சிறகு 03

அத்தியாயம் 03 

நாட்கள் வேகமாக சென்றிருக்க, அந்த வருடத்தின் இறுதியில் இருந்தனர். இன்னும் மூன்று மாதங்களில் பதினாறு வயதை தொட இருந்தாள் காயத்ரி. 

மார்கழி மாதம் ஆரம்பிக்க சில நாட்களே இருந்தாலும், மாலை ஐந்து மணியை கடந்து விட்டால் குளிர் வாட்ட ஆரம்பித்து விடும். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஸ்ரீதர் தன் வயலில் வரம்பை வெட்டி மடை மாற்றிக் கொண்டிருந்தான்.

மண்வெட்டி கொண்டு வரம்பு மண்ணை கொத்தி, பிரித்து விட, தேங்கி நின்ற செம்புனல் சலசலத்துக் கொண்டு பாய, அந்த ஓசைக்கு மத்தியிலும் தூரத்தில் கேட்ட கொலுசு மணியின் மெல்லிசை ஸ்ரீதரின் காதில் துள்ளியமாக கேட்டது. 

அது யாரு என்பது புரிய, இதழில் மெல்லிய புன்னகை. அவன் பரிசு பணத்தில் வாங்கிய புதிய கொலுசின் சிணுங்கள் தான் அது. எத்தனை கொலுசு மாற்றினாலும் அவள் நடையின் நளினம் மாறாதே எனவே தான் கண்டு கொண்டான் அவன் அக்கா மகளை.

தோளில் கிடந்த துண்டால் முகத்தை துடைத்துக் கொண்டு திரும்பி பார்க்க, அவன் காணும் முன் அருகில் சென்று பயமுறுத்த நினைத்து வேகமாக வந்த காயத்ரி அப்படியே நின்று “போங்க மாமா.. பயம் காட்டலாம்னு வந்தேன்.. அதுக்குள்ள திரும்பிட்டிங்க…” என்று முகத்தை சுருக்கி அப்பாவியாக சொல்ல 

“நான் பயப்படலனு யார் சொன்னா.. அதுதான் இருட்டும்போதே மோகினி மாதிரி வந்து நிக்கிறியே.. உன்ன பாத்து பயந்தா போதாதா.. தனியா வேற பயமுறுத்தனுமா…” என்று சொல்ல

“மாமா!…” காலை நிலத்தில் உதைத்து சிணுங்கினாள். 

“சரி உண்மைய சொல்லல விடு.. எதுக்கு இப்போ தனியா வந்த?…” 

“மாமா நீங்க தானே டாக்டர் ஓட்ட கத்து தர்றேன்னு சொன்னீங்க.. ஃபோன் பண்ணுவீங்கன்னு பாத்தா பண்ணல.. அம்மா ஃபோன்ல இருந்து நானே எடுத்தேன் லைன் கிடைக்கல.. அதான் நேர்லயே வந்துட்டேன்…” என்று நீட்டி முடக்கி சொல்ல 

“ஒரு மணி நேரம் முன்னாடியே வந்து இருக்கலாம்ல.. இருட்டப் போகுது இதுக்கு மேல முடியாது.. வா வீட்ட போகலாம், நாளைக்கு கத்துக் கொடுக்கிறேன்…” என்று சொல்லி காயத்ரியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்திருந்தான். 

இரவு சாப்பிட்டுவிட்டு தூங்கியவனுக்கு நல்லிரவுக்கு மேல் உடல் தகிக்க ஆரம்பித்தது. கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது காய்ச்சலின் அறிகுறியாக. 

அடுத்த நாள் கமலமும் பத்மினியும் கமலத்தின் அண்ணன் மாமனார் இறந்து 16ஆம் நாள் காரியம் என்பதால், அறையில் படுத்திருக்கும் ஸ்ரீதரின் நிலையை கூட தெரிந்து கொள்ளாமல், காயத்ரியையும் விட்டுவிட்டு அவசரமாக கிளம்பிச் சென்று விட்டனர். 

