Skip to content
“உங்க சந்தேகம் சரிதான். அரண்மனையிலதான் ஒவ்வொரு வேளை சமைச்சது, விருந்து கொடுத்த மெனு, அதுக்கான செலவுக்கணக்கு எல்லாம் எழுதி கோப்பில் போட்டு வச்சிருப்பாங்க. இங்க விருந்தாளிகள் கம்மின்னுறதால அந்த அளவுக்கு ரெக்கார்டு பண்ண முடியாது. அதனால விருந்து மெனு விவரத்தை மட்டும் கம்ப்யூட்டர்ல சேமிச்சு வச்சிருப்பாங்க. விவரங்களைப் பராமரிக்க சரியா ஆள் இல்லாததால முழு தகவல்களும் கிடைக்கிறது கஷ்டம்தான்”
“ஏதாவது சந்தேகம்னா யாரை கேக்குறது. இதெல்லாம் அய்யாவுக்குத் தெரிய வாய்ப்பில்லை”
“உண்மைதான். நம்ம சேச்சிக்கே அரண்மனைல பல வருடங்கள் வேலை பார்த்த அனுபவம் இருக்கே. அவங்களே நிறைய விவரங்கள் சொல்லுவாங்க. அதைத் தவிர ஏதாவது தேவைன்னா என்கிட்டே சொல்லுங்கம்மா”
பாதர்தான் முதல் விருந்தாளி. அவரைப் பற்றி சேச்சியிடமே கேட்டுவிடலாம். மறுபடியும் சமையலறையில் சென்று நின்றாள்.
“ஓ இவருன்னா சரி. எனக்கு ஏற்கனவே சமைச்சு பழக்கம் இருக்கு”
“எனக்கு மெனு போட ஹெல்ப் பண்றிங்களா சேச்சி”
“ஓ… இவருக்கு நம்ம ஊரு சமையல்தான் பிடிக்கும். கேரளா சதயம் செஞ்சுடலாம்”
“கேரளா சதயம்னா?”
“விருந்து சாப்பாடு”
“பருப்பு, நெய், சாம்பார், ரசம், அப்பளம் வடை, கூட்டு, பொரியல், வறுவல், ஒரு சுவீட்டு, பாயசம்… “
“சைவம் நீ போட்டது மாதிரி சிம்பிள் மெனுவே இருக்கட்டும். பாதருக்கு கப்பக்கிழங்குன்னா ரொம்ப இஷ்டம். போன தடவை கப்பா அவிச்சதும் சிக்கன் கறியும் விரும்பி சாப்பிட்டார். இந்த முறை கப்பக்கிழங்கு பிரியாணி சேர்த்துக்கோ”
“கப்பக்கிழங்கு பிரியாணியா?”
“ஆமாம். மலபார் பக்கம் ரொம்ப பேமஸ். கல்யாண விருந்தில் கூட பார்க்கலாம். அது கூடவே செம்மீன் தீயலும் சேர்த்துடு”
“செம்மீன் தீயலா?”
“பிரான் கறின்னு வேணும்னா உனக்குப் புரியுறதுக்காக எழுதிக்கோ”
“சரி சேச்சி. இதை நான் அய்யாகிட்ட காமிச்சு அனுமதி வாங்கிடுறேன்”
“ஏன்? ஏதாவது உணவுக் கட்டுப்பாடு இருக்கா”
“அப்படின்னா?”
“மனுஷ உடல்தானே மோளே. இன்னைக்கு இருக்குற மாதிரி எப்போதும் இருக்குமா? வயசாகும்போது உணவுப் பழக்கம் உடல் நிலையைப் பொறுத்து மாறும். அதனால அவரோட ஆபிசுக்கோ இல்லை பெர்சனல் நம்பருக்கோ போன் பண்ணி அவருக்கு ஏதாவது அலர்ஜி இருக்கா? ஏதாவது காய்கறி விலக்கணுமான்னு கேட்டு தெளிவு படுத்திக்கோ. அப்பறம் அந்த குறிப்போட அய்யாவுக்குத் தா… “
இதெல்லாம் கூட கவனிக்க வேண்டிய விஷயம் போலிருக்கே. என்றெண்ணியபடி மெனுவைப் பற்றிய கேள்விகளை சம்பந்தப்பட்டவர்களை அழைத்து உறுதி செய்துக் கொண்டு, அதன்பின் அபிராமிடம் காட்டி அப்ரூவல் வாங்கி சேச்சியிடம் தந்தபொழுது பொழுது சாய்ந்து இருட்டியே விட்டது.
