Skip to content
“ராஜ குடும்பத்து விருந்தினர் யாராவது வந்தா அவங்களுக்கு எப்படி பரிமாறுறதுன்னு ஒரு முறை இருக்குல்ல மோளே. தப்பா செஞ்சுறக் கூடாதே, இங்க வா… “ என்று அழைத்து ஒரு வாஷிங் மெஷின் மாதிரி ஒன்றின் கதவை மேலிருந்து திறந்தார். அதில் வரிசையாக பாத்திரங்கள். மேலடுக்கில் கப்புகள் மற்றும் கிளாசுகள், கிண்ணங்கள், கீழடுக்கில் தட்டுகள், கரண்டிகள் வைக்க சின்ன அறைகள் நிறைந்த சல்லடை டப்பா ஒன்று. ஓ! இதுதான் பாத்திரம் கழுவும் மெஷினா?
அதில் இருந்து பெருசும் சிறுசுமான ஸ்பூன்கள் சிலவற்றை எடுத்து செம்பருத்தியின் முன்பு போட்டார்.
“இதெல்லாம் என்ன வகை ஸ்பூன்னு சொல்லு பாக்கலாம்?”
ஒவ்வொன்றும் ஒவ்வொரு சைஸ், ஒவ்வொரு வடிவம். இதெல்லாம் எதற்கு? சுவீட் கடையில் அளவு பார்க்கப் பயன்படும் பதங்களை நினைவில் கொண்டு வந்து
“இது சாம்பார் கரண்டி, இது தேக்கரண்டி, இது மேஜைக்கரண்டி மத்தது…. தெரியல சேச்சி” தோல்வியை ஒத்துக் கொண்டாள்.
அவளுக்குத் தெரிந்த கரண்டிகளை எல்லாம் தனியே எடுத்து வைத்துவிட்டு சேச்சி ஆரம்பித்தார் “கொஞ்சம் பெருசா இருக்கு பாரு, இதுதான் பரிமாறுற கரண்டி, இது சர்க்கரை போடுற சுகர் ஸ்பூன், இது டீஸ்பூன், இது காப்பி ஸ்பூன், இது சோடா ஸ்பூன், இது சூப் குடிக்கிறதுக்கான ஸ்பூன், இது டெஸெர்ட் ஸ்பூன், இது ஐஸ்க்ரீம் ஸ்பூன்”
சாப்பிடுற ஸ்பூனில் இத்தனை வகையா என்று திகைத்து போய்விட்டாள்.
“அரை வேக்காடா காலைல இவங்க வேக வச்சு சாப்பிடுற முட்டைக்கு எக் ஸ்பூன் வேணும்”
“மொத்தம் எத்தனை வகை ஸ்பூன் இருக்கு சேச்சி?”
“45 வகைன்னு யாரோ சொன்னாங்க. இது தவிர ‘கத்தி’ கூட வெண்ணை தடவ, மீன் வெட்டி சாப்பிட இப்படி ஏகப்பட்டது இருக்கு. அவங்க சாப்பிட சாப்பிட உணவுக்குத் தகுந்த மாதிரி இதை எல்லாம் நைசா டின்னர் டேபிளில் வைக்கணும்”
மலைப்பாய் இருந்தது செம்பருத்திக்கு. தனது கை விரல்களைப் பெருமையாகப் பார்த்துக் கொண்டாள். ‘சபாஷ் கண்ணுங்களா 45 வகை ஸ்பூன்கள் செய்யுற வேலையை நீங்க அஞ்சு பேரும் சேந்து செஞ்சு கலக்குறீங்க’
“செம்பருத்தி, நான் போய் தம்பிக்கு பழரசம் ரெடி பண்றேன். நீ நம்ம வீட்டுல விருந்தா இருந்தா மெனு ஒண்ணு ரெடி பண்ணிடு”
மெனுவா? அவளா? ஒரு ஸ்பூனில் இத்தனை வகைகள் இருக்கும் என்றே இப்பொழுதுதான் அவளின் அறிவுக்கண் திறந்து வைக்கப் பட்டது அதற்குள் விருந்து மெனுவைத் தயாரிக்கச் சொல்வது என்ன ஒரு நம்பியார்த்தனம்?
கவலையாய் அமர்ந்தேவிட்டாள்.
‘செம்பருத்தி!!!!!….’
“யாரது”
‘உன் தலை’
“தலையா”
‘தலையே தான். உன் தலைக்குள்ள இருந்து மூளை பேசுறேன்’
“நீ இருக்கியா?”
‘செக்கு மாடாட்டம் ஒரே மாதிரி ஓடிட்டு இந்தியா.. எனக்கு வேலையே இல்லை. அதனால கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்துட்டு இருந்தேன்’
“சரிதான் எப்ப முழிச்ச?”