அவர்கள் சென்று திரும்பி வர மாலை ஆகிவிடும். அத்தனை தூரம் அந்த இறப்பு வீடு. எப்படியும் ஸ்ரீதர் போக வேண்டாம் என்று சொல்வான் என்பதால் அவனிடம் சொல்லிக் கொள்ளாமல், 

காயத்ரியிடம் மட்டும் “மாமா கிட்ட விஷயத்த சொல்லிடு.. நாங்க வார வரைக்கும் எங்கேயும் போகாம வீட்டுலேயே இருக்க சொல்லு.. பெருசா எதுவும் சமைக்காம சாதாரணமா ஒரு காயும் பொரியலும் பண்ணி சாப்பிடுங்க.. மாமாவுக்காக ஸ்பெஷலா செய்றேனு அடுப்புல நிக்காத…” என்று பத்மினி மகளுக்கு அறிவுரைகள் வழங்கிவிட்டு சென்றார். 

தாயும் பாட்டியும் சென்ற பின்னர், ஏற்கனவே செய்து வைத்திருந்த காலை உணவான இட்லி சாம்பாரை சாப்பிட்டவள், “என்ன மாமா இவ்வளவு நேரமாகியும் வெளிய வரல.. அம்மாவும் பாட்டியும் வெளிய போனது தெரியுமோ! அதனால அறையிலேயே இருக்காரா!…” என்று யோசித்தவள் 

அவனுக்காக காஃபி போட்டுக்கொண்டு, ஒற்றை கையில் அதை எடுத்துக்கொண்டு, மற்றைய கையால் இரண்டு விரல்களால் பாவாடையை தூக்கிப் பிடித்துக் கொண்டு, மாடிப்படி ஏறி சிவாவின் அறைக்கு வந்தாள். 

கதவு திறந்திருந்ததால் ஒரு முறை கூப்பிட்டு விட்டு, உள்ளே வந்து பார்க்க, போர்வையை கழுத்து வரை இழுத்து போர்த்திக் கொண்டு, கண்களை இறுக்கமூடி தூங்கிக் கொண்டிருந்தான் ஸ்ரீதர்.

அப்படித்தான் காயத்ரிக்கு தோன்றியது. ஆனால் காய்ச்சலின் மயக்கத்தில் இருந்தான் அவன். “மாமா காஃபி…” என்றவாறு அங்கு இருந்த மேஜையில் கப்பை வைத்தவள் 

அவனை திரும்பிப் பார்த்து “என்ன மாமா.. எந்திரிச்சா டக்டர் ஓட்ட கத்து தர சொல்லி தொல்ல பண்ணுவேன்னு இழுத்து போத்திக்கிட்டு தூங்குற மாதிரி நடிக்கிறீங்களா?…” என்று கேட்டுக் கொண்டே அவனை நெருங்கி பெட்ஷீட்டை இழுக்க, 

அடுத்நொடியே ஸ்ரீதரின் உடலின் அனலை காயத்ரியால் உணர்ந்து கொள்ள முடிந்தது. 

“ஐயோ மாமா! என்னாச்சு?…” என்று அவன் நெற்றி கழுத்தில் தொட்டுப் பார்த்தவளுக்கு, காய்ச்சல் கொதிநிலையில் இருப்பது புரிந்தது. 

“ஐயோ அம்மா பாட்டி யாருமே வீட்ல இல்லையே.. என்ன பண்ணுவேன்.. மாமா!.. மாமா கண்ண திறங்க…” என்று அவன் கன்னம் இரண்டிலும் மாறி மாறி தட்ட 

அவனிடம் “ம்..ம்!…” என்ற மெல்லிய முனகல் மட்டுமே 

உடனே ஓடிச் சென்று, ஒரு பாத்திரத்தில் தண்ணீரும், சிறு துணியும் எடுத்து வந்தவள், முதலில் அவனது டவளை எடுத்து, அதை நனைத்து, அவன் முகம், கழுத்து, பனியன் ஊடாக தெரிந்த நெஞ்சு பகுதி, கை, கால்களை துடைத்து விட்டவள், சிறிய துணியை நீரில் நனைத்து நெற்றியில் பத்து போல் வைத்து விட்டாள். 

