அடுத்த சில வாரங்கள் எப்படி ஓடியது என்றே செம்பருத்திக்குத் தெரியவில்லை. காலை எழுந்து ரெடியாகி காளியம்மாவின் பழைய சோறு நீராகாரத்திற்குப் போட்டியாக அவளும் சென்று நிற்பாள். அபிராமின் கடிதங்களைப் பிரித்துப் படித்து அவன் சொல்லும் பதிலைக் கேட்டுக் கொண்டு அதற்குத் தக்கன பதில் கடிதம் எழுதுவாள். சிலவற்றிற்கு பணம் அனுப்ப சொல்வான். செக் தருவான். அதை எல்லாம் உரியவரிடம் பத்திரமாக சேர்ப்பிக்க வேண்டும். ஆனால் அவளுக்கு மற்றுமொரு பிரச்சனையாக இருந்தது அலுவலக மொழிக் கடிதம்.
மங்கிலால் கடையில் பில் போடுவதும், அக்கவுண்ட்ஸ் பார்ப்பதுமாக இருந்தவளுக்கு இந்தக் கடிதம்தான் ஒரு தடை. கடையில் வேலை செய்யும்போது நம்பிக்கையின் அடிப்படையில் அது போன்ற சிறு தொழில்களில் பாதி விவரங்களை போனிலேயே பேசி முடித்து விடுவார்கள். ஒவ்வொரு பைசாவும் எழுதி கணக்கு வைத்துக் கொண்டாலும், சம்பளமோ கடனோ தரும்போது இப்படித்தான் எழுத வேண்டும் என்ற விதிமுறை எல்லாம் கிடையாது. ஐந்தாயிரம் ரூபாய் சம்பளமாகப் பெற்றுக் கொண்டேன், கடனாகப் பெற்றுக் கொண்டேன் என்று எழுதி வாங்குவதுதான்.
“பேட்டி, செங்கல்வராயன் வந்தா சரக்கு கொடுத்துடாதே. ஆறு மாசம் பாக்கி நிக்குது. என்கிட்டே பேச சொல்லு” என்று வசூல் விவரங்களை அவரே பார்த்துக் கொள்வார்.
இங்கோ ஒவ்வொரு விஷயங்களும் கடிதங்கள் மூலமே நடக்கிறது. பணம் அவ்வளவாகப் புழங்குவதே இல்லை. செக், பாங்க் டிரான்ஸபெர் இப்படித்தான். எல்லாவற்றிற்கும் முறையான கடிதங்கள் பதில்கள் பரிமாற்றம் நிகழ்கிறது. காய்கறி இவ்வளவு செலவாகிறது என்று சொல்லிவிட முடியாது. அதற்கும் பில் பெறப்பட்டு கோப்புகளில் சேர்க்கப் படுகிறது.
இங்கு வரும் கடிதங்களைப் பரிசீலித்து குறைந்தபட்சம் ஒரு டசன் கடிதங்களுக்காவது பதில் எழுத வேண்டி இருக்கிறது. அதுவும் ஆங்கிலத்தில் வேறு. அலுவலகக் கடிதம் எழுதுவதற்கு ஒரு முறை இருக்கிறது. அந்த சூத்திரத்தைப் பற்றி அவள் கவலைப்பட்டதே இல்லை. லீவ் லெட்டரையே மனப்பாடம் செய்து அதனை மட்டும் எழுதிக் கொடுத்து தேர்வும் பெற்றுவிட்டாள். எப்போதும் As I am suffering from fever மட்டும்தான். தலைவலி, கால்வலி, ஃப்ளு ஜுரம் என்று காரணத்தை மாற்றி கூட எழுத முயன்றதில்லை.
இந்தக் கடிதங்கள்தான் பூதமாய் பயம் காட்டியது. உதவி கேட்பவர்களுக்கு செய்கிறேன் என்று சொல்லி எப்படி பதில் எழுதுவது. அதைவிட இது முடியாது என்றும் எழுத வேண்டி இருந்தது. எப்போதுமே ஆமாம் என்று சொல்வதைவிட இல்லை என்று சொல்வது மகாக் கடினம்.
இவர்களைப் பார்த்தால் ஏமாற்றும் ஆட்களாகவும் தோன்றவில்லை.அபிராமை மறுத்து பேசவும் முடியாது. ஏனென்றால் கீழ்ப்படிந்து நட, எதிர்த்துப் பேசாதே, சொல்வதை மட்டும் செய், முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களில்லை என்றே பழக்கப்படுத்தப்பட்டு வளர்த்தெடுக்கப் பட்டவர்கள்தானே நாம்.
