செம்பருத்தி 13 – 1

துள்ளிக் குதிக்க வேண்டும் போல மகிழ்ச்சியில் மிதந்தாள் செம்பருத்தி. 

பழைய கடிதங்களை ஆராய்ந்து தானே அய்யாவின் பெயர் அபிராம் என்று கண்டுபிடித்ததில் தான் எத்தனை ஆனந்தம். 

இது என்ன பெரிய கஷ்டமா? இந்த வீட்டில் யாரையாவது கேட்டா சொல்லிட்டுப் போறாங்க என்று அவளை மண்டையில் தட்டி உட்கார வைக்கும் விதமாக சொல்லிவிட்டுப் போகலாம். நமக்கு சின்னஞ்சிறு விஷயமாகவே நினைத்து சிரிக்கலாம். 

ஆனால்  வாழ்க்கையின் ஒவ்வொரு சிறு சிறு புதிர்களையும் சவால்களையும் அவை எத்தனை சிறியதாக இருந்தாலும் சுயமாய் சிந்தித்துத் தீர்வு காண்பதுதான் இன்பம். இந்த சிறு சிறு இன்பங்கள்தான் ஒவ்வொரு நாளையும் இனிமையாக்குகிறது. அனுதினமும் ஒவ்வொரு துளியாக நாம் சேர்த்து வைக்கும் இந்த இனிப்புதான் வாழ்க்கையை சுவையாக மாற்றுகிறது. எனவே இனிமேல் நாம் செய்யும் ஒவ்வொரு  சிறு வெற்றிகளைக் கூட நாமே கொண்டாடி மகிழ்வோம். 

மதிய உணவை சாப்பிடவே தோன்றவில்லை அவளுக்கு . இருந்தாலும் நேரத்திற்கு உண்ண வேண்டுமே. நேரம் தவறி உண்ணும்போது அளவு அதிகமாகும். இடையே நொறுக்குத் தீனியை உண்ண ஆசை வரும். மாரியம்மா அக்கா வேறு சாதத்தை குறைக்க சொன்னார்களே. இங்கு எப்படி அதைக் குறைப்பது?

“சேச்சி, சாலட் சாப்பிட்டது பசிக்கவே இல்லை. மோர் மட்டும் குடிக்கிறேன்”

“பசிக்கலையா? சாலட் இன்னும் ஒரு மணி நேரத்தில் செரிச்சுரும். கொஞ்சமா சோறும் காயும் வச்சு சாப்பிட்டுட்டு போ” என்று அன்போடு ஒருவர் சொல்லும்போது எப்படி மறுக்க முடியும். 

அந்த சாதம்தான் பழுப்பு நிறத்தில் இருந்தது. பூக்களின் அரும்புகளைப் போல உதிரி உதிரியாக இருந்ததால் இரண்டு கரண்டி போட்டதும் தட்டே நிறைந்து விட்டதைப் போல ஒரு தோற்றம். 

“போதும் போதும் ஏற்கனவே ரெண்டு கரண்டி வச்சுட்டிங்க”

“குக்கர் சாதத்தோட ரெண்டு கரண்டி வடிச்ச சாதத்தோட மூணு கரண்டிக்கு மேல வரும். அதெல்லாம் சாப்பிடலாம்” என்றபடி அதனுடன் தாராளமாக அவியலும், பொரியலும் வைத்தார். 

“அது எப்படி சேச்சி அளவு மாறும்?”

“குக்கர்ல வைக்கிறது அப்படியே அழுத்தம் தர்றதால சாதம் வேகும் ஆனால் முழுசா மலர்ந்து வேகாது. அதே அரிசியை ஒரு மணி நேரம் ஊற வச்சுட்டு பானைல வடிக்கும்போது முழுசா தண்ணியை உறிஞ்சி மலர்ந்து வெந்திருக்கும் இது மாதிரி. வடிச்ச கஞ்சியைக் கூட வீணாக்காம இங்க எல்லாரும் குடிச்சிருவோம்” என்றார் சேச்சி. 

“நாளைலேர்ந்து எனக்கும் ஒரு கப் எடுத்து வைக்கிறிங்களா?”