பின் அவளுக்கு ஞாபகம் இருந்தவரை காய்ச்சலுக்கான கசாயம் செய்து எடுத்தவள், மிகவும் சிரமப்பட்டு ஸ்ரீதரின் தலையை தூக்கி தன் நெஞ்சோடு சாய்த்துக் கொண்டு, சிறுக சிறுக அவனுக்கு குடிக்க கொடுத்தாள். 

ஸ்ரீதரும் மயக்கத்திலேயே மொத்தமாக குடித்து முடிக்க, அதன் பின் ஒன்றுக்கு இரண்டாக தலையணையை வைத்து, அவன் தலையை சற்று உயர்த்தி வைத்து படுக்க வைத்தவள், நெற்றியில் இருந்த துணி காய காய மீண்டும் மீண்டும் நனைத்து அவன் நெற்றியில் வைத்துக்கொண்டு, அவன் அருகிலேயே கட்டிலில் சாய்ந்து அமர்ந்து இருந்தாள். 

நேரம் மதியத்தை தொட இருந்த சமயம், ஸ்ரீதரின் உடல் சூடு சற்று குறைந்து இருந்தது. 

எனவே எழுந்து சென்று அவனுக்காக அரிசி கஞ்சி வைத்தவள், கசாயம் கொடுத்தது போன்று மீண்டும் அவனை தான் நெஞ்சில் சாய்த்து கொண்டு, அந்த கஞ்சியை குடிக்க வைத்தாள். 

இந்த முறை ஸ்ரீதருக்கு சற்று சுற்றம் உணரக்கூடியதாக இருந்தது. இருந்தும் தான் காயத்ரி மீது சாய்ந்து இருப்பது, அவள் அன்பாக கரிசனையாக கஞ்சி ஊட்டுவது என்று எல்லாவற்றையும் உணர்ந்தாலும், முழுதாக சுயத்திற்கு வர முடியவில்லை. 

கண்ணை சிரமப்பட்டு திறந்து திறந்து மூடினான். அதே சமயம் அவள் கொடுத்த கஞ்சியையும் குடித்து முடித்தான். 

அவன் கண் திறந்து மூடுவதை கவனித்தவள் “ஒன்னும் இல்ல மாமா.. கொஞ்ச நேரத்துல சரியாகிடும்.. சிரமப்பட்டு முழிச்சுக்காதீங்க.. அம்மாவும் பாட்டியும் வந்ததும் ஜுரம் குறையலனா ஹாஸ்பிட்டல் போகலாம்…” என்று சொன்னவள் அவனை படுக்க வைத்து விட்டு 

உடல் சூட்டை பரிசோதித்தவள் “காலையில இருந்ததுக்கு இப்போ நல்லா குறைஞ்சிருச்சு மாமா…” என்று சொல்லிவிட்டு 

தானும் சென்று மாமனுக்காக காய்ச்சிய கஞ்சியை குடித்துவிட்டு, வந்து கட்டிலில் அமர்ந்து அவன் நெற்றி சீலையை சரியாக வைத்து விட்டு, அவன் அருகிலேயே அமர்ந்து இருந்தாள். 

அவள் எதிர்பார்த்தது போல் சிவாவின் உடல்நிலை சீராகவில்லை. காய்ச்சலின் வீரிய மீண்டும் அதிகரிக்க, உடலின் குளிர தாங்க முடியாமல் போர்வையை தேடியவனின் கையில் கிடைத்தது காயத்ரியின் மென் கரம் தான். 

பாவையை தொட்டதும் அவன் உடல் கதகதப்பை உணர, அவள் கையை இழுத்து கழுத்துக்கு அடியில் வைத்துக் கொண்டான். 

காயத்ரிக்கு எதுவும் புரியவில்லை “மாமா!…” என்று அழைக்க 

“ம்ம்…!” என்றவன் அவளை தன்னோடு மேலும் இழுத்துக் கொண்டான். 

ஸ்ரீதர் இழுத்ததில் அவன் மீது காயத்ரி சாய்ந்து விட, அவளை அப்படியே வளைத்து, அணைத்து, தன்னோடு இறுக்கிக் கொண்டான். 