செம்பருத்தியைக் கிளம்பச் சொன்னதும் அப்படியே காளியம்மாவின் அறைக்கு ஓடி வந்துவிட்டாள். காலும், முட்டியும் வலியில் முனகியது.
ஓவியாவும் “செம்பருத்தி அக்கா” என்று குதித்து ஓடியபடி வந்துவிட
“காலு வலிக்குது” என்றாள் அவளிடம்.
“நெனச்சேன்கா… இந்த வீட்டில் மாடி ஏறி இறங்கியே காலு வலி வந்துடும். இன்னைக்கு எத்தனை தடவை மேலயும் கீழயும் ஏறி இறங்குனிங்க? ஒரு 10-15 வாட்டி?”
“இருக்கும்”
“இந்தாங்க” என்றபடி கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலையின் கால் வலியை முறிக்கும் எண்ணையை நீட்டினாள்.
இருவரையும் சாப்பிட அழைக்க வந்த காளியம்மா “காலு வலிக்குதா பாப்பா?” என்றாள்.
“ஆமாக்கா”
“இந்த எண்ணையைத் தடவி நல்லா நீவி விட்டுட்டு சுடுதண்ணில குளிச்சா வலி குறையும். நீ குளிச்சுட்டு சாப்பிட வா. நான் சேச்சிகிட்ட உனக்கு சாப்பாட்டை எடுத்து வைக்கச் சொல்றேன் ”
காளியம்மா சொல்லியபடி நன்றாக எண்ணையைக் காலில் தடவி நீவி விட்டு அதன் பின் சுடுநீரில் குளித்து முடித்தபொழுது உடலே லேசாக இருந்தது”
இரவு உணவு சாப்பிட சென்றபொழுது அனைவரும் சாப்பிட்டு முடித்திருக்க சேச்சி, காளியம்மா, ஓவியா மூவரும் ஸ்டாஃப் உணவு அருந்தும் அறையில் சாப்பாட்டு மேஜையை சுற்றி அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
“காளியம்மாக்கா உங்க ரூமுக்கு பக்கத்தில் இருக்குற ரூம்ல என் பெட்டியை வச்சுடுறிங்களா”
“ஹய்யா… நீங்களும் எங்க ரூமுக்கு பக்கத்திலேயே வரப் போறிங்களா?”
“அய்யாகிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு” இழுத்தார் சேச்சி.
“கேட்டுட்டேன் சேச்சி. ராத்திரி ஆபிஸ் வேலை எதுவும் இருக்காதாம். எனக்கு வசதியான இடத்தில் தங்கிக்க சொன்னார். அவருக்கு உதவின்னா பக்கத்தில் பாலாவையாவது கோபனையாவது அழைச்சுக்குறேன்னு சொல்லிட்டார்”
“அப்ப சரி. நாளைக்கு அந்த ரூமை சுத்தம் செஞ்சுட்டு உன் பொருளை எல்லாம் எடுத்து வைக்க சொல்றேன்”
“அப்ப இன்னைக்கும் எங்க ரூமில் ரெண்டு பேரும் கதை பேசுறோம்” என்று குதித்தாள் ஓவியா.
“கதை பேசுறதா… விட்டா இங்கேயே தூங்கிருவேன். அவ்வளவு டயர்ட்டா இருக்கேன்”
“அக்கா, வெற்றிகரமான முதல் நாள் போலிருக்கு. மெனு போட்டுட்டிங்களாமே… “
“ஒரு வழியா… சேச்சி ஹெல்ப்போட “
“நம்ம சேச்சிக்குத் தெரியாதது இந்த வீட்டில் எதுவுமே இல்லை. எங்க மெனுவைக் கொண்டு வாங்க” என்றாள் ஓவியா.
