முருகா சரணம்! கந்தா சரணம்! கடம்ப வனவாசா சரணம்!
‘மாதந்தோறும் வரக்கூடிய கார்த்திகை நட்சத்திரங்களில் குறிப்பாக இந்த ஆடி மாதம் வரக்கூடிய கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு மிக மிக சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. வீட்டில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்திற்கும் சீக்கிரமே தீர்வு கிடைக்க, முருகப்பெருமானை அன்று வழிபாடு செய்ய வேண்டும். குறிப்பாக திருமணம் ஆகாதவர்கள் நல்ல வரன் அமைய வேண்டுமென்றும், குழந்தை வரம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டுமென்றும், புதியதாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் நல்ல வேலை கிடைக்க வேண்டுமென்றும், வேலையில் இருப்பவர்கள், இப்போது இருக்கின்ற வேலையை விட இன்னும் நல்ல வேலை கிடைக்க வேண்டும், உயர் பதவிகளும் சம்பள உயர்வு கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த ஆடிக்கிருத்திகை நன்னாளில் முருகப்பெருமானை நினைத்து வழிபடுவோம்!’
காலையில் பக்கத்து வீட்டு தொலைக்காட்சியின் வழியே விழுந்த கிருத்திகை செய்திகளை கேட்டவண்ணம் எழுந்தாள் செம்பருத்தி.
அவளையும் அறியாமல் பாலமுருகனின் கொவ்வைச் செவ்வாய் குமிழ்சிரிப்பு மனதில் நினைவிற்கு வந்தது.
“முருகா அப்பாவும் நானும் நல்லாருக்கணும். எனக்கு நல்லபடியா கல்யாணத்தை முடிச்சு வச்சு அப்பாவின் கவலையைத் தீர். அத்தான்….” அந்த கடைசி வார்த்தையில் திடுக்கிட்டு திகைத்து விழித்தாள்.
முருகா உன்னையே நம்பி இருந்த என்னை இப்படி ஏமாத்திட்டியே. நீ இருக்கியா இல்லையா? இதுவரை உன்னை வணங்கினது , உன்னையே நம்பினது எல்லாம் வீணா? கண்கள் கலங்க காலியாய் இருந்த தந்தையின் படுக்கையையும், மூடிக் கிடந்த அவளது அத்தான் ரமேஷின் படுக்கை அறையையும் வெறித்தாள்.
எத்தனை கோவில், எத்தனை பிரார்த்தனைகள், எத்தனை வழிபாடுகள் அவளும் அவளது தந்தையும் சேர்ந்து செய்தது. அவை அனைத்துக்கும் ஏதாவது பலன் இருந்ததா? அவள் அளவில் இல்லை என்று அடித்துச் சொல்வாள்.
ஆனால் எந்த முயற்சியும் செய்யாது, மரம் வைக்காமல், தண்ணீர் ஊற்றாமல், வேண்டும் நேரத்தில் களைகளை பிடிங்கி காப்பாற்றி உரம் இடாமல், காய்க்கத் தொடங்கும் நேரத்தில் வந்து நம்மைத் தள்ளி விட்டு நம் மேல் ஏறி நின்று கனிகளைப் பறித்துக் கொண்டு இனிமேல் இந்த மரம் என்னுடையது என்று கழுத்தைப் பிடித்துத் தள்ளும் சுயநலவாதிகளை வேடிக்கை பார்க்கும் தெய்வம் என்ன தெய்வம்?
அட, போனதை வந்ததை நினைத்துக் கொண்டே பொழுதை வீணடித்து விட்டோமே. இன்று வக்கீல் அவரது வீட்டிற்கு கேஸ் விஷயமாகப் பேசவேண்டும் என்று வரச் சொன்னாரே.
அவளை சீக்கிரம் கிளம்பச் சொல்லி நினைவு படுத்தும் அப்பாவும் இப்போது இல்லை. அம்மாவோ அவளை விட்டு சென்று சில வருடங்கள் ஆகிவிட்டிருந்தது. அடித்துப் பிடித்து எழுத்து தண்ணீரைப் பிடித்துக் கொண்டு குளியலறைக்குள் சென்றாள்.
வேக வேகமாய் குளியலை முடித்துவிட்டு கையில் கிடைத்த சுடிதார் ஒன்றினைப் போட்டுக் கொண்டு, பாராசூட் எண்ணையை உள்ளங்கையில் ஊற்றி, தலையில் அழுத்தி தேய்த்தாள் . முடியை வழித்து சீவிவிட்டு, உடைக்குப் பொருத்தமான காப்பர் ஸல்பேட் நிற ரவுண்டு ஸ்டிக்கர் பொட்டினை ஒட்டிக் கொண்டாள் . உடைக்கு மேட்சாக பொட்டு வைத்தால் தனது பட்டிக்காட்டுத்தனம் மறைந்துவிடுமோ? பட்டிக்காட்டுத்தனம் மட்டுமா? உருவத்திலேயே எத்தனையோ குறைகள் இருக்கிறதே.