“மாமா என்ன பண்ணுது?…” என்று அவன் நலனில் கவலை கொண்டு கேட்டவளுக்கு, தன்னை அவன் இறுக்கி அணைத்து, மார்பின் மீது தலையை வைத்து படுத்திருப்பது பெரிதாக தெரியவில்லை. 

இதமாக மலரவளின் தேகத்தில் கதகதப்பை வாங்கிக் கொண்டு, சுகமாக துயில் கொண்டான் ஆடவன். 

“மாமா காய்ச்சல் அதிகமா இருக்கு.. விடுங்க நான் போய் கசாயம் எடுத்துட்டு வாரேன்…” என்று அவனை விலக்கி விட முயன்றால், முடியவில்லை. மெல்லிடையாளால் ஆறடி திடகாத்திரமான ஆண் மகனை அசைக்க முடியவில்லை. 

சிங்கத்தின் வாயில் சிக்கிய சிறு பறவையாக ஆடாமல் அசையாமல் அப்படியே கிடந்தவள் எப்போது என்று தெரியாமல் தூங்கிப் போனாள்.

மூன்று மணி நேரங்கள் கடந்த நிலையில் முதலில் கண்விழித்தது ஸ்ரீதர் தான். காய்ச்சல் நன்றாக குறைந்து இருந்தது. 

ஆனால் ஏதோ வேறு விதமான ஒரு மாற்றத்தை அவனால் உணர முடிந்தது. என்னவென்று தன் பார்வையை சற்று தளர்த்தி பார்க்க, தூக்கத்தில் உருண்டு புரண்டு கட்டிக் கொண்டு கிடந்ததில், இப்போது காயத்ரி அவன் நெஞ்சில் தலையை வைத்து படுத்திருந்தாள். 

என்னவென்று விவரிக்க முடியாத ஒரு மாற்றம் அவனுக்குள். இதுவரை இருவரும் இப்படி ஒரு நிலையில் இருந்ததே இல்லை. 

மயக்கத்தில் கூட அவன் உடலும், மனமும் கண்ட சுகம், இதமும் அவனால் உணரக்கூடியதாக இருந்தது. 

இப்போது கூட காய்ச்சலினால் உண்டான சோர்வையும் தாண்டி அவனுடல் ஏதோ ஒரு குறுகுறுப்பை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றது. 

அவன் கைகளில் ஒன்று அவள் தோளிலும், மற்றைய ஒன்று அவள் இடையிலும் இருந்தது. தன் கை சிறகுக்குள் சிறு குஞ்சாக சுகமாக தூங்கும் அவளை பார்க்க பார்க்க வேறு விதமாக தெரிந்தாள்.

இது வரை காயத்ரியை பார்க்காத பரிமாணம் அது. இதுவரை உடல்நிலை சரியில்லை என்றால் தாயை தேடி இருக்கின்றான், தமக்கையையும் எதிர்பார்த்து இருக்கின்றான், அவர்கள் இருவருக்கும் அடுத்து அவன் ஏக்கத்திற்கு உரியவள் தாரமாக தானே இருக்க வேண்டும்.

வயது இருபத்தைந்தை தொட போகின்றது, இதுவரை அப்படி ஒருத்தியை பற்றி சிந்தனை ஓடியது இல்லை. ஆனால் தன் வாழ்வில் மிக முக்கிய மூன்று பெண்களில், தன் வாழ்வின் முதன்மையான ஒருத்தியாக தன் வீட்டில் உள்ளவளை அவன் நினைத்துப் பார்க்கவில்லை.

இப்போது அந்த இடத்தை தானாக அவன் மனது காயத்ரிக்கு கொடுத்தது.

தன் மனம் சொன்ன செய்தியை உள்வாங்கி, அவளது அழகு வதனத்தை பார்த்தவனுக்கு உள்ளம் திடுக்கிட்டது. நிதர்சனம் நெற்றி பொட்டில் அடித்தது, அவள் யாரு? அவளின் வயது என்ன? அவன் அக்கா மகள் அவளை போய் எப்படி?.

