Skip to content
“யாருன்னு சொன்ன?”
“வக்கீல் நம்பிராஜன், சுகுமாரன்னு ஒருத்தர் அப்பறம் காவியா மேடம்”
அவனது முகம் உணர்ச்சிகளைத் துடைத்தது போல மாறியது.
அடுத்து என்ன சொல்லப் போகிறானோ சிலவினாடிகள் என்றெண்ணி நின்று கொண்டிருந்தவளைப் பார்த்து “இங்க என்ன சினிமாவா காமிக்கிறாங்க. போயி இந்த லிஸ்டை பாலா கிட்ட கொடுத்துட்டு எனக்கு மத்தியானம் லஞ்ச்க்கு ப்ரூட் சாலட், டீ கொடுத்து அனுப்பச் சொல்லு”
“இந்த லெட்டர்ஸ்… அடுக்கி வைக்கணுமே?”
“அதெல்லாம் நானே பாத்துக்குறேன். டெஸ்க்ல வச்சுட்டுப் போ. வெளில ஒருத்தன் வெயிட் பண்ணுவான். அவனை வர சொல்லிட்டுப் போ. நீ ஒரு மணி நேரம் கழிச்சு வந்தால் போதும்”
விட்டால் போதும் என்று அந்த இடத்தை விட்டு ஓடினாள் செம்பருத்தி.
‘வேலைக்குப் போகும்போது யாரிடம், அவர் பெயர் என்ன என்ற விவரங்களை எல்லாம் கேட்டுக் கொண்டுதானே வந்திருக்க வேண்டும். சே என்ன ஒரு மடச்சி நான். விவரங்கள் தெரிந்திருந்தால் கூகிள் செய்து இவர்களைப் பற்றித் தெரிந்து கொண்டு வந்திருக்கலாமே? ஆனால் இந்த விவரங்களை முன் கூட்டியே தெரிந்துக் கொள்ளக் கூடாது என்றே என்னிடம் இருந்து மறைத்திருப்பார்களோ?’ அவளது மனதில் சந்தேகம் தோன்றி வலுப்பெற்றது.
வேகம் வேகமாய் அவனது அறையிலிருந்து ஓடினாள்.
முதலில் சமயலறைக்கு செல்ல வேண்டும். சேச்சியிடம் அவனது மதிய மெனுவைத் தந்துவிட்டு, மாடியில் இருந்த சிறு ஸ்டாப் ரூமில் காத்திருந்த பாலாவிடம் லிஸ்டைத் தர வேண்டும்.
சமையல் அறையில் சேச்சி, “ஏம்மா, இதை இன்டெர்காமில் சொல்லியிருக்கலாமே? ஏன் வியர்க்க விறுவிறுக்க ஓடி வந்த?” என்றார்.
‘சொல்லிருக்கலாமே’ என்று அப்போதுதான் தோன்றியது செம்பருத்திக்கு.
“சரி வியர்க்க விறுவிறுக்க வந்திருக்க, சாலட் தரேன் சாப்பிடு”
செம்பருத்திக்கும் அப்போதுதான் பசி உரைத்தது.
வெள்ளரிக்காய், லெட்டூஸ் என்று காலையில் அவள் பேரைக் கண்டுபிடித்திருந்த முட்டைகோஸ் போன்றதொரு காய், கேரட், இனிப்பு மக்காச்சோளம் எல்லாவற்றையும் கலந்து, அரை எலுமிச்சம்பழம் பிழிந்து, அதன் மேல் தாராளமாக தயிரும் சேர்த்துத் தந்திருந்தார். சாப்பிட சூப்பராக இருந்தது செம்பருத்திக்கு.
