அருகே போய் நின்று இருட்டை வெறித்துப் பார்த்தாள்.

 

“பிளீஸ் தர்ஷி… நான் அப்புறம் அம்மா-அப்பாகிட்டே பேசி புரிய வச்சுக்கிறேன்” என அவன் சொல்ல, சற்றுநேரம் அமைதியாக நின்று கொண்டிருந்தாள்.

 

“நான் பிரபலமானதும் என் வளர்ச்சிக்குக் காரணம் நீன்னு பேட்டி எல்லாம் கொடுக்கிறேன். பிளீஸ்” என்றான்.

 

“எப்போ ட்ரைனிங் போகணும்?” எனக் கேட்க, “இன்னும் ரெண்டு மாசம் இருக்கு. வேலையையும் விடணும்” என அவன் திட்டத்தைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தான்.

 

அவன் சொல்வதைப் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தவள், அவள் தம்பி வருவதை அங்கிருந்து கவனித்தாள். “ஆக மொத்தம், என்னைச் சிக்கல்ல சிக்க வச்சிருக்கன்னு மட்டும் தெரியுது. எனக்கு இப்போ டயர்ட்டா இருக்கு சந்தோஷ். சசி வந்துட்டான். நம்ம நாளைக்குப் பேசலாம்.” எனக் கீழே இறங்கிச் சென்றாள்.

 

இனி இவள் பார்த்துக் கொள்வாள் என்ற நம்பிக்கையுடன் சந்தோஷூம் விசில் அடித்தவாறே தன் வீடு நோக்கிச் சென்றான்.

 

error: Alert: Content selection is disabled!!