“தாராளமா… அந்த போணில எடுத்து வச்சிருவேன். வேணும்னுறவங்க பச்சைமிளகாயோ இல்லை வெங்காயமோ தொட்டு சாப்பிட்டுக்குவாங்க. அதே மாதிரி ராத்திரி சாதத்தில் தண்ணி ஊத்தி எடுத்து வைச்சுட்டா அந்த நீராகாரத்தைத் தான் காளியம்மா குடிப்பா”

“இன்னைக்கு பாட்டிலில் ஊத்தி எடுத்துட்டு வந்தாங்களே”

“அதேதான். அவளுக்கு அல்சர் வந்தப்ப காப்பி டீயை நிறுத்திட்டு மோர் கலந்து பழைய சோறு நீராகாரத்தை குடிக்க சொல்லி டாக்டர் சொன்னாங்களாம். நிறைய பெருங்காயம், அரைச்ச இஞ்சி போட்டு அவ காலைல செய்யுற அந்த நீர்மோருக்கு இங்க  ஏக கிராக்கி”

அஜீரண உபாதைகளுக்கு எளிமையான இந்த உணவு போதுமா? தான் வயிறு உப்புசம், நெஞ்செரிச்சல் என்று டஜன் கணக்கில் வாங்கி விழுங்கிய ஆண்டாசிட் மாத்திரைகள் குவியலாய் அவள் மனக்கண்ணில் விழுந்தது. 

“பருப்பு கறி இருக்கு எடுத்துக்கோ” அவளை மேலும் சிந்திக்க விடாமல்  சேச்சி

“மோர் போதும் சேச்சி”

“நீ என்ன மோரா குடிச்சு உயிர் வாழப் போறியா? இந்த வீட்டில் நீ ஓடுறதுக்கே நிறைய சக்தி தேவை மோளே. நேரம் கிடைக்கும்போது நல்லா சாப்பிட்டுக்கோ” என்று அன்பு கலந்த கண்டிப்புடன் சொன்னார். 

மதிய உணவிற்குப் பிறகு அலுவலக அறைக்கு சென்று அபிராம் என்ற பெயரில் வந்த கடிதங்களை பெர்சனல் என்ற தலைப்பிட்டு அடுக்கி வைத்தாள். மற்றவற்றை படித்து நிகழ்ச்சிகளுக்கு வந்த அழைப்புகளைத் தனியாகவும், நன்கொடை கடிதங்கள், தனிப்பட்ட முறையில் உதவி கேட்டு வந்த கடிதங்களைத் தனியாகவும், தொழில் முறை சம்பந்தப்பட்ட கடிதங்களைத் தனியாகவும் பிரித்து வைத்ததும்தான் இது எவ்வளவு பெரிய வேலை என்று புரிந்தது செம்பருத்திக்கு. 

இந்தக் கடிதங்களைத் தொடர்ந்து படித்து குறிப்பெடுத்துக் கொண்டால் ஒரு வருடத்திற்குள் இவர்களது வாழ்க்கையே அத்துப்படியாகிவிடும். அதுமட்டுமில்லை எங்கு எவ்வளவு பணம் இருக்கிறது? எந்த இடத்தில் சொத்து இருக்கிறது என்பது பற்றிய விவரங்கள் என்பதை எல்லாம் சுலபமாகக் கணித்து விடலாம்.  அதனால்தான் இங்கு வேலை செய்ய  நம்பிக்கையான ஆள் மிக மிக முக்கியம். அதனாலேயே இவளைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார் வக்கீல் என்பது அவளது புத்திக்கு உறைத்தது. 

“பரவால்லையே! என் பெயரைக் கண்டுபிடிச்சுட்ட போலிருக்கு!” என்று அபிராம் மெச்சுதலாக சொன்ன வார்த்தையே அவளுக்கு அந்த வேலையைத் தொடர உந்து சக்தியாக இருந்தது. 

அடுத்து பாலாவை மாடியில் இருந்த சிறிய அலுவலக அறையில் சந்தித்தாள். “மூணு விருந்து இருக்குன்னு அய்யா சொல்லிருக்கார் அண்ணா. அதுக்கு மெனு தயாரிச்சு அய்யாகிட்ட அப்ரூவல் வாங்கிட்டு சேச்சி கிட்டத் தரணும்”

அவள் தந்த லிஸ்டைப் மேலோட்டமாகப் பார்த்தபடி “நம்ம பாதர் வாறாரா? அவருக்குப் பிடிச்சது பிடிக்காததெல்லாம் சேச்சிக்கு நல்லா தெரியும். அடுத்து இவரு பிசினெஸ் சம்பந்தமா ரெண்டு மாசத்துக்கு முன்னாடி வந்திருக்காரு. போன தடவை மெனுவை செக் பண்ணிங்கன்னா தெரியும்”

“இங்க விருந்து மெனுவெல்லாமா எழுதி வச்சிருப்பிங்க?” வியந்தபடியே கேட்டாள். இதையெல்லாமா எழுதி வச்சிருப்பிங்க என்று அவள் கேட்டதை வேறு விதமாகப் புரிந்து கொண்டான் பாலா. 

error: Alert: Content selection is disabled!!