மாபெரும் குற்றம் செய்தவனை போல் அவன் மனசாட்சி சாட்டையால் அடிக்க, நெற்றி சுருக்கி கண்ணை இறுக மூடி திறந்தவன், அவள் மீது இருந்த கைகளை எடுத்துவிட்டு “..காயூ..காயத்ரி!…” என்று அழைக்க 

“ம்ம்!…” என்று சற்று அசைந்து, அவன் நெஞ்சிலேயே முகத்தை மேலும் புதைத்துக் கொண்டவள் நன்கு தூங்க, 

இது சரி பட்டு வராது என்பதை உணர்ந்தவன், அவனாக அவளை விலக்கி படுக்கையில் படுக்க வைத்தவன், வேகமாக எழுந்து அறையை விட்டு வெளியேறி மொட்டைமாடிக்கு வந்தான். 

சிறிது நேரம் அங்கேயே நடை பயின்றவனுக்கு அவன் மனதிடம் மூளையோ எதையும் நினையாதே என்று எடுத்துரைக்க, அதை கேட்டுக் கொண்டவன், 

‘காயத்ரி எதுக்கு என்ன பாத்துக்கிட்டா.. அம்மா, அக்கா எங்க போனாங்க?…’ என்று தோன்ற, கையில் எடுத்து வந்திருந்த ஃபோனில் இருந்து தமக்கையின் எண்ணிற்கு அழைத்து கேட்க, 

பத்மினியும் தாங்கள் இருவரும் எங்கு இருக்கின்றனர் என்பதை கூற, 

“வீட்டுல நான் ஒருத்தன் ஆம்பளனு இருக்குற நினப்பு இருக்கா இல்லையா?.. ஒரு வார்த்த சொல்லிட்டு போகணும்னு தோணல இல்ல.. உங்க இஷ்டத்துக்கு கிளம்பி போயிருக்கீங்க…” என்று ஃபோனிலேயே திட்ட ஆரம்பித்து விட்டான்.

அவர்கள் இருந்திருந்தால் இன்று அந்த சற்று நேர சலனம் அவன் மனதில் வந்திருக்காது என்ற கோபத்தை காட்ட, 

“டேய் இருடா.. எதுக்கு கோபபடுற?.. இதோ ஒரு மணி நேரத்துல வந்துடுவோம்…” என்று பத்மினி சமாதானம் சொல்லி ஃபோனை வைக்க, 

அம்மாவும் அக்காவும் வரும் வரை ஸ்ரீதர் கீழே இறங்கவில்லை.

வீட்டிற்கு வந்த பத்மினி ஹாலில் நின்று “ஸ்ரீ!.. காயத்ரி!…” என்று அழைக்கவும் தான் படி இறங்கி வந்தான்.

அவனை பார்த்ததுமே தெரிந்தது, மிகவும் சோர்வாக காணப்பட்டான். 

“எனடா என்னாச்சு?…” என்று பத்மினி கேட்டது தான் தாமதம், 

“என்னாச்சா.. இரவு இருந்து கடும் ஜுரம்.. தாங்கிக்க முடியாம மயங்கிட்டேன்.. காலையில நேரத்துக்கு எந்திரிக்கிறவன் எந்திரிக்காம படுத்து இருக்கானே என்ன ஏதுன்னு பார்ப்போம்னு இல்ல.. எங்க எந்திரிச்சா போக வேணாம்னு சொல்லிடுவேன்னு என்கிட்ட கூட சொல்லாம அவசர அவசரமா கிளம்பி போற அளவுக்கு அவங்க ஒன்னும் நமக்கு நெருங்கின சொந்தம் இல்லையே.. 

…நல்லது கெட்டதுக்கு வந்து நின்னதும் இல்லையே.. நீங்க போகலன்னா ஏன் வரலன்னு கேட்டு சண்ட போடுற ஆட்களும் அவங்க கிடையாது.. நீங்க பாட்டுக்கு கிளம்பி போயிட்டீங்க.. அதுவும் ஒரு சின்ன பொண்ண தனியா விட்டுட்டு போறோமேனு கொஞ்சம் கூட யோசனை இல்லல்ல.. 