“இதே தொண்டு நிறுவனத்திடமிருந்து இதே உதவி கேட்டு முன்னாடியே கடிதம் அனுப்பி இருந்தாங்க. செக் பண்ணிடு” என்று ஒரு கேள்விக் குறியுடன் கடிதம் வரும்போது இரண்டு மூன்று நாட்கள் உட்கார்ந்து பழைய கடிதங்களை ஆராய்ந்து விட்டு
“ஆமாம் சார்.வாட்டர் ஹீட்டர் பழுது என்று இது வரைக்கும் புதுசு வாங்க மூணு தடவை பணம் வாங்கி இருக்காங்க. மூணும் சில மாத இடைவெளியில். இது நாலாவது கடிதம்”
“அப்ப பொய்க் கடிதம்தான். முடியாது இனிமே இந்த உதவி கேட்காதேன்னு சொல்லி பதில் எழுதிடு” என்று சொல்லிவிட்டு எழுந்து விட்டான்.
பதில் எழுத இவளுக்குத் தான் தயக்கமாக இருந்தது. அதன்பின் மறுபடியும் இரண்டு நாள் கழித்து அவனிடம் சென்று
“அந்தத் தொண்டு நிறுவனம்…”
“அதுதான் அன்னைக்கே முடியாதுன்னு சொல்லச் சொல்லிட்டேனே?”
“சார். அந்த நிறுவனத்தில் அடிக்கடி மின் சாதனங்கள் எல்லாம் பழுதடையுறதா தகவல் வந்திருக்கு. மின்சார சப்ளைல பிரச்சனை இருக்கலாம். அது வேற பழைய கட்டிடத்தில் நடக்குற இல்லம். வொயரிங் பிரச்சனையாக் கூட இருக்கலாம்”
யோசித்தவன் “கோபன்கிட்ட சொல்லி நம்ம எலக்ட்ரிஷியனை இல்லத்துக்கு அனுப்ப சொல்லு”
அவர்கள் அனுப்பிய எலெக்ட்ரிஷியன் பழுதான பழைய மின் இணைப்புக்களை சரிபார்த்து இன்றைய நவநாகரீக மின் இயந்திரங்களை உபயோகிக்கும் வண்ணம் சீரமைத்துத் தர வேண்டும் என்று சொல்லி செம்பருத்தியின் அனுமானம் உண்மை என்று உறுதி செய்தான்.
“வெரி குட்” என்று அபிராம் சொன்னதே அவளை அன்று முழுவதும் தரையில் கால் பாவாது நடக்கும் பிரம்மையைத் தோற்றுவித்தது.
எப்படி இருந்தாலும் இரவு வேலை முடிந்ததும் காளியம்மா, சேச்சி, ஓவியா, கோபன் சில சமயம் பாலன் இவர்களுடன் ஒரு அரை மணி நேரமாவது அரட்டை அடித்துவிட்டே அவளது அறைக்குச் செல்வாள். வாரம் ஒரு நாள் ஞாயிறு விடுமுறை. மதிய உணவுக்கிற்குப் பின் ஓவியாவுடன் அந்த சின்னஞ்சிறு தீவினை சுற்றிப் பார்ப்பாள். சில சமயம் மனிதர்களின் மறுபக்கத்தையும் அறிந்து கொள்ள உதவியாக இருந்தது. அதில் ஒன்று ஓவியாவுக்கு இருபது வயது என்று அறிந்து கொண்டது.
அந்த விடுமுறை தினத்தன்று மாலை என்னவோ காளியம்மாவும் சேச்சியுடன் சர்ச்சுக்குக் கிளம்பிவிட்டாள்.
“மேரி மாதா இவளுக்கு நல்ல படிப்பு கொடுக்கட்டும் சேச்சி. இவ பன்னெண்டாவது பாசாகுறதுக்கள்ள எனக்கு நெஞ்சு வலியே வந்துடும் போலிருக்கு” என்று புலம்பிக் கொண்டே சென்றார்.
ஓவியாவைப் படிக்கச் சொல்லிவிட்டு தானும் மேற்படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்காக படிவங்களை பிரிண்ட் எடுத்துக் கொண்டு வீட்டினுள் இருந்த நீச்சல் குளத்திற்கு அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.
அவளைத் தேடிக் கொண்டே பாடப் புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு வந்துவிட்டாள் ஓவியா.
“படிக்காம என்ன பண்ணுற? உங்கம்மா பாவம் எப்படி புலம்புறாங்க? அப்படி எத்தனை மார்க்குதான் வாங்குன?”
“82”
“இதுக்கா உங்கம்மா திட்டுனாங்க?”
“எல்லா பாட மார்க்கையும் கூட்டினா வர்றது அவ்வளவுதான்”
“அப்ப எல்லா பாடத்திலையும் பெயில். காளிம்மாக்கா திட்டுறதில் தப்பே இல்லை”
“படிப்பு வந்தாதானேக்கா படிப்பேன். படி படின்னா எங்கிருந்து படிக்க? எங்கம்மா அப்பா யாருமே படிச்சதில்லை. அதனால எனக்கும் படிப்பு மண்டைல ஏற மாட்டிங்குது. இருபது வயசிலதான் பன்னெண்டு படிக்கிறேன். இது முடிச்சதும் அய்யாவோட நர்சிங் காலேஜில எங்கம்மா சீட்டுக்கு சொல்லி வச்சிருக்கு”