“இந்த வீட்டில் இப்படித்தான் ஓடிக்கிட்டே இருக்கணும். பணக்கார வீட்டில் நம்ம சாப்பாட்டை நாமதான் பாத்துக்கணும். நீ சாப்பிடன்னு தனியா எல்லாம் நேரம் தர மாட்டாங்க. கிடைச்ச நேரத்தில் வயித்தைக் காயப்போடாம இந்த மாதிரி கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட்டுக்கோ. ராத்திரி வேலை முடிஞ்சதும் எல்லாரும் கூடி அமர்ந்து சாப்பிட இங்க ஸ்டாப் கிட்சன் இருக்கு. வா காணிச்சுத் தரேன். சண்டே ஆனால் இங்க எல்லாரும் வந்துடுவோம். சூப்பரா இருக்கும்”
“சண்டேதான் எல்லாருக்கும் லீவா சேச்சி”
“அப்படி சொல்ல முடியாது. அய்யா வெளிய போகணும்னா அன்னைக்கு ட்ரைவர் வேலை செய்ய வேண்டியிருக்கும். ஆனால் நான் காலைல சர்ச்சுக்கு சர்வீஸ்கு போறதால முன்னெல்லாம் அன்னைக்கு ஆப் எடுத்துக்குவேன். கோபன் மண்டே வரமாட்டான்”
“அப்ப சமையல்”
“இங்க சின்ன வீடு, அதனால லீவு எடுக்க முடியாது. அதனால காளியம்மாவை பாத்துக்கச் சொல்லிட்டு சர்ச்சுக்குப் போயிட்டு வந்துடுவேன். இந்த லீலாம்மா இல்லாம சர்வீஸ் தொடங்காதுன்னு பாதர் சொல்லிருக்காரு”
என்றபடி செம்பருத்தியை சமையலறைக்கு உள்ளடங்கி இருந்த அந்த சிறு அறைக்கு அழைத்துச் சென்றார். நல்ல விசாலமான அந்த அறையில் தாராளமாக வெளிச்சம் வரும்படி கண்ணாடி ஜன்னல்கள். அலமாரிகளில் பீங்கான் தட்டுகள், கப்புகள், நடுநாயகமாக ஒரு பத்து பன்னிரண்டு நபர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து உணவு உண்ண வசதியாகப் போடப்பட்டிருந்த ஒரு டைனிங் டேபிளும் சேர்களும். அறையின் மூலையில் பெரிய பிரிட்ஜ்.
“சாலட், பிரூட் ஜூஸ், பிரட் சாண்ட்விச் எல்லாம் இங்க நேரம் கிடைக்கும்போது செஞ்சு அடுக்கி வச்சிருப்போம். அதோ அந்த கூடைல பழங்கள் இருக்கும். யாருக்காவது பசிச்சா தயங்க வேண்டியதில்லை. இங்கேருந்து எடுத்து சாப்பிட்டுட்டுப் போய்டலாம். நீயோ, கோபனோ, பாலாவோ சில சமயம் அய்யா கூட வெளிய போக வேண்டியது வரும். சாப்பாட்டு நேரம் தாண்டி காத்திருக்க வேண்டி இருக்கும். அதனால எப்ப கிளம்பினாலும் இதை எடுத்து பேக் பண்ணிட்டு கிளம்பு” என்று விளக்கினார்.
இன்டெர்க்காம் பற்றி அவர் சொன்னது நினைவிற்கு வர,
“இன்டெர்க்காம் தொடர்பு கொள்ள நம்பர் பத்தி யாருகிட்ட கேக்குறது சேச்சி?”
“பாலா இதெல்லாம் சொல்லலையா? அவன்கிட்ட பிரிண்ட் அவுட் எடுத்து வாங்கி வச்சுக்கோ. எனக்கெல்லாம் அடிக்கடி மறந்துடுது”
“நான் கூட பாலாவைப் பாக்கணும். சார் மூணு டின்னர் பத்தித் தகவல் சொல்லச் சொன்னார்?”
“மூணு டின்னரா? இந்த வாரமா?”
“ஆமாம் சேச்சி. டின்னர் சூட் எல்லாம் ரெடி பண்ணனும்ல?” என்றாள் அறையில் நடந்த உரையாடலை மனதில் வைத்துக் கொண்டு.
“அது சரிதான். எந்த மாதிரி நிகழ்ச்சிக்கு டின்னர்? வீட்டு டின்னரா இல்லை வெளியாவான்னு தெரிஞ்சாத்தானே அதுக்கு ஏத்த மாதிரி சூட்டை ரெடி பண்ணனும்”
வீட்டில் சாப்பிடக் கூட டின்னர் சூட்டா? திகைப்பாக இருந்தது செம்பருத்திக்கு.
“பெரிய விருந்தாளியா இருக்காதுன்னு நினைக்கிறேன். பெரியவங்கன்னா பரிமாற ஆளுங்களை வேற ஹோட்டலில் இருந்து வர சொல்லணும்”
“நம்ம எல்லாரும் இருக்கோமே சேச்சி”
error: Alert: Content selection is disabled!!