“வெளியூருக்கு ஒரு சாகசப் பயணமா கிளம்புனியே. அப்பெலிருந்து கொஞ்ச கொஞ்சமா முழுச்சுக்கிட்டிருந்தேன். இப்ப காலைல இருந்து பட்டினி போட்டுக் கொன்னியே அப்ப முழுசா முழிப்பு தட்டிருச்சு’
“நீ முழிச்சிருந்துமா இவ்வளவு திட்டு வாங்கினேன்”
‘நீ ஒரு உண்மையைப் புரிஞ்சுக்கணும் செம்பருத்தி. நான் ஒன்னும் கடவுள் கிடையாது எல்லா விஷயத்தையும் தெரிஞ்சிருக்க.
என்னைப் பொருத்தவரை நீதான் என்னோட பயிற்சியாளர். நீ இதைக் கத்துக்கணும்னு முழு மனசோட உழைச்சா நான் அதுக்குத் தேவையான உதவிகளைச் செய்வேன்.
ஆனால் இத்தனை நாள் என்ன செஞ்ச? ஒரு நாளைக்கு இருபது மணி நேரம் உன்னைப் பத்தின கழிவிரக்கத்தில் சோகத்தை நினைச்சு நினைச்சு மூக்கை சிந்தின.அதனால எனக்கும் வேலை ஈஸியாயிடுச்சு.
நீ கொஞ்சம் மறந்தாலும் பாத்தியா உன் அத்தக்காரி செஞ்சதை? அம்மா அப்பா இல்லாம கஷ்டப்படுறியே, இந்த சொந்தக்காரங்க கூட உன்னைக் கழட்டி விட்டுட்டாங்க பாரு? இப்படி தூண்டி விட்டா போதும் நீ மறுபடியும் கவலைப்பட ஆரம்பிச்சுடுவ. நானும் இந்த சோக டிராமாவைப் பாக்காம தூங்க ஆரம்பிச்சுடுவேன்”
“இருபது மணி நேரம் இதையேவா செஞ்சிருக்கேன்? மிச்ச நாலு மணி நேரம்?”
“அது சாப்பிட, முழிச்சு உக்காந்து இந்தா இதை சாப்பிடு, அந்தா அதை சாப்பிடுன்னு தூண்டி விடுவேன்”
“கீழ தள்ளி விட்டதுமில்லாம சாப்பிட வேற வச்சிருக்க? அதை ஏன் செஞ்ச?”
“நீ சோகம் தாங்காம செத்துப் போய்ட்டா? உணர்ச்சிகளின் பிடியில் அதிக நேரம் உன்னை வச்சிருந்தா ஒரு சமயத்தில் என்னால உன்னைக் கண்ட்ரோல் பண்ண முடியாது. அதனால சாப்பிடச் சொல்லி உயிர் வாழ ஆசையைத் தூண்டி விட்டேன்”
“நீ எங்கத்தை எங்களை ஏமாத்தினப்ப எங்க போயிருந்த?”
“செம்பருத்தி, பெரியவங்க இருக்கும்போது நாங்க ரெஸ்ட் பேசுக்குப் போயிடுவோம். நம்ம ஊரில் பெரியவங்க பலர் பிள்ளைங்க சொல்றதைக் காது கொடுத்துக் கேக்குறதில்லை. பிள்ளைகளை அவங்க சொல்றதைக் கேக்குற மெஷினா, கட்டளைக்குக் கீழ் படியிற ஒரு உயிரினமாத்தான் நடத்துறாங்க. அதனால எங்களுக்கு அங்க வேலையே இருக்காது. எப்ப பிள்ளைகள் தனக்கான வாழ்க்கையை அமைச்சுக்க முதல் அடி எடுத்து வைக்கிறார்களோ அந்த விநாடியிலிருந்து அவங்களோட செல்ல நாய்க்குட்டியா மாறிடுவோம்”
“இனிமேலாவது எனக்கு ஹெல்ப் பண்ணுவியா?”
“கண்டிப்பா… ஆனால் எனக்கு சரியான தீனி போடணும். நல்லதைப் போட்டால் உன்னை நினைக்கவே முடியாத உயரத்துக்குக் கூட்டிட்டு போவேன். கெட்டதைப் போட்டா அதல பாதாளத்தில் தள்ளிடுவேன்”
‘இப்ப இந்த அய்யா பேரை எப்படி கண்டு பிடிக்கிறது? சேச்சி கிட்ட இல்ல பாலாகிட்ட கேட்கட்டுமா?’
‘பேரைக் கூடத் தெரிஞ்சுக்காம வேலைக்கு வந்திருக்கிற உனக்கு அதுக்கப்பறம் மரியாதை இருக்காது’
‘வேற எப்படித்தான் தெரிஞ்சுக்கிறது?’
‘கூகிள் பண்ணி உங்கய்யா சொன்ன வீரபாகுவைத் தேடு. பழைய லெட்டர்களைப் பாரு. அதில் பேரு கண்டுபிடிச்சுடலாம்’
சூப்பர் என்றவண்ணம் சேச்சியிடம் கேட்டுவிட்டு பழைய லெட்டர்கள் இருந்த இடத்திற்கு சென்றாள். பெறுநர் பேர்களை நோட் செய்து கொண்டே வந்தவள் ஓரிடத்தில் ஹுர்ரேய் என்று கத்திவிட்டாள். இவனோட பேரு அபிராமா?
error: Alert: Content selection is disabled!!