மெனுவில் இருக்கும் ஐட்டங்களை எண்ணினார்கள். “அம்மாடியோ… மொத்தம் இருபத்தி அஞ்சு வெரைட்டி. இது எல்லாத்தையும் யாரு சாப்பிடுவா? பாதி நேரம் நம்ம அய்யா பழம், பச்சை காய்கறி, பிரட் இப்படித்தான் சாப்பிடுறார். அப்பறம் எதுக்கு இத்தனை வெரைட்டி சேச்சி?” செம்பருத்தி மனதில் இருந்ததை ஓவியா கேட்டே விட்டாள்.
“அது அப்படித்தான் மா. இந்த மாதிரி பெரிய குடும்பத்தில், தலைவருக்கு சாப்பாடு பிடிக்குதோ இல்லையோ அவங்களைப் பாக்க வர்றவங்களுக்கு நல்ல விருந்தா தரணும். அது கட்டாயம். ராஜவிருந்தை எதிர்பார்த்து வர்றவங்களுக்கு தினமும் பண்டிகை மாதிரி சமைச்சு வைக்கணும். ராஜா கூட சாப்பிடுறதே விருந்தினருக்கு ஒரு பண்டிகைதானே. அதே மாதிரி யாரு எந்த நேரத்துக்கு வந்தாலும் சாப்பிட ஏதாவது கண்டிப்பா தரணும்”
“எப்படி இத்தனை வெரைட்டி செய்விங்க? நாங்க வேணும்னா தெரிஞ்ச அளவுக்கு ஹெல்ப் பண்ணுறோம்”
அவளது கன்னத்தைக் கிள்ளியவர் “எனக்கு சமையலில் இருக்கும் அனுபவம் உன் வயசை விட அதிகம். எனக்கு இங்க வேலை அதிகமில்லை மோளே. எனக்கு முடியலைன்னு தெரிஞ்சாலே போதும் பெரிய வீட்டிலிருந்து சாப்பாடு இங்க மூணு நேரமும் இறங்கிடும்”
“அப்ப பேசாம சொல்லிடலாம்ல”
“ஆனால் இதெல்லாம் எனக்கு கஷ்டமா தெரியலையே. சமையல் எனக்கு வேலை இல்லை. என் வாழ்க்கை. நான் சமைச்சு உங்களுக்குப் பரிமாறி நீங்க ரசிச்சு சாப்பிடும்போது கிடைக்கும் சந்தோசம் இருக்கே…”
தொழிலை இஷ்டப்பட்டு செய்பவர்களுக்கு அது வாழ்க்கையாகவே மாறிவிடுகிறது. அப்படியே மோன நிலைக்கு சென்று விட்டார் சேச்சி லீலம்மா.
இரவு உணவு முடிந்ததும் அமைதியாக சேச்சியின் பிரார்த்தனையில் கலந்து கொண்டாள்.
சேச்சி கண்களை மூடிக் கொண்டு ஆண்டவனுக்கு நன்றி சொன்னார்.
நன்னியோடு நான் ஸ்துதி பாடிடும் எண்டே யேசு நா..தா…
எனக்காய் நீ செய்த நன்மைக்கும் இன்னி நன்னி சொல்லணும் நான்…
அர்ஹிக்காத நன்மகளும் எனக்கேகிடும் க்ருபாநிதே..
யாஜிக்காத நன்மைகள் போலுமே எனிகேக்கியோன் ஸ்துதி….
அப்படியே செம்பருத்தியின் மனம் முருகனை சரணடைந்தது.
நான் யோசிக்காத யாசிக்காத நன்மைகளையும் எனக்கு அருளும் முருகப் பெருமானே நன்றி!
error: Alert: Content selection is disabled!!