 …அவ மட்டும் தனியா ஒத்தையிலிருந்து என்ன பாத்துகிட்டா.. என்னால கண்ண கூட திறக்க முடியல, என் கூடவே தான் இருந்தா.. அவளுக்கு இப்ப காய்ச்சல் தொத்திடுச்சானு கூட தெரியல.. ஏதோ கடவுள் புண்ணியத்துல ஜுரம் குறஞ்சு நான் எந்திரிச்சிட்டேன்.. நான் எந்திரிக்கவே இல்லனா அவ மட்டும் தனியா என்ன பண்ணி இருப்பா.. கொஞ்சம் கூட யோசிக்க மாட்டீங்களா?…” என்று முடியவில்லை என்றாலும் முயன்று குரலை உசத்தி கோபத்தில் கத்தி இருந்தான். 

இன்று தான் கமலமும் பத்மினியும் முதன் முறையாக ஸ்ரீதரின் இத்தகைய கோபத்தை பார்க்கின்றனர்.

கமலம் “என்னப்பா சொல்ற காய்ச்சலா?.. ஐயோ சத்தியமா தெரியாதுப்பா.. உன்கிட்ட சொன்னா போக வேணாம்னு தான் சொல்லுவ.. ஆனா அண்ணன் வேற ரொம்ப அழுத்தி சொன்னாங்க.. போகாமலும் இருக்க முடியாது ஸ்ரீ.. நாள பின்ன நம்ம வீட்டுல ஒரு விசேஷம்னா என் அண்ணன் குடும்பம் தானே வந்து நிக்கணும்…” என்று கமலம் சொல்ல 

“எப்படி.. அப்பாவோட இறப்புக்கு வந்து நின்னுட்டு, 16வது நாள் காரியத்துக்கு கூட நிக்காம கிளம்பி போனாங்களே அது மாதிரியா?.. நீங்க போனது தப்புன்னு கூட நான் சொல்லல.. போகும்போது ஒரு வார்த்த என்கிட்ட சொல்லிட்டு போகணும்னு ஏன் தோணல?.. என்ன தேடி வந்திருந்தா நான் என்ன நிலைமையில இருந்தேன் என்றது உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்.. நீங்கள் பாட்டுக்கு காயத்ரிய தனியா விட்டுட்டு போயிருக்கீங்க.. 

…அவ எனக்கு உடம்பு சரியில்லனு வெளியில யார்கிட்டயாவது போய் உதவி கேட்டுருந்தாலோ.. இல்ல வேற ஏதாவது பண்ணலாம்னு எங்கேயாவது போய் இருந்தாலோ..அந்த நேரத்துல அவளுக்கு ஏதாவது ஆகியிருந்தா என்னால கூட போய் காப்பாத்திருக்க முடியாது.. நான் சொல்றது உங்களுக்கு புரியுதா.. சரி நானாவே இருந்தாலும் எப்படி நீங்க அவள தனியா விட்டுட்டு போகலாம்?…” என்று கேட்க 

அவன் அருகில் வந்த பத்மினி “என்னடா என்னனென்னவோ சொல்ற…” என்று சொல்லி அவன் நெற்றி, கன்னத்தில் கை வைத்து பார்த்தவர் 

“காய்ச்சல்ல ஏதேதோ ஒளராத ஸ்ரீ.. உன்கூட அவள விட்டுட்டு போறதுல என்ன.. நீ முதல்ல வா ஹாஸ்பிடல் போயிட்டு வரலாம்…” என்று உடல்நிலை சரியில்லாததால் தான் இப்படி கோபத்தில் இருக்கின்றான் என சமாதானம் செய்தார். 

கமலம் “சரி காயத்ரி எங்க?…” என்று கேட்க 

இத்தனை நாட்களில் அவன் அறையில் எத்தனையோ நேரங்கள் இருந்திருக்கின்றாள், இவன் படிப்பு சொல்லிக் கொடுத்திருக்கின்றான். அப்படியே தூங்கியும் இருக்கின்றாள். 