இன்னும் கொஞ்சம் நிறம் இருந்திருக்கலாம் அப்படி இருந்திருந்தால் ஊரார் மாநிறம் என்று சொல்லி இருப்பார்களோ? வட்ட முகம் சற்று அளவுக்கு மீறியே கன்னம் கதுப்பெல்லாம் சதை வைத்து தாம்பாளத் தட்டினைப் போல பரந்து இருந்தது. சில மாதங்களாக பருக்கள் வேறு அதிகமாக வந்து கன்னங்களில் தடம் பதித்துச் செல்கிறது. இவற்றை எல்லாம் கவனிக்க அவளுக்கு நேரமில்லை. ஆனாலும் இவை எல்லாம் அணிவகுத்து ஒரே சமயத்தில் வந்ததற்கு மாதவிலக்கு தள்ளிப் போவதுதான் காரணம் என்கிறார் அவள் ஆலோசனை பெற்று வந்த பெண் மருத்துவர்.
“செம்பருத்தி, வயதுக்கு மீறி வெயிட் போட்டிருக்க, இருபத்தி ரெண்டு வயசு பொண்ணு மாதிரியா இருக்க? டபிள் சின் எல்லாம் வச்சு உடல்வாகு முப்பது வயசைக் காட்டுது. உனக்கு பிசிஓஎஸ் இருக்குது அதனாலதான் பீரியட்ஸ் தாறு மாறா வருது. இது எல்லாத்துக்கும் உன்னோட உடல் எடைதான் முக்கியமான காரணம். உடனடியா நீ எடை குறையணும் . இல்லைன்னா உடல் ஆரோக்கியத்துக்கு ரொம்ப பாதிப்பு ஏற்படும்”
மருத்துவர் மாரியம்மா அவளது வீட்டின் அருகிலேயே வசிப்பவர். சிறு வயதிலிருந்து அவளுக்குப் பழக்கம். அதனால் டாக்டர் என்றெல்லாம் அழைக்க மாட்டாள். அக்கா தான்.
“பீரியட்ஸ் வந்து நாலு மாசமாச்சுக்கா. எனக்கே பயமா இருக்கு. முடி வேற பயங்கரமா கொட்டுது. வீடு முழுசும் என் முடிதான். தலை குளிக்கவே பயம்மா இருக்குக்கா. இப்படியே போணுச்சுன்னா சீக்கிரம் எலி வாலாட்டம் ஆயிரும். இதுக்கு ஏதாவது மருந்து தந்து குணப்படுத்துளேன்”
“ஹார்மோன் மாத்திரைகள் எல்லாம் பயங்கரமான பக்க விளைவை ஏற்படுத்தும். உன் வயசுக்கு அதெல்லாம் இல்லாம முறையான வாழ்க்கையை கடை பிடிச்சாலே எல்லாம் ஓடிடும். முதல்ல அந்த ஸ்வீட் கடை வேலையை விட்டு வேற வேலைக்குப் போ. அங்க சேர்ந்ததில் இருந்துதான் உனக்கு எடை அதிகமாச்சு”
அவர் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. லாலா ஸ்வீட் கடையில்தான் அவள் வேலை பார்க்கிறாள். பள்ளி சென்று வந்த போதெல்லாம் இந்த எடை பிரச்சனை இல்லை. வயல் வெளியில் தோட்டத்துக்கு மத்தியில் இருந்த ஓட்டுவீட்டில் குடியிருந்தனர் செம்பருத்தியும் அவளது குடும்பத்தினரும். பள்ளி அவளது வீட்டிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தள்ளி இருந்தது. அரசாங்கத்தின் இலவச சைக்கிளின் உதவியால் தினமும் பள்ளிக்கு சென்று வந்தாள். அப்போதெல்லாம் உடல் சிக்கென இருக்கும்.
வீட்டுக்கு வந்ததும் வேலைகள் இருக்கும். அதைத் தவிர கணக்கு, அறிவியல் என்று வீட்டுப்பாடங்கள் வேறு அணிவகுத்து நிற்கும். அதனை மறுநாள் செய்து வராவிட்டால் அவ்வளவுதான் டீச்சர் வகுப்புக்கு வெளியே நிற்க வைத்துவிடுவார். ஆறாம், ஏழாம் வகுப்பு பிள்ளைகளுக்கு முன்னர் மானக்கேடு. குனிக் குறுகி நிற்க வேண்டும். மற்ற சில பிள்ளைகளைப் போல, வீட்டுப்பாடமும் செய்யாமல் வந்துவிட்டு, திமிர் பார்வை பார்க்கும் வித்தை என்னவோ அவளுக்கு வரவே இல்லை.
விழுந்து விழுந்து வீட்டுப்பாடம் செய்துவிட்டு பின்னர் அவளும் அவளது அப்பாவும் குளத்து மீனில் குழம்பு வைத்தோ , வீட்டை சுற்றி பாத்தி போட்டு வளர்க்கும் அரைக்கீரையை கடைந்தோ சமைத்து உண்டுவிட்டு படுத்து விடுவார்கள். காலை இருக்கவே இருக்கிறது பழைய சோறும் பச்சை மிளகாயும். அப்பா அய்யம்மா கடையில் இட்டிலியோ, ஆப்பமோ, இடியாப்பமோ வாங்கி வருவார். அதனை அப்படியே மதிய உணவுக்கு எடுத்து சென்று விடுவாள். முடியாதபோது சத்துணவு. இப்படி சைக்கிளில் பயணம், வீட்டு வேலை என்று ஓரிடத்தில் நிற்காமல் சுற்றிக் கொண்டிருந்த வரை அவளுக்கு உடலும் நன்றாகவே இருந்தது. அன்னையின் இழப்பைப் பற்றி சிந்திக்க விடாமல் அவளுக்கும் அவளது தந்தைக்கும் வேலை இருந்தது.