ஆனால் இன்று அவள் தன் அறையில் தான் இருக்கின்றாள் என்பதை கூறுவதற்கு ஏதோ ஒன்று உறுத்தியது. அதை கண்டு கொள்ளாதவன் போல் சற்று தாழ்ந்த குரலில் “என் ரூம்ல தான் படுத்திருக்கா…” என்று சொல்ல 

“உடம்பு முடியாத உன்ன பாத்துக்காம படுத்து தூங்குகிறாளா அவ…” என்று மகளுக்கு திட்டிக்கொண்டே காயத்ரியை ஸ்ரீதரின் அறையில் சென்று பார்க்க 

அவள் இன்னும் தூக்கத்தில் தான் இருந்தாள். அவளை தட்டி எழுப்ப “க்ஹூம்!…” சிணுங்கி கொண்டு எழுந்தவள், முதலில் எங்கு இருக்கின்றோம், என்ன என்று புரியாமல் தாயைப் பார்த்து பேந்த பேந்த முழித்துக் கொண்டிருந்தாள்.

“ஏன்டி மாமாக்கு உடம்பு முடியல.. நீ அவன பாத்துக்கொள்றத விட்டுட்டு.. அவன் கட்டில்ல சொகுசா படுத்திருக்க…” என்று கடிந்து கொள்ள 

பத்மினியின் பின்னே கமலத்துடன் வந்த ஸ்ரீதருக்கு எங்கே அவன்தான் அவளை இழுத்து தூங்க வைத்ததை சொல்லி விடுவாளோ என்று சற்று கலவரமாக இருந்தது. 

ஆனால் காயத்ரி “காலையில இருந்து மதியம் வரைக்கும் மாமாவ நல்லா தான் பாத்துக்கிட்டேன்.. அதுக்கு பிறகு மாமா தான் தூங்க வச்சுருச்சு ம்மா…” என்று மேலோட்டமாக சொல்ல 

பத்மினி தம்பி மகள் களைத்து போயிருப்பாள் என்று தட்டி கொடுத்து தூங்க வைத்திருக்கிறலாம் என்று எண்ணி, 

“சரி சரி.. எந்திரிச்சு போய் முகம் கழுவிட்டு வா.. நான் மாமாவ ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போயிட்டு வாரேன்…” என்று சொல்லி காயத்ரியை அனுப்பியவள் 

ஸ்ரீதரிடம் திரும்பி “துணிய மாத்திட்டு வா தம்பி டாக்டர போய் பாத்துட்டு வந்துடலாம்…” என்று சொல்ல 

காய்ச்சலின் வீரியத்தில் அவன் காயத்ரியிடம் நடந்து கொண்டதை அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், மேலோட்டமாக சொன்னதில் ஆசுவாசமாக உணர்ந்தாலும், 

இவர்கள் இன்று இருந்திருந்தால் அவன் மனதில் புதிதாக முளைவிட்டு தோன்றிய அந்த சலனத்திற்கு வாய்ப்பே இல்லை அல்லவா அந்த கோபம் சற்றும் குறைய மாட்டேன் என்றது. 

“காலையில ஒருத்தன் இருக்கானா செத்தானானு பாக்கணும்னு தோணல.. இப்போ நான் சொன்னதுக்கு அப்புறம் ஹாஸ்பிடல் போகலாம் டாக்டர பாக்கலாம்னு சும்மா சீன் போடாதீங்க.. நான் எங்கேயும் வரல.. முதல்ல வெளியே போங்க…” என்று காட்டமாக கத்தி விட்டான். 

உண்மையாகவே கமலமும் பத்மினியும் அவனது கோபத்தில் பயந்துதான் போனார்கள். 

கமலம் மகளுக்கு கண்ணை காட்ட, பத்மினியும் எதுவும் பேசாமல் அறையை விட்டு வெளியேறிவிட, 

அறைக் கதவை அறைந்து சாத்தியவன், கட்டிலில் போய் அமர்ந்து கொண்டு, தலையை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டான். 

திரும்பத் திரும்ப காயத்ரியுடன் அவன் இருந்த கோலமும், அவளின் அன்பான கரிசனையும், அவள் உடல் தந்த கத கதப்பும் நினைவுக்கு வந்து அவனை கொல்லாமல் கொல்ல, கோபமாகத்தான் வந்தது. ஸ்ரீதரின் அந்த கோபம் அன்றோடு முடிந்து விடவில்லை.

error: Alert: Content selection is disabled!!